நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 16 செப்டம்பர், 2007

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டு தமிழ்மொழிக்கு ஏற்றம்தரும் நூற்றாண்டாக அமைந்திருந்தது.பனை ஓலைகளில் படிந்திருந்த தமிழ்மொழி அச்சுவடிவம் கண்டதும்,கணிப்பொறி,இணையத்தில் உலவியதும் இந்நூற்றாண்டில்தான் நடந்தேறியது.அதுபோல் பாரதியார்,பாரதிதாசன் முதலான பாவலர்கள் தோன்றித் தமிழ்க்கவிதை உலகைப் புதுப்பாதையில் வழிநடத்தியதும் இந்நூற்றாண்டில்தான் நிகழ்ந்தது. பலநூற்றாண்டுகளாகத் தமிழ்மொழியில் படிந்திருந்த பிறமொழிச் சொற்களைக் களைந்தெறிந்து தனித்தமிழ் இயக்கம் மக்கள்இயக்கமாக மாற்றம்பெற்றதும் இந்நூண்டில்தான் என்று எழுதினால் மிகையன்று.

 அத்தகு மொழிவளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகளைப் போல் பழந்தமிழ் நூல்கள் மக்களால் எளிதில் பயில்வதற்கு ஏற்றவகையில் உரை வரையப்பட்டும் பதிப்பிக்கப்பெற்றும் நாடு முழுவதும் பரவியதும் இருபதாம் நூற்றாண்டில்தான் நடந்தன. இவ்வாறு உரைவரையும் பெரும்பணியில் தமிழகத்து அறிஞர்கள் பலர் ஈடுபட்டுத் தம் அறிவையும் உழைப்பையும் நல்கி என்றும் தமிழகமக்களால் நினைக்கும்படியான அழியாப்புகழைப் பெற்றுள்ளனர்.அவ்வறிஞர் பெருமக்களுள் என்றும் தலைமேற்கொண்டு போற்றும்படியான பெருமைக்கு உரியவராகப் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் விளங்குகிறார். அவர்தம் தமிழ் வாழ்வையும் உரைப்பணிகளையும், படைப்பாக்கங்களையும் இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

சோமசுந்தரனாரின் இளமைவாழ்க்கை

 சோமசுந்தரனார் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலைப்பெருமழை என்னும் ஊரில் 1909 செப்டம்பர் ஐந்தாம் நாள் பிறந்தவர்.இவர்தம் தந்தையார் பெயர் வேலுத்தேவர் என்பதாகும்.தந்தையார் உழவர்.திண்ணைப்பள்ளி வரை கற்றவர்.தம்மகனும் திண்ணைப்பள்ளிவரை கற்க இசைந்தார்.

 அக்காலத்தில் சோமசுந்தரனார் திண்ணைப்பள்ளியில் வழக்கமாகக் கற்பிக்கும் அரிச்சுவடி, ஆத்திசூடி, வெற்றிவேற்கை,நிகண்டுநூல்கள்,நைடதம், கிருட்டிணன்தூது,அருணாசலப்புராணம் முதலான நூல்களைக் கற்கும் வாய்ப்பினை முதல் ஐந்தாண்டுகளில் பெற்றார்.அதன்பிறகு சோமசுந்தரனார்க்குக் கற்கும் ஆர்வம் இருந்தாலும் தம் மகனை உழவுத்தொழிலில் ஈடுபடுத்தவே தந்தையார் விரும்பினார்.எனவே தந்தையாரின் கண்ணில்படாமல் தமிழ் நூல்களைப் படிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டார்.

 திண்ணைப் பள்ளியில் சோமசுந்தரனார்க்குப் பயிற்றுவித்த ஆசிரியர்க்கு வில்லிபாரதம் உள்ளிட்ட நூல்களில் நல்ல பயிற்சி இருந்தது.அவ்வாசிரியப் பெருந்தகை பாரதச் சொற்பொழிவு செய்யும் ஆற்றல்பெற்றவர். அவர்தம் ஆளுமை நம் சோமசுந்தரனாரை ஆட்கொண்டது.அவர்போல் நம் புலவரும் படிக்க விரும்பிப் பெற்றோர்க்குத் தெரியாமல் மடம்,கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று தனித்திருந்து படித்தார். இராமாயணம்,பாரதம் முதலான நூல்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினார்.

 சோமசுந்தரனார்க்குப் பத்து அகவை ஆகும்பொழுது இவர்தம் அன்னையார் மறைந்தார். தந்தையார் மறுமணம் செய்துகொண்டதால் சோமசுந்தரனார் தம் தாய்மாமன் இல்லத்தில் தங்கியிருந்தார்.அங்கும் இவர் கல்விபயில ஒத்துழைப்பில்லாமல் போனது.

மேலைப்பெருமழைக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் வாழ்ந்த சர்க்கரைப்புலவரிடம் தம் புலமைநலம் தோன்ற சில பாடல்களை எழுதிச்சென்று காட்ட சோமசுந்தரனாரின் கவிபுனையும் ஆற்றலையும் கல்வி ஆர்வமும் கண்ட சர்க்கரைப்புலவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று பயிலப் பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.

சோமசுந்தரனாரின் அண்ணாமலைநகர் வாழ்க்கை

 தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்களின் மீதும் அளவிலா ஈடுபாடு கொண்டிருந்த சோமசுந்தரனார்க்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய அமுதசுரபியாகத் தமிழறிவை வழங்கியது.இவர் பயின்ற காலத்தில் சோழவந்தான் கந்தசாமியார்,விபுலானந்தர் அடிகள்,பண்டிதமணி கதிரேசன் செட்டியார். பொன்னோதுவார்,பூவராகன் பிள்ளை முதாலான பேரறிஞர்கள் தமிழ்பயிற்றுவிக்கும் பணியில் இருந்தனர்.

 அண்ணாமலைப்பல்கலையில் பயிலும் மாணவர்குக்கு அந்நாளில் வழங்கப்பட்ட பன்னிரு உரூவா உதவித்தொகையைக் கொண்டு நம் புலவர் படிக்க வேண்டியிருந்தது.குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகச் சோமசுந்தரனார் கல்வி பயில்வதால் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாமல் போனது.

 எனவே பல்கலைக்கழகத்திலிருந்து மூன்றுகல் தொலைவிலிருந்த நண்பர் ஒருவருடன் தங்கித் தாமே சமைத்துண்டு ஐந்தாண்டுகள் வறுமையோடு தமிழ்படித்ததார். அக்காலத்தில் சோமசுந்தரனார்க்குப் பேராதரவாகப் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் முதலானவர்கள் இருந்துள்ளதைப் பண்டிதமணி வரலாறு எழுதும்போது சோமசுந்தரனார் நன்றிப்பெருக்குடன் பின்வருமாறு எழுதுவார்:

...யான் பண்டிதமணியவர்கள் இல்லத்தே இரண்டாண்டுகள் ஊடாடிப்பழகும் பேறுபெற்றேன்.என்பால் பண்டிதமணியவர்களும் திரு.ஆச்சியார் அவர்களும் பிள்ளைமுறைகொண்டு அன்பு பூண்டொழுகினர்...(பக்.46)

...அக்காலத்தில் யான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தே ஒரு தமிழ்மாணவனாக இருந்தேன்.பண்டிதமணியவர்கள் அரசர் வேண்டுகோட் கிணங்கிப் பல்கலைக்கழகத்திற்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி பரவியபொழுது என்போன்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை....( பக.50)

 1941 ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே தமிழாராய்ச்சிப் பகுதியில் அறிவுரை தருநர் (அட்வைசர்) என்னும் சிறந்த பதவியை ஏற்று அண்ணாமலைநகரில் இருந்து பணிபுரிந்துவந்தார்கள்.

 ...வடமொழியிலே சாணக்கியர் என்னும் பேராசிரியராலே ஆக்கப்பெற்ற கொளடலியம் என்னும் பொருள்நூலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள். இம் மொழிபெயர்ப்புப் பணியில் யானும்,ஒரு வடமொழிவாணரும் நம் பண்டிதமணியார்க்கு அருகிருந்து துணைசெய்யுமாறு நியமிக்கப்பட்டோம். அக்காலத்தே அவர்களுடன் நனி அணுக்கனாயிருந்து எளியேன் எய்திய நலங்கள் மிகப்பல (பக்.93,94).

 சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேறினார். சோமசுந்தரனார் தமிழறியவே கல்வி கற்க வந்தாரேயன்றி வேலைக்குச் செல்லும் வேட்கையில்லாதவர். எனவே தமிழறியாத அந்நாளைய ஆளுநர் எர்சுகின் பிரபு கைகுலுக்கி வழங்கிய புலமைச் சான்றை (டிப்ளமோ)க் கிழித்துக்காற்றில் பறக்கவிட்டு ஊர்சென்றார்.

குடும்பம்

 சோமசுந்தரனார் ஊரையடைந்து தம் முன்னோர் தொழிலான வேளாண்மைத்தொழிலில் ஈடுபட்டார்.தம் மாமன் மகளான மீனாம்பாள் என்பவரை மணம்செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.

 அண்ணாமலை நகரில் இருந்த தம் ஆசிரியப் பெருமான் பண்டிதமணியாரைப் பார்க்க ஒருமுறை சென்றபொழுது அவர் வரைந்த திருவாசக உரைப்பணியில் இவரை ஈடுபடுத்தினார்.நாற்பது உருவா ஊதியத்திற்குப் பண்டிதமணியார் உரைசொல்லவும் அதனை எழுதிவழங்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பண்டிதமணியாருடன் பணிசெய்து உரைவரையும் போக்கினைத் தெரிந்துகொண்ட சோமசுந்தரனார்க்குப் பின்னாளில் உரை வரையும் வாய்ப்புத்தேடி வந்தது. பண்டிதமணியாரின் உரைப்பணி நிறைவுற்றதும் சோமசுந்தரனார் மீண்டும் உழவுப் பணியில் கவனம் செலுத்தினார்.

 உள்ளூர் அன்பர்கள் விருப்பத்திற்கு இணங்க, சில கட்டுரைகளையும், நாடங்களையும் வரைந்த புலவருக்குக் கருப்பக்கிளர் சு.அ.இராமசாமி அவர்கள் வழியாகத் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தொடர்பு அமைந்ததும் அதுநாள்வரை எரிமலைபோல் உள்ளுக்குள் இருந்த புலமை நலம் யாவும் பல்வேறு உரை நூல்கள் வழி உலகெங்கும் பரவின.

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் தொடர்பு

 சோமசுந்தரனார்க்கு மருதவனம் கு.குருசாமி என்பவர் நண்பராக விளங்கினார். அவர்கள் வழியாக அந்நாளில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த புலவர் சு.அ.இராமசாமி அவர்களைக் கண்டு கழகத்தின் தொடர்பைப் பெற்றார்.முதலில் சோமசுந்தரனாரின் படைப்பு நூல்களான செங்கோல் (நாடகம்), பண்டிதமணி, பெருங்கதை மகளிர், மானனீகை (நாடகம்) முதலியன வெளிவந்தன. சு.அ.இராமசாமி அவர்களுடன் இணைந்து சூளாமணிக்கு உரை வரையத் தொடங்கினர். அதன் பிறகு சங்க நூல்களுக்கும் பிற நூல்களுக்கும் சோமசுந்தரனார் உரைவரையவும், விளக்கவுரை வரையவும் வாய்ப்பினைப் பெற்றார்.

 அவ்வகையில் 1. சிலப்பதிகாரம், 2. மணிமேகலை,  3. அகநானூறு, 4. பெருங்கதை, 5.உதயண குமாரகாவியம், 6. வளையாபதி, 7. குண்டலகேசி, 8. நீலகேசி, 9. ஐங்குறுநூறு, 10. புறப்பொருள் வெண்பா மாலை, 11. கல்லாடம், 12. பட்டினத்தார் பாடல், 13. பரிபாடல், 14. குறுந்தொகை, 15. நற்றிணை (பின்னத்தூர் நாராயணசாமி உரைக்கு விளக்கம்), 16. பத்துப்பாட்டு,  17.சீவக சிந்தாமணி, 18.கலித்தொகை (நச்சினார்க்கினியர் உரைக்கு விளக்கம்), 19. திருக்கோவையார் (பேராசிரியர் உரைக்கு விளக்கம்) முதலிய நூல்களுக்கு இவர்தம் உரையும், விளக்கமும் அமைந்துள்ளன.

 சோமசுந்தரனார்க்கு உரைவரையும் ஆற்றல் அமைந்ததுடன் உரைநடை எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். பெருங்கதையை உரைநடையாக வரைந்துள்ளமை இதற்குச் சான்றாகும்.

 சோமசுந்தரனார் பாடல் இயற்றுவதிலும் வல்லவர் என்பதற்குச் சான்றாக 1952 இல் புயல்பற்றி இவர் பாடிய பாடல்களும்,1966 இல் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டபொழுது மழைவேண்டி இவர் பாடிய பாடல்களும் சான்றாக விளங்குகின்றன.

 சோமசுந்தரனாரின் படைப்பு நூல்கள், உரைநூல்கள்,உரைநடை நூல்கள், கட்டுரைகள் முதலானவற்றைக் கற்கும்பொழுது அவர்தம் தனித்திறமைகளை ஒருவாற்றான் உணரமுடியும். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் பழுத்த தமிழறிவு இரண்டு அறிஞர்கள் வழியாக இத் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளதை இங்கு நினைவிற்கொள்ள வேண்டும். மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் ஒருவர்.மற்றவர் நம்புலவர் பெருமான் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்.இவ்விரு அறிஞர்களின் எழுத்துகளையும் ஆராய்ச்சிகளையும் ஊன்றிக்கற்றால் மிகச்சிறந்த தமிழாளுமை தெரியவரும்.

 நம் சோமசுந்தரனாரோ இலக்கண நூல்கள், சங்க நூல்கள், காப்பியங்கள், பக்திநூல்கள், உரையாசிரிர்களின் பேருரைகள், தனிப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் யாவற்றையும் கரைகண்டுள்ளமை அவர்தம் தமிழ்க் கொடைகளின் வழிபுலப்படுகின்றது. அடியார்க்குநல்லலார், சேனாவர்யர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், பின்னத்தூர் நாராயணசாமியார் முதலான உரையாசிரியப் பெருமக்கள் விளக்கம் கூறாத பல இடங்களை விளக்கிச் செல்வதும், பொருத்தம் இல்லாத இடங்களை எடுத்துரைப்பதும், கூடுதல் விளக்கம் தருவதும், சரியான விளக்கம்தர முயன்றுள்ளதும் எண்ணி எண்ணி வியப்புறும் தகுதிப்பாடுகளாம்.

 தமக்குத் தெரியாத,தொடர்பில்லாத சில மதம், சமயம், இசை, கூத்து சார்ந்த பகுதிகளுக்கு விளக்கம் எழுதுவதற்கு அத்துறை வல்லாரை அணுகி உரை வரைந்துள்ளமை அவர் தமிழ் இலக்கியங்கள்மேல் கொண்டிருந்த பற்றிற்குச் சான்றாகும். அவ்வகையில் நம் புலவர்பெருமான் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு உரைவரையும்பொழுது இசைப்பேரறிஞர் இராமநாதனாரிடம் இசை நுணுக்கங்களை அறிந்ததை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும் (திரு.இரா.முத்துக்குமாரசாமி அவர்களுடன் நேர்காணலில், நாள்: 01.09.2007).

 உரைநடை வரைந்தபொழுதும், உரை வரைந்தபொழுதும் பன்னூறு நூல்களை மேற்கோள்காட்டிச் செல்லும் திறம் அவரின் ஆழ்ந்த கல்விப் பரப்பிற்குச் சான்றாகும். இடையிடையே இலக்கணக் குறிப்புகளை அமைப்பது சொற்பொருள் வரைவது, இலக்கியத்தின் இனிய பகுதிகளைப் படிப்பவர்க்கு எடுத்துக்காட்டிக் கதை நிகழும் இடத்தை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துவது இவரின் தனி இயல்பாக உள்ளது.

 சோமசுந்தரனாரின் படைப்புகள், உரைச்சிறப்புகள், உரையாளுமை, உரைவரைதலில் மேற்கொண்ட நுட்பங்கள், இவர்தம் உரைப் பணிக்குத் தமிழுலகில் உள்ள இடம் ஆகியன முறையே ஆராய்ச்சி செய்யப்பெறல் வேண்டும்.

 தம் பிறந்த ஊரான மேலைப்பெருமழையில் இருந்தவாறே பழந்தமிழ் நூல்களுக்குப் பல்லாண்டாக உரைவரைந்து சென்னைக்கு அனுப்பி வந்தார். இத்தகு தமிழ்ப்பணியில் சோமசுந்தரனாரை ஈடுபடுத்திய கழக ஆட்சியர் வ.சுப்பையாபிள்ளை அவர்கள் என்றும் தமிழ் உலகத்தினரால் போற்றத்தக்கவர்.

 சோமசுந்தரனார் பல ஆண்டுகளாக உரைவரைந்ததால் உடல்நலம் போற்றவில்லை.உடல் பாதித்தது. ஏறத்தாழ நான்காண்டுகள் வலக்கையில் கடுப்பு ஏற்பட்ட அந்த நேரத்திலும் தாம் உரைசொல்ல பிறரை எழுதச்செய்து அனுப்பி வந்தார். மூச்சுத் திணறல் முதலான நோய்கள் புலவரை வாட்டின. பல்வேறு மருந்துகளை உட்கொண்டு வந்தார். இதன் காரணமாகவோ என்னவோ பக்கவாதம் என்னும் நோய் கடுமையாகத் தாக்கியது.

 புதுவை சிப்மர் மருத்துவமனையில் 21.12.1971 இல் சேர்க்கப்பட்டு உணர்விழந்த நிலையில் பலநாள் இருந்த நம் புலவர் பெருமான் சோமசுந்தரனார் 03.01.1972 இல் இயற்கை எய்தினார்.

 சங்கப் புலவருக்கு நிகரான ஆற்றலைப் பெற்றிருந்தும் ஆசிரியர் பணியிலோ பிற மேடைப் பேச்சுப் போன்ற ஆரவாரப் பணிகளிலோ ஈடுபடாமல் தமிழ் நூல்களைத் தமிழர்கள் அனைவரும் கற்கவேண்டும் அதன் வழியாகப் பழந்தமிழகம் பற்றி மக்கள் அறியவேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழ்ந்த சோமசுந்தரனாரின் புலமையை மதிக்கும் வண்ணம் அவர் பெயர் என்றும் நின்று நிலவத் தக்க வகையில் அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அவர்தம் பெயரைச்சூட்டி மகிழ்வது அப்புலவர் பெருமானுக்கு நாம் செய்யும் கைம்மாறாக அமையும்.

நன்றி: திண்ணை இணைய இதழ் 06.09.2007

4 கருத்துகள்:

Banukumar சொன்னது…

பெரும் மழைப் புலவர் பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள் பல. அவரின் சிந்தாமணி உரைச் செறிவை என்றும் மறவேன்!


இரா. பானுகுமார்,
சென்னை.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் கருத்திற்கு
நன்றி ஐயா.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

Dear Sir,
I read your piece on the great scholar Perumazhaipulavar Somasundaranaar.It was nearly 45 years ago ,I had the privilege of reading his Urai to Pattinappalali while I was studying in St Joseph's college Tirucirappalli.Pattinappalai was one of the prescrbed texts of Poetry then .I was so attracted by the Urai that I almost got the entire Urai by heart and when I had to write answers ,I reproduced the urai as I fellt not a single word could be omitted ( I did the same thing when answering questions in Pandithamani's essays like Gnathin Thiruuru0)
I always felt that Somasundaranaar's contribution was not given the due recognition while people of lesser calibre were given awards and titles.
Thank you very much for wrting about this scholar whom I hold in highest esteem

Vanakkam Nandri
Sampath kumar BBC

Sankar Veeraiyan சொன்னது…

இவற்றையெல்லாம் படிக்கும்பொழுது மிக்க மகிழ்ச்சியும் பெருமையடைகிறேன்....
நன்றி மு.இளங்கோ அவர்களே...