நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 பிப்ரவரி, 2009

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை(இலங்கை)


பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை

 ஈழப்போராட்டம் பல்லாயிரம் மக்கள் உயிரைக் காவு வாங்கியதுடன் அறிவுக்களஞ்சியமான யாழ்ப்பாண நூலகம் உள்ளிட்ட நூலகங்களையும் இல்லாமல் செய்துவிட்டது. நிறுவன நூலகங்கள் மட்டும் இல்லாமல் தனியார் நூலகங்கள் பலவும் சிதைந்து போயின. மிகப்பெரிய நூல் வளத்தையும், செல்வவளத்தையும், நிலபுலங்களையும் இழந்து ஏதிலிகளாக அயல் நாட்டுக்குச் சென்றவர்களுள் அறிஞர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.

 தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக வளர்ந்த வேலுப்பிள்ளை அவர்கள் நற்பண்புகளும் பேரறிவும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்ற பெருமைக்கு உரியவர். உலகப் புகழ்பெற்ற பர்ரோ முதலான பேராசிரியர்களிடம் பயின்ற பட்டறிவுடையவர். ஆசர் உள்ளிட்டவருடன் பழகியவர். இவர் இளம் அகவையிலேயே பேரறிவு பெற்று விளங்கியவர்.தமக்கு என ஒரு பின்கூட்டம் உருவாக்கத் தெரியாததால் அவர் பற்றி அடிக்கடி நினைவுகூர ஆள்இல்லை. எனினும் அவரின் ஆழமான அறிவுப் படைப்பால் என்றும் போற்றி மதிக்கக்கூடியவராக அவர் விளங்குகிறார். அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல் துறையில் இந்து மதம், புத்தமதம், சமண மதம் பயிற்றுவித்தல் பணிபுரியும் பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப் பார்ப்போம்.

 ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தென்புலோலியில் 21.11.1936 இல் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆழ்வாப்பிள்ளை என்பதாகும். பிறந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்த வேலுப்பிள்ளை பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றவர். 1955-59 இல் இளங்கலை (B.A.Hon)படித்தவர். முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர். இதற்காக இவர் ஆறுமுக நாவலர் பரிசு பெற்றவர். கீழ்த்திசைக் கல்வி உதவித்தொகையும் கிடைத்தது. 1959-62 இல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு தமிழில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் நெறியாளர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆவார்.பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் (1251- 1350 AD) தமிழ்மொழிநிலை என்ற பொருளில் ஆய்வு செய்தவர்.


முனைவர் வேலுப்பிள்ளை, முனைவர் தாமசு பர்ரோ, பொன்.பூலோகசிங்கம்(1964)

 இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1962-64 இல் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டு (D.Phil) பட்டம் பெற்றவர். கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை(கி.பி.800 - 920 ) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியவர். இவர்தம் கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும் இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன. பின்னாளில் இவர்தம் ஆய்வேட்டுச் செய்திகள் நூல்வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் இவர்தம் ஆராய்ச்சி வன்மையை ஏற்றுப் போற்றியது. 31.05.1996 இல் சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகமும் இவர்தம் பேரறிவுகண்டு இவருக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டியது.

 இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

 1973-74 காலகட்டத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள திராவிடமொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அப்பொழுது கேரளப் பல்கைலக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1980 இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1981-82 இல் பொதுநல நாடுகள் (காமன்வெல்த் நாடுகள்) கழகத்தில் நிதியுதவி பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஆசர் அவர்களுடன் இணைந்து பணிசெய்த பெருமைக்கு உரியவர். அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல்துறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தார். சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர்(1990-2000). இவர் தமிழ், தமிழக வரலாறு, புத்த.சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர்.


பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை,பேராசிரியர் ஆசர் அவர்களுடன்(எடின்பர்க்)

 தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைதமைபோல் இலங்கையிலும் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிய உதவும் இக் கல்வெட்டுகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக இவர் வெளியிட்டுள்ளார்(1971-72). கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவர் எழுதித் திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டுள்ள நூல் மிகச்சிறந்த மொழியியல் ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது.

 "கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும்" என்னும் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆங்கில நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.சாசனமும் தமிழும் என்ற பெயரில் 1951 இல் இவர் தமிழில் எழுதிய நூல் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்துகிறது.ஆய்வை அறிவியல் அடிப்படையில் செய்பவர் இவர் என்பதற்கு இந்த நூல் நல்ல சான்றாக விளங்குகிறது.

 சாசனமும் தமிழும் என்ற வேலுப்பிள்ளையின் நூல் கல்வெட்டுகளில் தமிழின்நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும் அரிய நூலாகும்.இந்த நூலில் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்வரி வடிவம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வழக்காறுகள், இலங்கையில் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றிய மதிப்பீடுகளை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். கல்வெட்டுகளின் துணையுடன் மொழி,இலக்கியம் பற்றி ஆராய்ந்துள்ளார். கல்வெட்டில் உள்ள சொல், சொற்றொடர், செய்திகள் அடிப்படையில் மொழியமைப்பு, இலக்கணம் பற்றிய ஆய்வு நூலாக இது உள்ளது.


ஆ.வேலுப்பிள்ளை(கல்வெட்டுக் களப்பணியில்)

 இந்த நூலின் இறுதிப்பகுதிகள் குறிப்பிடத் தகுந்த சிறப்பிற்கு உரியன. கல்வெட்டுகளின் துணைகொண்டு இலங்கையில் தமிழர்கள் பெற்றிருந்த செல்வாக்கு விளக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கல்வெட்டுகள் சிங்களம், தமிழ்,பாளி என்னும் மொழிகளில் வெட்டப்பட்டுள்ளது என்ற குறிப்பைத் தருகின்றார். இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் சிங்களக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்கிறார். தமிழகம் தவிர்ந்த பிற மாநிலங்களில் கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை அந்த அந்த மாநிலத்தார் முதன்மையளிக்காமல் மறைப்பதுபோல் இலங்கையில் சிங்களக் கல்வெட்டுகளுக்கு முதன்மையும் தமிழ்க் கல்வெட்டுகளுக்கு முதன்மையின்மையும் இருந்துள்ளதைப் பேராசிரியரின் சில குறிப்புகளில் இருந்து அறியமுடிகின்றது.

 இலங்கையில் உள்ள தமிழ்க்கல்வெட்டுகளை ஆராய்ந்த பொழுது 85 கல்வெட்டுகள் இருந்தன எனவும் அவையும் குறிப்புகள் எதுவும் இன்றிப் பாதுகாக்கப்படாமல் இருந்ததையும் குறித்துள்ளார்.இலங்கைக் கல்வெட்டுகள் படிப்பதற்காக இந்தியா வந்துள்ள செய்தியும், பல செப்பேடுகள் இலங்கையில் கிடைத்துள்ள செய்தியும் இந்த நூலில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நிலவியிருந்தாலும் குறைந்த அளவு கல்வெட்டுகளே கிடைக்கின்றன எனவும், யாழ்பாணப் பகுதியில் கல்வெட்டுகள் பொறிக்கத் தகுந்த கல் இல்லை எனவும்குறித்துள்ளார்.சிங்களக் கல்வெட்டுகள், சிங்களர் ஆட்சிமுறை பற்றி இடையிடையே விளக்கியுள்ளார். கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மொழியமைப்பைப் பற்றிய ஆய்வுக்கு இவரின் நூல்கள் பல முன்னோடியாக உள்ளன.

 தமிழ் வரலாற்றிலக்கிணம் என்ற பெயரில் வேலுப்பிள்ளை அவர்கள் உருவாக்கியுள்ள நூல் பண்டைத் தமிழ் இலக்கணத்தை இன்றைய மொழியியல் கண்கொண்டு பார்க்கும் அரிய நூல். ஆயிரம் ஆண்டு இடைவெளியை மனத்தில் கொண்டு இருபதாம் நூற்றாண்டில் வளர்ந்த மொழியியல்துறை அறிவுகொண்டு இந்த நூலை வடித்துள்ளார். முகவுரை, தமிழிற் பிறமொழி, எழுத்தியல், சொல்லியல், பெயரியல், வினையியல், இடையியல்,தொடரியல், சொற்பொருளியல் என்ற பகுப்பில் செய்திகள் உள்ளன.

  தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற வேலுப்பிள்ளையின் நூல் தமிழ் இலக்கிய வரலாற்றைப் புதிய முறையில் அறிமுகப்படுத்தும் அமைப்பில் உள்ளதால் தமிழ் உலகம் இந்த நூலுக்கு முதன்மையளிப்பது உண்டு.இந்த நூல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கருத்து முதன்மை பெற்றிருந்தது என்பதை முன்வைக்கிறது.இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டித் தருவதே இலக்கிய வரலாறு என்று நினைத்த தமிழறிஞர்களுக்குப் புதிய சிந்தனையை உண்டாக்க இந்த நூலில் பேராசிரியர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

  1999 இல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்னா) இவர் தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டிப் போற்றியுள்ளது. தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கு அரசு சார்பில் அழைக்கப்பட்டார்.உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் நூல் இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசுபெற்றுள்ளது. 1961 இல் இலங்கை ஆட்சிப்பணித் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றவர். கல்வித்துறையில் உள்ள ஈடுபாட்டால் அப்பணி ஏற்காமல் ஆய்வின் பக்கம் வந்தவர்.

  பல்கலைக்கழகங்கள் பலவற்றின் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் அயல்நாட்டுத் தேர்வாளராகப் பணிபுரிந்தவர். இவர் மேற்பார்வையில் பலர் முனைவர்பட்டம் பெற்றுள்ளனர். பல பல்கலைக்கழகங்கள் இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பெற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர். சமய நூல்கள், அகநானாறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களையும் திருமுருகாற்றுப்படை, பெரியபுராணம் உள்ளிட்ட சமயநூல்களையும் அயலகத்து மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வேலுப்பிள்ளை அவர்கள் பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படிப்பதிலும் பலநூல்கள் வரைவதிலும் தம் வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்டுள்ளார்.


(உப்சாலாவில் சிறப்புமுனைவர் பட்டம் பெற்ற பிறகு 
ஆ.வேலுப்பிள்ளை குடும்பத்தினருடன்)


நனி நன்றி:
தமிழ் ஓசை,களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 23,01.03.2009
முனைவர் பொற்கோ
முனைவர் தமிழண்ணல்
முனைவர் கி.நாச்சிமுத்து
முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)
முனைவர் விசயவேணுகோபால்,புதுச்சேரி
பிரெஞ்சு நிறுவன நூலகம்(புதுச்சேரி)

2 கருத்துகள்:

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

I was working under his guidance as secretary of Peradeniya University Tamil Society! He was great and best with students! Everyone liked him very well!!
Long live you SIR!!!
I want to write him! I need his epost!!THANKS!!!

Shan Nalliah Norway http://sarvadesatamiler.blogspot.com

Admin சொன்னது…

நல்ல பதிவு பல விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது நன்றிகள்