தகவல் தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது.இதனால் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களைத் தமிழால் தொடர்புகொள்ள முடிகிறது.தமிழ்ப்பணிகள் தனியொருவர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து பலரும் இணைந்து குழுப்பணியாகச் செய்யும் நிலை உருவாகியுள்ளது.தமிழ் நூல்கள் மின்னூல்களாக மாறியதும்,தமிழ் இதழ்கள் தேசம் கடந்த வாசகர்களைப் பெற்றதும் தமிழ் இணையத்தால் எனில் மிகையன்று. ஒருதுறை சார்ந்த ஆய்வு முயற்சிகளுக்குப் பலதுறை அறிவு பெற்றவர்கள் இணைந்து பணிபுரிவதற்கு வாய்ப்பு உருவாக்கியது இணையம் ஆகும்.அச்சு ஊடகங்களில் இருந்த தகவல்கள் மின்னணு ஊடகங்களுக்கு வந்ததால் தகவல்கள் பலமுனை வசதிகளைக் கொண்டதாக மாறியது.
அவ்வகையில் அச்சில் இருந்த அகரமுதலிகள் இணையத்தில் மின் அகரமுதலிகளாக மாறியதும் சொற்களுக்குப் பொருள்கள் என்ற நிலையிலிருந்து மாறி, கூடுதல் தகவல்களைக் கொண்டதாக மலர்ந்தது (ஒலிப்புமுறை, படங்கள், வரைபடங்கள், தொடர்புடைய சுட்டிகள், தொடர்புடைய பிறமொழிச் சொற்கள்).தமிழ் அகரமுதலிகள் பல இணையத்தில் மின்னகர முதலிகளாக உள்ளன.அவற்றுள் ஒன்று விக்கிமீடியா நிறுவனத்தின் தமிழ் விக்சனரியாகும். தமிழ் விக்சனரியினை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.
விக்கிப்பீடியா என்ற தளம் பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.இது பன்மொழியில் தகவல்களைத் தரும் தளமாகும்.அமெரிக்க இணையத்தொழில் வல்லுநரான சிம்மி வேல்சு,அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் இருவராலும் உருவாக்கப்பட்ட இத்தளம் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழியில் உருவாக்கப்பட்டது. விக்கிமீடியா பவுண்டேசன் இதனை நடத்திவருகிறது.உலக அளவில் கல்வி இன்று வணிக மயமானது எண்ணி வருந்திய இவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் 'அனைவருக்கும் உயர்வான அரியக் கல்வி' என்ற எண்ணத்தின் அடிப்படையில் பிறந்ததே விக்கிமீடியாத் திட்டமாகும்.
'விக்கி' என்ற அவாய் மொழிச் சொல்லுக்கு, 'விரைவு' என்று பொருளாகும். விக்கித் தொழில் நுட்பம் மூலம், பல அரிய செயல்களை, விரைவாகச் செய்ய முடியும். அதனால் பல்வேறு மொழிகளைத் தமிழ் மொழியுடன், உடனுக்குடன் விரைவாக, ஒப்பிட்டு நமது தரத்தைக் கண்டுணர முடியும். கல்வியில் சிறக்காமல் எந்த விரைவான வளர்ச்சியையும் நம்மால் எட்ட முடியாது. இந்த இணையத்தள வடிவமைப்புக்கான 'விக்கிமொழியினைக்' கற்பது மிகவும் எளிது. அவ்வாறு அறிவதன் வழியாக ஒவ்வொரு மொழியினரும் அவரவர் மொழிக்குத் தொண்டாற்றமுடியும்.
உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன.அதாவது ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரநிரலில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது. ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது.2002 திசம்பர் 12 இல் ஆங்கில விக்சனரி உருவானது.172 மொழிகளுக்கான விக்சனரிகள் விக்கிப்பீடியா வழியாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.தமிழ் விக்சனரி இலக்கியம், இலக்கணம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்ச்சொற்களுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தருகிறது.
தமிழ்விக்சனரி தோற்றம்: பங்களிப்பு
தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004 இல் தொடங்கப்பட்டது. இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும்,ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரிபவரும், கணினித்துறையில் ஈடுபாடுடையவருமான மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கட்டுரைகள் பல உருவாக்கி உள்ளிட்டவர்.இவரே தமிழ் விக்சனரிக்குப் பங்களித்தவராக அனைவராலும் குறிப்பிடப்படுகின்றார்.இவரைத் தொடர்ந்து இரவி,சுந்தர், செல்வா, மயூரன்,பழ.கந்தசாமி,தகவல் உழவன்,ஆமாச்சு, சிவக்குமார், பரிதிமதி,நக்கீரன் உள்ளிட்டவர்கள் மிகுதியாகப் பங்களித்துள்ளனர்.இவர்களுள் சுந்தர் அவர்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பக்கத்தில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த சொற்களைத் தானியங்கிமுறையில் விக்கியில் ஏற்றியுள்ளார்.இவ்வகையில் சற்றொப்ப ஓர் இலட்சம் சொற்கள் பதிவேறியுள்ளதாக அறியமுடிகிறது.
பேராசிரியர் செல்வா அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களைப் பதிவேற்றியுள்ளார். தகவல் உழவன் அவர்கள் உயிரியல் சார்ந்த சொற்களைத் தமிழ் விக்சனரியில் இணைத்துள்ளார். பழ.கந்தசாமியின் பங்களிப்பும் தனித்துச் சுட்டத்தக்கது.
தமிழ் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடக்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களாகவும் அதற்குரிய விளக்கங்களாகவும் உள்ளன.பலதுறை சொற்களாக இன்று விரிவுபெற்று காணப்படும் தமிழ் விக்சனரி 1,05,390 சொற்களைக் கொண்டு(23.02.2010) உலக அகரமுதலிகளில் 14 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ்விக்சனரிஅமைப்பு
தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன், இந்தி, மலையாளம், கன்னடம்) உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. தமிழில் ஒலிப்புமுறை தொழில்நுட்பம் முழுமை பெற்றால் தமிழ் விக்சனரியையும் ஒலிப்புமுறை கொண்ட வசதியுடைய மின்னகரமுதலியாக மாற்றமுடியும்.தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட படங்களும் உள்ளன.தொடர்புடைய இணைப்புகளும் அதனை விளக்கும் கட்டுரைகளும் உள்ளன.சுருங்கச்சொன்னால் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்களைப் பற்றியபடி உலக அளவில் பல தளங்களுக்குச் செல்லவும்,பல செய்திகளைப் பார்வையிடவும் வாய்ப்பு உண்டு.அச்சு நூல்களில் இத்தகைய செய்திகளைக் காண்டல் அரிது.இலக்கணம் சார்ந்த செய்திகளையும் விக்சனரி சிறப்பாகக் கொண்டுள்ளது.
தமிழ் விக்சனரியைப் பயன்படுத்தும் முறை
தமிழ் விக்சனரியைப் பயன்படுத்த நேரடியாகத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் சென்று,தமிழ் விக்சனரி என்ற தலைப்பை அழுத்தி அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து, சொற்களுக்கு உரிய பொருள் அறியலாம்.அல்லது கூகுளில் சென்று ஆங்கிலச்சொல்லைத் தட்டச்சிட்டு, தமிழ் என்று அருகில் அச்சிட்டால் நமக்குரிய தமிழ்ச்சொற்பொருள் விக்கிப்பீடியாவில் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாகக் கூகுள் தேடுபொறிக்குச் சென்று ஆங்கிலத்தில் mother என்று ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு, அருகில் தமிழ் என்று தட்டச்சிட்டுத் தேடத் தொடங்கினால் நாம் விக்சனரியின் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோம். mother என்று தலைப்பும் அதன் அடியில் ஒலிப்பு வசதி,பெயர்ச்சொல் என்ற குறிப்புகள் காணப்படும்.இதில் mother என்பதற்குத் தாய்,அம்மா, அன்னை என்று விளக்கம் தரப்பட்டிருக்கும்.இதில் உள்ள தாய் என்ற சொல்லை அழுத்தினால் தாய் என்பதற்கு அம்மா எனவும் தாய் ஒரு மொழி எனவும்(தாய்லாந்தில் பேசப்படும்மொழி) குறிப்பு இருக்கும்.இதில் உள்ள அம்மா என்பதைச் சொடுக்கினால் அடுத்த ஒரு பக்கம் விரியும்.
அம்மா என்ற சொல் பற்றிய பகுதியாக இருக்கும் இப்பக்கத்தில் அம்மா என்ற சொல்லுக்கு உரிய சொற்பிறப்பு,பெயர்ச்சொற்கள் என்ற இரண்டு பெரும் பிரிவில் செய்திகள் அடக்கப் பட்டிருக்கும். சொற்பிறப்பு விவரிப்பதற்குத் தலைப்பு உள்ளது(இனிதான் சொல்லாய்வாளர்கள் அந்தப் பகுதியை முழுமைப்படுத்த வேண்டும்). அம்மா என்பதற்கு 1.தாயை விளிப்பதற்குப் பயன்படும் சொல். 2.மரியாதைக்குரிய பெண்களை விளிப்பதற்குப் பயன்படும் சொல் என்று குறிப்புகள் இருக்கும்.அதனை அடுத்து மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் மலையாளம், இந்தி, தெலுங்கு,ஆங்கிலம்,பிரஞ்சு,செர்மன் உள்ளிட்ட மொழிகளில் mother என்ற சொல்லை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதற்கு உரிய சொல் பார்வையிடும் வசதியும் உள்ளது(சில மொழிகளில் விடுபாடு உள்ளது).
தொடர்புள்ள சொற்கள் என்ற தலைப்பில் அன்னை,தாய், அம்மம்மா, அம்மாச்சி, அம்மான், அம்மன்,அம்மாயி என்ற சொற்கள் உள்ளன. இவற்றையும் பார்க்க என்ற தலைப்பில் "அப்பா" என்ற சொல் உள்ளது.அதனைச் சொடுக்கிப் பார்த்தால் அப்பா என்பதற்குத் தந்தை என்ற விளக்கமும் ஆங்கிலம், இந்தியில் இச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்ற குறிப்பும் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேடுக பகுதியில் pongal என்ற சொல்லைத் தட்டச்சிட்டுத் தேடப் புகுந்தால் பொங்கல் தொடர்பான பல சொற்கள்,படங்கள் நமக்குக் கிடைக்கும்.சர்க்கரைப் பொங்கல்,வெண்பொங்கல், கதிரவன்,கரும்பு, பானை, மஞ்சள்,சல்லிக்கட்டு,அறுவடை சார்ந்த பல சொற்களும் தொடர்புடைய படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.ஒரு சொல் தேடலுக்குச் சென்றால் சொல்தேடல் என்று இல்லாமல் பலவகை படங்களையும் தகவல்களையும் தந்து நம்மை அகராதிப் பயன்படுத்தும் ஆர்வலர்களாக மாற்றுவதில் விக்சனரி முக்கிய பங்கு வகிக்கிறது. தைப்பொங்கல் என்ற தலைப்பில் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளதை அறிவிக்கும் ஒரு தொடுப்பும் உள்ளது.
அவ்வாறு நாம் தேடும் தமிழ்ச்சொல்லையோ, ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லையோ சார்ந்திருக்கும் சொற்பொருள் விளக்கங்கள் யாவும் சிறப்புடன் பொருள் உணர்த்த விக்கிப் பங்களிப்பாளர்கள் கொண்டிருக்கும் முயற்சியைப் பறைசாற்றி நிற்கின்றன.
தமிழ் விக்சனரியில் சொற்களை உள்ளிடுவது எப்படி?
தமிழ் விக்கிப்பீடியாவை முறையாகப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று.நம்முடைய பயனர்பெயர்,கமுக்கக்குறியீடு உள்ளிட்டவற்றை வழங்கி, கலைந்த எழுத்துகளை உற்றுநோக்கி,நம் மின்னஞ்சல் முகவரி வழங்கிப் பதிந்தால் நம் பெயரை ஏற்றுக்கொண்டு நமக்கு மின்னஞ்சல் வழி விக்கிமீடியா நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பும்.அம்மடலைத் திறப்பதன் வழியாக நாம்தான் கணக்குத் தொடங்கியுள்ளோம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.அதன் பிறகு விக்சனரி பக்கத்தில் புகுபதிவு செய்துகொண்டு நாம் விக்சனரியைப் பயன்படுத்தலாம். புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச்செய்யலாம்.நம் கணிப்பொறியின் ஐ.பி.எண் விக்கிப்பீடியா தளத்தில் பதிவாகும்.எந்தக் கணிப்பொறியிலிருந்து திருத்தப்பட்டது என்ற விவரத்தைக் கண்டுபிடிக்கமுடியும்.
சொற்களை உள்ளிடுவது...
விக்கிப்பீடியாவின் விக்சனரியில் முன்பே சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாம் பதிவு செய்ய நினைக்கும்சொல் முன்பே பதிவேறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள தேடுக பகுதியில் சென்று ஒருங்குகுறி எழுத்தில்(தமிழ் என்றால்)நாம் பதிவிட நினைக்கும் சொல்லைத் தட்டச்சிட வேண்டும்.இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு திட்டப்பக்கம் பகுதியில் உள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்ற தலைப்பை அழுத்த வேண்டும். புதிய பக்கத்தை உருவாக்கவும் என்ற பகுதியில் உள்ள கட்டங்களில் ஆங்கிலம், தமிழ் இந்தப் பகுப்பில் பெயர்,வினை,உரிச்சொற்களுள் உரியனவற்றை ஆராய்ந்து அந்தப் பெட்டியில் நாம் உள்ளிட நினைத்த சொற்களை இட்டு அதற்குரிய விளக்கங்களை விக்சனரியில் கொடுத்துள்ள விளக்கக் குறிப்புகளைக் கொண்டு உள்ளிடமுடியும்.
சொற்களைச் சேர்க்க உதவும் பெட்டிகள்
இவ்வாறு தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் உள்ளிடுவதன் வழியாகத் தமிழ்ச்சொல்வளத்தை உலக அரங்கில் எடுத்துரைக்கமுடியும். படங்கள்,ஒலிப்புமுறைகள், அட்டவணைகள், கட்டுரைத் தொடுப்புகளை வழங்கத் தமிழ்ச்சொல் பற்றி அறிய விரும்புவோருக்குப் பேருதவியாக இருக்கும்.
தமிழ் விக்சனரியின் முதற்பக்கம்
தமிழ் விக்சனரியின் முதற் பக்கத்தில் தமிழ் விக்சனரி பற்றிய விவரங்கள் உள்ளன.இதில் சொற்களைத் தேடுவதற்கு வாய்ப்பாக தமிழ்எழுத்துகள்,ஆங்கில எழுத்துகளின் முதல் எழுத்துகள் இருக்கும் இவற்றின் துணைகொண்டும் தேடலாம்.மேலும் சொற்பகுப்புகள், பின்னிணைப்புகள்,அண்மைப் பங்களிப்புகள் என்ற தலைப்புகளைச் சொடுக்கியும் ஒவ்வொரு பயன்பாட்டைப் பெறலாம்.
பின்னிணைப்புகள் என்ற தலைப்பைச் சொடுக்கும்பொழுது தமிழ்ச்சொற்கள் பல வகைப்பாட்டில் இருப்பதை அறியலாம்.இன்னும் தொகுக்கப்பட வேண்டிய செய்யப்பட வேண்டிய பணிகள் நிறைய இருப்பதை இந்தப் பகுதி நமக்குக் காட்டுகிறது.பின்னிணைப்புகள் பகுதியில் தமிழ் எழுதப்பழகு,கலைச்சொற்கள், தமிழ் அகராதி,பின்னிணைப்புகள் என்ற குறுந்தலைப்புகள் இருக்கும்.இதில் தமிழ் எழுதப் பழகு என்ற பகுதியில் தமிழ் எழுத்துகளை எவ்வாறு எழுத வேண்டும் என்ற காட்சி விளக்கம் உள்ளது.
அதுபோல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆங்கிலம்,ஆங்கிலம் தமிழ் என்ற இரு வகையில் சொற்கள் பகுக்கப்பட்டுள்ளன.தமிழ் ஆங்கிலம் என்ற வகையில் முதலில் தமிழ்ச்சொற்களும் அடுத்து அதற்குரிய ஆங்கிலச்சொற்களும் எந்தத்துறையில் இந்தச்சொல் பயன்படுகிறது என்ற குறிப்பும் உள்ளன.அதுபோல் ஆங்கிலம் தமிழ் என்ற வகையில் ஆங்கிலச் சொல்லும் அதற்குரிய தமிழ்ச்சொல்லும் எந்தத்துறையில் பயன்படுகிறது என்ற விவரமும் உள்ளன.
தமிழ் அகராதி என்ற பகுப்பில் பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் குறித்த அகராதியாக இது உள்ளது.இப்பகுதி இன்னும் வளப்படுத்த வேண்டிய பகுதியாக உள்ளது. பின்னிணைப்புகள் என்ற பகுதியில் நாடுகள், பறவைகள்,விலங்குகள் முதாலானவற்றின் பெயர்களைக் குறிக்கும் சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழ்நூல் பட்டியல் என்ற குறுந்தலைப்பில் உள்ள நூல் பட்டியல் நீண்டு வளர்க்கப்பட வேண்டிய பகுதியாகும். கல்வித்துறைகள் என்ற பகுப்பில் உள்ள தலைப்புகள் தொடர்பான பல சொற்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது அப்பட்டியலைப் பார்வையிடும்பொழுது நமக்குத் தெரிகிறது.
தமிழ் விக்சனரியை வளப்படுத்துவதன் வழியாகத் தமிழ்ச்சிறப்பை உலகுக்கு அறிவிக்க முடியும்.இதற்குப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் தேவையாக உள்ளது.
தமிழ் விக்சனரி சொல் தொகுப்பு மூலங்கள்
தமிழ் விக்சனரியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி(http://dsal.uchicago.edu/),பால்சு அகராதி,தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் அகராதி,கிரியா அகராதி,கழக அகராதி,வின்சுலோ அகராதி,பெப்ரியசு அகராதி உள்ளிட்ட அகராதிகளிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.தனிமாந்தர்களின் பங்களிப்பும் உண்டு.அகராதியில் இடம்பெற்றுள்ள சொற்களுக்கு மேற்கண்ட அகராதிகளின் பொருள்களே உள்ளன. பதிவுரிமைச் சிக்கலால் இந்த விக்சனரியில் தனிநபர்,நிறுவனங்களின் அகராதிகளில் இடம்பெற்றுள்ள சொற்களை இணைப்பதில் தேக்கம் காணப்படுகிறது.எனினும் முற்றாகப் பதியபடாமல் பகுதியாகப் பன்படுத்திக் கொள்வதாலும் அடிக்குறிப்பு வழங்குவதாலும் ஒரு உயர்நோக்கில் பன்னாட்டவருக்கும் பயன்படுவதாலும் இதில் சட்டச் சிக்கல் என்று தயங்க வேண்டியதில்லை. இணைக்கபடாமல் உள்ள சொற்களைப் பகுதி வாரியாக இணைக்க அகராதியியல் அறிஞர்கள் விக்சனரிக்கு முன்வந்தால் விக்சனரி பலநிலைப் பயன்பாட்டு அகராதியாக வளரும்.
தமிழாசிரியர்களின் / ஆய்வாளர்களின் பங்களிப்பு
விக்சனரி தன்னார்வலர்களால் உருவாக்கப்படுவது.எனவே தமிழார்வம் ஒன்றையே பற்றுக்கோடாகக்கொண்டு பணிபுரியும் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவத்துறை சார்ந்த ஆர்வலர்கள் எழுதும் தமிழில் உள்ள பிழைகளை,வழுக்களை நீக்குவதில் தமிழறிந்தோர் முன்னிற்கலாம்.அதற்குரிய எளிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டால் இப்பிழை நீக்கப் பணியில் இணையலாம்.
நமக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்க விக்கி ஆர்வலர்கள் அணியமாக இருப்பதால் நம் அறியாமையாலும் கவனக்குறைவாலும் செய்யும் சிறுபிழைகள் தொடர்பாகக் கவலைகொள்ளாமல் பணியாற்றலாம்.உலகெங்கும் பரவி வாழும் தமிழார்வலர்களும் விக்கி ஆர்வலர்களும் இவற்றை உடனுக்குடன் கண்ணில்பட்டதும் சரி செய்துவிடுவார்கள்.
விக்சனரியில் சில குறியீடுகள்
தட்டச்சுப் பலகைகளில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் சில விசைகளே, விக்கித் திட்டங்களுக்கு அடிப்படை ஆகும். அனைத்து மொழிகளுக்கும், இக்குறியீடுகளே அடிப்படை விக்கிமொழியாகும்.
விக்சனரியில் நாம் சொற்களை இணைக்கும்பொழுது சில குறியீடுகளை நினைவிற் கொண்டால் மிக எளிதாகப் புரிந்துகொண்டு சொற்களை உள்ளிடலாம்.சொல் தொகுப்புக்குரிய பெட்டியில் சில வடிவமைக்கப்பட்ட குறியீடுகள் உள்ளன.அவற்றின் உதவியால் சொற்களைச் சிறப்பாக அடையாளப்படுத்த முடியும்.
[[ ]]
{{ }}
*
#
|
= =
=
என்பன சில குறியீடுகள்.
எந்தவொரு சொல்லுக்கேனும் உள்ளிணைப்பு (அச்சொல்லைச் சொடுக்கினால் வேறு இடத்துக்கு இட்டுச்சென்று குறிப்புகள் காட்டும், மீசுட்டு) வேண்டும் எனில் [[ ]] என்ற குறி பயன்படுத்தப்படுகிறது. {{ }} என்பது"வார்ப்புரு" வைப் பதியப் பயன்படுத்தப்படுகிறது. (அதாவது ஒரு குறிப்பிட்ட அறிவிப்புப் பட்டையையையோ, ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஓர் அட்டவணையையோ இடும் வார்ப்புரு (templete)).
ஒரு வரியின் முதலில் * என்று இட்டால் அது ஒரு பட்டியல் போல் வரும்.ஒரு வரியின் முதலில் # என்று இட்டால் அந்தப் பட்டியலில் உள்ளவை வரிசைப்படி 1, 2, 3 என்று தானே சீராக வந்துவிடும் (1, 2, 3 எல்லாம் போடவேண்டியதில்லை).
நெடுக்குக் குறி (பைப், pipe) பிரிப்பைக் காட்டுவது ( எடுத்துக்காட்டாகப் படங்கள் இடும் பொழுது அதன் அளவு, பட விளக்கம்,இடப்பக்கம் இருக்க வேண்டுமா வலப்பக்கம் இருக்க வேண்டுமா என்றெல்லாம் காட்ட [[படிமம்:Tamil.jpg|thumb|right|250px|15 ஆவது நூற்றாண்டு தமிழ் எழுத்துகள்]] என்றெல்லாம் இடும்பொழுது பிரித்துக்காட்ட (right|250px..)இடும் குறியாக இது பயன்படுத்தப்படுகிறது.
பதிவேற்றப்பட்டவைகளைப் பற்றிய, பல விபரங்கள் (யார், எந்த நேரத்தில், எந்நாளில் போன்றவைகள்) தானாகவே பதிவாகிவிடும். ஒரு சொல்லைத் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ பிறர் அழித்து விட்டால், அதை வெகு சுலபமாக மீட்டெடுக்க முடியும்.
இயற்றப்பட்ட கட்டுரையைப் போன்ற கட்டுரை, பிற மொழியில் இயற்றப்பட்டிருந்தால் அதுவும் தானாகவே இணைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப் படும் வசதியும் உண்டு.
தமிழிலக்கணப் பதங்கள்
தமிழ் விக்சனரியில் தமிழிலக்கணப் பதங்கள் என்ற ஒரு பகுப்பு உள்ளது.இதில் தமிழறிஞர்களின் பங்களிப்புக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.தமிழ் வினைச்சொற்கள், பல்பொருள் ஒருமொழி என்ற இரு பகுப்பில் பல சொற்களுக்குரிய விளக்கம் தரப்பட்டுள்ளன. தமிழிலக்கணப் பதங்கள் என்ற பகுப்பில் 47 பக்கங்களில் கட்டுரைகள் உள்ளன என்ற குறிப்பு காணப்படுகிறது. அ,ஆ,இ,உ,எ,ஒ,க,ச,த,ந,ப,ம,வ,என்னும் தொடக்க எழுத்துகளில் உள்ள சொற்கள் இடம்பெற்றுள்ளன.இதில் "ம"தொடக்கத்தில் உள்ள மாத்திரை என்ற சொல்லை அழுத்தினால் தமிழ் யாப்பில் மாத்திரை என்பதைக் குறிக்கும் விளக்கமும் கண்ணை இமைத்துக் காட்டும் காணொளிப்படமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
விக்சனரியில் இடப்பக்கத்தில் உள்ள வழிசெலுத்தல்,தேடுக,கருவிப்பெட்டி என்ற மூன்று குறிப்புகளைக் கவனிக்க வேண்டும்.வழி செலுத்தல் என்பது முதற்கட்டமாக விக்சனரி விவரங்களை அறியும் பகுதியாகும்.தேடுக என்ற பகுதியில் உள்ள பெட்டியில் நமக்குத் தேவையான சொற்களை ஒருங்குகுறி எழுத்தில் தட்டச்சிட்டுத் தேடலாம்.அதுபோல் கருவிப்பெட்டி என்ற பகுதியில் உள்ள சிறப்புப் பக்கங்கள் என்ற பகுதிகள் குறிப்பிடத்தகுந்த பகுதியாகும்.இதில் உள்ள பகுப்புகளைக் கொண்டு விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்களை நாம் பார்வையிடலாம்.
காப்புரிமை என்ற பெயரில் தமிழின் சொல்வளம், குடத்திலிட்ட விளக்காக ஒரு சிலரிடத்தில் இருக்கின்றன. நிதியுதவி செய்யும் ஆதரவாளர்கள் இருந்தும், தரமாகத் தமிழில் தட்டச்சு செய்யப் பங்களிப்பாளர்கள் இல்லை. மேலும் விரைவாகப் பதிவேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
வளர்நிலையில் இருக்கும் தமிழ் விக்சனரிக்குத், தமிழ் முன்னணியில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், முனைப்பாகச் செயல்படுபவர் கள்வேண்டும். அத்தகையவர் தமிழ் விக்சனரியின் 'ஆலமரத்தடி' என்ற பகுதியில் இருக்கும், TamilBOT என்ற துணைப்பிரிவில், தங்கள் பெயரை, மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்தால், பதிவு செய்தவருக்கு உரிய நேரத்தில், செய்ய வேண்டியப் பணிகள் குறித்து குறிப்புகள் அனுப்பப்படும். அதில் அவரவருக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப்பணிச் செய்யலாம். தமிழ் விக்சனரி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தமிழ்வளம் காட்டும் களமாகவும் தளமாகவும் உள்ளது.
நனி நன்றி: தினமணி நாளிதழ்(23.03.2010)சென்னை
(தினமணியில் வந்த என் கட்டுரையின் முழுவடிவம்)
* கட்டுரை முழுமையடைய கருத்துரை நல்கிய விக்கித் திட்ட நண்பர்களுக்கு நன்றியன்