நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 16 மார்ச், 2010

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என் கட்டுரையும், அறிஞர் வா.செ.குழந்தைசாமியாரின் மறுப்புக் கட்டுரையும்

அறிஞர் வாங்கலாம்பாளையம் செ.குழந்தைசாமியார் இந்திரகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர் என்பதும்,இணையப் பல்கலைக்கழகத்தின் இந்நாள் தலைவராகவும் இன்னும் அரசு சார்ந்த பல நிறுவனங்கள்,அமைப்புகளில் பலநிலைகளில் பொறுப்பேற்றுள்ளவர் என்பதும் நாம் அறிந்ததே.செம்மொழி மாநாட்டின் தலைமைக் குழுவின் துணைத்தலைவராகவும் இவர் உள்ளார்.சற்றொப்ப அரை நூற்றாண்டுக்காலம் அரசின் உயர் பொறுப்புகளில் இருந்ததால் இவரைக் கல்வியாளர் என்று தமிழ் உலகு மதிக்கிறது.இவர்தம் நூலுக்குப் பேராசிரியர்கள் பலர் திறனாய்வு,ஆய்வுரை, மதிப்புரை,அணிந்துரை எழுதியதுடன் அமையாமல் கருத்தரங்குகள் நடத்தியும்,கூடிப்பேசியும் இவர்போல் ஒரு கவிஞர் இல்லை என்று இன்றுவரை வாயாரப் புகழ்ந்து போற்றிப்பாடியும் வருகின்றனர்.

அவ்வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் பயின்றபொழுது எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பில் ஒரு கருத்தரங்கும் அறிஞர் வா.செ.கு.அவர்களை மகிழ்ச்சிப்படுத்த நடத்தப்பெற்றது.கருத்தரங்கு நடந்ததன் நோக்கம் அறிஞர் வா.செ.கு.அவர்களின் எழுத்தை நடைமுறைப்படுத்த வழி செய்வதே ஆகும். ஆனால் அங்கு வந்த அறிஞர் இரா.திருமுருகனார்,இறைவிழியனார், தமிழண்ணல், பாலசுந்தரனார் உள்ளிட்டவர்கள் (பெயரில் என் நினைவுக்குறையால் மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு)எழுத்துத் திருத்தம் வேண்டாம் என்று வாதிட்டனர்.திருத்தம் வேண்டும் என்றவர்கள் அவரவர்களின் மனம்போன போக்கில் எழுத்தைத் திருத்தலாம் என்றும் தங்கள் திருத்தமே சிறந்தது என்றும் வாதிட்டனர். ஒருவர் தமிழ் எழுத்துகளே வேண்டாம் அனைத்தையும் ஆங்கிலக்குறியீடுகளில் வரையலாம் என்றதுதான் உச்சக்கட்ட வேடிக்கை.இன்னொருவர் புதிய ஐந்து குறியீடுகளில் தமிழை எழுதிவிடலாம் என்றார்.

இன்றும் கூட சில அன்பர்கள் ஆங்கில எழுத்தைகளைப் பயன்படுத்தித் தமிழை எழுதலாம் என்றும் தமிழ்க்குறியீடுகளே வேண்டாம் என்றும் மீயுயர் புரட்சிக்கு வித்திடுகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்று நாளும் என் கையில் ஒரு தாளைத் திணிப்பது வழக்கம்.இப்படி ஆள் ஆளுக்குத் திருத்தம் செய்யும் அளவில் தமிழ் இல்லை என்பதை முதலில் மனத்தில் பதிக்க வேண்டும்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் ஒலி,எழுத்துப் பிறப்பு பற்றி இலக்கணப் புலவர்கள் சிந்தித்து எழுதி வைத்துள்ளதைக் கண்டு மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் வியக்கின்றனர்.அப்படியிருக்க வறியவன் கையில் கிடைத்த அணிகலன் போலத் தமிழ்மொழியின் அருமை அறியாத சிலரிடம் தமிழ்த்தலைமை அகப்பட்டுக்கொண்டதால் தமிழர்கள் யாவரும் கலங்கி நிற்கின்றோம்.

அதனால்தான் தமிழண்ணல்,இரா.இளங்குமரனார்,பொற்கோ,இரா.இளவரசு போன்ற ஊற்றம் செறிந்த தமிழ்ப் பேரறிஞர்களை ஒதுக்கிவிட்டு நாட்டில் பல களியாட்டங்கள் நடந்துவருவதை எம்மனோர் கண்டு வருத்தம்கொள்ள வேண்டியுள்ளது.இன்று தமிழகத்தில் முற்றகாத் தமிழ் வழிக்கல்விக்குரிய வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன.அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழ் வழிப்பள்ளிகள் நடைமுறையில் உள்ளன.ஏழை,எளிய குடும்பம் சார்ந்த பிள்ளைகள் தமிழ் வழியில் படித்து வருகின்றனர். அக்குழந்தைகளின் படிப்புக்கும் வேட்டு வைக்கும் வகையில் இன்று எழுத்துத் திருத்த முயற்சிகளும் அயல்நாட்டில் வாழும் சிலரின் மத்தள வேலைகளும் உள்ளன.

பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வேட்டிலும் வேறு சில நூல்களிலும் அறிஞர் வா.செ.கு.அவர்களை யான் அவரின் பாப்புனையும் ஆற்றல் போற்றி எழுதியுள்ளதும் இங்கு நினைவிற் கொள்ளத் தக்கதே.அறிஞர் வா.செ.கு.அவர்கள் நீரியல்துறையில் வல்லுநர் என அன்பர்கள் குறிப்பிடுவது உண்டு.ஆனால் அது தொடர்பான அவர் கட்டுரைகள்,நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் அவரின் எழுத்துச்சீர்திருத்தம்,அறிவியல் தமிழ்,வள்ளுவம் சார்ந்த நூல்கள் இவற்றைப் படித்துள்ளேன்.அவர் பொழிவுகளைப் பல இடங்களில் கேட்டுள்ளேன்.அவரின் நாற்பதாண்டுக் கால முயற்சியான எழுத்துத்திருத்தம் என்பது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்று நினைத்து, அண்மைக்காலமாக அதனைத் தீவிரப்படுத்தி,தம் செல்வாக்கு கொண்டு நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார்.தமிழறிஞர்கள் பலரும் காலந்தோறும் இவரின் எழுத்தையும் பேச்சையும் கண்டித்தே வந்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள சொம்மொழி மாநாட்டில் எழுத்துத் திருத்தம் தொடர்பில் ஓர் ஆணை பெற்று விட வேண்டும் என்று அரசியலின் உயர்மட்டத் தலைவர்களின் துணையுடன் பல முயற்சிகளைச் செய்து வருகிறார்.

அதன் ஓர் அடையாளமாகப் பொதிகைத் தொலைக்காட்சியில் தோன்றி எழுத்துத்திருத்தம் தேவை என்று உரையாடி வருகிறார்.எழுத்தாளர் முனைவர் திருப்பூர் கிருட்டினன் அவர்களுடன்(ஆசிரியர்-அமுதசுரபி) உரையாடும் நிகழ்ச்சி அடிக்கடி இந்திய அரசின் பொதிகைத் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பாகிறது. நாட்டு வளங்கள்,வேலை வாய்ப்புகள்,அவலங்கள்,நிகழ்வுகள், கலைக்காட்சிகள் பல இருக்கப் பொதிகை இந்த நிகழ்ச்சியை அடிக்கடி மறு ஒளிபரப்பு செய்வதன் தேவை என்ன?உள்நோக்கம் என்ன? எனப் பொது மக்கள் வினா எழுப்புகின்றனர்.இந்தப் பின்னணி பற்றியெல்லாம் நம் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்கள் கவலைகொள்ளாமல் ஆறாம் ஊதியக்குழுப் பணப்பயன் எப்பொழுது கிடைக்கும் அல்லது எந்த வகையில் ஆய்வுத்திட்டம் வரைந்தால் செம்மொழி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழக நல்கைக்குழுவில் பணம்பெற்று தமிழ்வளர்க்கலாம்(!) என்று ஆலாய்ப் பறக்கின்றனர்.

இணையத்திலும் எழுத்துத் திருத்திகள் சிலர் பக்குவமாக பொய் புனைந்து எழுதி வருகின்றனர். அவ்வடிமைச் சிந்தனையாளர்கள் சொல்லும் பொய்யுரை என்ன எனில் அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், இங்கிலாந்திலும் படிக்கும் பிள்ளைகள் தமிழ் எழுத முடியாமல் தவிக்கின்றனராம்.(இந்த அடி வருடிகளின் துணையுடன் அந்த அந்த நாடுகளில் சிலரைப் பிடித்து குழந்தைகளுக்குத் தமிழ் எழுதக் குறியீடுகள் இடையூறாக உள்ளன என்று நயப்புரை கூறியும்,தக்க ஆள் பிடித்தும் பொய்யாகக் கையொப்பம் சிலர் பெற்று வந்துள்ள நிகழ்வுகளும் உண்டு.சிங்கப்பூரில் அப்படி எழுத்துக்குறியீடு மாற்றம் வேண்டும் என்று ஒரு கையெழுத்து இயக்கம்(!) நடத்தப்பட்டுக் கையொப்பம் திரட்டப்பட்டுள்ளது என்ற செய்தி சிங்கப்பூரில் உள்ள தமிழர்களுக்கும்,தமிழகத்துத் தமிழர்களுக்கும் தெரியாத செய்தியாகும். ஆனால் இந்தக் கையொப்பத் தாள்களைச் சான்றாகக் காட்டவும் சில எழுத்துத்திருத்திகள் முன்வந்துள்ளனர்.

அயல்நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிப்போன,மேட்டுக்குடியினரான பிற நாட்டு வாழுநர்களுக்கு வாதிடும் இவர்கள் சொந்த நாட்டுக்குழந்தைகள் தாய்மொழி வழியில் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றரே என்று என்றைக்காவது வருந்தியதுண்டா?எழுதியதுண்டா?அரசியல் தலைவர்களைத் தூதுவிடுத்ததண்டா?சீனாவில், சப்பானில் எழுத்துத் திருத்தப்படுகிறது என்று காதில் பூச்சுற்றி அரசியல் தலைவர்களையும் அப்பாவி மக்களையும் மருட்டும் இந்தக் கல்வியாளர்கள் அந்த நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வி கற்பிக்கப்படுவதை என்றைக்காவது முனுமுனுத்தது உண்டா?.தனக்குத் தேவை என்றால் பெண்ணும் மாப்பிளையும் என்று போற்றும் இவர்கள் வேண்டாம் என்றால் இழிமொழியில் பழிக்கும் சிற்றூர் கல்லா மக்கள் ஒத்தவரே என்க.இவை யாவும் நிற்க.

அண்மையில் தமிழோசை ஏட்டில் நான் எழுதிய எழுத்துச் சீர் திருத்தம் தேவையா என்ற என் கட்டுரை வெளியானது(31.01.2010). இணையத்திலும் அதனைப் பதிந்தேன்.இணையத்தில் என் கட்டுரை வெளிவந்த பிறகு அயல்நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழகத்தில் நடக்கும் எழுத்துத்திருத்த முயற்சிகள் தெரியவந்தன.மலேசியா,அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் எழுத்துதிருத்த முயற்சியைக் கண்டித்து எழுதினர்.மலேசியாவில் இதனைக் கண்டித்து ஒரு இணையத்தளமே தொடங்கப்பட்டது. தமிழகத்தில் பேராசிரியர் மறைமலை அவர்களின் முயற்சியால் பொறிஞர் இரா.ம.கி.உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட எழுத்தச்சீர்திருத்த எதிர்ப்புக் கருத்தரங்கம் ஒன்று நடந்தது.பேராசிரியர் தங்கப்பா அவர்கள் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் ஏட்டில் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைக் கண்டித்தும் தமிழக அரசு இதற்குச் செவி சாய்க்கக் கூடாது என்றும் ஓர் அரிய கட்டுரை எழுதினார்.

மேலும் என் கட்டுரை வெளிவந்தவுடன் அரசுத்துறையில் துணைச்செயலாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற க.சி.இராமமூர்த்தி அவர்கள் என் பெயருக்கு மடல் வழி எழுத்து,எண்ணுப்பெயரில் மாற்றம் வேண்டும் என்று சான்று காட்டி ஒரு நல்ல கட்டுரை அனுப்பினார்,பின்னர் அக்கட்டுரை ஓரிரு நாளில் தமிழோசையில் அவர் முயற்சியால் வெளிவந்தது.அதன் பின்னர் ஒரு கிழமை கழித்து நம் வா.செ.கு. அவர்கள் ஐந்து நாள் தொடராக எழுத்துச்சீரமைப்பு தொடர்பில் ஒரு கட்டுரை தமிழ் ஓசையில் வெளியிட்டார்.

எழுத்துச்சீரமைப்பு: இனப்பாதுகாப்புக்கு அவசியம்,தமிழ் ஒரு பண்பாட்டுத் தேவை,அளவில் விதை-விளைவில் விழுது,மாறாத பொருளெதுவும் வளர்வதில்லை,தலைமுறையினர் சுமையைக் குறைப்போம்
(23.02.2010-28.02.2010)என்னும் தலைப்புகளில் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றத்துடனும், மாறுகொளக்கூறல் என்னும் விதிக்குட்பட்டும்,மிகைபடக்கூறல் எனவும் கூறியது கூறல் என்ற கொடுங்குற்றத்திற்கு ஆட்பட்டும் நம் ஐயாவின் கட்டுரை இருந்தது.அதில் நான் விடுத்த வினாக்களுக்கு உரிய விடை ஒன்றும் இல்லை என்பது அறிந்து திகைத்தேன்.இதே கட்டுரையைத் தமிழ் ஓசையின் சார்பு ஏடனா பசுமைத் தாயகம் சுற்றுச்சூழலிலும் ஐயா அவர்கள் முன்பே சிற்சில மாற்றங்களுடன் வெளியிட்டார்கள்.

அறிஞர் வா.செ.கு.கட்டுரையில் செய்திகள் மிகவும் குறைவாகவும் பொருத்தமற்ற படங்கள் அடைக்கப்பட்டும் இருந்ததை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.நம் கருத்துகளை நிலைநாட்டவும் பிறர் கருத்தை மறுக்கவும் துறைசார் வல்லுநர்களின் கருத்துகளை மேற்கோளாகக் காட்டுவது அறிஞர் உலகும் ஆராய்ச்சி உலகும் பின்பற்றும் நடைமுறை.ஆனால் அவர் கவிதை வரிகளை அவரே பல இடங்களில் தேவையற்று மேற்கோளாக எடுத்துக்காட்டி மகிழ்ந்துள்ளார்.அவர் விருப்பமும் இயல்பும் இவை எனத் தள்ளுக.

கட்டுரையை வா.செ.கு.ஐயா அவர்கள் இவ்வாறு நிறைவு செய்கிறார்.

"மலேசியா,இலங்கை,சிங்கப்பூர்,அமெரிக்கா,போன்ற நாடுகளில் நான் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடைகளில் விளக்கியபொழுது,எதிர்ப்புத்தெரிவித்தவர்களைக் கண்டதில்லை.மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட,இவ்வளவு எளிய சீர்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற வினாவைத்தான் எழுப்பினார்கள்.

அவர்கள் வினாவுக்கு நான் சொன்ன விடை: இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்;மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட.ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது எனபதுதான்.தலைவர்கள் தாமாக உருவாவதில்லை.நாம்தான் உருவாக்க வேண்டும்".

இந்த முடிவுரைப்பகுதியால் தம் கருத்துக்குத் தலையாட்டிக் கையொப்பமிடும் தலைவரை அவர் விரும்புவது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.அத்தகு தலைவர்கள் தமிழகத்தில் தோன்றாதிருப்பாராக!ஏனெனில் புகழெனில் உயிரும் கொடுப்பர்.பழியெனில் உலகு கிடைப்பினும் பெறாத மான மறவர்கள் நடமாடிய மண் இத்தமிழ் மண்.

(இன்று (16.03.2010) இலக்கணக்கடல் அறிஞர் இரா.திருமுருகனார் அவர்களின் பிறந்த நாள்.அவர் நினைவாக இக்கட்டுரை வெளிவருகிறது.)

4 கருத்துகள்:

செல்வா சொன்னது…

இளங்கோவன், மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். நாம் எல்லோரும் மதிக்கும் பேராசிரியர் வா.செ.கு இந்த எழுத்துச் சீர்குலைவுத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் பல இலட்சக்கணக்கான நூல்களையும் படைப்புகளையும் மீண்டும் உருவாக்குவது அறிவுடைமையா? நானோ புரட்சிக் காலத்தில், விரல் நீள சிறு நினைவுக்குச்சியில் நூலகம் அனைத்தையும் அடக்கும் இன்றைய மின் புரட்சி நாளில் மாட்டுவண்டிப் புரட்சி என்பதுபோல தட்டச்சு, எழுத்தாணி காலப் புரட்சி பற்றி ஐயா பேசுவது உண்மையில் வெட்கமாகவே இருக்கின்றது. நான் மதிக்கும் பேராசிரியர் இப்படி செய்வது மிக மிக வருத்தமாக உள்ளது. வா.செ.கு ஐயா சொல்வது செல்லா வாதங்கள். ஐந்து உருபாய் பெற ஒரு கோடி உருபாய் செலவழிப்பது போன்றது.

பரிதியன்பன் சொன்னது…

அய்யா வா.செ.கு விரும்பும் எழுத்துச் சீர்துருத்தம் தேவையற்றது.இருக்கின்ற வடிவத்தையே பின்பற்றினால் போதும் .வளரும் சந்ததியினர் நூறாண்டுகளுக்கும் மேலாக வெளிவந்திருக்கும் படைப்புகளை இழக்க நேரிடும் .எனவே தொடர்ந்து இது போன்ற விவாதங்களை தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.இதற்கு அனைத்து தமிழர்களும் உடனே எதிர்ப்புகளை பதிவு செய்யவேண்டும்.உங்கள் பணி சிறக்கட்டும் தோழர் இளங்கோவன் .வாழ்த்துகள்

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

முனைவர் ஐயா, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பலருக்கும் நல்ல தெளிவு கிடைக்கும்.

//கட்டுரையை வா.செ.கு.ஐயா அவர்கள் இவ்வாறு நிறைவு செய்கிறார்.

"மலேசியா,இலங்கை,சிங்கப்பூர்,அமெரிக்கா,போன்ற நாடுகளில் நான் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடைகளில் விளக்கியபொழுது,எதிர்ப்புத்தெரிவித்தவர்களைக் கண்டதில்லை.மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட,இவ்வளவு எளிய சீர்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற வினாவைத்தான் எழுப்பினார்கள்.//

இப்படியொரு புரட்டை அறிஞர் வா.செ.கு அவிழ்த்து விட்டிருப்பது கண்டு அதிர்ச்சி கொள்கிறேன்.

மலேசியாவில்,
என்று? எப்போது? எங்கே? எவர் முன்னிலையில்? அவர் தன்னுடைய எ.சீர்த்திருத்தம் பற்றி விளக்கினார்?

இந்த வினாவுக்கு ஐயா வா.செ.கு பதில் சொல்ல வேண்டும்.

பொய்யுரைகள் கூறி தமிழகத் தமிழர்களை மயக்கக்கூடாது அவர்.

தன்னுடைய தனிப்பட்ட நிகழ்ப்பை (Personel Agenda) அடைவதற்கு அறிஞர் பெருமக்கள் இங்ஙனம் வழுச்செயல் புரிவது அழகாமோ?

எ.சீர்மை தொடர்பாகக் கருத்தாடுவதற்குத் தொடங்கப்பட்டுள்ள வலைப்பதிவைக் காண்க: http://tamilseermai.blogspot.com

nayanan சொன்னது…

வியக்க வைத்த அருமையான கட்டுரை. தங்கள் கட்டுரை நமது நம்பிக்கைகளை கூட்டுகிறது.

மனமார்ந்த வாழ்த்துக்கள் முனைவர் மு.இளங்கோவன்

அன்புடன்
நாக.இளங்கோவன்