நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 அக்டோபர், 2010

நன்றி சொன்னவருக்கு ஒரு நன்றி…


திரு.நடராசன், பெருமழைப் புலவரின் மகனார் சோ.பசுபதி, அவரின் துணைவியார் சகுந்தலை அம்மா, நம் மழலைகள்

ஒரு கிழமையாகப் பணிகள் மிகுதியாக இருந்தன. தமிழ்மொழி வரலாறும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமும் என்னும் பாட நூல் ஒன்று எழுதியளிக்கும் கடப்பாட்டில் இருந்தேன். இருநூற்றுக்கும் மேலான பக்கங்கள் கொண்ட அந்த நூல் இளங்கலையில் தமிழ் படிக்கும் மாணவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எளிமையாக எழுதப்பட்ட நூலாகும். இத்தகு வேலையில் இருந்ததால் வலைப்பூவில் எழுத எவ்வளவோ செய்திகள் இருந்தும் எழுத இயலாமல் போனது.

இதற்கு இடையே என் கல்லூரிப் பணி, குடும்பப் பொறுப்புகள், பிறந்த ஊரில் நடக்கும் வேளாண்மை மேற்பார்வை, உறவினர்களின் வருகை, நண்பர்களின் வருகை, பல ஊர்களில் நடந்த திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், இறப்பு நிகழ்வுகள், உள்ளூர், வெளிநாட்டுச் செல்பேசி அழைப்புகள், இடையே இதழ்கள் இரண்டொற்றிற்கு நேர்காணல், கட்டுரை வழங்கல், அறிஞர் மு.வ. அவர்களின் மண்குடிசைப் புதினப் படிப்பு, இணையம் கற்போம் நூலின் இரண்டாம் பதிப்புக்கான ஆயத்த வேலைகள்,அயலகத் தமிழர்களுக்கான இணையவழித் தமிழ் இலக்கிய வகுப்பு என்று பம்பரமாக இயங்க வேண்டியிருந்தது.

ஆயிடை, பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் மூத்த மகன் திரு.சோ.பசுபதி ஐயாவும் (அகவை 63) அவர்களின் துணைவியார் ப.சகுந்தலை அம்மா அவர்களும் அந்த ஊரைச் சேர்ந்த திருவாளர் நடராசன் ஐயாவுடன் எங்கள் புதுவை இல்லத்துக்கு வந்திருந்தனர். என் நெருக்கடியான பணிகளுக்கு இடையேயும் அவர்களின் வருகையறிந்து அனைத்தையும் ஒத்திப் போட்டேன். நான் உயர்வாக மதிக்கும் புலவர் குடும்பம் ஆயிற்றே என்று அவர்களின் இனிய வருகைக்கு அனைவரும் காத்திருந்தோம்.

24.10.2010 ஞாயிறு பகல் ஒரு மணியளவில் அவர்களின் வருகை இருந்தது. திருத்துறைப்பூண்டியடுத்த பதின்மூன்று கல் தொலைவு உள்ள மேலைப்பெருமழையில் இருந்து நெடுந்தொலைவு பேருந்தில் வந்த காரணத்தால் வந்தவுடன் சிறிது ஓய்வெடுத்தனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.



எங்கள் மழலைச் செல்வங்களுக்கு விளையாடக் கிடைத்தத் தாத்தா, பாட்டியாக அவர்கள் இருந்தனர். குழந்தைகள் நெடுநாழிகை உள்ளன்போடு ஓடியாடி விளையாடி மகிழ்ந்தார்கள். வந்திருந்தவர்களும் எம் மக்களைக் கொஞ்சி மகிழும் வாய்ப்புக்கு மகிழ்ந்தார்கள். பின்னர் பகலுணவு உண்டு மகிழ்ந்தோம்.

தமிழ்நாடு அரசு புலவர் குடும்பத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருணையால் பத்து இலட்சம் உருபா வழங்கியப் பெருங்கொடையை நன்றியுடன் நினைவு கூர்ந்து குடும்பத்தினர் அனைவரும் முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், அவர்களின் குடும்ப நிலையை வெளியுலகிற்குத் தெரிவித்து உதவி கிடைக்க ஆவன செய்த தினமணி, நக்கீரன், குமுதம் இதழ்களுக்கும், எனக்கும் நன்றி கூறினார்கள்.

அதுபோல் நூற்றாண்டு விழாவைப் புலவரின் ஊரான மேலைப் பெருமழையில் நடத்திப் புலவரின் சிறப்பை ஊருக்கும், உலகுக்கும் தெரியப்படுத்திய பேராசிரியப் பெருமக்களையும், தமிழார்வலர்களையும் புலவரின் மகன் சோ.பசுபதி அவர்கள் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்கள்.

இரண்டு நாள் எங்கள் இல்லத்தில் தங்கிச் செல்லவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டோம். ஆனால் ஊரில் உழவு வேலைகள் நடைபெறுவதால் கோடையில் வந்து தங்குவதாக உறுதியுரைத்தனர். மாலை 4.30 அளவில் விடைபெற நினைத்தனர். அவர்களுக்கு எங்களால் இயன்ற கையுறைப் பொருளை வழங்கி மகிழ்ந்தோம். எங்களின் பெற்றோர் போன்று விளங்கிய அவர்களின் பாசத்தை நினைத்து நினைத்து மகிழ்கின்றோம்.

மீண்டும் அவர்களின் வருகைக்குக் காத்துள்ளோம்.

இத்தகு நன்றி மறவாத உயர் பண்பாளர்களை நினைக்கும்பொழுது நெஞ்சம் நிறைகின்றது.

மேலும் அறிய

செவ்வாய், 19 அக்டோபர், 2010

நெருப்புப் பாவலன் பாவேந்தன்

பணம்பறிக்கும் எழுத்தாளர் கூட்டம் எல்லாம்
பச்சையான செய்திகளை எழுதித் தாளில்
பிணமாக்கி இளைஞர்களை உழல வைக்கும்
பேயாட்சி புரிகின்ற இந்த நாட்டில்
மணங்கமழும் செந்தமிழை மலர்த்தித் தூக்க
மறவனெனத் தோன்றியவெம் புலவரேறு,
பிணக்கமிலாக் கொள்கையினை வகுத்துக் கொண்டோன்
பீடுமிகு பாவேந்தப் பெரியோர் தாமே!

தந்தையவன் பெரியாரின் தன்னே ரில்லாத்
தன்மான இயக்கத்தில் இணைந்து நின்று
முந்தியசீர் எண்ணிடவே புலவோர் தம்மை
மொத்துலக்கைப் பாட்டாலே அடித்தெழுப்பிச்
சிந்தனையை ஊற்றெடுக்க வைத்த என்றன்
செங்கோவின் பிளிறொலியாம் வரிகள் எல்லாம்
இந்தவளர் தலைமுறையும் ஒலிப்பதெண்ண
எரியென்றே அன்னவனை ஒப்பம் செய்வோம்!

மங்கையவள் தருகின்ற இன்பம் எல்லாம்
மாத்தமிழின் சுவையினுக்கு ஈடாய் ஆமோ?
எங்கள்தமிழ் சீரெல்லாம் பிழைக்க வந்தோர்
ஏமாற்றி மறைத்தேதான் சென்றா ரென்று
பொங்குசின அரிமாவாய் முழங்கி இந்தப்
புவியோர்க்கு மறவுணர்வை ஊட்டி நின்று
சங்கெடுத்து முழக்கம்செய் பாவேந்தன்போல்
சாற்றுதற்கும் ஆளுண்டோ? உண்டா இங்கே!

மக்களினை ஏய்க்கின்ற மடயர் எல்லாம்
மாற்றுவழி பின்பற்றிப் பதவி தேடி
இக்காலம் தன்னிலேதான் அலைவதெண்ணிப்
பாவேந்தன் எரிமலையாய் வெடித்துச் சொன்னான்!
முக்காலம் புகழ்நிலைக்க வேண்டும் என்றால்
முத்தமிழை ஆள்வோரே காப்பீராக!
திக்கிகழ இம்மொழிக்குக் கேடு செய்தால்
தீப்பந்தம் கொளுத்திடுவோம் என்றான் வீரன்!

ஆள்வோரால் பாவேந்தன் அந்த நாளில்
அலைக்கழிக்கப் பட்டாலும் அவனை ஏத்தி
வேள்என்றே புகழ் விரும்பிக் கத்துகின்றோம்!
வீறுணர்வைப் பெற்றோமா? வீரம் உண்டா?
மீள்வதற்கே அவன்பாட்டை நினைத்தோமா?நாம்
மேன்மைஎழ விழாவெடுப்போம்! மேலே உள்ள
ஆள்வோர்கள் தமிழ்மொழிக்குக் கேடு செய்தால்
அனல்கக்கும் பாவேந்தன் மறவ ராவோம்!

14.03.1991

புதன், 13 அக்டோபர், 2010

வெண்பா விருந்து

பாவேந்தர் பாடிய பாட்டு!

செந்தமிழ்ப் பாணர்க்குச் சீர்பரிசில் நல்கியே,
வந்திடும் மாற்றாரை வாளுக்(கு) இரையாக்கும்
மாவேந்தர் என்றாலும் மண்டியிடச் செய்யுமே
பாவேந்தர் பாடிய பாட்டு!

வெற்றிகொள்வோம்!

ஏழை உழைப்பையெல்லாம் ஏய்த்துச் சுரண்டுகின்ற
கோழை முதலைகளின் கொள்ளையினைத் - தோழர்காள்!
இற்றைக்கு நாம்நிறுத்தி ஈடில் உழைப்பெடுக்க
வெற்றிதனைக் கொள்வோம் விரைந்து!

சிலைவைக்க தடை ஏன்?

அறம்பொருள் இன்பத்தை யாரும் உணரத்
திறம்படத் தீங்குறள் தந்த முனியைத்
தலைவைத்துக் கூத்திடா தண்கரை நாடே!
சிலைவைக்க என்னதடை செப்பு.

இலக்கணம் கற்போம்!

ஆங்கிலம் இந்தி அரபுமொழி மற்றெல்லாம்
ஈங்குளோர் பேசி இழிந்திட- ஏங்கிக்
கலக்கமுறும் என்தமிழ் கண்ணீர் துடைக்க
இலக்கணம் கற்போம் இனிது

தமிழ் விளி

கடல்கோளில் தப்பிக் கழகத்தில் ஓங்கி
வடமொழிக்கும் தாயான வஞ்சிச்-சுடரே
அமிழ்தே! அழகே! அருமையென் தாயே!
தமிழே பணிந்தேனுன் தாள்.

இவன்

குமரி நிலந்தோன்றிக் கோவால் வளர்ந்த
இமய வரையோரும் ஏத்தும் – தமிழைக்
களங்கமிலாச் சீர்பனசைக் கல்லூரி தன்னில்
இளங்கோவன் கற்றான் இனிது

செவ்வாய், 12 அக்டோபர், 2010

வியன்புகழ் கொண்ட பாவாண!


மொழிஞாயிறு பாவாணர்

மட்டம் தட்டித் தமிழ்மொழியை
மாற்றார் பலரும் இகழ்ந்துரைக்கப்
பட்டம் பதவி பொருள்தேடிப்
பாரில் புலவர் வாழ்ந்தனரே!
பட்டம் பதவி பொருள்தேடும்
பாவிக் குமூகம் சேராமல்
திட்டம் போட்டுத் தீவிரமாய்த்
தேன்தமிழ் காத்தாய்! பாவாண!

வில்லை எடுத்துப் போரிட்டு
வீரம் விளைத்தோர் கூட்டத்தில்
சொல்லை எடுத்தே ஆராய்ந்து
சுவையாம் தமிழை வளர்த்தனையே!
சொல்லை எடுத்தே ஆராய்ந்து
சூழ்ச்சி பலவும் ஒளிசெய்தாய்!
நெல்லும் பூவும் தூவிஎழில்
நின்தாள் பணிந்து போற்றுகிறோம்!

அயலான் மொழியைக் கற்றால்தான்
அயலான் மண்ணில் பணிகிடைக்கும்
முயலைப் போலும் நெஞ்சுடையார்
முழங்கும் சொற்கள் கேட்டனமே!
முயலைப் போலும் நெஞ்சுடையார்
மூடத் தனத்தைப் பற்றாமல்
வியனார் புகழ்கொள் பாவாண
விரிதமிழ் காக்க கற்றனையே!

வாழும்போதே அறிஞர்களை
வாடவிட்டே, இறந்தபின்பு
தாழும் மாலை கொண்டோடித்
தலையில் சூட்டி உலகு உருகும்!
தாழும் மாலை கொண்டோடித்
தலையில் சூட்ட யாம்வரினும்
வீழும் பூவைக் கண்டவுடன்
வேண்டல் விளக்கம் தொடங்கிடுமே!

கல்லாக் குழந்தை இந்நாளில்
கல்வி வல்லார் போல்காட்டி
நல்லோர் செயல்கள் பலசெய்து
நாண உலகை மருட்டிடுமே!
நல்லோர் போலும் மலையளவு
நயந்து நூல்கள் கற்றாலும்
எல்லோய்! நீதான் பாவாண
இளமைக் குழந்தை என்பேனே!

பெற்றோர் மறைந்த பின்னாளில்
பொருள்கள் பற்றும் குழந்தையர்தாம்
உற்ற தாயர் தந்தையரை
உள்ளம் உருகிப் போற்றுவராம்!
உற்ற தாயாய்த் தந்தையராய்
ஒளிரும் அறிவு வழங்கியதால்
கற்ற மாந்தர் பலர்கூடிக்
கைகள் தொழுது வணங்குகிறோம்!

(2002 இல் எழுதியது)

திங்கள், 11 அக்டோபர், 2010

எங்கே செல்கின்றாய்?

வான நிலவு கீழிறங்கி
வைகை ஆற்றில் நீராடித்
தேனின் மலரைச் சூடியேதான்
தென்றல் குதிரை அமர்ந்தபடி
கானின் பாதை பலகாதம்
கடந்தே வந்து சேர்ந்ததுபோல்
மீனக் கண்ணின் அழகுமதி
மேனித் தழுவி மகிழ்ந்தனையே!

ஆலமரத்தின் இளங்கிளியோ
அங்கே இனத்தைப் பிரிந்தபடி
சோலைக் குளங்கள் பலகடந்து,
சுற்றம் புதிதாய்ச் தேடியேதான்
வாலைப் பருவ இணைதேடி
வந்தே கண்டு மகிழ்வதுபோல்,
பாலாம் ஆற்றுக் கரையினிலே
பாசக் கைகள் பிணைத்தனையே!

வயலின் ஓரம் ஏர்பிடித்தேன்!
வாய்க்கால் மீது நீநடந்து,
மயிலைப் போலத் தனிமையிலே
மாமன் மகளே வருகின்றாய்!
கயலைப் போலும் கண்களினைக்
கடலாம் நெஞ்சில் நீவீசிப்
புயலை நெஞ்சில் உண்டாக்கிப்
பூவே! எங்கே செல்கின்றாய்?

காதல் தோற்ற போதினிலே!

அன்பை இழந்தேன்! அறம் இழந்தேன்!
அறிவை உணர்வை மிகஇழந்தேன்!
இன்பம் இழந்தேன்! கனவு இழந்தேன்!
இளமை ததும்பும் முகம் இழந்தேன்!
என்பை இழந்தேன்! சதைஇழந்தேன்!
இழுத்துப் போக்கும் மூச்(சு) இழந்தேன்!
கன்னல் சுவைதரு காதலியே! நம்
காதல் தோற்ற போதினிலே!

பெற்றோர் பாசம் மிகஇழந்தேன்!
பிணைந்த நண்பர் உறவுஇழந்தேன்!
உற்றோர்,உறவோர், ஊர்இழந்தேன்!
ஊக்கம், செயல்கள் பலஇழந்தேன்!
கற்றோர் அவையில் புயல்போலக்
கனன்று பேசும் பேச்சிழந்தேன்!
கற்றைக் குழலின் மதிமுகமே!நம்
காதல் தோற்ற போதினிலே!

சனி, 9 அக்டோபர், 2010

கவலுகின்றேன்!

மண்தரையின் மீதமர்ந்து வீடு கட்டி,
மணல்சோறு சமைத்தபடிச் சிறுவ ரோடு
பெண்மகளிர் எனக்கூட்ட வேண்டாம் என்று
பெருங்கோபம் காட்டியவா(று) ஓடி,வந்து
கண்கலங்கி ஏமாற்றிக் களித்தேன்; இன்று
கடமைபல எனையமுக்கக் கண்ணீர் சிந்திப்
புண்கொண்ட நெஞ்சனெனப் பொறுமை இன்றிப்
புவிவாழ்வை வெறுத்தேநான் கவலுகின்றேன்!

ஊர்சுற்றித் திரிந்திருந்தேன்; உண்மை காணேன்;
உழைப்பின்றி வாழ்ந்திருந்தேன்; உற்ற நண்பர்
பேர்கெட்டுப் போமாறு பிழைகள் செய்யப்
பிடித்திழுத்தப் போதிலெல்லாம் மகிழ்ந்திருந்தேன்!
நீர்கெட்ட பின்னாலே மக்கள் யாரும்
நின்றதனைச் சுவைப்பாரோ? அதனைப் போலச்
சீர்கெட்டுச் சிறைப்பட்டு வாழுகின்றேன்!
சிந்தனையோ இல்லாது கவலுகின்றேன்!

மெய்யெழிலின் குழந்தையெனை நெருங்கி வந்து
மினுக்குகின்ற உடலழகைத் தடவிப் பார்த்துக்,
கையினிலே பொன்பொருள்கள் வலிய தந்து
காட்டாற்றின் அன்புதரும் உறவோர் தம்மைப்
பொய்பேசிப் புறம்பேசிப் புன்சொல் சொல்லும்
புலைஎண்ணம் என்றனுக்கு வந்த ஆற்றைக்
கையூன்றி மெய்சோர்ந்த இந்த நாளில்
கண்டு கண்டு யானிங்கே கவலுகின்றேன்!

எடுக்கின்ற செயலிலெலாம் வெற்றிவேண்டி
எத்தனையோ முறைநானும் முயன்றேன்; தோற்றேன்!
விடுக்கின்ற விழைவுணர்வு நொந்து, நெஞ்சம்
வெந்தவனாய் நான்வாடிச் சாகின்றேனே!
மிடுக்கெல்லாம் சிறுபோதில் கலைந்துபோக,
மேலெண்ணம் குழிவீழச், சூம்புகின்றேன்!
கடுக்கின்ற பகைவர்களே! காலம் மாறும்!
கனல்கின்ற உணர்வடக்கிக் கவலுகின்றேன்!

(அரங்கேறும் சிலம்புகள் என்ற என் பாத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள பாடல். இப்பாடல் 1993 இல் எழுதியதாக நினைவு.பொங்குதமிழ் என்ற தமிழகப் புலவர்குழு ஏட்டிலும் வந்தது.)

வெள்ளி, 8 அக்டோபர், 2010

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம் நிகழ்வும்-படங்களும்


அரங்கில் முதல்வர்,கல்லூரிச்செயலர்,மு.இளங்கோவன்


ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள் இளங்கலைத் தமிழ்ப்பட்ட வகுப்புத் தொடங்கப்பட உள்ளதை உறுதிசெய்தல்


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெறுவதற்கான அழைப்பினைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவராஜி அவர்கள் முன்பே மடல்வழித் தெரிவித்தார்.30.09.2010 இல் நடத்த முதலில் திட்டமிட்டோம்.அன்று நாடு முழுவதும் 144 தடை ஆணை இருந்ததால் எங்கள் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 07.10.2010 அன்று நாடத்தலாம் என்று உறுதிசெய்தோம். அதன்படி காலை 10.30 மணிக்குப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. கல்லூரிச் செயலாளர் ஜனாப் சு.கெய்சர் அகமது அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். பயிலரங்கத் தொடக்கத்தில் நூற்றாண்டுப் பழைமையுடைய இக்கல்லூரியில் பணியாற்றியவர்கள் பலரும் உலக அளவில் புகழ்பெற்ற பேராசியர்களாக விளங்கியதையும்,இக்கல்லூரியில் பயின்றவர்கள் உலக அளவில் புகழ்பெற்றவர்களாக விளங்குவதையும் எடுத்துரைத்து இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலுவதற்கு உரியவகையில் இக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் வகுப்பைத் தொடங்க வேண்டும் என்று பணிவுடன் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

கல்லூரியின் முதல்வரும்,கல்லூரியின் துணைச்செயலும் கூடியிருந்த அவையில் இக்கோரிக்கை வைக்கப்பட்டதும் கல்லூரியின் துணைச்செயலர் ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள் மேடையில் தோன்றி அடுத்த ஆண்டு முதல் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப் பட்ட வகுப்பு தொடங்கப்படும் என்ற அறிவிப்பைச் செய்தார்கள்.அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்ற தமிழ்த்துறையினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் ‘தமிழும் இணையமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மு.இளங்கோவன் தமிழ் இணையத்தின் வளர்ச்சி,வாய்ப்புகளைச் செய்முறை வழியாக எடுத்துரைத்தார்.

முதுகலை வேதியியல்துறையில் பயிலும் எசு.சுல்தானுதீன் நன்றியுரையாற்றினார்.

கல்லூரி மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு தமிழ் இணைய அறிவுபெற்றனர். இணையத் தமிழன்பர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


கல்லூரி முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா


கல்லூரித் துணைச்செயலாளர் ஆலங்காயம் திரு.ஜபருல்லாகான் அவர்கள்


பேராசிரியர் சிவராஜி அறிமுக உரை


வினாக்களை எழுப்பி ஐயம் போக்கிக்கொள்ளும் மாணவர்கள்


இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு வர உள்ளதைக் கொண்டாடும் பேராசிரியர்கள்


மு.இளங்கோவன்


அரங்கு நிறைந்த மாணவர்கள்


நன்றியுரை

புதன், 6 அக்டோபர், 2010

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் 'தமிழ் இணையம்' அறிமுகவிழா சிறப்புடன் நடைபெற உள்ளது. 07.10.2010(வியாழன்) காலை பத்துமணிக்குத் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இசுலாமியக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா பாஷா அவர்கள் தலைமையில் விழா நடைபெறுகிறது. கல்லூரிச் செயலாளர் ஜனாப் சு.கெய்சர் அகமது அவர்கள் முன்னிலையுரையாற்றுகிறார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றுகின்றார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றித் தமிழ் இணையத்தின் வளர்ச்சி,வாய்ப்புகளைச் செய்முறை வழியாக மாணவர்களுக்கு விளக்க உள்ளார்.இதில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,புகழ்பெற்ற இணையதளங்கள்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம் யாவும் அடங்கும்.

முதுகலை வேதியியல்துறையில் பயிலும் எசு.சுல்தானுதீன் நன்றியுரையாற்றுவார்.
இணையத் தமிழின்பம் பருக இசுலாமியக்கல்லூரியின் தமிழ்த்துறையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

தொடர்புக்கு: பேராசிரியர் ப.சிவராஜி 90958 31291

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

மகிழ்ச்சியில் இயக்குநர் வ.கௌதமன்…


மகிழ்ச்சித் திரைப்படத்தில் ஒரு காட்சி

நேற்று இரவு ஓர் எழுத்துப் பணியில் ஆர்வமுடன் மூழ்கிக் கிடந்தேன். அப்பொழுது செல்பேசியில் ஒரு தவறுதல் அழைப்பு வந்து நெடுநாழிகை ஆகியும் பார்க்காமல் இருப்பதைக் கண்டேன். சிலபொழுதுகளில் முதன்மையான பணிகளில் ஈடுபட்டிருந்தால் அழைப்புகளை ஏற்கமுடியாமல் இப்படி நேர்வது உண்டு.அழைத்தவர்களின் இயல்புக்குத் தக அவர்களுக்கு நானே பேசிப், பேச விழைந்ததன் நோக்கம் என்ன என வினவுவது உண்டு.அப்படி இந்தமுறை அழைத்தவர் யாரெனக் கவனித்தால் திரைப்பட இயக்குநர் வ.கௌதமனின் அழைப்பாக இருந்தது.அவரின் மகிழ்ச்சி திரைப்படப் பாடல் வெளியீடு அண்மையில் நடந்ததை அன்பர்கள் வழியாக அறிந்திருந்தேன்.தம் திரைப்படம் சார்ந்த முயற்சிகளை அவ்வப்பொழுது எம் போலும் இளையர்களிடம் பேசி இயக்குநர் மகிழ்வது உண்டு.எனக்கும் ஓய்வாக இருக்கும்பொழுது அப்படி அழைப்பு வரும். திரைப்போக்குகள்,உலகப்போக்குகள் பற்றி உரையாடுவோம்.

நான் இயக்குநர் கௌதமன் அவர்களைச் செல்பேசியில் அழைத்தேன்.தாம் திருவாரூர் செல்வதாகவும் இடையில் புதுச்சேரியில் என்னைக் காண விரும்புவதாகவும் இயக்குநர் சொன்னார். அவர் உலவிக்கொண்டிருந்த புதுச்சேரிக் கடற்கரைப் பகுதிக்கு அடுத்த பத்து நிமையத்தில் சென்றேன். இயக்குநர் அவர்களுடன் ஐந்தாறு நண்பர்களும் உலவியபடி இருந்தனர்.


இயக்குநர் வ.கௌதமன்

அந்தப் புதுவைக் கடற்கரையில் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் நம் பெருமைக்குரிய இயக்குநர் யாரென அடையாளம் தெரியாததால் நாங்கள் விடுதலையாக நடந்து சென்றோம். அங்குள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்துவிட்டு அண்ணன் கௌதமன் அவர்கள் திருவாரூர் செல்வது திட்டம்.சட்டமன்ற உறுப்பினரைப் பார்க்கும் முயற்சிக்கு இடையே மகிழ்ச்சி திரைப்படம் பற்றியும் அதன் கதை, ஒளிப்பதிவு, பாடல், இசை பற்றியும் சிறிது உரையாடினோம்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மிகச்சிறப்பாக இருபாடல்களைத் தந்துள்ளதையும் அண்ணன் அறிவுமதி ஒருபாடல் எழுதியுள்ளதையும் நண்பர் பேராசிரியர் பச்சியப்பன் அவர்கள் இரு பாடல் எழுதியுள்ளதையும் இசையமைப்பாளர் வித்தியாசாகர் மிகச்சிறப்பாக இசையமைத்துள்ள பாங்கையும் இயக்குநர் மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

மகிழ்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் விளக்கணி விழாவு(தீபாவளி)க்கு வெளிவர உள்ளது.அதற்குள் மருத்துவர் ச.இராமதாசு ஐயா அவர்களும் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் முன்காட்சியாகப் படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியதையும் இருவர் உள்ளத்தையும் படம் உருக்கியதையும் ஆர்வம்பொங்க மகிழ்ச்சியுடன் இயக்குநர் கௌதமன் வெளிப்படுத்தினார்.

மிகப்பெரிய சோகத்தில் சிக்கிக் கிடக்கும் உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியோடு இந்தப் படம் வெளிவர உள்ளது.இதில் இயக்குநர் கௌதமனே கதைத்தலைவனாக நடித்துள்ளார்.இயக்குநர் சீமான் அவர்களும் சிறப்பாக நடித்துள்ளார். கலைநயம் பொருந்திப் பாசமழை பொழியும் இந்தப் படம் எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய தலைமுறைகள் புதினம் மகிழ்ச்சிப் படமாக மாறியுள்ளது கூடுதல் செய்தி.எனக்கும் பாடல்கள் அடங்கிய ஒரு குறுவட்டை இயக்குநர் வழங்கினார்.

ஊத்துத் தண்ணி ஆத்தோட
ஆத்து ஓடம் காத்தோட..

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல் மீண்டும் ஒரு சிற்றூர்ப்புற வாழ்வைப் பொதிந்துவைத்துள்ளது.

”ஆரால்மீனு சேத்தோட”

என்று சூழலுக்குத் தக என் சிற்றூரின் சேறு குழப்பி எழுத இனி ஒரு கவிஞர் பிறந்து வருவாரா என்று ஏங்குகிறேன் கவிப்பேரரசே!.


இயக்குநருடன் மு.இளங்கோவன்


மகிழ்ச்சிப் படத்தில் ஒரு காட்சி

வெள்ளி, 1 அக்டோபர், 2010

குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன்


குணவதிமைந்தன்

உழவுத்தொழிலை நம்பியிருக்கும் இந்தப் பகுதி மக்களுக்கு வீராணம் ஏரிதான் செவிலித் தாய். ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றுச்சிறப்புடைய வீராணம் ஏரியின் தண்ணீர் சென்னைக்குக் குடிநீரான சூழலில் இந்தப் பகுதி மக்கள் வாழ்க்கையில் அச்சம் கவ்வியது. இனி நம் வேளாண்மை கட்டாயம் பாதிக்கும் என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தனர்.

வீராணம் ஏரியால் வளம்கொழிக்கும் ஊர் காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கும் திருமூலத்தானம்.

இது காட்டுமன்னார்கோயிலுக்குத் தென்கிழக்கே உள்ள ஊர். நெல்லும்,கரும்பும், உளுந்தும் அறுவடை செய்து மாளாது. அறுப்பதும் அடிப்பதும் உழுவதும் அன்றாடம் நடக்கும். இப்படி இயற்கை வளம் இருந்தாலும் எந்தச் செயலுக்கும் காட்டுமன்னார்கோயில்தான் தலைமையிடம்.

காட்டுமன்னார்கோயிலை அடுத்துள்ள பல ஊர்களில் வேளாண்மைத்தொழில் சிறப்பாக நடந்தபொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டம் உள்ளிட்ட பிற மாவட்டத்து மக்கள் வேலைக்கு வந்து ஓரிரு மாதங்கள் தங்கி வேலை செய்து ஆண்டு முழுவதுக்குமான வருமானத்துடன் வீடு திரும்புவார்கள்.

இப்பொழுது வீராணம் ஏரித்தண்ணீரை அரசு இயந்திரங்கள் உறிஞ்சி எடுத்தபொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் செய்வது அறியாது கவலையுடன் கண்ணீர்மல்க அமர்ந்தனர். அந்தப் பகுதியில் இருந்த அரசியல்காரர்களோ, சமூக இயக்கங்களோ செய்வதறியாமல் கைபிசைந்து நின்றனர்.

அந்த நேரத்தில் தன் அறிவு, ஆற்றல், நட்பு, ஊடகத்துறையின் ஒத்துழைப்புடன் ஒரு இளைஞர் கையில் ஒளிப்பதிவுக் கருவியுடன் வீராணத்துக்கரையில் வந்து நின்றார்.அந்தப் பகுதி மக்களின் சோக வாழ்க்கையை ஒளிப்பதிவுக்கருவியில் படமாக்கினார். கல்கி முதலான வரலாற்றுப் புதின ஆசிரியர்களுக்குப் புலப்படாத வீராணத்து ஏரிக்கரையின் உண்மையான சோக வரலாற்றை அந்த ஏரித்தண்ணீர் குடித்து வளர்ந்த அந்த இளைஞர் உலகத்துக்குப் புதுப்பார்வையில் வெளிப்படுத்தினார்.அண்ணன் அறிவுமதி அவர்கள் அந்த வீராணம் ஏரியின் ஒளிப்பதிவு ஆவணத்தை வெளியிட்டுத் தழுதழுத்த குரலில் அதனை இயக்கிய அந்த இளைஞரைத் தன் தம்பியாக அறிமுகம் செய்த அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்தபொழுது எனக்கு அறிமுகமான பெயர்தான் குணவதிமைந்தன்.

ஆம்.

குறும்படம், ஆவணப்படம் எனப் பல படங்கள் எடுத்து முழுநீளப் படத்தை இயக்கும் ஆற்றல்பெற்றுள்ள அவரைப் பற்றி அறியும் ஆர்வம் எனக்குப் பல நாளாக இருந்தது.
கல்லூரிப் பணியில் நான் கவனமுடன் இருந்தபொழுது குடும்பவிளக்கு குறும்படம் வெளியீட்டு விழா அழைப்பிதழுடன் வந்த குணவதிமைந்தன் அவர்களைக் கண்டேன். அவரின் பழகும் பண்பும், திறமையும்,ஆற்றலும் அவர் தம்பியர்கூட்டத்துள் ஒருவனாக என்னையும் கொண்டுபோய் சேர்த்தது. கடந்த ஐந்தாண்டுகளாக நல்ல தொடர்பில் இருக்கின்றோம்.அவரின் வாழ்க்கையையும் குறும்படங்களையும் இங்கு ஆவணப்படுத்த விரும்புகிறேன்.

குணவதிமைந்தன் என்று குறும்பட உலகில் அறிமுகமான இவர்தம் இயற்பெயர் இரவி. காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள திருமூலத்தானம் என்னும் ஊரில் 18.05.1965 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் இராமையன், குணவதி அம்மா. தொடக்கக்கல்வியைக் காட்டுமன்னார்கோயிலில் முடித்த இவர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை, இளம்முனைவர் பட்டங்களைப் பெற்றவர். முனைவர் பட்டத்துக்குச் சுற்றுலாத்துறை சார்ந்த தலைப்பில் ஆய்வுசெய்து வருகின்றார்.

உழைக்கும் மக்களின் வாழ்க்கைச்சூழலைக் கண்முன் கண்டதால் இதழியல்துறையில் ஈடுபாடு கொண்டவர். இளமை முதல்அஞ்சாது நாட்டு நடப்புகளை எழுதியவர். படைப்பாகவும் செய்தியாகவும் இவர் ஆக்கங்கள் தொடக்கத்தில் வெளிப்பட்டன.

இதழியல்துறையில் 1988 இல் ஈடுபட்டு, வணிக ஒற்றுமை என்னும் இதழில் எழுதத் தொடங்கி, பின்னர் கீதாமஞ்சரி, கண்கள் தமிழ்மலர், உள்ளிட்ட சிற்றிதழ்களில் எழுதினார். 1989 முதல் தினகரன், மாலைமலர், தினமலர், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் செய்தியாளராகப் பணிபுரிந்தவர்.

1992 முதல் புதுச்சேரியில் தினமணி செய்தியாளராகப் பணியாற்றினார்.பின்னர் பணி உயர்வுபெற்று இந்தியன் எக்சுபிரசு குழுமத்தில் மேலாளராகப் பணிபுரிகின்றார். தாம் ஏற்றுக்கொண்ட பணியினைச் சிறப்பாகச் செய்துமுடிக்கும் இவர் ஆற்றல் மற்ற இதழாளர்களுக்கு எடுத்துக்காட்டானதாகும்.

படிக்கும் காலத்தில் திரைத்துறையில் ஈடுபாடுகொண்டு விளங்கினாலும் தம் பணிச்சூழலால் அந்தத் துறையில் தொடக்கத்தில் சுடர்விடமுடியவில்லை. எனினும் திரைத்துறை தயாரிப்பில் தன்னை எப்பொழுதும் புதுப்பித்துக்கொண்டே வந்தார்.

இந்த நேரத்தில்(1990) “போர்த் எஸ்டேட்” என்ற குறும்படத்தை இயக்கினார். இதில் இதழாளர்கள் படும் துன்பம் பதிவானது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் இதழாசிரியராகவும், இயக்குநர் அருண்மொழி இதழாளராகவும் நடித்தனர். சமூக நடப்புகளை எடுத்துக்காட்டும் இதழ்களில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை இதில் எதிரொலித்தது. நாற்பது நிமிடம் ஓடும் படம் போர்த் எஸ்டேட்.

அதனை அடுத்துச் சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்டு வீராணம் ஏரி பற்றிய பதிவைக் குறும்படமாக எடுத்து அந்தப் பகுதி மக்களின் சார்பில் இந்தச் சமூகத்தில் நீதிகேட்டுப் போராடினார். இதற்காக இவர் திரட்டிய வரலாற்றுச்சான்றுகள், துறைசார்ந்த வல்லுநர்களின் நேர்காணல்கள் இந்தப் படத்தின் உண்மையை நிலைநிறுத்தின. தென்னார்க்காடு மாவட்டத்து மக்களின் உயிராதாரமாக இருக்கும் வீராணம் ஏரித்தண்ணீர் சென்னை மக்களுக்குக் கொண்டு செல்வதால் தென்னார்க்காடு மாவட்டமே பாலைவனமாக மாறும் என்று இந்தப் படம் சித்திரித்து.இது இன்று கண்கூடான உண்மையாயிற்று. ஆண்டுக்கு மூன்றுமுறை அறுவடை செய்த மக்கள் இன்று ஒருமுறை அறுக்கவே துன்பப்படுகின்றனர் என்பதைக் கண்ணால் கண்டு வருந்துகிறோம்.இத்தகு சமூக நிகழ்வை ஆவணப்படுத்திய இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாவேந்தரின் படைப்புகளில் முதன்மையான நூல் குடும்பவிளக்கு நூலாகும். குடும்ப விளக்கில் இடம்பெறும் ஒருநாள் நிகழ்வை உண்மை வாழ்க்கையில் நடக்குமா என்று பாவேந்தரை ஏற்காத சிலர் தாழ்வாகப் பேசுவர்.அவர்களின் பொய்யுரைகளை உடைத்து இயல்பான காட்சிகளாக்கிக் குடும்பவிளக்கு இன்றைய தமிழுலகத்திற்குத் தேவை என்று குணவதிமைந்தன் நிலைநாட்டினார்.


குடும்பவிளக்கு வெளியீடு


குடும்பவிளக்கு

அறிவியல் தொழில்நுட்ப உலகில் இன்று படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளது. தொலைக்காட்சி, திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்கு ஊடகங்களால் இன்று நெடுநாழிகை அமர்ந்து படிப்பது இயலாத செயலாக உள்ளது. இத்தகு நிலையில் பாவேந்தரின் குடும்ப விளக்கு நூலின் செய்திகளை எளிய நிலை மக்களும் புரிந்துகொண்டு சுவைக்கும்படியாகக் காட்சி வழியாக விளக்கியுள்ளார். தமிழ்ப்பற்றாளர்களும்,பாவேந்தர் பற்றாளர்களும் வாங்கிப் பார்க்கத் தகுந்த குறும்படம் குடும்பவிளக்காகும்.

குடும்பவிளக்குப் படத்தின் சிறப்பு உணர்ந்த திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்தப் படம் இயக்கிய குணவதிமைந்தனை அழைத்துப் பாராட்டிச் சிறப்பு செய்தது.


புதுச்சேரியில் பாரதி

இந்திய விடுதலைப்போருக்குக் கனல் கக்கும் பாடல்களை வடித்துத் தந்த பாரதியாரின் புதுச்சேரி வாழ்க்கை அவரை ஒரு மிகச்சிறந்த இதழாளராக மாற்றியது. புகழ்பெற்ற படைப்புகள் யாவும் பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த பத்தாண்டுகளின்பொழுதே படைக்கப்பப்பட்டன. பத்திரிகையாளரான குணவதிமைந்தன் பாரதியின் போராட்ட வாழ்க்கையை இந்தப் படத்தில் மிகச்சிறப்பாகத் தந்துள்ளார். இப்படங்கள் புதுச்சேரியில் அறிமுகமான அளவு உலகத் தமிழர்களின் பார்வைக்கு இன்னும் அறிமுகம் ஆகாமல் இருப்பது ஒரு குறையே ஆகும். ஒருமணிநேரம் ஓடும் இந்தப் பாரதி புகழ்பரப்பும் படத்தை அனைவரும் பார்க்கலாம்.பாரதியோடு அருகில் வாழ்ந்த மன நிறைவை இந்தப் படம் வழங்குகின்றது.

காப்பியப்புகழ் கம்பனின் வாழ்க்கை பற்றிய புதிர்கள் இன்னும் ஆய்வாளர்களால் விடுவிக்கப்படாத சூழலில் துணிந்து நின்று கம்பனின் காவிய வாழ்வைப் படமாக்கிக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரும்பணியாற்றியுள்ளார் குணவதிமைந்தன். இந்தப் படம் பிரான்சு. சுவிசர்லாந்து உள்ளிட்ட அயல்நாடுகளிலும் திரையிடப்பட்டது என்பது தனிச்சிறப்பு. ஒருமணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் நடிகர் இராம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.


கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்படம் வெளியீடு


கவிச்சக்கரவர்த்தி கம்பன்

இந்திய விடுதலைக்கு உழைத்த அரவிந்தரை ஆன்மீகவாதியாக அனைவரும் அறிவோம். அவரின் இந்திய விடுதலைப் போராட்டப் பணிகளை யாவரும் உணரும்படியாகப் புதுச்சேரி அரசின் தயாரிப்பாக ஒன்றரை மணி நேரம் ஓடும் படமாகக் குணவதிமைந்தன் தந்துள்ளார். புதுச்சேரி, சந்திரநகர், கல்கத்தா, டார்சிலிங்கில் இந்தப் படம் படமாக்கப்பட்டது. நடிகர் இராம் இந்தப் படத்தில் அரவிந்தராகவே வாழ்ந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களாகிய இருளர்களின் இருண்ட வாழ்க்கையைப் பதிவுசெய்து சமூகத்தில் அவர்களுக்கு உரிய உரிமையை மீட்க உதவும்படமாக இருளர்கள் குறித்த படத்தைக் குணவதிமைந்தன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இருளர்கள் வாழ்வில் முன்னேற்றங்கள் கிடைக்க பல நல்ல திட்டங்கள் அரசு உருவாக்க உதவியது.

இவை தவிரப் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் அவற்றின் பணிகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் குணவதிமைந்தன் பல படங்களை உருவாக்கித் தந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், அறியப்பட வேண்டியத் தமிழ் இலக்கியப்பகுதிகளை அனைவரும் அறியவும் தம் ஒளிப்பயணத்தைத் தொடங்கியுள்ள குணவதிமைந்தன் தமிழ் இலக்கியத்தின், குறிபாகச் சங்க காலத் தமிழர் வாழ்க்கையினை வெளிக்கொணரும் படங்களை உருவாக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.அவ்வாறு உருவாக்கும்பொழுது உலகத் தமிழர்கள் இத்தகு உலகு தழுவிய முயற்சிக்கு உதவ வேண்டும். குறைந்த அளவு இவருக்கு உரிய இடத்தையும் பாராட்டையும் நாம் தெரிவிக்க வேண்டும். நம் கரம் நீண்டால், குணவதி மைந்தன் அவர்கள் எடுக்கும் படங்களின் தரம் நீளும்.