நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 13 அக்டோபர், 2010

வெண்பா விருந்து

பாவேந்தர் பாடிய பாட்டு!

செந்தமிழ்ப் பாணர்க்குச் சீர்பரிசில் நல்கியே,
வந்திடும் மாற்றாரை வாளுக்(கு) இரையாக்கும்
மாவேந்தர் என்றாலும் மண்டியிடச் செய்யுமே
பாவேந்தர் பாடிய பாட்டு!

வெற்றிகொள்வோம்!

ஏழை உழைப்பையெல்லாம் ஏய்த்துச் சுரண்டுகின்ற
கோழை முதலைகளின் கொள்ளையினைத் - தோழர்காள்!
இற்றைக்கு நாம்நிறுத்தி ஈடில் உழைப்பெடுக்க
வெற்றிதனைக் கொள்வோம் விரைந்து!

சிலைவைக்க தடை ஏன்?

அறம்பொருள் இன்பத்தை யாரும் உணரத்
திறம்படத் தீங்குறள் தந்த முனியைத்
தலைவைத்துக் கூத்திடா தண்கரை நாடே!
சிலைவைக்க என்னதடை செப்பு.

இலக்கணம் கற்போம்!

ஆங்கிலம் இந்தி அரபுமொழி மற்றெல்லாம்
ஈங்குளோர் பேசி இழிந்திட- ஏங்கிக்
கலக்கமுறும் என்தமிழ் கண்ணீர் துடைக்க
இலக்கணம் கற்போம் இனிது

தமிழ் விளி

கடல்கோளில் தப்பிக் கழகத்தில் ஓங்கி
வடமொழிக்கும் தாயான வஞ்சிச்-சுடரே
அமிழ்தே! அழகே! அருமையென் தாயே!
தமிழே பணிந்தேனுன் தாள்.

இவன்

குமரி நிலந்தோன்றிக் கோவால் வளர்ந்த
இமய வரையோரும் ஏத்தும் – தமிழைக்
களங்கமிலாச் சீர்பனசைக் கல்லூரி தன்னில்
இளங்கோவன் கற்றான் இனிது

1 கருத்து:

Kalaimahan சொன்னது…

இலங்கிடும் சிலம்பினைத் தந்தான் பெருமை
இளங்கோ நாமத்தொடுள உன்னி லுண்டு
இலங்கிட வுள்ளம் சீர்கவி யியற்றி
இமாலயமாய் விளங்கி நீவாழி!
(கலைமகன்)