பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909-03.01.1972)
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப் பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்ற செய்தியைத் தமிழ் உலகின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன். இந்தச் செய்தி தினமணி நாளேட்டில் வெளிவந்ததும் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்துக்குச் சென்றது.
இதனிடையே பெருமழைப்புலவருக்கு அவ்வூர் மக்களின் ஒத்துழைப்புடன் தமிழறிஞர்கள் கலந்துகொண்ட நூற்றாண்டு விழாவும் நடந்தது(05.09.2010). அந்த நூற்றாண்டு விழாவிலும் புலவர் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டோம்.
இச்செய்திகள், வேண்டுகோள்களை ஏற்று இன்று(17.09.2010) தந்தை பெரியார் பிறந்த நாளில் பெருமழைப் புலவர் குடும்பத்தின் வறுமையைப் போக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பத்து இலட்சம் உருவா கொடையாக வழங்கியுள்ளார். தமிழாய்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எங்கள் பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பெருமழைப் புலவரின் பிறந்த ஊரில் ஒரு மணி மண்டபம் அமைத்து, அதனை முத்தமிழறிஞர் அவர்களின் பொற்கையால் திறந்து நாட்டுக்கு ஒப்படைக்கவும் பணிந்து வேண்டுகிறோம். அதுபோல் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குப் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் அவர்களின் பெயரைச்சூட்டி அவரின் தமிழ்ப்பணியை என்றும் நினைவுகூரப் பல்கலைக் கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் அவர்களையும் ஆட்சிக் குழுவினரையும் வேண்டுகிறோம்.
நன்றி:தினமணி, நக்கீரன், குமுதம், மேலைப் பெருமழை ஊராட்சி மன்றம் (22.09.2010)
8 கருத்துகள்:
ஆஹா, அருமை.
உங்கள் முயற்சி, பெரும் வெற்றி பெற்றுள்ளது.
வாழ்த்துகள் இளங்கோவன்.
பெருமழைப்புலவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய தமிழக முதல்வருக்குப் பாராட்டுகள்.
ஐயா வணக்கம் பெருமழைப்புலவர் பிள்ளைகளுக்கு தமிழக அரசு அளித்த 10 இலட்சம் தொகைக்கிடைத்தமை பற்றி பெரிதும் மகிழும் அன்பன் சொக்கலிங்கம்
மிகுந்த சந்தோசம். மொழி வளர உழைத்த புலவர் ஐயா அவர்களின் குடும்பம் வறுமையில் இருந்து விடுபட்டது குறித்து நிம்மதி.
அன்புள்ள ஐயா,
மேலப் பெருமழைப் புலவர் என்று ஒருவர் இருந்தார் என்றும், அவர் தான் இன்று செம்மொழியான் தமிழ் மொழியாம் என நாம் கொண்டாடும் சிலப்பதிகாரம்,அகநானூறு உட்பட பல சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதியவர் என்றும், சில நாட்கள் முன்னர் நீங்கள் எழுதிய 'என் மேலப் பெருமழை செலவு" என்ற கட்டுரையின் மூலம் தான் என்னைப் போன்ற இளம் வாசகர்களுக்கும் , தமிழ் ஆர்வலர்களுக்கும் தெரியும்.
உங்கள் கட்டுரை கண்ட அன்று இப்பேர்ப்பட்டவரின் குடும்பத்திற்கு இன்று இந்நிலையா என்று உங்களைப்போலவே நானும் விசனமுற்றேன்.
முதல் கட்டுரை வெளிவந்த சில வாரங்களில் புலவருக்கு நூற்றாண்டு விழா, ஒரு மாதத்தில் அரசிடம் இருந்து நலிந்த அவர் குடும்பத்திற்கு நிதியுதவி. உங்கள் எழுத்துக்கள் தாம் எத்தனை விஷயங்களை முன்னெடுத்திருக்கிறது!
மறைந்து போகக்கிடந்த ஒரு பெரும் தமிழரிஞரின் புகழை தமிழுலகம் அறியச்செய்த உங்களுக்கு, புலவர் குடும்பம் மட்டுமல்ல தமிழ்
ஆர்வமுடைய அனைவரும் நன்றி கூறக் கடன் பட்டிருக்கிறோம்.
நன்றிகள்,
பணிவன்புடன்
செந்தில் குமார்,தேவன்
வூர்சுபர்க் பல்கலைக்கழகம்,ஜெர்மனி
மிக்க மகிழ்ச்சி.... உங்கள் சேவை மிகவும் பாராட்டகூடியது...
முயற்சி திருவினையாக்கும்....இந்த பழமொழிக்கு உதாரணமே மு.இளங்கோவன் அவர்கள்தாம்...இவ்வளவு நிகழ்வுகளும்....எழுத்துக்களும் என்றால்.......அதற்கு எவ்வளவு நேர உழைப்பு வேண்டும் ....உணர்கின்றோம்....திட்டமிடும் அனைத்து நிகழ்வுகளும் வெற்றிதான்.....இன்று நம்மிடையே இல்லாத (மறைந்த) தமிழ் அறிஞர்கள் எதிர்பார்த்த,விரும்பிய .....ஒரு உண்மையான தமிழ்த் தொண்டனாக , ஒரு புதியதொரு தமிழியக்கம் நடத்திப் புரட்சி படைத்து வரும் பேராசிரியர் இளங்கோவன் அவர்கட்கு மனமார்ந்த பாராட்டுக்கள்....
உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும்....
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்ச் சமுதாயம்!
....அழகப்பன்
பெருமழைப் புலவர் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிதிஉதவி கிடைக்கவும்,அவரது உரைத்திறம் குறித்து அனைவரும் அறியவும் காரணமான தங்களுக்கு நன்றி.
அன்பின் ஐயா,
தங்களது தமிழ்த் தொண்டிற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
-விஜய், திருச்செங்கோடு
கருத்துரையிடுக