நா.ப.இராமசாமி
நாமக்கல் என்றால் நமக்கு முட்டைக்கோழியும்,சரக்குந்துகளும்தான் நினைவுக்கு வரும். அதனை விடுத்துச் சிந்தித்தால் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்வோரும் உண்டு. அண்மையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அங்கு நாமக்கல் மாவட்டத்து நூலகர்கள் பயிற்சி பெற்றனர்.
நூலகர்களுக்கு நடுவே அகவை முதிர்ந்த பெரியவர் ஒருவர் இடையில் வந்து இணைந்து கொண்டு அரங்கில் நடப்பனவற்றை உற்று நோக்கியவண்ணம் இருந்தார். அவரை இடைவெளி நேரத்தில் வினவினேன். அவர் பெயர் நா. ப. இராமசாமி. பழையப் புத்தகங்கள் தொகுத்துப் பாதுகாக்கும் இயல்பினர் என்று அறிந்தேன். பயிலரங்கு முடித்து உடன் ஊருக்குப் புறப்படும்படி முன்பு என் பயணத்திட்டம் வகுத்திருந்தேன். இராமசாமி அவர்களிடம் பேசிய பிறகு என் பயணத்திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு நேரே அவர் அலுவலகத்திற்குச் சென்றேன். மிகப்பெரும் அறிவுக் களஞ்சியத்தைத் தன் பாதுகாப்பில் வைத்திருந்த அவரைக் காணாமலும் அவர் அலுவலகம் செல்லாமலும் வந்திருந்தால் என் பயணம் எளிமையான ஒன்றாகவே அமைந்திருக்கும்.
நா.ப.இராமசாமி அவர்கள் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர் இவர் தந்தையார் படிப்பறிவு இல்லாதவர். கைரேகை பதிக்கும் பழக்கம் உடையவர். எளிய உழவர் குடும்பம். இராமசாமி அவர்கள் இளமையிலேயே கையில் கிடைத்த, கண்ணில் கண்ட இதழ்களைப் படிக்கும் பழக்கம் உடையவர். அந்தக் காலத்தில் வெளிவந்த சிறுவர் இதழ்கள்,சிறுவர் நூல்கள் இவற்றை ஆர்வமுடன் படித்தார். அழ. வள்ளியப்பாவின் படைப்புகள், செட்டிநாட்டிலிருந்து வந்த சிறுவர் இதழ்களைப் படிக்கத் தொடங்கினார். பொதுவுடைமைக் கொள்கைகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த எழுத்துகள் அறிமுகம் ஆகின்றன. தொடர்ந்து கற்றலை ஒரு ஆர்வத் தொழிலாக மேற்கொண்டார்.
இதன் இடையே மாடுகளுக்குத் தேவையான பிண்ணாக்கு, தவிடு, கயிறு, பருத்திக்கொட்டை விற்கும் கடையைச் சிறப்புடன் நடத்தி முன்னேற்றம் கண்டார். அரசியல் சார்பு அமைகிறது. தமிழகத்தின் முன்னணித் தலைவர்களாக விளங்கிய காமராசர், சம்பத், வாழப்பாடியார், நாவலர், இரா.செழியன் உள்ளிட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு அமைந்தது. மேலும் மொராசி தேசாய். செகசீவன்ராம் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைக் காணவும், பேசவுமான சூழலும் வாய்த்தது. இப்படி கல்வி, அரசியல் துறைகளில் ஈடுபாட்டுன் விளங்கிய இராமசாமி அவர்கள் இன்றுவரை பகுத்தறிவுக் கொள்கையுடையவர். இவருக்குச் சம்பத் தலைமையில் திருமணம். இவர் பிள்ளைகளுக்குத் தலைவர்களைக் கொண்டு சீர்திருத்தத் திருமணங்கள் நடந்தன.
வெளியூர்ப் பயணங்களில் கண்ணில் தென்படும் பழைய நூல்களை வாங்கத் தொடங்கினார். இன்று முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைக் கொண்ட நூலகத்தைப் பாதுகாக்கும் அறிஞராக விளங்குகிறார். தமிழகத்தில், பிற நாடுகளில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிக் கேட்டால் நா முனையில் செய்திகளை வைத்துள்ளார். ஒரு நூல் பற்றிக் கேட்டால் ஒருநூறு நூல்களை எடுத்துக் கண்முன் அடுக்கிவிடுவார். இந்த நூல்களை நமக்கு எடுத்துக் காட்டுவதில் சிறிதும் அலுத்துக்கொள்ளாமல் ஆர்வத்துடன் இவர் செயல்படுவது கண்டு மகிழ்ச்சியே ஏற்படும். பழைய நூல்களை வைத்திருக்கும் ஆர்வலர்கள் தானும் பயன்படுத்தாமல், பிறர் பார்வைக்கும் வைக்காமல் அழியவிட்டுவிடுவது வழக்கம். ஆனால் இராமசாமி அவர்கள் எடுத்து வழங்குவதில் சலிப்படையாதவர். இவருடன் உரையாடியதிலிருந்து...
உங்கள் இளமைப் பருவம் பற்றி...
நாமக்கல்லில் வாழ்ந்த பழனியாண்டிக் கவுண்டர், காளியம்மாளுக்கு மகனாக 15.10.1939 இல் பிறந்தேன். என் தந்தையார் வண்டியோட்டியும் மூட்டை சுமந்தும் குடும்பம் நடத்தியவர். படிப்பறிவு இல்லாதவர். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்பொழுதே பொதுவுடைமை, திராவிட இயக்க உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதழ்களைப் படிப்பதும் அண்ணா, சம்பத், நாவலர் பேச்சு கேட்டதும் இயக்க ஈடுபாட்டுக்குக் காரணம். அணில், பாலர் மலர், பூஞ்சோலை (அழ.வள்ளியப்பா), ஜில் ஜில்(தமிழ்வாணன், வானதி திருநாவுக்கரசு) உள்ளிட்ட இதழ்களை இளமையில் படித்தேன்.
அமெரிக்க அரசு அந்த நாளில் அமெரிக்கன் ரிப்போட்டர் என்ற இதழை இலவசமாக அனைவருக்கும் வழங்கியது. ஆர்வமுடன் படிப்பேன். இரண்டாம் படிவத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபொழுதே என் படிப்பு வேட்கை தொடங்கிவிட்டது. சோவியத் நாடு இதழும் படிக்கத் தொடங்கினேன். 1958 இல் உழவுப்பொருள் கடையைக் கவனித்தேன். இதே ஆண்டில் திருமணமும் நடந்தது.
நூல்கள்சேர்க்கும் பழக்கம் உங்களுக்கு எப்பொழுது தொடங்கியது?
வெளியூர் செல்லும் பொழுது மறக்காமல் பழையப் புத்தகக் கடைக்குச் செல்வது உண்டு. சேலம், சென்னை மூர்மார்க்கட், திருச்சி, மதுரையில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் நூல் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மூர் மார்க்கட்டில் எனக்காக நூல்களை எடுத்து வைத்திருந்து வழங்கும் அளவுக்குப் பழக்கம் உண்டு. உரோசா முத்தையா அவர்களை அவரின் இல்லத்தில் கண்டு அவரிடமும் நூல்களை வாங்கி வந்த பட்டறிவு உண்டு. அவரிடம் இருந்து ஆறு பழைய கடிதங்களை வாங்கி வந்தேன். 1894-1900 ஆண்டில் எழுதப்பட்டன. அந்தக் கடிதங்கள் செட்டிநாட்டிலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இந்தக் கடிதங்களில் தமிழில் மட்டும் முகவரி எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுதினால் அந்த நாடுகளுக்குச் செல்லும்படியாகத் தமிழ் மொழிக்கு மதிப்பு இருந்துள்ளது.
உங்களிடம் உள்ள பழைமையான குறிப்பிடத் தகுந்த நூல்கள்?
இராமலிங்க அடிகளாரின் முதல் பதிப்பு நூல்கள். மணிமேகலை, பத்துப்பாட்டு முதல்பதிப்பு, திருக்குறள் 1840 பதிப்பு, இராட்லர் அகராதி (1834,36,39,41), சுவிசர்லாந்து பற்றி 1836 இல் வெளிவந்த நூல்கள் உள்ளன. இதில் படங்கள் கையால் வரையப்பட்டுள்ளன. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இரண்டாம் பதிப்பு(1875), 1803 இல் வெளியான சேக்சுபியர் நூல்கள் (ஐந்து தொகுப்புகள்), இவை தவிர ஓவியம், சிற்பம், மருத்துவம், மூலிகை, சமையல் கலை (1912) குறித்த நூல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா பற்றி 1858 இல் தமிழில் எழுதப்பட்ட நூல் உள்ளது. ஆப்பிரிக்கா நாடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன. பாளையங்கோட்டையில் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.
உங்கள்அரசியல் வாழ்க்கை?
திராவிடஇயக்கம், பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகள் இருந்தாலும் சம்பத் அவர்களின் தமிழ்த்தேசியக்கட்சியில் ஈடுபட்டு உழைத்தேன். சம்பத் பேராயக் கட்சியில் இணைந்த பிறகு நான் காமராசர் அவர்களுடன் இருந்தேன். பின்னர் வாழ்ப்பாடி இராமமூர்த்தி அவர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. காமராசர் கொள்கையை இன்றும் தாங்கி வாழ்கிறேன். சனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.
உங்கள் பகுத்தறிவுக் கொள்கை?
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையும் சமூகச்சீர்திருத்தக் கொள்கையும் எனக்கு உடன்பாடான கொள்கைகள். எந்த வகையான சடங்கும் இன்றி எங்கள் குடும்பத்தில் திருமணம் செய்தோம். பார்ப்பனர்களை எங்கள் பகுதியில் திருமணத்திற்கு அழைப்பது இல்லை.
நா.ப.இராமசாமி தாம் தொகுத்த நூல்களுக்கு இடையே
உங்கள் நூல் தேடும் முயற்சி பற்றி?
இன்று வரை புத்தகத்துக்காக நான் செலவு செய்வதற்குத் தயங்குவது இல்லை.பழைய புத்தகங்களை எந்த விலை சொன்னாலும் வாங்கிவிடுவேன். இப்பொழுதும் பழைய புத்தகங்களையும் புதிய புத்தகங்களையும் வாங்குகிறேன். நாமக்கல் மாவட்ட மைய நூலகம் வளர்ச்சி பெற பல வகையில் உதவியுள்ளேன்.
உங்கள் நாணயம் சேகரிப்பு பற்றி..
என்னிடம் பழைய நாணயங்கள் பல உள்ளன. சேரர், உரோமானியர், சீனர் காலத்து நாணயங்கள் உள்ளன. கரூர் ஆற்றுப்பகுதியில் கிடைத்த பல நாணயங்களை நான் வாங்கிப் பாதுகாக்கிறேன். கொடுமணல் நாணயங்கள் என்னிடம் உள்ளன. நடுகற்கள் இரண்டைப் புலவர் இராசு அவர்களுடன் இணைந்து கண்டெடுத்துள்ளேன்.
உங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி?
நான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன், 1973 இல் சப்பான் நாட்டிற்கும் 1987 இல் உருசியாவிற்கும் 1999 இல் பிரிட்டன், பிரான்சு, தாய்லாந்து, பெல்சியம் நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். மலேசியா, பிலிப்பைன்சு, ஆங்காங், சென்று வந்துள்ளேன். 2004 சனவரி ஒன்றில் யாழ்ப்பாணம் சென்று வந்தேன். அங்குப் பல நாள் தங்கிப் பல ஊர்களையும் முக்கியமான தலைவர்களையும் கண்டுவந்துள்ளேன். 3800 நூல்களை (சற்றொப்ப ஐந்து இலட்சம் மதிப்புள்ளது) தமிழீழத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்.
உரோசா முத்தையா நூல்கள் தொகுப்பு முயற்சி பற்றி?
உரோசா முத்தையா அவர்களைப் பல முறை நேரில் கண்டுள்ளேன். செட்டிநாட்டில் அவர் தொகுத்த நூல்கள் குறிப்பிடத் தகுந்தன. கட்டுக்கட்டாக கடிதங்களைத் திரட்டியவர். அச்சில் உள்ள இதழ்கள். நூல்கள், அழைப்பிதழ்கள் எனப் பலவற்றையும் தொகுத்துப் பாதுகாத்தவர். ஓம் சக்தி இதழில் அவரின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்துள்ளது.
உங்கள் நூல்களை எதிர்காலத்தில் என்ன செய்ய முடிவுசெய்துள்ளீர்ர்கள்?
என்னிடம் உள்ள பல நூல்களையும் தமிழீழம் விடுதலை அடைந்தால் கொடுக்க அணியமாக உள்ளேன்
ஆய்வாளர்களுக்கு எந்த வகையில் உங்களால் உதவமுடியும்?
ஆய்வாளர்கள் பலரும் என் நூலகத்துக்கு வருகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான நூல்களை மட்டும் எடுத்துப்படிக்கிறார்கள். அனைத்து நூல்களையும் பார்வையிடவோ, படிக்கவோ அவர்கள் விரும்புவதில்லை. பல பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் நூலகத்துக்கு வருகின்றனர். பலர் நூல்களை இரவலாக எடுத்துச்செல்லுவர். சிலர் நூல்களைத் திருப்பித் தருவதில்லை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் என்னிடம் இருந்த அரிய நூல்களைப் பெற்று மறுபதிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் எனக்கு எழுதியோ, பேசியோ முன் தகவல் தந்து வந்து பார்க்கலாம். என் நூலகத்தைப் பயன்படுத்தலாம். ஆய்வாளர்களுக்கும் புத்தக ஆர்வலர்களுக்கும் உதவ என்றும் தயாராக உள்ளேன்.
முகவரி: நா.ப.இராமசாமி
நூல் சேகரிப்பாளர்,
சேலம் சாலை, நாமக்கல், தமிழ்நாடு.
பேசி: 04286-231704