நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
கடலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அறக்கட்டளை இண்டாம் ஆண்டுப் பெருவிழா கடலூரில் நடைபெறுகின்றது!


  பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அறக்கட்டளை நடத்தும் இண்டாம் ஆண்டுப் பெருவிழா கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் 03.08.2014 மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த விழாவில் திருவருட்பாவில் வாழ்வியல் நெறிகள் என்னும் தலைப்பில் அமைந்த நூலின் வெளியீடு நடைபெற உள்ளது.

  திருவருட்பா இசைத்தலுடன் தொடங்கும் விழாவில் முனைவர் விசயலெட்சுமி வெற்றிவேல் எழுதிய திருவருட்பாவில் வாழ்வியல் நெறிகள் என்னும் நூல் வெளியிடப்படுகின்றது. கவிஞர் இரா. ச. சொக்கநாதன் தலைமையில்  நடைபெறும் விழாவில் பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அவர்கள்  அறிமுகவுரையாற்றுகின்றார். நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க தவத்திரு ஊரன் அடிகளார் இசைந்துள்ளார். நூலின் முதற்படியினைப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்குவார். 

  இந்த விழாவில் விருதுகள் வழங்கியும் பாராட்டுப் பட்டயம் வழங்கியும் சிறப்புப் பேருரையாற்ற முனைவர் ஔவை. நடராசன் அவர்கள் இசைந்துள்ளார். தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அறக்கட்டளையினர் அழைத்து மகிழ்கின்றனர்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

மாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூலகங்கள் அறிமுகம்


விழுப்புரம் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்

விழுப்புரம் மாவட்ட மைய நூலகர் திரு.அசோகன் அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் மாவட்ட மைய நூலகமும், கல்கத்தா இராசாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையும் இணைந்து மாவட்ட அளவில் நூலகர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி வழங்கும் நிகழ்வைக் கடந்த 01.08.2012 பிற்பகல் நடத்தியது. அதில் நான் கலந்துகொண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சற்றொப்ப 50 கிளை நூலகர்களுக்குத் தமிழ் இணைய அறிமுகம், தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், மின்னூலகங்கள் குறித்த அறிமுகத்தை இரண்டரை மணி நேரம் வழங்கினேன்.

அதுபோல் 08.08.2012 பிற்பகல் கடலூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிளை நூலகர்கள் சற்றொப்ப ஐம்பதின்மருக்குப் பயிற்சி வழங்கினேன். இவர்களுக்கும் தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், நூலகங்கள், மின்பதிப்புகள் பற்றி விளக்கினேன். தமிழக அரசு கணினி, இணைய வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளையும் நினைவுகூர்ந்தேன். அனைவரும் கணினி, இணைய நூலகம், மின்னிதழ்கள் குறித்து ஆர்வமுடன் தெரிந்துகொண்டனர். கடலூர் மாவட்ட நூலகர் திரு.சி.சின்னத்தம்பி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.


திரு.அசோகன்(விழுப்புரம் மாவட்ட நூலகர்), திரு.சின்னத்தம்பி(கடலூர் மாவட்ட நூலகர்),மு.இ,


கடலூர் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்


கடலூர் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்




விழுப்புரம் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்

வியாழன், 10 நவம்பர், 2011

கடலூர் நகராட்சிப்பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் விழா


திருக்குறள் நூல் பெற்ற மாணவர்களும் வழங்கிய தமிழார்வலர்களும்

குவைத்தில் இயங்கும் பொங்குதமிழ் அறக்கட்டளையினர் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் 250 ஐ வழங்கும் விழாவை இன்று(10.11.2011) மாலை பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை மிகச்சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்குக் கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையினரும் ஆதரவாக இருந்தனர்.

கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் திரு.இராம.சனார்த்தனன் அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பொங்குதமிழ் அறக்கட்டளையின் சார்பில் பொறியாளர் திரு.சேது மாதவன் அவர்கள் வரவேற்றார். பொங்கு தமிழ் மன்றம் குவைத்தில் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளை எடுத்துரைத்து, தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் திட்டத்தைப்பற்றி மிகச்சுருக்கமாக உரையாற்றினார்.

கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் இராம.சனார்த்தனன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாணவர்களுக்குத் திருக்குறள் நூல்களை வழங்கித் தொடர்ந்து திருக்குறளைப் படித்து அதன் வழியில் நிற்கவேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் திருக்குறள் நூல் பற்றியும் நிகழ்ச்சியின் சிறப்பு பற்றியும் விளக்கவுரையாற்றினார். திருக்குறள் சிறப்புகளை எடுத்துரைத்து மாணவர்கள் திருக்குறளைத் தொடர்ந்து படித்து அதன் வழியில் நிற்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளத்தில் பதியும்படியாக அரியதொரு சிறப்புரையாற்றினார். இவரின் பேச்சில் திருக்குறள் உரைகள், மொழிபெயர்ப்புகள், வெளிநாட்டினரின் பணிகளை நினைவுகூர்ந்தார்.

நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.உதயகுமார் சாம் அவர்கள் இத்தகு சிறந்த நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கிய பொங்கு தமிழ் மன்றத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். உலகத்திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நகராட்சிப்பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்கள், கடலூர்த் திரைப்பட இயக்கத்தின் பொறுப்பாளர் சாமிக் கச்சிராயர், கடலூர்ப்பகுதி சார்ந்த பெருமக்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


இராம.சனார்த்தனன் அவர்கள் தலைமையுரை


வரவேற்புரையாற்றும் திரு.சேதுமாதவன் அவர்கள்


விழாவில் பங்கேற்ற மாணவர்கள்


விழாவில் பங்கேற்ற மாணவர்கள்


முனைவர் மு.இளங்கோவன் விளக்கவுரை


மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் ஓய்வுபெற்ற மின்துறை அதிகாரி


உதயகுமார்சாம் அவர்கள் நன்றியுரை

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடலூரில் குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கும் விழா



குவைத் பொங்கு தமிழ்மன்றமும், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாகத் திருக்குறள் நூல் வழங்கும் விழாவை நடத்துகின்றன.நிகழ்ச்சியில் குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களும், கடலூர் மாவட்டத் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிரல்

நாள்: 10.11.2011
நேரம்: பிற்பகல் 3.30 மணி

இடம்: நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கடலூர்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: திரு.இராம.சனார்த்தனன் அவர்கள்

வரவேற்புரை: திரு.சேது மாதவன் அவர்கள்

விளக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

வாழ்த்துரை: பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள்

நன்றியுரை: திரு.உதயகுமார் சாம் அவர்கள், தலைமையாசிரியர்

அனைவரும் வருக!

தொடர்புக்கு: சேதுமாதவன்(கடலூர்) + 91 9443916234

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

நாமக்கல்-கடலூர் இணையப் பயிலரங்குகள்

கடலூர் மாவட்ட மைய நூலகம் 
 
 கடந்த மார்ச்சு மாதம் 16.03.2009 வைகறை நான்கு மணியிருக்கும். கரூர் வள்ளுவர் விடுதியல் நல்ல தூக்கத்திலிருந்தேன். செல்பேசி மணி அடித்தது. மறுமுனையில் இன்னும் விழிக்கவில்லையா?. நான் பேராசிரியர் இராசசேகர தங்கமணி பேசுகிறேன் என்று பேராசிரியர் பேசினார். நான் நள்ளிரவு இரண்டு மணிக்குதான் படுத்தேன். இன்னும் ஒருமணி நேரத்தில் விழிக்கிறேன் என்று சொல்லி சிறிது நேரம் அயர்ந்து கிடந்தேன். 
 
 ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து வரவேற்பறைக்கு வரும்பொழுது ஆறு மணி. எனக்காகப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி உந்து வண்டியில் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று அவர்தம் வளமார்ந்த வீடு கண்டு மகிழ்ந்தேன். கரூவூரில் மனை வாங்கிப் புதியதாக வீடு கட்டித் தம் பணி சிறக்க வாழ்ந்து வருகிறார். இவர் தம் மக்கள் இருவர் அமெரிக்காவில் உள்ளனர். பேராசிரியர் இராசசேகர தங்கமணி எழுதிய பதிப்பித்த நூல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார். அவர் பெற்ற விருது, பட்டங்கள், பரிசில்களை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார். முற்றாக அனைத்தையும் பார்வையிட ஒருநாள் ஆகும். ஒரு மணி நேரத்தில் அவற்றை இயன்றவரை பார்த்தேன். அதற்குள் அவர் கணிப்பொறியைத் தமிழ் மென்பொருள் இறக்கித் தமிழில் தட்டச்சிடும்படி செய்தேன். அதற்குள் வழக்குரைஞர் இராம. இராசேந்திரன் அவர்கள் வள்ளுவர் விடுதியில் காத்திருப்பதைத் தொரிவித்தார். எனவே பேராசிரியர் இராசசேகர தங்கமணி என்னை வள்ளுவர் விடுதிக்கு உடன் அழைத்து வந்தார். 
 
 வழக்கறிஞரிடம் பேசிய பொழுது அவரின் தமிழார்வம் கண்டு வியந்தேன்.பல்வேறு தமிழ்நலம் சார்ந்த பணிகளில் அவர் ஈடுபட்டு வருவது அறிந்து மகிழ்ந்தேன். அவரிடம் என் நாமக்கல் செலவு பற்றித் தெரிவித்தபொழுது நாமக்கல்லில் உள்ள தமிழார்வலர்கள் சிலருக்குத் தொலைபேசியிட்டுப் பேசி என் வருகை பற்றி உரைத்தார். அவரிடமும் விரைந்து விடைபெற நேரந்தது. அதற்குள் முன்பே திட்டமிட்டபடி கரூர் நூலக அலுவலர் திருவாளர் செகதீசன் ஐயா அவர்கள் என் அறைக்கு வந்தார்கள். அனைவரும் சிற்றுண்டி உண்டோம். காலை 8.30 மணியளில் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களிடமும் நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களிடமும் விடைபெற்று 9.45 மணியளவில் நாமக்கல் சென்று சேர்ந்தேன். 
 
  நாமக்கல் மாவட்ட நூலகம் முகப்பு 
  நாமக்கல் மாவட்ட நூலகர்கள் 
 
 அங்கு நூலக அலுவலர் அவர்களும்  பொது உந்தில் வந்து என்னை அழைத்துச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் சார்ந்த நூலகர்கள் பலருக்குக் கணிப்பொறி, இணையம் சார்ந்த பயிற்சிகளை வழங்கினேன்.அனைவரும் கற்றுத் தெரிந்துகொண்டனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
மாவட்ட நூலக அலுவலர், நூலகர் 
 
  மாலை நான்கு மணியளவில் புறப்பட்டுப் புதுவை வரத்திட்டமிட்டிருந்தேன். அதற்கிடையில் திருவாளர் நா. ப. இராமசாமி ஐயாவுடன் மாரண்ணன் அவர்களும் வந்திருந்தார். நாமக்கல் இராமசாமி ஐயா தாம் முப்பதாயிரம் நூல்களைப் பாதுகாத்து வருவதைச் சொன்னார்கள். அதைக் காணாமல் வந்தால் என்னால் இரவு தூங்கமுடியாது எனக் கருதி அவர் நூலகம் சென்று அனைத்து நூல்களையும் மேலோட்டமாகப் பார்வையிட்டு மீண்டும் ஒருநாள் அமைதியாக வந்து பார்வையிடுவேன், பயன்கொள்வேன் என்று உரைத்து, ஐயாவிடம் விடைபெற்று மீண்டேன். 
 
  நூலகர் திரு. வேலு அவர்கள் என் உடன் வந்து உதவினார். 5.15 மணியளவில் பேருந்து ஏறிச் சேலம், விழுப்புரம் வழியாக நடு இரவு புதுவை வந்து சேர்ந்தேன். காலையில் என் கல்லூரிப்பணி முடிந்தேன் .மாலை நான்கு மணிக்கு முன்பே திட்டமிட்டபடி கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கடலூர் மாவட்டம் சார்ந்த பல நூலகர்களுக்கு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிக்கு அழைத்திருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் கல்பனா சேக்கிழார் அவர்களும் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தகுந்தது. 
 
கடலூர் மாவட்ட நூலக அலுவலர், நூலகர் 
 
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில்... 
 
நூலக அலுவலர் அவர்களும் நூலகரும் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். 6 மணி வரை என் உரை அமைந்தது. இணையமும் மின்சாரமும் வாய்ப்பாக இருந்தன. ஆறு நாட்களாகப் பல்வேறு பயிற்சிபெற்ற அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டி மகிழ்ச்சியூட்டினேன். அனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்து சேர்ந்தேன். இரண்டு நாளும் கடுமையான பணி. கடுமையான உழைப்பு. ஆனால் பலருக்கு இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதில் அனைத்துத் துன்பங்களும் பறந்தன.

செவ்வாய், 17 மார்ச், 2009

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி...

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி இன்று 17.03.2009 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் சார்ந்த கிளை நூலகர்கள்,ஊர்ப்புற நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்கின்றனர்.நான் தமிழ் இணையம்,மின் நூலகம்,மின் இதழ்கள்,தமிழ் இணைய வளர்ச்சி குறித்த பயிற்சி வழங்குகிறேன்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் திரு சி.அசோகன் அவர்களும் மாவட்ட மைய நூலகர் திரு.சு.பச்சையப்பன் அவர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.