நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 22 நவம்பர், 2008

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்

சேர மன்னர்களை இரு பிரிவினராகக் கொள்ள இடம் உள்ளதை அறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்(பக்.8). அவை ஒரு சாரார் உதியன் மரபினர் எனவும் மற்றொரு சாரார் இரும்பொறை மரபினர் எனவும் அழைக்கப்படுவதைக் குறிப்பிடுவார். உதியன் மரபினர் தம்பெயரில் குட்டுவன் என்ற பெயரை இணைத்து வழங்குவதையும் இரும்பொறை மரபில் அம் மரபைக் காணமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரநாட்டின் அரசனாக "மாந்தை" என்னும் ஊரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவன்.இவனுக்கு இரு மனைவியர் இருந்துள்ளனர். பட்டத்து அரசியாக விளங்கியவள் வேளாவிக் கோமான் பதுமன்தேவி.இவர்களுக்குக் களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் என்ற மகனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற மகனும் இருந்தனர்.

பிறிதொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும் (பெயர் அறியமுடியவில்லை) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் மகனாகக் கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழு குட்டுவன் என்னும் மகனும் இருந்தான்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன்மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழுகுட்டுவன் என்பவனைச் செங்குட்டுவனாகச் (கண்ணகிக்குக் கல் எடுத்தவன்) சிலர் கருதுவர்.ஆனால் சிலப்பதிகாரச் செங்குட்டுவனின் தந்தை சேரலாதன் ஆவான். தாய் ஞாயிற்றுச் சோழன் எனப்படும் சோழன் நல்லுருத்திரனின் மகள் நற்சோணை ஆவாள். செங்குட்டுவனின் தாய் நற்சோணை பட்டத்தரசியாவாள்.

வெல்கெழு குட்டுவன் சேரநாட்டை ஆளும்பொழுது (கி.மு.250- கி.மு.175) பிற பகுதிகளைக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் சேரன் செங்குட்டுவன் சேரநாட்டை ஆட்சி செய்தபொழுது (கி.பி.50- கி,பி.125) பிறர் யாரும் சேரநாட்டை ஆண்டதற்கான குறிப்புகள் இல்லை.

எனவே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுக்கும் காலத்தால் பிந்தியவன் சேரலாதன் மகன் செங்குட்டுவன் (சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அரசன்) என்பதை அறிதல் வேண்டும்.

கடல் பிறக்கோட்டிய வெல்கெழுக்குட்டுவன் காலத்திலும் கடற்கொள்ளையர்கள் தொல்லை தந்துள்ளனர்.

கடற்கொள்ளைத் தொழில் செய்த கடம்பர்களின் மூலத் தாயகம் கொண்கானக்கரை எனப் பிற்கால வரலாற்று நூல்கள் சுட்டுகின்றன.ஆனால் கடம்பர்களின் பண்டையத்தளம் கடற்கரையில் இல்லாது கடலின் உள்ளே தீவில் இருந்திருக்க வேண்டும் என அறிஞர் கா.அப்பாத்துரையார் கருதுகிறார்(தென்னாட்டுப் போர்க்களங்கள்,ப.100).இத் தீவைக் கிரேக்கர்கள் "லெயூகே" அதாவது வெள்ளைத்தீவு என அழைத்தனர்.அது மங்களூரை அடுத்த தூவக்கல் என்ற தீவு என ஆய்வாளர்கள் கருதுவதையும் கா.அப்பாத்துரையார் தம் நூலில் குறிக்கின்றார்.

"லெயூகே" என்ற கிரேக்கச் சொல்லும் "தூவக்கல்" என்னும் பழந்தமிழ்ச் சொல்லும் இரண்டும்
வெள்ளைத் தீவைக் குறிப்பதாகும்.வெள்ளைத்தீவு எது?. தேடிப் பார்ப்போம்.

(ஒன்று மட்டும் விளங்குகிறது.தமிழக வரலாற்றுச் சான்றுகள் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் கேரள,கருநாடக,ஆந்திரப் பகுதிகளில் மிகுந்து கிடக்கின்றன.அவை கல்வெட்டுகள் ஊர்ப்பெயர்கள்,நம்பிக்கைகள்,இறைவழிபாடு எனப் பெருகிக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ள மலையாள, கன்னட, துளுத்தேசங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.)

கருத்துகள் இல்லை: