திரு.பால்பாண்டியனார்
1995 அளவில் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது அருகிலிருந்த அறையில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் தமிழிசைக் கலைக்களஞ்சியப்பணியில் மூழ்கியிருப்பார்கள். ஐயாவைத் தொடர்ச்சியாகச் சில மாதங்கள் பார்க்க முடியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. ஐயா அவர்கள் அமெரிக்காவுக்கு இசை குறித்துச் சொற்பொழிவாற்ற சென்று வந்துள்ளார்கள் என்று அறிந்தோம்.
அப்பொழுதெல்லாம் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான தொடர்பில்லை. பார்க்கும்பொழுது வணக்கம் சொல்வதும் தேவைப்படும்பொழுது பேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தை இரவல் கேட்பதும் என்ற அளவில் ஐயாவுக்கும் எனக்கும் உறவு இருந்தது.
பின்னாளில் (1998) ஐயாவின் உதவியாளனாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழிசைக் கலைக்களஞ்சியப் பிரிவில் சற்றொப்ப ஓராண்டு பணிபுரிந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவையும் யான் அறியும் வாய்ப்பு அமைந்தது.அப்பொழுது தமிழிசை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் பலரைப் பற்றி ஐயா நினைவுகூர்வார்கள். அந்த வகையில் அவரின் அமெரிக்கச் செலவு பற்றி பேச்சு வந்தால் அடிக்கடி குறிப்பிடும் பெயர் பால்பாண்டியன் என்பதாகும்.
தம்மை இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கவைத்து அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பேச வாய்ப்பு உருவாக்கியவர் திரு.பால்பாண்டியன் ஐயா என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். அந்த வகையில் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் ஐயா கேட்டறிந்த இசை பற்றியும், பார்த்தறிந்த இசைக்கருவி பற்றியும் எனக்குக் குறிப்பிடுவார்கள். எனக்கு இசையில் ஆர்வம் இருந்தாலும் நிலைத்த பணி கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்துகொண்டு, ஐயாவின் அருவி போன்ற இசையறிவை ஒரு கோப்பையளவில் மட்டும் பருகி வந்தேன்.
சில மேல்நாட்டு இசைக்கருவிகளை ஐயா அவர்கள் விலைக்கு வாங்கி வந்தார்கள். அவற்றை நம் கருவி இசையுடன் இசைத்துப்பொருத்தி இசையமைதியின் பொருத்தத்தைக் காட்டுவார்கள். விசைப்பலகை(கீபோர்டு) இல்லாமலே எனக்குச் ச ரி க ம ப த நி ச என்பவற்றைக் கைவிரல்களை மட்டும் பயன்படுத்திப் பழக்கிய திறம் நினைத்து இன்றும் வியக்கிறேன்.
ஐயா அவர்கள் அவர் நினைவாக ஓர் அழகிய புல்லாங்குழல் எனக்குப் பரிசாகத் தந்தார்கள். அதனை என் வீட்டில் கொணர்ந்து வைத்திருந்தேன். இசையறிவற்ற என் தாயார் அந்தப் புல்லாங்குழலின் அருமை உணராமல் நான் வெளியூரில் தங்கியிருந்தபொழுது அந்தப் புல்லங்குழலை விறகு அடுப்பு மூட்டி எரியூட்டும்பொழுது, அடுப்பு ஊதப் பயன்படுத்திய அறியாமையை நினைக்கும் பொழுது இன்றும் நான் வருந்துவதுண்டு. இவ்வாறு இசைமேதையின் நினைவுகள் அடிக்கடி என் உள்ளத்தில் எழுவது உண்டு.
வீ.ப.கா.சுந்தரம் பற்றி நினைக்கும்பொழுது அமெரிக்காவில் வாழும் திரு.பால்பாண்டியனார் பற்றிய நினைவு அடிக்கடி வரும். அமெரிக்க நாட்டில் வாழும் நண்பர்களான முனைவர் நா.கணேசன், மருத்துவர் சோம.இளங்கோவன், முனைவர் சங்கரபாண்டியனார்,திரு.சௌந்தர், கரு. மலர்ச்செல்வன், குழந்தைவேல் இராமசாமி உள்ளிட்டவர்கள் வழியாகத் திரு. பால்பாண்டியனார் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.
அண்மையில் இசைமேதையின் வீடு,கல்லறை பற்றிய ஒரு பதிவை என் பக்கத்தில் இட்டபொழுது என் அருமை நண்பர் திரு.இராசசேகர் அவர்கள் திரு.பால் பாண்டியனார்க்கும் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்குமான நட்பு மேம்பாட்டினை எடுத்துரைத்தார். அத்துடன் திரு.பால்பாண்டியனார் அமெரிக்காவில் தங்கியிருந்தாலும் தொழில் நிமித்தம் அடிக்கடி தமிழகம் வந்துபோவார் என்ற விவரத்தைக் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் இசையாய்வாளர் திரு.மம்மது அவர்கள் திரு.பால்பாண்டியனாரின் பொருளுதவியுடன் ஓர் இசையகராதி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்படியென்றால் அடங்காத இசையார்வம்கொண்ட திரு.பால்பாண்டியனாரை நான் பார்த்தேயாதல் வேண்டும் என்ற என் பெரு விருப்பினைத் தெரிவித்தேன். இந்த அடிப்படையில் திரு.பால்பாண்டியனாருடன் நேற்று(11.09.2010) சென்னையில் சிறு சந்திப்பு ஒன்று நடந்தது.
இராசசேகர்,பால்பாண்டியன்,மு.இளங்கோவன்
நானும் நண்பர் இராசசேகர் அவர்களும் திரு.பால்பாண்டியனார் இல்லத்துக்குச் சென்றோம். பால்பாண்டியனார் மிகவும் எளிமையான தோற்றத்தில் எங்களை அன்பொழுக வரவேற்றார். என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர் இராசசேகர். என் நாட்டுப்புறவியல், வாய்மொழிப்பாடல்கள் உள்ளிட்ட சில நூல்களை வழங்கினேன். எனக்கும், இசைமேதைக்கும் இடையில் அமைந்த உறவு பற்றி விரிவாகப் பேசினோம். ஐயாவுடன் நான் பணிபுரிந்த தமிழிசைக் கலைக்களஞ்சிய உருவாக்கப் பணிகள் பற்றி உரையாடலில் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். திரு.பால்பாண்டியனார் பற்றிய விவரங்களையும் தமிழ்ப் பணிகளையும் விரிவாக அறியும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆனால் தம்மைப் பற்றிய செய்திகளைவிடத் தமிழுக்கும்,தமிழிசைக்குமான தொடர்பை மட்டும் ஐயா அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
திரு.பால்பாண்டியன் ஐயாவுடன் உரையாடியதிலிருந்து…
திருநெல்வேலி - பாளையங்கோட்டை சான் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தவர். பொறியியல் துறையில் பட்டம்பெற்ற பால்பாண்டியன் ஐயா அவர்களுக்கு இயல்பிலேயே தமிழ்ப்பற்றும் இசையார்வமும் இருந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றபொழுது தமிழ்ப்பற்று நிறைந்த பழ.நெடுமாறன், எசு.டி.சோமசுந்தரம், பண்ருட்டி இராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் உணர்வுடன் செயல்பட்டமை பால்பாண்டியனார் போன்றவர்களுக்குத் தமிழ் ஆர்வம் தழைக்க வாய்ப்பானது.
1968 இல் முதன்முதல் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் சென்றார். பிறகு அங்குப் பணியில் அமர்ந்தார். பல்வேறு தொழில்களை வெற்றியுடன் தொடங்கி நடத்தினார். இன்றும் அவர் நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வளர்ந்து நிற்கின்றன.
அமெரிக்காவில் வாழ்ந்த - வாழும் தமிழ் அன்பர்களுடன் இணைந்து அமெரிக்காவில் தமிழ்ச்சங்கம் கண்டமை, பல மாநிலங்களில் இருந்த தமிழ்ச்சங்கங்களை இணைத்துப் பெட்னா என்ற பேரமைப்பை உருவாக்கியமை, மேலும் தமிழ் அறிஞர்களை அழைத்து உரையாற்றும் வாய்ப்பு உருவாக்கியமை, தமிழுக்கு ஆக்கமான அடிப்படை வேலைகளுக்குக் கால்கோள் செய்யும் முகமாகத் தமிழிசைப் பேரகராதி உள்ளிட்ட நூல்களை வெளியிட முன் வந்தமை யாவும் அறிந்து வியந்துபோனேன்.
தமிழிசைப் பேரகராதி
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பற்றாளர்கள் யாவரும் அறிந்த ஒருவராக நம் பால்பாண்டியனார் விளங்குவதை அமெரிக்க நண்பர்களுடன் நான் உரையாடும்பொழுது அறிந்துள்ளேன்.
உ.வே.சா பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநர் செகநாதன், இயக்குநர் பாரதிராசா, கவிப்பேரரசு வைரமுத்து, மேலாண்மை பொண்ணுசாமி உள்ளிட்டவர்களின் கலைப்பணிகளைப் பெட்னா அமைப்பின் வழியாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பெருமையும் பால்பாண்டியனார்க்கு உண்டு.
திரு. பழனியப்பன் அவர்கள் வீ.ப.கா.சுந்தரம் பற்றி அறிமுகம் செய்த உடன் வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்டவர்களை அழைத்து ஆதரித்தமையும் இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.
பால்பாண்டியனாரின் உள்ளத்தில் தமிழ் அறிஞர்களுக்கு அங்கீகாரம் தருவது நோக்கமாகவும் அடிப்படைத் தமிழாய்வுக்குத் தமிழில் நிறைய பணிகள் செய்ய வேண்டும் என்பது விருப்பமாகவும் உள்ளது.
அமெரிக்கத் தமிழறிஞர் சார்ச் கார்ட்டு அவர்களின் தமிழ்ப்பற்றையும் சமற்கிருத புலமையையும் பால்பாண்டியனார் வியந்தார்.
கம்பராமாயணத்தில் அறிஞர் கார்ட்டு அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு என்பதுபோல் சங்க இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு என்று வியக்கின்றார்.
உலக அளவில் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பால்பாண்டியன் அவர்கள் சென்னை- சங்கமம் முயற்சி வரவேற்கத் தகுந்தது எனவும் இந்தச் சங்கமம் முயற்சியால் சிற்றூர்ப் புறங்களில் நலிந்துகொண்டிருந்த நாட்டுப்புறக்கலையும் கலைஞர்களும் ஆதரிக்கப்பட்டனர் எனவும் இந்த வகையில் கவிஞர் கனிமொழிக்குத் தமிழ்க் கலைஞர்(!)கள் நன்றிக்கடன்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். செம்மொழி மாநாடு நல்ல முயற்சி எனவும் குறிப்பிட்டு,உலகத் தமிழறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் உலக அளவில் இணைத்த பெருமை இந்த மாநாட்டுக்கு உண்டு என்றார்.
பாடல், மெல்லிசை, நாட்டியம், உரையரங்கம் எனப் பல கூறுடன் நடக்கும் பெட்னா விழா ஆண்டுதோறும் தமிழுணர்வைப் புதுப்பித்துக்கொள்ளும் விழாவாக நடக்கிறது என்றார்.
வீ.ப.கா.சு.மேல் ஈடுபாடு கொண்டதன் காரணமாக அவரின் தமிழிசைக் கலைக்களஞ்சிய வழியில் தமிழிசைப் பேரகராதி உருவாக்கிட உதவினார். தொடர்ந்து பண்ணாராய்ச்சியைப் போற்றும் முகமாகப் பண் குறித்து ஆய்வு மேற்கொள்ள மதுரை தியாகராசர் கல்லூரியின் புரவலர் திரு.கருமுத்து கண்ணன் அவர்களின் முயற்சியுடன் மேலும் இசையாய்வு மையம் தொடங்கியுள்ளார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இசை ஆய்வாளர் மம்மது ஆகியோர் இந்த முயற்சிக்கு உதவி வருகின்றனர்.
சதிராட்டம் பரதமானது எப்பொழுது? என்பதுபோல் பண் எப்பொழுது இராகமாக மலர்ந்தது என்று அறிய வேண்டும் என்று இந்த பண்ணாய்வு மன்றம் ஆய்வுப்பணியை மேற்கொள்கின்றது.
தென்னாசிய ஆய்வு மற்றும் தகவல்கள் நிறுவனம் (South Asia Research and Information Institute (SARII) என்ற அமைப்பைப் பால்பாண்டியன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிப் பல ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில்,
பக்தி இயக்கமும் சமூகமும் (2006)
சதிராட்டம் / பரதநாட்டியம்(2007)
இந்தியாவில் சமண சமயம்(2008)
இலங்கைத் தமிழர்கள்-எதிர்கால அரசியல்(2009) என்ற பொருண்மைகளில் ஆய்வரங்குகள் அமெரிக்காவில் நடந்துள்ளன.
இந்த ஆண்டு தமிழிசை வரலாறு குறித்த ஆய்வரங்கு நடைபெறுகிறது என்று பால்பாண்டியன் குறிப்பிட்டார். திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி முதல்வர் முனைவர் மார்க்கெரட் பாசுடின் அவர்கள் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொழிலதிபர் ஒருவரைக் கண்ட நினைவில்லாமல் தமிழிசை ஆர்வலர் ஒருவருடன் உரையாடி மகிழ்ந்த மன நிறைவு பெற்றேன்.
பால்பாண்டியன்,மு.இளங்கோவன்
அதனால்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பால்பாண்டியனார் பற்றி,
இறுகிப் போன தமிழ் அறிஞர்களின்
மனதைக்கூட
இவர்
அன்புத் தமிழ் என்னும்
மந்திரக்கோல் கொண்டு
திறக்கும் வல்லமை கொண்டவர்.
எனவும்
தமிழுக்கும் தமிழ்ச்சமுதாயத்திற்கும்
ஏன்
அடுத்த தலைமுறைக்கும்
தமிழைக் கொண்டு சேர்ப்பதால்
இவரை
முப்பால் பாண்டியன்
என்று அழைப்பேன்
என்றும் போற்றிப் புகழ்ந்து பாராட்டியுள்ளார் போலும்!
வாழ்க பால்பாண்டியனார்! வளர்க அவர்தம் தமிழிசைப்பணி!
8 கருத்துகள்:
தமிழிசை ஆர்வலர் பால்பாண்டியன் குறித்து அறிந்ததில் மகிழ்ச்சி. அவரின் தமிழத் தொண்டு தொடரட்டும்.
வணக்கம் அண்ணா!
தங்கள் தமிழன்புக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
தொடரட்டும் அய்யா பால்.பாண்டியன் பணி! “அமெரிக்காவுக்கு அழைத்துப் போன பாரதிராஜாவும் பால்பாண்டியனும்” நூல் பற்றி ஒரு முறை கேள்விப்பட்டபோது யார் இவர் என எண்ணியதுண்டு... நல்ல பதிவு... உங்கள் பணியும் தொடரட்டும்.. சிறப்பாக!
திரு பால்பாண்டியன் அவர்களைப் பற்றியும், அவர்களின் தொண்டும் ஆர்வமும் பற்றியும்ம் அருமையான முறையில் எழுதி ஆவணப்படுத்தியுள்ளீர்கள் இளங்கோவன். மிக்க நன்றி. அரும்பணி!
திரு பால் பாண்டியனாரின் தமிழ்ப் பயணம் தொடர்ந்து மேலும் பல தொண்டுகளை செய்து வெற்றிகளை அடைய விரும்புகின்றேன்! நன்றி!
அமெரிக்காவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் உள்ளனர்.அவர்களில் தொழில்துறையில் பெரும் வெற்றி பெற்றாலும் தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற பேரவாவில் முன்னிற்போர் சிலர்.அவர்களில் பால் பாண்டியன், துக்காராம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அது தவிர மற்ற துறைகளில் உள்ளோர் ஏராளம். தமிழ்ச் சங்கங்களும்,தமிழ்ப் பள்ளிகளும்,தமிழ் விழாக்களும் ,பெர்க்லி பல்கலைக் கழகத் தமிழ்த்துறை முயற்சியும் பெருமைப் படக்கூடியவை.தொடரட்டும் பால் பாண்டியன் மற்றும் பல தமிழ்ப் பற்றாளர்களின் தொண்டு.அமெரிக்காவில் தமிழ் வாழும்,வளரும்.
தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
இசைப் பேரகராதி எங்கே கிடைக்கின்றது... வாங்க விரும்புகின்றேன்...
ssdavid63@yahoo.com
கருத்துரையிடுக