நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 18 மார்ச், 2009

பாவலர் குறிஞ்சிக்குமரனார்(சா.சி.சுப்பையா)-மலேசியா


குறிஞ்சிக்குமரனார்(சா.சி.சுப்பையா)

தமிழகத்தில் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார்.மலசியாவில் திராவிடர் கழகம்.தமிழ்நெறிக்கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறப் பாடுபாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார் குறிப்பிடத்தக்கவர். தலையாயவர்.

திராவிடர் கழகம்,மலேசிய இந்தியப் பேராயக்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் சிலகாலம் தொடர்புகொண்டிருந்தாலும் இவற்றால் மொழித்தூய்மைக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் பயனில்லை என உணர்ந்து பாவாணர் தமிழ் மன்றம் என்ற அமைப்பை நானூறு உறுப்பினர்களுடன் 1960 இல் தோற்றுவித்தவர்.ஈப்போ பகுதியில் அரசியல் சார்பற்று இனம்,மொழி, கலை,பண்பாடு போன்ற துறைகளில் பணியாற்றிய அந்த அமைப்பு தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டது.பாவாணரின் நூல்கள்,தென்மொழி இதழ்கள் இவர்களின் தமிழ்ப்பணிக்கு உதவின.

சித்த மருத்துவத்துறையில் வல்லுநராகப் பணிபுரிந்த குறிஞ்சிக்குமரனார் தமிழ் உணர்வு கொண்டு விளங்கியதுடன் மலேசியாவில் தனித்தமிழ் உணர்வுகொண்ட பலர் உருவாகத் தக்க பணிகளைச் செய்தவர்.பன்னூல் ஆசிரியராக விளங்கியவர்.பிறமொழி கலவாமல் பேசும், எழுதும் இயல்புடையவர். இவர்தம் வாழ்க்கையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

குறிஞ்சிக்குமரனாரின் இயற்பெயர் சா.சி.சுப்பையா ஆகும்.இவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்துத் திருப்பத்தூரை அடுத்து இரணசிங்கபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சாத்தையா, சிட்டாள் ஆகியோருக்கு 05.05.1925 காரிக்கிழமை முதல் மகனாகப் பிறந்தவர்.1930 இல் திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் புலவர்கள் காதர்மீரான், பிரான்மலை இருவரிடமும் தமிழ்இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்றவற்றைப் பயின்றார். தந்தை வழியில் மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்முறைகள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

1938-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்த இவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் “தமிழ் முரசு” நாளிதழ் வழித் தன்மானப் பற்றாளராகவும் பெரியாரின் விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களின் வழி தன்மான இயக்க உணர்வுடையவராகவும் மாறினார்.
பாவாணரின் ஒப்பியன் மொழிநூல் படித்த இவர் பாவாணர் மேலும் அவர் கொள்கையின் மேலும் மிகுந்த பற்றுடையவர் ஆனார்.பாவாணரின் தமிழ்ப்பணிக்குப் பல நிலையிலும் துணை நின்றார்.பாவாணர் குறிஞ்சிக்குமரனாருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் எழுதியுள்ளதாக அறியமுடிகிறது.

குறிஞ்சிக்குமரனார் பேரா மாநிலத்தின் இலக்கியப் பொறுப்பாளராக ம.தே.காங்கிரசு கட்சியில் இணைந்து பணிபுரிந்தவர்.அந்தச் சூழலில் தமிழகத்திலிருந்து பேராசிரியர்அ.ச.ஞானசம்பந்தன், முனைவர் அ.சிதம்பரநாதன் உள்ளிட்ட அறிஞர்களை அழைத்து இலக்கியப் பொழிவுகளை நிகழ்த்தித் தமிழ்ப்பணியாற்றினார். மேலும் பேரா தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வினையாற்றி வந்ததுடன் ஈப்போவிலிருந்து வெளிவந்த “சோதி” எனும் இதழில் மதிவாணன், சம்மட்டி, துலாக்கோல் போன்ற புனைபெயர்களில் தொழிலாளர் நிலை, மேலாளர் கொடுமைகள் பற்றிய கட்டுரைகள் பல எழுதினார்.இச்செயல் இவர்தம் சமூக ஈடுபாடு காட்டுவனவாகும்.

1960 இல் பாவாணர் மன்றம் தோற்றம் பெற்றதும் தமிழகத்திலிருந்து தனித்தமிழ் உணர்வு மிக்க பலரை அழைத்து மதித்துப் போற்றி அனுப்பியவர்,தனித்தமிழில் சொற்பெருக்காற்றும் அறிஞர்களுக்கு மேடை அமைத்துத் தந்தவர். தென்மொழி இதழை மலேசியாவில் ஆயிரக் கணக்கில் விற்பனை செய்வதற்கு உரிய வழிகளை வகுத்தவர்.பாவாணர் நூல்கள் மலேசிய மண்ணில் பரவ வழிவகுத்தவர்.பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் மலையகச் செலவு செய்தபொழுது( 1974) அவரை வரவேற்று சொற்பெருக்காற்ற உதவியவர்.

முனைவர் வ.சுப.மாணிக்கம்,முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,கு.சா.ஆனந்தன் உள்ளிட்ட தமிழகத்து அறிஞர்களை உரையாற்றச் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழீழ விடுதலையில் நம்பிக்கை கொண்டிருந்தவர். பாவாணர் மன்றம் பற்றிப் பெருஞ்சித்திரனார் மிகச் சிறப்பாகப் புகழ்ந்து பாடியுள்ளார்.தமிழகத்தில் உள்ள தம் உறவினர்களைக் காண குறிஞ்சிக்குமரனார் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வந்து சென்றுள்ளமையை அறியமுடிகிறது.அவர் வழியினரும் அவ்வகையில் தாய்த் தமிழகத்துடன் உள்ள உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது நம் விருப்பம்.

தென்மொழி வளர்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதுடன் தமிழ்ச்சிட்டு,தமிழ்நிலம் உள்ளிட்ட இதழ்களின் வளர்ச்சியிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர்.சிலகாலம் தென்மொழி உள்ளிட்ட ஏடுகளின் புரப்பாளராகவும் பணிபுரிந்தார்.செலாமில் இருந்த தமிழ்நெறிக்கழகத்தின் வழியாகப் பல்வேறு பணிகளைச் செய்தவர்.“பாண்டியத் தலைவன்” “கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியவர்.

குறிஞ்சிக்குமரானாரின் தனித்தமிழ்ப் பணியைப் பாராட்டிப் பலரும் மதித்துள்ளனர்.பல்வேறு சிறப்புகளை அவர் வாழுங்காலத்தில் பெற்றுள்ளார்.பேரா மாநில மன்னர் வழி குறிஞ்சிக் குமரனாரின் தனித்தமிழ்ப் பணி போற்றித் “தமிழ்ச்செல்வர்” என்ற விருது பொற்பதக்கத்தில் வழங்கப்பட்டுள்ளமை சிறப்புக்குரிய ஒன்றாகும்.

குறிஞ்சிக்குமரனாரின் தமிழ்ப்பணியின் காரணமாக 1971-ஆம் ஆண்டு பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்ற சீரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். 1971-ஆம் ஆண்டு பத்துகாசா பாரதியார் படிப்பகத்தினர் “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதை வழங்கினர். மேலும் 1976-ஆம் ஆண்டு “செந்தமிழ்க் கவிமணி” என்ற விருதையும் 1989-ஆம் ஆண்டு பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம் “தமிழனல்” என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தனர். இவ்வாறு பல பட்டங்களும் விருதுகளும் பெற்றாலும் மலேசியத் தமிழர்களால் தனித்தமிழ் அறிஞர் என்று மதிக்கப்படுவதே உயர்ந்த பட்டமாகக் கருதத் தகுந்தது.

1955 ஆம் ஆண்டு முதல் பாடல் பாடி வருபவர்.சிறந்த புலவர்.நெடுங்காலமாக இலக்கிய வகுப்புகள் நடத்திப் பலர் புலமைபெறத் துணை நின்றவர்.பலருக்கும் இவர் வழிகாட்டியாக விளங்கியவர்.நிலைபெற்ற தலைவன் என்பது இவர் வெளியிட்டிருக்கும் நூலின் பெயர்.13.09.1992 இல் இவர்தம் தமிழருவி நூல் வெளியிடப்பெற்றது.பாவாணருக்கு மலர் வெளியிட்ட பெருமைக்கு உரியவர்.பல்வறு மலர்கள்,இதழ்களில் எழுதியுள்ளார்.இவருக்குப் பிறகும் இவர் வழியில் பலநூறுபேர் மலேசியாவில் தமிழ்ப்பணிபுரியும்படி ஆற்றல் வாய்ந்தவர்களை உருவாக்கியுள்ளார்.


குறிஞ்சிக்குமரனார் 1993 இல் எனக்கு எழுதிய மடல்


திரு.கருப்பையா அவர்கள் எனக்கு எழுதிய மடல்(1993)


திரு.கருப்பையா அவர்களின் மடல் தொடர்ச்சி

இவர் மாணவர் ந.கருப்பையா அவர்கள் பாவாணர் மன்றத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றார்.குறிஞ்சிக்குமரனாருக்கு வாய்த்த மக்கட் செல்வங்களும் தந்தையார் வழியில் இயன்ற வகையில் தமிழ்ப்பணிபுரிந்து வருகின்றனர்.

தந்தை பெரியார் மறைவு பற்றி குறிஞ்சிக்குமரனார் அவர்கள்

அறிவுலகின் இமயமலை! புரட்சித் தென்றல்!
அரியதமிழ்ப் பெருந்தலைவன்! தென்னர் வாழ்வில்
செறிந்துதிகழ் மறுமலர்ச்சித் துறைகள் தோறும்
சிந்தனையால் தெளிவேற்றிச் செப்பஞ் செய்தோன்!
நெறிபிறழாத் திராவிடத்தை நிலைக்கச் செய்தே
நீடுயிர்த்த பேரியக்கம்! புதிய ஊழி!
குறிதவறாக் கொள்கைக்கே உயிர் விடுத்த
கொஞ்சுதமிழ்க் குலவிளக்கு மறைந்த தம்மா!

என்று பாடியுள்ளமை போற்றத்தக்கது.

மலேசியாவில் தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுப் பணியாற்றிய முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள் 18.10.1997-இல் விடியற்காலை 5.55மணிக்கு மீளாத் துயில் கொண்டார். அவர் வாழ்வு தமிழ் வாழ்வு.தமிழ் வாழும் காலம் எல்லாம் அவர் வாழ்வார்.


தமிழ் ஓசை நாளிதழில்(15.03.09)

நனி நன்றி

தமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 25
முனைவர் கடவூர் மணிமாறன்
முனைவர் முரசு.நெடுமாறன்(மலேசியா)
கோவி.மணிவரன்(மலேசியா)(படம்,கட்டுரைக் குறிப்புகள்)
சுப.நற்குணன்(மலேசியா)
மாரியப்பன் ஆறுமுகம்(மலேசியா)
திருமாவளவன்(மலேசியா)
தென்மொழி
தமிழ்நிலம்

1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

முனைவர் ஐயா, வணக்கம்.

மலேசியாவின் மற்றொரு அறிஞர் பெருமகனாரை உலகறியச் செய்திருக்கும் தங்கள் தமிழ்த்திருப்பணி வாழ்க!

பெரியவர் ஐயா குறிஞ்சியார் அவர்கள் வாழ்ந்த அதே பேரா(ஈப்போ) மாநிலத்தில் வாழ்கின்றவன் என்ற முறையிலும் அன்னாரின் தமிழ்வழியில் நடைபயிலும் இன்றைய சரவடி என்ற முறையிலும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை மொழிகின்றேன்.