நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

கவிஞர் நளாயினியுடன் ஒரு சந்திப்பு...



 இணையம் வழியாக அமைந்த நட்பில் சுவிசர்லாந்தில் வாழும் நளாயினி தாமரைச்செல்வன் அவர்களின் நட்பு தனிவகையானது. இணையத்தில் உலா வரும்பொழுது தற்செயலாக நளாயினியின் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அழகிய கவிதைகள், ஓவியங்கள், ஒளிப்படங்கள் கண்டேன். அவர் பக்கம் ஒரு கலையுள்ளம் கொண்ட சிற்பியின் கைத்திறனைக் காட்டியது. அடிக்கடி மின்னஞ்சலில் உரையாடிய நட்பு வளர்பிறைபோல் வளர்ந்தது.

 அவர்கள் வாழும் சுவிசர்லாந்திலிருந்து இந்த ஆண்டு கோடைவிடுமுறையில் உலக நாடுகளைச் சுற்றிப் பார்க்க நினைத்தபொழுது இந்தியாவிற்குக் குறிப்பாகத் தமிழகம், புதுச்சேரி வரும்படி அழைப்பு விடுத்தேன். அவர்களின் குழந்தைகளுக்கு நுழைவுச்சீட்டுக் காரணங்களால் அவர்கள் இந்தியாவிற்கு நேரே வராமல் தங்கள் தாய்நாடான இலங்கை சென்று, அங்கிருந்து உரிய ஆவணங்களைப் பெற்றுத் தமிழகத்திற்கு வந்தார்கள்.

 ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும் "சிதம்பரத்திலிருந்து நளாயினி பேசுகிறேன்" என்று தொலைபேசியில் குரல் கேட்டது. தில்லை நடராசப் பெருமானை வழிபட்ட அவர்கள் அங்கிருந்து அழைத்தனர். பல நாட்களாக மின்னஞ்சலில் தொலைபேசியில் உரையாடிய இணைய நண்பர் ஒருவர் நம் இல்லத்திற்கு வர ஆர்வப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். உடனே சிதம்பரத்திலிருந்து புறப்பட்டால் இரவு 12 மணிக்குப் புதுச்சேரி வீடு வந்து சேரலாம் என்றேன்.

 அதன் பிறகு நள்ளிரவில் பெண்கள் ஆண் துணையின்றிப் பயணம் செய்வது நல்லதல்ல என நம் நாட்டு நிலை நோக்கிச் சொன்னேன். அவர்கள் கோபப்பட்டார்கள். நீங்கள் ஏன் பெண்களைப் போல் அஞ்சுகின்றீர்கள்?. நாங்கள் அனைவரும் தற்காப்புக் கலை பயின்றவர்கள். அஞ்சாதீர்கள் என எனக்கு ஊக்கம் கொடுத்துச் சொன்னார்கள். என் விருப்பப்படியே அவர்கள் பேருந்தேறி, எங்கள் இல்லம் வரும்பொழுது நள்ளிரவு பன்னிரண்டு மணி.

 நளாயினியுடன் அவர்களின் மகள் சிந்து (எட்டாம் வகுப்பு படிப்பவள்) யாதவன் (ஆறாம் வகுப்புப் படிப்பவன்) வந்திருந்தனர். இருவரும் நம் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி இருக்குமென அஞ்சி நடுங்கினர். இதற்கு நம் வீடு புதுச்சேரியின் நடுவிடத்தில் ஓரளவு தூய்மையான வீடுதான். தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் அழுக்கு, குப்பை, சாய்க்கடை, இரைச்சல், போக்குவரவு நெருக்கடி எனச் சலித்துக்கொண்டனர். அவர்கள் வாழும் சுவிசர்லாந்து நாட்டின் சிறப்பையும் நம் நாட்டில் பல நிலைகளில் உள்ள குறைகளையும் எடுத்துரைத்தனர். அவர்களிடம் உரையாடிப் பெற்றதிலிருந்து...

 நளாயினி இலங்கையிலுள்ள சிறுப்பிட்டியில் பிறந்து தொடக்கக் கல்வியைப் புத்தூர் சிறீ சோமசு கந்தாவிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றார். போராட்டச் சூழலால் கல்வியைத் தொடரமுடியாமல் இந்தியா வந்து திருச்சிராப்பள்ளி புனித சிலுவையர் மகளிர் கல்லூரியில் ஓர் ஆண்டு கல்வி பயின்றார். பின்னர் நாட்டில் அமைதி திரும்பும் என நினைத்து தாயகம் திரும்பினார். மீண்டும் சண்டை தொடரவே 1991 இல் சுவிசர்லாந்து நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார். இந்தியஅமைதிப்படை அமைதிப்பெயரில் பெண்களை, ஈழத் தமிழர்களின் உடைமைகளைச் சூறையாடிய காலம் அது.

 பதினாறு ஆண்டுகளாகச் சுவிசில் வாழ்ந்து வரும் இவர் நங்கூரம், உயிர்த்தீ என்னும் இரு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். பூக்கள் பேசினால், உயிர்கொண்டு திளைத்தல் என்னும் இருநூல்கள் விரைவில் வெளியிட எண்ணியுள்ளார். இவரின் தந்தையார் பொன். இளையதம்பி அவர்கள் இசையறிஞர். ஒவ்வொரு ஆண்டும் இவர் வாழ்ந்துவரும் தென்மார்க்கிலிருந்து தமிழகம் வந்து இசைவிழாக்களைக் கண்டு களிக்கும் அளவுக்கு இசையுள்ளம் கொண்டவர். தாயார் இ.அங்கயற்கண்ணி அவர்கள் ஆசிரியையாக இருந்து இளைப்பாறியவர்.

 நளாயினி பதினேழு, பதினெட்டு அகவையில் கவிதை எழுதத் தொடங்கி, இன்று இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் எழுதும் ஆற்றல் பெற்றவராக விளங்குகிறார். பெற்றோரின் ஊக்குவிப்பாலும் கணவர் தாமரைச்செல்வன் ஊக்குவிப்பாலும் இன்று பல இதழ்களில் எழுதும் வாய்ப்புப் பெற்றவர். புலம்பெயர் வாழ்க்கையைப் பதிவு செய்யும் பாவலராக விளங்குகிறர். அயல்நாட்டில் வாழ்ந்த தனிமை வாழ்க்கையும், புலம்பெயரக் காரணமான தாய்நாட்டுச் சூழலும் இவரின் படைப்புகளில் காணக் கிடைக்கின்றன. காதலை நளினமாகப் பாடும் வல்லமை வாய்ந்தவர்.

  புலம்பெயர் தமிழர்கள் வானொலி நடத்திய சூழலில் வானொலிக்காக இவர் மிகுதியாகக் கவிதைகளை எழுதியுள்ளார். பின்னர் யாழ், வார்ப்பு, அப்பால், சூரியன், பதிவுகள், ஊடறு, நிலாமுற்றம், திண்ணை, திசைகள், தமிழமுதம், தமிழ் மன்றம் உள்ளிட்ட இணையத்தளங்களில் இவரின் படைப்புகள் வந்துள்ளன.அச்சு இதழ்களில் சக்தி, ஈழநாடு, வடலி, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், அவள் விகடன், பூவரசு முதலியவற்றில் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் நளாயினினுக்கு அணுக்கமான நண்பர்களாக இருந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

 எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும், புலம்பெயர் வாழ்க்கையில் உள்ள இன்னல்களும், பண்பாட்டு நிலைப்படுத்தத்தில் தடுமாற வேண்டிய அயல்தேச வாழ்க்கையும் பற்றி பல செய்திகளை உரையாடினோம்.

சுவிசர்லாந்தில் கல்வி முறை பற்றி...

 சுவிசர்லாந்து நாட்டில் கல்விமுறைக்கும் நம் கல்விமுறைக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு.இங்கு மழலை வகுப்பு, தொடக்கக் கல்வி, மேல்நிலைக்கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, தொழில்கல்வி எனக் கல்வித்தரம் அமைகின்றன. மேல்நிலைக்கல்வி கற்றவர்கள் பயிற்சி பெற்று பணிக்குச் செல்லலாம். அல்லது பல்கலைக்கழகப் படிப்பைத் தொடரலாம். இங்கு ஒன்பது பல்கலைக்கழகங்கள் உள்ளன. தொழில்நுட்பப் பல்கலைகழகம் ஒன்று உள்ளது. கல்வி பெரும்பாலும் அரசு கல்விதான். தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம் என்பதால் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனர்.

 தொடக்க வகுப்பு மாணவர்கள் ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் படித்தால் போதும்.எட்டாம் வகுப்பு படிப்பவர் ஒன்றரை மணிநேரம் ஒரு நாளைக்குப் படித்தால் போதும். ஒன்று முதல் ஆறு வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குக் காலையில் 8.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். 11.30 வரை நடக்கும். பிறகு 1.30 முதல் 4.30 வரை வகுப்புகள் நடக்கும். அதுபோல் மழலை வகுப்புகள் காலை 9 மணிக்குத் தொடங்கிப் பதினொரு மணிக்கு முடியும். 11-2 மணிவரை இடைவேளை. 2-3 படிப்பு. பிறகு வெளியேற்றிவிடுவார்கள்.

 சுவிசர்லாந்தில் பிரெஞ்சு மொழியும், டாயிட்ச் (duetcsch) என்னும் செருமன் மொழியும் பயன்பாட்டில் உள்ளன. டாயிட்ச் (duetcsch) என்னும் செருமன் மொழி பேசுவோரும், பிரெஞ்சு மொழி பேசுவோரும் அதிகமாக உள்ளனர். வகுப்பறைகளில், வெளியிடங்களில் தூய்மை பேணுவதைக் கற்பிக்கின்றனர். குழந்தைப் பருவத்திலேயே கீழே விழும் குப்பைகளைப் பொறுக்க பயிற்சியளிக்கின்றனர். மகிழ்ச்சியாக கற்பிப்பதே அங்கு நடைமுறையில் உள்ளது. ஒருவருடன் ஒருவர் இணக்கமாக வாழ்வதே அங்கு வழக்கமாக உள்ளது. உலகின் பல நிறுவனங்கள் அங்கு உள்ளன. ஐ.நா.அவை, உலக நலவாழ்வு நிறுவனம், வணிக அவை உள்ளிட்டவை இதில் அடங்கும். நகரம். சிற்றூர், வயல்வெளி என எங்கும் தூய்மையைக் காணமுடியும்.

 தாய் கருவுற்ற நாள்முதல் குழந்தை வளர்ப்பு,பராமரிப்பு பற்றிய கலந்தாய்வு தொடங்கிவிடுகிறது. குழந்தைகளை அடிப்பது என்பது அங்கு இல்லை. குழந்தைகளைக் கவனிக்காமல் விளையாட்டாக விட்டுவிட்டால் இரண்டு முறை இத்தவறு செய்தவர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்தெடுத்து அரசு பொறுப்பில் அக்குழந்தைகள் வளரும். குழந்தைகள் மேல் கவனம் இல்லாத பெற்றோர்கள் இக்குழந்தைகளை எவ்வாறு பொறுப்புள்ள குடிமக்களாக வளர்க்கப் போகிறார்கள் என்பது அரசின் கருத்தாகுமாம்.

மருத்துவ வசதி...

 சுவிசர்லாந்தைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்வது கட்டாயமாகுமாம். அம்மக்கள் மட்டுமன்றி, அந்நாட்டுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகள் உட்பட அனைவரும் மருத்துவக் காப்பீடு செய்துகொள்ள வேண்டுமாம். அவ்வாறு செய்து கொள்வது நோயின் காரணமாக ஏற்படும் செலவிலிருந்து விடுபட முடியுமாம். மருத்துவக் காப்பீடு ஒருவருக்கு மாதம் 860 பிராங்கு கட்ட வேண்டுமாம்.

 மருத்துவக் காப்பீடு செய்துகொண்டவர்கள் தொலை தூரத்தில் விபத்துக்கு உள்ளானால் உலங்கு ஊர்தி, வானூர்தி பயணம் கூட அனுமதிக்கப்படுமாம். வானூர்தியில் சென்று விபத்துக்கு உள்ளானவர்களை அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதிப்பார்களாம். நம் செல்வந்தர்கள் கள்ளப் பணத்தைப் பதுக்கும் இடமாகத்தான் நமக்குச் சுவிசர்லாந்தை அறிமுகம் செய்துள்ளனர். ஆனால் நளாயினியின் உரையாடலில் உலகத் தரத்தில் வாழ விரும்புபவர்களுக்கு உரிய இடம் என்பது புலனாகின்றது.

 அரசு எந்தச் சலுகைகளையும் மக்களுக்கு வழங்குவதில்லையாம். இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்திற்கும் காசுகள்தான். குப்பையை அள்ள, சாய்க்கடையைப் பயன்படுத்த என அனைத்திற்கும் காசு கட்ட வேண்டுமாம். கோழிக்கறி அறுக்க, ஆட்டுக்கறி வெட்ட என எதற்கானாலும் மூன்று மாதம் சான்றிதழ் படிப்பு முடித்தால்தான் அங்கு பணிபுரியமுடியும். தூய்மை பேணவும், நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் இவ்வழி என்கின்றனர். தலைக்குப் பத்து இலட்சம் அளவில் நம்மூர் பணத்தில் ஊதியம் பெற்றாலும் அதற்குத் தகச் செலவும் அதிகம் என்கிறார் நளாயினி.

 அனைவரும் கட்டாயம் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் நாற்பது வயதுக்குப்பிறகு அவர்களுக்கு முதுகுவலி வருவது உண்டாம். அவ்வாறு பாதிக்கப்படவர்கள் மருத்துவரின் பரிந்துரைக்குப் பிறகு நோய் உறுதிப்பட்டால் 80 விழுக்காடு சம்பளம் கிடைக்குமாம்.

 அங்குள்ள எழுத்தாளர்களுள் கல்லாறு சதீஷ், இரவி குறிப்பிடத்தக்கவர்கள். வாசகப் பரப்பு குறைவு என்பதால் அவர்கள் இணையம் வழியாகத் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. மேலும் அச்சு வடிவிலும் படைப்புகள் வெளியாகின்றன.

 ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுள் சுவிசர்லாந்தும் ஒன்றாகும். அங்கு பிறந்து வளர்ந்த சிறுவர்கள் தங்கள் தாய்மொழி, பண்பாடு இவற்றைக் கைக்கொள்ள தொல்லைப்படுகின்றனர். பன்மொழிச் சூழலில் வாழவும், பல பண்பாட்டுச் சூழலிலும் வாழவும் நேர்வதால் தங்கள் வேர்களை நினைவு கூரமுடியாமல் தவிக்கின்றனர்.

 திருமணம், குடும்ப உறவுகளில் சிக்கல்கள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. அடுத்த தலைமுறை மக்கள் தமிழீழத்திற்கு திரும்பி வருவார்களா? அல்லது பன்னாட்டுச் சூழலில் கலந்து மொரீசியசு தமிழர்கள், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள், பிஜித் தீவுத் தமிழர்கள் போலத் தாய்நாட்டு, தமிழ்நாட்டு ஏக்கம் கொண்ட புதிய மரபினராகத் தமிழர் அடையாளத்துடன் விளங்குவார்களா?. காலம்தான் விடைசொல்லவேண்டும்.

நனி நன்றி : 
தமிழ் ஓசை-களஞ்சியம், தமிழ் நாளிதழ், சென்னை, தமிழ்நாடு.(31.08.2008)

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

இந்தி எதிர்ப்புப் போரில் வீரச்சாவடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர் இராசேந்திரன் சிலை...


மொழிப்போர் மறவர்
இராசேந்திரன்.தோற்றம் 16.07.1947 மறைவு 27.01.1965
உருவச்சிலை, அண்ணாமலைப் பல்கலைக்கழக
முகப்புவாயில் எதிரில்


இராசேந்திரனின் உருவச்சிலை (வேறொரு கோணம்)


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் உணர்வாளர்கள் பலரைத் தந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும்.1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு தம் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.இப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் முதலாண்டு பயின்ற சிவகங்கையைச் சேர்ந்த இராசேந்திரன் என்ற மாணவர் காவல்துறையினரின் துமுக்கிக் குண்டுக்கு மார்புகாட்டி வீரச்சாவடைந்தார். இந்நிகழ்வு மிகப்பெரிய வரலாறாகத் தமிழக மொழிவரலாற்றில் பதிவாகியது.

இவர்தம் படம் பற்றி அண்ணன் அறிவுமதி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

"நல்லவர்கள் முகங்கள் தொலைந்துபோகின்றன... இப்பொழுது தெரிகிறது. பாளையங்கோட்டைக்கும் செயின்ட்சார்ச் கோட்டைக்கும் எவ்வளவு தூரம் என்று" என அக்கவிதை வளரும்.

அன்று முதல் இராசேந்தினின் முகம் எவ்வாறு இருக்கும் எனப் பல நாள்களாக நினைத்திருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்லும் பொழுதெல்லாம் அந்த ஈகச் சிலையருகே நின்று பார்த்து அக வணக்கம் செலுத்திவருவது என் வழக்கம். இன்று அதனைப் படம்பிடித்துவந்தேன்.

இணையத்தில் இட்டால் அனைவருக்கும் பயன்படும் என நினைத்து பதிவிட்டுள்ளேன்.

இப் படத்தை எடுத்தாள விரும்புவோர் என் பக்கத்திற்கு ஓர் இணைப்பு வழங்கியும் என் பெயர் சுட்டியும் எடுத்து ஆளளாம்.

16.07.1947 இல் பிறந்தவர் இராசேந்திரன். 27.01.1965 இல் குண்டடிபட்டு இறந்தார்.
இவருக்குச் சிலை வைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இடம் அளிக்கவில்லை. அப்பொழுதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அரசுக்கு உரிய நெடுஞ்சாலைத்துறை இடத்தை வழங்கியதாக அறிய முடிகிறது. அச் சிலையைக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது 16.03.1969 இல் திறந்துவைத்தார். தமிழ்ப்பற்றாளர் எசு.டி.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கியமை கல்வெட்டால் உறுதிப்படுகிறது.

இந்தி எதிர்ப்பு வல்லாண்மைக் குழுவில் திரு.பக்கிரிசாமி, கனிவண்ணன், மா.நடராசன் (புதியபார்வை ஆசிரியர்), புதுவை வி. முத்து (பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்), திரு.ஆறுமுகம், திரு.துரைராசு உள்ளிட்ட உணர்வாளர்கள் இருந்து செயல்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் பின்பும் இணைப்பேன்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2008

மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா...


பேராசிரியர் தமிழண்ணல்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் நான்காம் மாடியில்(நியூ காலேஜ் கவுசு)- நடைபெறுகிறது.மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் இவைகளாகும்.

மெய்யப்பன் பதிப்பகத்தைச் சேர்ந்த ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் இரா.கற்பககுமாரவேல் அவர்கள் தலைமை தாங்கி நூலினை வெளியிடுகிறார்கள்.திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் அவர்கள் சிறப்புரையாற்றவும், தவத்திரு நாச்சியப்ப ஞானதேசிக அடிகளார் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் முனைவர் இரா.மோகன் அவர்களும் நூல்கள் குறித்த திறனாய்வு வழங்க உள்ளனர். பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார்.பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.மதுரையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
வெளியிடப்பட உள்ள நூல்கள்

1.தமிழ் அறிவோம்! தமிழராய் வாழ்வோம்!
2.ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு
3.தமிழ்வழிக் கல்விச் சிந்தனைகள்
4.எழுச்சி தரும் எண்ணச்சிறகுகள்
5.தொல்காப்பிய இலக்கிய இயல்
6.தேடவைக்கும் திருவள்ளுவர்
7.தமிழ் ஒரு "கட்டமைப்புள்ள" மொழி
8.செம்மொழிப் படைப்பியல்
9.செவ்விலக்கியச் சிந்தனைகள்
10.ஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச்சுடர்கள்
11.வள்ளுவர் நெறியில் வாழ்வது எப்போது?
12.இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழில் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம்...


அரங்க மேடை


 22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது. மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர். கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன். அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது. அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது. அதில் ஏறிக்கொண்டேன்.

 கையில் கைப்பையும், மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன. இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும்பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள். பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு முன்பாகக் காத்துள்ளதைத் தெரிவிக்க மகிழ்ந்தேன். கால் மணி நேரத்ததில் அன்பர் முத்துராமன் இருந்த இடம் சென்று சேர்ந்தேன்.இரு மாணவர்களும் காத்திருந்தனர்.

அங்குள்ள உணவகத்தில் உணவை முடித்தோம். காலையில் சிற்றுண்டி உண்டதும், தொடர்ந்து செலவுக் களைப்பு, பேச்சு, பரபரப்பு என மிகவும் சோர்வாக இருந்தேன். உணவை முடித்துக் கொண்டு காமராசர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியை இரவு பத்து மணியளவில் அடைந்தேன்.

அறிஞர் தமிழண்ணல் ஐயாவிற்குச் செல்பேசியில் பேசி, நாளைய நிகழ்ச்சி பற்றி சொன்னேன். அண்ணல் அவர்களிடம் பல்லாண்டுகளாக ஒரு விருப்பத்தை முன்வைத்து அடிக்கடி நினைவூட்டி, எழுதியும், பேசியும் வைத்திருந்த ஒரு விருப்பம் நிறைவேற உள்ளதை அண்ணல் அவர்கள் சொன்னதும் அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். நான் கேட்டிருந்த ஒரு பொருளை நாளை வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் நாளை வந்து பெற்றுக்கொள்வதாக உறுதிகூறி, இரவு 11.30 மணியளவில் ஓய்வெடுத்துக் கொண்டேன்.

காலை 7.30 மணிக்கு அன்பர் முத்துராமன் அவர்கள் அறைக்கு வந்துசேர்ந்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கல்லூரியை ஒருமுறை சுற்றிப்பார்க்க நினைத்து என் ஒளிப்படக் கருவியுடன் சென்று பல படங்களை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து காலைக் கடமைகள் முடித்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமானேன்.

நாடார் இன மக்களால் அவர்களின் பொருள் உதவியால் இயங்கக்கூடிய அரசு உதவிபெறும் தன்னாட்சிக்கல்லூரி வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆகும்.இக்கல்லூரி ஏறத்தாழ நாற்பது (1965) ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு உயர் படிப்புகளை வழங்கும் நல்ல நிறுவனம்.நல்ல கட்டட வசதிகள். ஆடுகளங்கள் உள்ளன. போக்குவரவு வசதிஉடையது. நல்ல இயற்கைச்சூழல்.கல்லூரி வனப்பை எண்ணும்பொழுது மகிழ்வு தருகிறது.

காலை 9 மணி அளவில் தனசேகரபாண்டியன் அரங்கில் (விழா நடைபெறும் இடம்) உள்ள இணைய வசதிகள், கணிப்பொறி வசதிகள், இருக்கை அமைவுகள் யாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன். ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருந்தன. கல்லூரி நூலகத் துறையில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் என்பதால் விடுமுறை நாள் எனினும் மாணவர் கள் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர்.

பின்னர்க் கல்லூரி முதல்வர் அறைக்கு என்னை அழைத்துச்சென்று அறிமுகம் செய்தனர். கல்லூரியின் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்துவரும் பொறுப்பாளர்களைக் கண்டு மகிழ்ந்தேன். கல்லூரியின் சிறப்பை உரையாடித் தெரிந்துகொண்டேன். என் தமிழ் இணைய ஈடுபாட்டைக் கண்டு அனைவரும் பாராட்டினர். அனைவரும் விழா அரங்கை அடைந்த பொழுது மாணவத் திரள் மிகுதியாக இருந்தது.500 மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

காலை சரியாக 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

கல்லூரிப்பொருளாளர் திரு மணிமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்.  திரு குணசேகரன் அவர்கள் வரவேற்புரை. கல்லூரி முதல்வர் மகாத்மன்ராவ் அவர்கள் மிகச் சிறப்பாக என்னை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார்.

முற்பகல் 11 மணிக்குத் தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் என் உரை தொடங்கியது. பகல் ஒரு மணிவரை நீண்ட காட்சி விளக்க உரை மாணவர்களுக்குச் சலிப்பின்றி இருந்ததை உணர்ந்தேன். என் பேச்சின் விவரம் வருமாறு:

(நேற்றே திருச்சியில், மேலைச்சிவபுரியில் உரையாற்றிய செய்திகள் சில இடம்பெற்றாலும் அடிப்படைச் செய்திகள் ஒன்று என்பதால் மீண்டும் சிலவற்றை நினைவுகூர்தல் தேவையாகிறது.)

உலகில் கணிப்பொறி தோன்றிய விதம், தமிழ் எழுத்துகள் உள்ளிடப்பெற்று அச்சான கணிப்பொறிவழி உருவான முதல் நூல் பற்றிய செய்தி, தமிழ் எழுத்துகள் தொடக்கத்தில் ஏற்படுத்திய சிக்கல், தரப்படுத்தப்பட்ட எழுத்துகள், பல்வேறு தமிழ் மென்பொருள்கள், தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கு உழைத்தவர்கள், சீனர்களின் மொழிப்பற்று, தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை, தமிழ் இணைய மாநாடுகள், இதற்காக உழைத்த அறிஞர் சிங்கப்பூர் கோவிந்த சாமி அவர்களின் பங்களிப்பு, முரசு முத்தெழிலன், வா.செ.குழந்தைசாமி, முனைவர் ஆனந்த கிருட்டிணன், முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் ஈடுபாடு,பணிகள் பற்றிப் பலபட எடுத்துரைத்தேன்.

தமிழக அரசு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் மிகபெரிய தமிழ் இணைய மாநாடு நடத்தியதையும், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவான விதத்தையும் எடுத்துரைத்தேன். சேந்தமங்கலம் முகுந்தராசுவின் எ.கலப்பை, காசியின் தமிழ்மணம் பற்றி காட்சி விளக்கத்துடன் என் பேச்சு தொடர்ந்தது.

தமிழில் வெளிவரும் மின்னிதழ்களை அறிமுகம் செய்தேன். நாளிதழ், வார இதழ், மாத இதழ் எனப் பல பிரிவுகளாகப் பிரித்துகொண்டு விளக்கினேன். தினமலர் நாளிதழ் உலக அளவில் தமிழர்களால் படிக்கப்படும் இதழாகவும், பல்வேறு வசதிகளை இவ்விதழ் தருவதையும் விரிவாக எடுத்துரைத்தேன்.(இதனைத் தினமலர் மதுரைப் பதிப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டது.24.08.08).

அதுபோல் தினகரன், மாலைமலர், தமிழ்முரசு, தினமணி, திண்ணை, தமிழ்க்காவல், தெளிதமிழ், தமிழம். நெட்,தட்சுதமிழ், வணக்கம் மலேசியா, லங்காசிறீ, புதினம், பதிவுகள், தினக்குரல், கீற்று உள்ளிட்ட பல இதழ்களைப் பற்றி விளக்கிப் பேசினேன்.காட்சி வழியாகவும் விளக்கினேன். அவையினர் இவ்வளவு இதழ்களையும் கண்டு வியப்பும் மலைப்பும் அடைந்தனர்.

பிறகு தமிழ்மரபு அறக்கட்டளையின் தளத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மரபுச் செல்வங்களை விளக்கினேன். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், படிப்புகள், ஓலைச்சுவடிகள், பண்பாட்டுக்கலைகள், திருக்கோயில் படங்கள் உள்ள அதன் சிறப்புகளை எடுத்துரைத்தேன்.

அதுபோல் மதுரைத்திட்டம், சென்னை நூலகம், காந்தளகம், விருபா, விக்கிபீடியா பற்றியெல்லாம் காட்சி வழியாகவும் உரை வழியாகவும் பல தகவல்களை அவைக்கு வழங்கினேன். ஒரு மணிக்கு உணவு இடைவேளைக்காக அனைவரும் பிரிந்தோம். இதற்குள் இச்செய்தி ஊடகங்கள் வழியாக மதுரை மக்களுக்கும் உலகிற்கும் தெரியவந்தது. தட்சு தமிழ் இணைய இதழ் இச்செய்தியை உடன் வெளியிட்டு உலகிற்கு முதலில் தந்தது.

பிற்பகல் உணவுக்குப்பிறகு 2,30 மணிக்கு மீண்டும் பேசத் தொடங்கினேன். தமிழ் விசைப் பலகை 99 பற்றியும் அதில் உள்ள சிறப்புகள், அமைப்புகள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் செய்து காட்டியபொழுது அனைவரும் மகிழ்ந்தனர்.

அதன் பிறகு வலைப்பூக்கள் உருவாக்கும் முறை பற்றி விளக்கிக் காட்டப்பட்டது. தமிழில் மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, குழுவாக இயங்குவது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினேன். மாலை 4.30 மணிக்கு என் காட்சி விளக்க உரை நிறைவுக்கு வந்தது. அனைவரும் உள்ளம் நிறைந்த அன்போடு விடைதந்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நூலகத் துறையினர்க்கு அளவுகடந்த மகிழ்ச்சி. கருத்தரங்கம் வெற்றியுடன் நடந்ததால் கல்லூரி முதல்வர் நூலகர் அவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமன், கவிதா தேவி ஆகியோரையும் என் கண்முன் பாராட்டினார்.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அறிஞர் தமிழண்ணல் இல்லத்திற்கு வந்து உரையாடினேன். அவர் தமிழுக்குப் பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய செல்வத் தொகுதியை என் பல ஆண்டுகால விருப்பத்தை நிறைவேற்றும்படியாக வழங்கினார். அண்ணல் அவர்களைச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.

28.08.2008 இல் வெளியிட உள்ள பத்து நூல்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றைப் பெற்றுக்கொண்ட மகிழ்விலும் அண்ணலைக் கண்ட மகிழ்விலும் மூடுந்தில் ஏறிச் சிறிது தூரம் வந்த பிறகு உடன் அண்ணல் செல்பேசியில் அழைத்தார். முதன்மையான அந்தத் தமிழ்ச் செல்வத்தைப் பேச்சுவாக்கில் அங்கே மிசைமேல் வைத்து வந்தது அப்பொழுதுதான் அண்ணல் அழைப்பிற்குப் பிறகு நினைவுக்கு வந்தது. மீண்டும் அண்ணல் இல்லமான ஏரகத்திற்குத் திரும்பினேன்...


முனைவர் மகாத்மன்ராவ்(முதல்வர்)


திரு.மணிமாறன்,பொருளாளர்


கவிதாதேவி(ஒருங்கிணைப்பாளர்)


திரு.முத்துராமன்(ஒருங்கிணைப்பாளர்)


பார்வையாளர்கள்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் பற்றிய என் உரை...


கல்லூரி முகப்பு

22.08.2008 இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து பேருந்து புறப்படும்பொழுது மணி பகல் 12. பேருந்தைவிட என் மனம் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியாக இருந்தபொழுது 1994-95 அளவில் ஒரு முறை அக்கல்லூரியில் அறிஞர் தமிழண்ணல் முன்னிலையில் தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புறச் சாயல்கள் என்னும் பொருளில் பேச பெருந்திரளான மாணவர்கள் நடுவே அறிஞர் பழ.முத்தப்பனார் அவர்கள் என்னை அழைத்துச் சென்ற காட்சி என் மனக்கண்ணில் விரிந்தது.

அப்பொழுது நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன்.என் தமிழார்வம் கண்ட பேராசிரியர் தா.மணி ஐயா அவர்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி.அதே பேராசிரியர் தா.மணி ஐயா அவர்கள் அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்ற நாள் முதல் மீண்டும் ஒருமுறை என்னை அங்குப் பேச வருமாறு அழைப்பு விடுத்தவண்ணம் இருந்தார்.

பேராசிரியர் தா.மணி ஐயா அவர்கள் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். உணர்வாளர். மாணவர்கள் உள்ளம் உவக்கும்படியாக வகுப்புகளை ஆக்கப்பூர்வமாக நடத்தும் இயல்பினர். அவரின் அன்பு அழைப்பின் வண்ணம் அங்கு இணையம் சார்ந்த பேச்சு நிகழும்படி திட்டமிட்டிருந்தோம்.

மேலைச்சிவபுரியை அடைவதற்குப் பேருந்து வதிகள் குறைவு. குறிப்பிட்ட பேருந்துகளே செல்லும். சிலமணி நேர இடைவெளியில் செல்லும்படியான சிற்றூர் சார்ந்த சூழல். திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை அடைந்தேன். புதுக்கோட்டையில் பேருந்து ஏறியபொழுதே தெரிந்துவிட்டது.

இன்று சிறிது காலம் தாழ்ந்தே செல்ல நேரும் என்று உணர்ந்தேன். நான் ஏறிய வண்டி தனியார் வண்டி. காரையூர் உள்ளிட்ட ஊர்களைச் சுற்றிக்கொண்டே அப்பேருந்து செல்லுமாம். சற்றொப்ப 40 அயிரமாத்திரியை (கி.மீ) 2 மணி நேரத்தில் அப்பேருந்து கடந்தது. ஒரு மணிநேரத்தில் செல்லவேண்டிய தூரத்தை 2 மணிநேரத்தில் கடந்ததால் விழாவிற்கு உரிய நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. காலம் தாழ்ந்ததும் மாணவர்கள் நிகழ்ச்சி நடைபெறவில்லை எனக் கலைந்து சென்றுகொண்டிருந்தனர்.

என்னை அழைத்த பேராசிரியர் தா.மணி ஐயா உள்ளிட்டவர்கள் பெருங்குழப்பத்தில் இருந்தனர். பொன்னமராவதியில் இறங்கி, தானி ஒன்று பிடித்துகொண்டு கல்லூரி வாசலை அடைந்த பொழுது மணி மூன்றிருக்கும்.

அதன் பிறகு மாணவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்ற வகையில் முனைவர் பட்டம், இளம் முனைவர் பட்டம், முதுகலை மாணவர்கள், பேராசிரியர்கள் என ஐம்பதின்மர் நடுவே என் உரைஅமைந்தது.

பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கி 4.25 வரை என் உரை 'பவர் பாயிண்டு' என்னும் காட்சி விளக்கத்துடன் இருந்தது. தமிழ் மாணவர்கள் ஆங்கிலம் தெரியவில்லையே எனக் கலங்கவேண்டாம். கணிப்பொறி, இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவு தேவையில்லை. அனைத்து மென்பொருள்களும் தமிழில் வந்துவிட்டன. தமிழ் ஆய்வாளர்கள், மாணவர்கள் கணிப்பொறியை, இணையத்தைப் பயன்படுத்தி அறிவைச் செழுமையடைய வைக்கமுடியும். அதற்குரிய பல வசதிகள் இணையத்தில் உள்ளன.தமிழில் மின்னிதழ்கள் வெளி வருகின்றன.

பல்வேறு தன்னார்வலர்கள் தமிழ் நூல்களை மின்னூல்களாக்கியுள்ளனர். தமிழ்மரபு அறக்கட்டளை, மதுரைத்திட்டம், தமிழ்மணம், விருபா, திரட்டிகள் பற்றி எடுத்துரைத்தேன். மாணவர்களுக்கு நான் எடுத்துரைத்த செய்திகள் முற்றிலும் புதியனவாகத் தெரிந்தன. பல்வேறு இணையத்தள முகவரிகளை அவர்கள் ஆர்வமுடன் குறித்து வைத்துக்கொண்டதைப் பார்த்தால் சிலரேனும் தமிழ்இணையம் பயன்படுத்த முன்வருவார்கள் என உணர்ந்துகொண்டேன்

மின்னஞ்சல், உரையாடல் வசதி,தமிழ் விக்கிபீடியா பற்றி எடுத்துரைத்துச் சுருக்கமாக என் உரையை அமைத்துக்கொண்டேன். பேராசிரியர் முனைவர் தி.பூங்குன்றன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தி அவையினருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை முனைவர் தெ.திருஞானமூர்த்தி, முனைவர் போ.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர். மாலை ஆறு மணியளவில் பேருந்தேறி, சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி வழியாக மதுரையை அடையும்பொழுது இரவு ஒன்பது மணியிருக்கும். ஒன்பது மணிக்குதான் நினைவுக்கு வந்தது. பிற்பகல் உணவுகூட உண்ணாமல் பேருந்துப் பயணம் செய்ததும், உரையாற்றியமையும்.

என் வருகைக்காகப் பேராசிரியர் முத்துராமன் அவர்கள் (வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நூலகப் பொறுப்பாளர்) மூடுந்து வைத்துக்கொண்டு மாணவர்களுடன் காத்திருந்தார். அவர் அன்பில் அடுத்த நாள் நனைந்தேன் ...


முனைவர் தி.பூங்குன்றன்


மேடையில் பேராசிரியர்கள்


பார்வையாளர்கள்

திருச்சிராப்பள்ளி, சென்னி கல்வியியல் கல்லூரியில் "தமிழ் இணையத்தைப் பயன்படுத்துவது எப்படி?" கருத்தரங்கம்


சென்னி கல்வியியல் கல்லூரி வளாகம்


பார்வையாளர்களின் ஒரு பகுதி


பார்வையாளர்கள் ஒருபகுதி


திரு.மு.பொன்னிளங்கோ(செயலாளர்)



பேராசிரியர் அமுதா(ஒருங்கிணைப்பாளர்)


முனைவர் கடவூர் மணிமாறன்(பார்வையாளர்)

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள சென்னி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்த ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் நான் வருகை தந்து காட்சி விளக்கங்களுடன் உரையாற்றும்படியும் எனக்கு அந்நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது.

பேராசிரியர் அமுதா அவர்களின் ஏற்பாட்டில் அந்த அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ள எங்கள் வீட்டிற்கு வருகை தந்தும் நேரில் அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று 21.08.2008 இரவு திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு விடுதியில் தங்கவைக்கப்பட்டேன். 22.08.2008 காலைக் கடன்களை முடித்து 8.30 மணிக்குக் கல்லூரிக்கு அழைத்துச்செல்ல மகிழ்வுந்து ஏற்பாடாகி இருந்தது.

அதனிடையே பேராசிரியர் தமிழகன் ஐயா அவர்கள் என்னைக் காண வந்திருந்தார். அவருடன் உரையாடி அவருக்கு விடைகொடுத்தேன். பிறகு குளித்தலைப் பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் வருகை தந்து எங்களுடன் கல்லூரிக்கு வர அணியமானார். பேராசிரியர் அமுதா, கல்லூரிச் செயலாளர் திரு.பொன்னிளங்கோ ஆகியோரும் ஆர்வமுடன் வந்து இணைந்துகொண்டனர்.

அனைவரும் 9.00 மணியளவில் கல்லூரியை அடைந்தோம். கல்லூரிக் கருத்தரங்க அறை பணிநிறைவு நிலையில் இருந்தது. மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும் அரங்கை வடிவப்படுத்தி, அமர்ந்தனர்.

22.08.2008 காலை 9.30 மணிக்குத் தொடங்கிய என் உரை முற்பகல் 11.30 மணிக்கு நிறைவடைந்தது. என் உரையில் கணிப்பொறி வளர்ச்சி, கணிப்பொறியில் தமிழ் எழுத்துகள் உள்ளீடான உலகு தழுவிய முயற்சி, இணையத்தில் தமிழ் இடம்பெற சிங்கப்பூர் கோவிந்தசாமி அவர்களின் முயற்சி, முரசு. முத்தெழிலன், சுசாதா, பேராசிரியர் ஆனந்தகிருட்டிணன், முனைவர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்ட அறிஞர்களின் பங்களிப்பினை நினைவூகூர்ந்தேன்.


முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் முயற்சியால் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றம்பெற்ற வரலாறு, உலக அளவில் நடைபெற்ற தமிழ் இணையமாநாடுகள், தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை, தமிழ் ஒருங்கு குறி பற்றிப் பேசினேன்.

தமிழ் இணையத்திற்கு அரும்பாடுபட்ட சேந்தமங்கலம் முகுந்தராசு, கோவை காசி ஆறுமுகம், தமிழ்மணத்தை இன்று நிருவகிக்கும் நா.கணேசன், முனைவர் சங்கரபாண்டி, தமிழ் சசி உள்ளிட்ட அன்பர்களின் முயற்சியை நினைவுகூர்ந்தேன்.

தமிழில் வெளிவரும் மின்னிதழ்கள், தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடும் இணையதளங்களைப் படக்காட்சியாக விளக்கினேன். இணையத்திலிருந்து பல பக்கங்களைத் தரவிறக்கி அவையினர் உள்ளம் நிறைவடையும்படி உரையாற்றினேன். அந்த நிகழ்ச்சியை வாழ்த்தி, செயலாளர் பொன்னிளங்கோ அவர்களும் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்களும் உரையாற்றினர்.

கல்வியியல் படிக்கும் 200 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இவர்கள் நல்ல மாணவர்களை உருவாக்கும் ஆசிரியப்பயிற்சி பெறும் மாணவர்கள் என்பதால் என் பேச்சு தமிழ் இணையத் துறைக்குப் பலரை இழுக்கும் என நம்புகிறேன்.

பிற்பகல் வேறொரு ஊரில் தமிழ் இணையதள வளர்ச்சி பற்றி உரையாற்ற ஏற்பாடாகி இருந்ததால் அனைவரிடமும் விரைந்து விடைபெற்றுக்கொண்டேன். திருச்சிராப்பள்ளியில் உள்ள நடுவண் பேருந்து நிலையம் வந்து புதுக்கோட்டை செல்லும் விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்...

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்ற இணையத்தளக் கருத்தரங்கச் செய்திகள்...

தமிழ் இணையத்தளம் பற்றிய கருத்தரங்கு நேற்று மதுரையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கு பற்றியசெய்திகளை உள்ளூர் தொலைக்காட்சிகளும், புகழ்பெற்ற ஏடுகளும் வெளியிட்டன. தட்சுதமிழ், தினமலர் ஏட்டுச் செய்திகளை இணைத்துள்ளேன். பிற பின்பு விரிவாக வழங்குவேன்.


தட்சு தமிழ்


தினமலர்

சனி, 23 ஆகஸ்ட், 2008

நாடார் மகாசன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழ் இணையதள வளர்ச்சி கருத்தரங்கம் தொடங்கியது...


மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்லூரி நாடார் மகாசன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி.இக்கல்லூரியில் இன்று 23.08.2008 காலை 1030 மணியளவில் தமிழ் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம் இனிதே தொடங்கியது.நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நூலகத்துறையைச்சேர்ந்த கவிதாதேவி அவர்கள் வரவேற்றார்கள்.கல்லூரிப் பொருளாளர் திரு மணிமாறன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.கல்லூரி முதல்வர் சே.மகாத்மன் ராவ் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாழ்த்திப்பேசினார்கள்.நூலகத்துறை நெறியாளர் முனைவர் குணசேகரன் அவர்கள் முகவுரை நிகழ்த்தினார்.

தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் பொருளில் புதுச்சேரி,பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி பகல் ஒருமணி வரை சிறப்புரையாற்றினார்.இவர் உரையில் இணையத்தளம் வரையறை,இணையத்தள வகைகள்,தமிழ் இணையத்தள வளர்ச்சி,மின்னிதழ்கள்,தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடு குறிப்பாக கண்ணன்,சுபா ஆற்றி வரும் பணிகளை நினைவுகூர்ந்தார்.அதுபோல் சுவிசில் வாழும் கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரைத்திட்டம் பற்றியும் விளக்கினார்.தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் பணிகள் செயல்பாடுகளை விளக்கினார். தமிழ் விக்கிபீடியாவின் பணிகள் தெரிவிக்கப்பட்டன.

விருபா இணையதளம் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கப்பட்டது.
தமிழ்மணம்,திரட்டி,தேன்கூடு,தமிழ்வெளி உள்ளிட்ட திரட்டிகளின் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் வாழ்ந்தபொழுது காசி ஆறுமுகம் உருவாக்கிய தமிழ்மணம் இணையத்தளம் இன்று அமெரிக்காவில் வாழும் நா.கணேசன்,சங்கரபாண்டி,தமிழ் சசி உள்ளிட்டநண்பர்களால் நிருவகிக்கப்படுகிறது என்ற செய்தியும் காட்சி விளக்கங்களுடன் அவைக்கு வழங்கப்பட்டது.
தமிழா.காம் முகுந்தராசு அவர்களின் பணிகள் சிறப்பாக அவைக்கு அறிமுகம் செய்யப்பெற்றது.பேராசிரியர்கள்,மாணவர்கள்,செய்தியாளர்கள்,தொலைக்காட்சி நிறுவனத்தினர் பலர் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உணவு இடைவேளைக்காக அனைவரும் பிரிந்துள்ளோம்.
உணவு இடைவேளைக்குப் பிறகு தமிழ்த் தட்டச்சு,தமிழ் வலைப்பூ உருவாக்கம் செய்முறை விளக்கம் நடைபெற உள்ளது.
விழா மேடையிலிருந்து...
மு.இளங்கோவன்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

ஜென்னி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்த சிறப்புரை...

  தமிழ் இணையம் சார்ந்த சிறப்புச் சொற்பொழிவு 22.08.08 காலை 9.30 மணியிலிருந்து தொடர்ந்து நடைபெறுகிறது. கல்லூரி இயக்குநர் திரு மு.பொன்னிளங்கோ அவர்கள், முதன்மைச்செயல் அலுவலர் திரு.கோ.பாண்டுரங்கன் அவர்கள், பேராசிரியர் அமுதா அவர்கள், முனைவர் கடவூர் மணிமாறன், மற்றும் பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கு கொண்டனர். விரிவான செய்திகள் பின்னர் இடுவேன்.

...ஜென்னி கல்வியியல் கல்லூரியிலிருந்து மு.இளங்கோவன்

சனி, 16 ஆகஸ்ட், 2008

செங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் சிற்பங்கள்

எங்களூர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள இடைக்கட்டு என்பது. அம்மாவைப் பார்க்கவும் நில புலங்களைப் பார்க்கவும் மாதம் ஒருமுறை புதுச்சேரியிலிருந்து சென்று வருவது வழக்கம்.100 அயிரமாத்திரி(கி.மீ)புதுச்சேரியிலிருந்து எங்கள் ஊர் உள்ளது. நேற்று அவ்வாறு சென்றேன்.

செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் இறங்கியபொழுது நினைவுக்கு வந்தது. செங்கமேட்டுக் காளி.

ஆம்.
எங்கள் அம்மா நாங்கள் அளவுக்கு அதிகமாக அடம்பிடிக்கும் பொழுது, 'உங்களைச் செங்கமேட்டுக் காளி தூக்கிகிட்டு போவோ' என்று திட்டுவது வழக்கம்.அந்தச் செங்கமேட்டுக் காளியைப் பார்க்க என் மாமா திரு.பி.தியாகராசன் என்பார் பத்தாண்டுகளுக்கு முன் மிதி வண்டியில் ஒருமுறை அழைத்துச் சென்றார்.அவர் வீட்டருகே இருந்த இரெட்டித்தெரு காளியம்மனைப் போலவே செங்கமேட்டுக் காளியும் சிறப்பிற்கு உரியது என்றார்.

இரெட்டித்தெரு காளி பொல்லாதவள் என எம் பகுதி மக்கள் நம்புவார்கள்.எங்கள் உறவினர் ஒருவர் எங்கள் அத்தையின்(அப்பாவின் தங்கை)குடும்பமும் அவர் மகனும் தண்டிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் காளியின் சூளத்தில் கொலைச்சேவல் குத்தியதாக அடிக்கடி சொல்வார்கள்.அந்தக் கொலைச்சேவல் குத்தியவள் இறந்தாள்.எங்கள் அத்தைக் குடும்பம் நல்ல முறையில் வளமாக உள்ளனர் என்பது தனிக்கதை.

அத்தகு நம்பிக்கைக்குக் காரணம் இல்லாமல் இல்லை.இரெட்டித்தெரு காளியின் கடுந்தோற்றமே ஆகும்.இராசேந்திர சோழன் கலிங்க(இன்றைய மேற்கு ஒரிசா) நாட்டின் மேல் படையெடுத்து வெற்றி பெற்ற பொழுது அங்கிருந்த பல சிற்பங்கள்,நினைவு கலைச் சின்னங்களைக் கொண்டு வந்தான்.அவற்றுள் இறைச்சிற்பங்களும் அடங்கும்.அவ்வாறு கொண்டு வந்து எங்கள் ஊரான கங்கைகொண்ட சோழபுரத்தின் நான்கு எல்லையிலும் நான்கு காளிக்கோயில்களை எல்லைக் காவலுக்கு வைத்தான் என்பது வாய்மொழியாகச் சொல்லப்பட்டுவரும் வழக்கு.அவ்வகையில் தெற்கு எல்லையில் இருப்பவள் வீராரெட்டித்தெரு காளியம்மன்.கிழக்கு எல்லையில் இருப்பவள் செங்கமேட்டுக்காளி.

பத்தாண்டுகளுக்கு முன் நான் சென்ற பொழுது செங்கமேட்டுக் காளி எந்த பராமரிப்பும் இல்லாமல் இருந்தாள்.அவளுக்கு வெயில் மழை எல்லாம் ஒன்றுதான்.மழையில் நீராடுவாள்.வெயிலில் குளிர்காய்வாள். ஏறத்தாழப் பல ஆண்டுகளாக அவள் அவ்வாறு இருந்ததால் சிதைவுகள் தெரியத்தொடங்கின.பத்தாண்டுகளில் நான் பார்க்கும் ஓவியர்கள், புகைப்படக்காரர்கள் என அனைவரிடமும் சொல்லிப் பார்த்தேன்.காளியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த எந்த விடிவும் கிடைக்கவில்லை.ஆனால் தொல்பொருள் ஆய்வுத்துறை பாதுகாக்கப்பட்ட இடம் எனப் பலகை வைத்திருந்தது.

இந்த நிலையில்தான் நேற்று விடுதலைநாள் என்பதால்(15.08.2008) ஊருக்குச்செல்லும் வாய்ப்பில் காளியைப் படம் பிடிக்க முனைந்தேன்.

சென்னை- கும்பகோணம் சாலையில் அணைக்கரை மீன்சுருட்டிக்கு இடையில் உள்ள செயங்கொண்டம் குறுக்குச் சாலையில் இறங்கி, 2 கல் தொலைவு வயல்வெளிகளில் தென்கிழக்கே நடந்துசென்றால் செங்கமேட்டுக் காளியம்மனைக் காணலாம்.ஊர் மக்களிடம் சொன்னால் வழி சொல்வார்கள்.

விடுதலைநாள் விழா என்பதால் பள்ளிக்கூடத்தில் தாய்நாட்டைக் காக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஆடிக் கடைவெள்ளி என்பதால் ஊர் இளைஞர்கள் ஒலிபெருக்கியில் அம்மனை வரவழைத்துக் காது கிழிய ஓசையைப் பரவ விட்டனர்.தம்பிகளா!
கொடியேற்றம் நடக்கிறது.எனவே சிறுபொழுது ஒலிபெருக்கியை நிறுத்துங்கள் எனச் சொன்னேன்.அவர்களும் உடன் நிறுத்திவிட்டனர்.

இந்த இடைவெளியில் காளியம்மனைப் பல வகையில் படம்பிடித்துக்கொண்டேன்.

பத்தாண்டுகளுக்குள் பல மாற்றங்களைக் கண்டேன்.நான் முன்பு கண்டபொழுது ஆடையலங்காரம் இல்லாமல் காளி இயல்பாக இருந்தாள்.இப்பொழுது ஆடையலங்காரம். வழிபாடு.பல்வேறு குளிப்புகள் நடைபெறுகின்றன.கல்நார் அட்டையில் கூரைவேயப் பெற்றுப் பாதுகாப்பாக இருந்தாள்.அங்குமிங்கும் சிதறிக் கிடந்த பல சிலைகள் ஓரிடத்தில் நிறுத்தப்பெற்றுப் பாதுகாக்கப்படுகின்றனர்.

தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாக முன்பு அறிவிப்புச் செய்த பலகை இன்றும் உள்ளது.தெற்குப்பகுதியில் ஐந்து சிலைகள் நிரலாக உள்ளன.காளி சிலை மட்டும் தனியே வடக்குப் பகுதியில்உள்ளது.

கலிங்க நாட்டிலிருந்து இராசேந்திரசோழன் காலத்தில் கொண்டுவரப்பெற்ற செந்நிற மணற்கற்களால் ஆன இது கலிங்க நாட்டுக் கலைப்பாணிக்கு எடுத்துக்காட்டு என்ற விவரம்
பெற முடிகிறது.

துர்க்கை,காளி,பைரவர்,பைரவி சிலைகள் கீழே உள்ளன.(இச்சிலைகள் எது எது என அடையாளம் காண எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் தெரிவிக்க அதன் அடியில் குறிப்பிடுவேன்.அதுவரை பொதுப்படையாக அரிய சிற்பங்கள் என்ற வகையில் என் பக்கத்தில் காட்சிக்கு வைக்கிறேன்.
















(இப்படத்தை,குறிப்புகளைப் பயன்படுத்துவோர் என் பெயர்,என் பக்கம் பற்றிய குறிப்பை வெளியிட வேண்டுகிறேன்)

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

மண்மொழி எழுதிய மக்கள் பாவலர் த.பழமலை


பேராசிரியர் த.பழமலை நூல்களுக்கு இடையே...


பேராசிரியர் த.பழமலை

 பேராசிரியர் தங்கப்பாவுக்கு அடுத்து நான் கண்ட இயற்கை ஈடுபாட்டுப் பாவலர்களுள் பேராசிரியர் த.பழமலை குறிப்பிடத் தகுந்தவர். அவர் நூல்கள் எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாக அவர் பெயர் எனக்கு அறிமுகமாகியிருந்தது (1991). தமிழ்வழிக் கல்வி குறித்த ஒரு மாநாடு தஞ்சையில் நடந்தபொழுது அவர் பாடல் இசைப்பதாக இருந்தது. ஒருமுகப் பறையை அடித்துக்கொண்டு பாடுவார் என நண்பர்கள் சொன்னார்கள். அப்பொழுது நான் வேறு ஒரு அன்பரைப் பார்க்கச் சென்றுவிட்டதால் அவர் பாடலைக் கேட்க முடியாமல் போனது. ஆனால் நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் நன்கு இருந்தன என அன்பர்கள் சொல்லக் கேட்டேன்.

 அதன் பிறகு தங்கப்பா இல்லத்தில் பழமலையின் சனங்களின் கதை நூல் இருந்தது. இரவல் பெற்று அதனைப் படித்தேன்.பெருஞ்சித்திரனார், பாவேந்தர் பாடல்களில் ஈடுபட்டுக் கிடந்த எனக்குப் பழமலையின் பாடல்கள் புதியனவாகத் தெரிந்தன. பின்னாளில்தான் தெரிந்தது மக்கள் வாழ்க்கையை மண்மொழியில் பதிவு செய்யும் ஒரு முயற்சி வேகமாகப் பரவி வளர்ந்த வரலாறு. அண்ணன் அறிவுமதி உள்ளிட்ட சிலரின் படைப்புகளில் இத்தகு மண்மணம் கமழும் சில படைப்புகளைக் காணமுடியும். இரத்தின.கரிகாலன், இரத்தின. புகழேந்தி, கண்மணி குணசேகரன், பட்டி .சு. செங்குட்டுவன், தமிழியலன், செஞ்சி தமிழினியன், பச்சியப்பன் உள்ளிட்ட பாவலர்கள் இம்மரபை வளர்த்தவர்கள் எனில் மிகையன்று.

 பழமலை தனக்கு முன்னோடி மரவாடியில் போதிமரம் எழுதிய எழிலவன்தான் எனப் பல அரங்குகளில் பெருந்தன்மையாகக் குறிப்பிடுவது அவரின் உயர்பண்பு காட்டுவதாகும். பேராசிரியர் பழமலையின் சனங்களின் கதை படித்த பிறகு இதுதான் நமக்கான கவிதை என அறிந்தேன். அதில் இடம்பெறும் கீழைக்காட்டு வேம்பு கவிதையில் இடம்பெறும் பழமலையின் அம்மாவின் வாழ்க்கையும், எங்கள் அம்மாவின் வாழ்க்கையும் ஒன்றாக இருந்ததால் அக்கவிதை என் உள்ளத்தில் ஓர் இயக்கத்தை உண்டு பண்ணியது. அது முதல் பழமலையின் நூல்கள், இதழ்களில் வரும் கவிதைகளை உற்றுப் படிக்கத் தொடங்கினேன். 1997 ஆம் ஆண்டிற்குப் பிறகு பழமலையுடன் நேரடியாகப் பழக எனக்கு வாய்ப்பு அமைந்தது. 

 விளிம்புநிலை மக்கள் கலை இலக்கியப் படைப்பாளிகள் சந்திப்பில் நன்கு அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. என் ஆர்வத்தை ஒரு தந்தையாக இருந்து ஊக்கப்படுத்துவார். ஒரு ஆசிரியராக இருந்து வழிகாட்டுவார். நெறிப்படுத்துவார். நண்பராக இருந்து அறிவுரை கூறுவார். தமக்கு அறிமுகமானவர்களிடம் என் இலக்கிய ஆர்வம், இலக்கிய முயற்சிகளை மனந்திறந்து எடுத்துரைத்து உளங்கனியப் பாராட்டுவார்.

 பழமலை கவிதைகளை மட்டும் எழுதுபவர், எடுத்துரைப்பவர் எனக் கருத வேண்டாம். அவருக்கு மிகச் சிறந்த வரலாற்று அறிவு உண்டு. பழைமைகளைத் தேடிப் பதிவு செய்ய வேண்டும் என்ற அக்கறை உடையவர். பழைமையைப் பதிவு செய்வதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் உண்டு. அரசியல் சமூகச் சிக்கல்களில் முன்னின்று பேசும் பொதுவுடைமை எண்ணம் கொண்டவர். கல்லூரிப் பேராசிரியர்கள் தங்கள் ஊதியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். நம் பழமலையோ மாணவர்கள் முன்னேற்றம், வறுமையில் கிடக்கும் மக்கள் எழுச்சி பெற்று ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காக எழுதுபவர். பேசுபவர். போராட்டக் களங்களில் முன்னிற்பவர். தொடர்ந்து பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இயங்குபவர்.


அழகின் சிரிப்பில் த.பழமலை

 இயற்கையில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய குரோட்டன்கள் குறித்த நூல் இயற்கை ஆர்வலர்களால் விதந்து பேசப்படும் நூலாகும். அதுபோல் இவர் வாழும் விழுப்புரத்தில் கட்டப்பெற்றுள்ள வீட்டை ஒட்டிச் சிறு தோட்டம் அமைத்துள்ளார். அதில் பல்வேறு வகையான மரங்கள், மலர்ச்செடிகள், மூலிகைகள் வைத்துப் பாதுகாத்து வருகிறார். நகர நெருக்கடியில் மாந்தன் மூச்சுவிட நேரம் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது எளிய உழவர்போல் தண்ணீர் பாய்ச்சுவதும், வழியடைப்பதுமாக இருப்பார். அத்தோட்டத்தில் பார்க்கும்பொழுது அவர் நமக்கு ஒரு வேளாண்மைத் தொழில் செய்யும் உழவர் பெருமகனாகவே காட்சியளிப்பார்.

 தமிழிலக்கிய உலகில் நிலைபெற்ற பெயராக விளங்கும் இவரின் படைப்புகள் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை என்பதும், அறிமுகம் செய்யப்பெறவில்லை என்பதும் ஒரு குறையேயாகும். இவர் படைப்புகள் இவருக்கு ஒரு சாகித்திய அகாதெமி பரிசையோ, அல்லது தமிழக அரசின் பரிசையோ பெற்றுத்தரவில்லை. அவ்வாறு பெறாமல் இருப்பது ஒன்றே இவர் உண்மையான படைப்பாளி என்பதற்குப் போதுமான சான்றாகும். சாகித்தியம் பேசும் குழுக்களில் பரிசுபெறுவது என்றால் அது ஒரு தனிக்கலையாகும். அரசியல்வாணர்களின் எடுபிடிகளாக, ஊதுகுழலாக, கைப்பாவைகளாக இருப்பவர்களுக்கே அத்தகுப் பரிசில்களும், பதவிகளும், விருதுகளும் போய்ச் சேர்ந்துள்ளன என்பதை அப்பட்டியலை ஒருமுறை நோட்டமிடும் எளிய அறிவுடையவருக்கே புரிந்துவிடும்.

 இவ்வகையில் அடங்காமல் மக்கள் பணிபுரியும் பழமலையின் படைப்புகள் குறிப்பிடும்படியான பரிசில்களைப் பெறவில்லை என்பதும் தமிழகக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முழுமையாக ஆய்வு செய்யப்பெறவில்லை என்பதும் அவருக்குப் பெருமையே தவிர நமக்குதான் சிறுமையாகும்.

 பெரும் படைப்பு உணர்ச்சி கைவரப்பெற்ற பழமலையின் தொடர்பு நான் புதுச்சேரிக்கு வந்தபிறகு வலுப்பெறும் காலம் வாய்த்தது. ஆம். அவர் மகன் மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஓமியோ மருத்துவராகப் பணிபுரிகின்றார். அவரைப் பார்த்துப் பழகும்படி பேராசிரியர் பழமலை அடிக்கடி மடலிலும். தொலைபேசியிலும் குறிப்பிடுவார். அவ்வண்ணம் வளர்ந்த உறவு வலுப்பெற்றது. இத்தகு பாச உணர்வும் படைப்புணர்வும் கொண்ட பழமலையின் வாழ்க்கைக் குறிப்பை என் பக்கம்வழி இணைய உலகம் வாழும் தமிழர்களுக்குப் பதிவு செய்கிறேன்.

பழமலை வாழ்க்கைக் குறிப்பு:

 அரியலூர் மாவட்டம் குழுமூரில் (பெண்ணாடம் - மாத்தூர் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே உள்ள ஊர்) வாழ்ந்த தங்கவேல் படையாட்சி, குஞ்சம்மாள் (வாலாம்பாள்) ஆகியோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் பழமலை. பெற்றோருக்கு முதல் இருமக்கள் பிறந்து இறந்தனர். மூன்றாவது குழந்தை அமராவதி பெண்குழந்தையாகும். ஆண்குழந்தை வேண்டிப் பெற்றோர் திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயில் இறைவனிடம் பாடு கிடந்தனர். அவ்விறைவனின் அருளால் பிறந்ததாக நினைத்துத் தம் குழந்தைக்கு அவ்விறைவனின் பெயரான பழமலை என்பதை இட்டனர். இவருக்குப் பிறகு மூன்று குழந்தைகள் பிறந்தனர் என்பது கூடுதல் செய்தியாகும்.

 03.02.1943 இல் பிறந்த பழமலை குழுமூர் ஊராட்சி மன்றத் தொடக்கப் பள்ளியில் படித்தார். பிறகு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) அத்தை வீட்டில் தங்கிப் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆறாண்டுகள் படித்தார் (1960-1966). 20.07.1966 இல் கிருட்டிணகிரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணியை ஏற்றார்.

 கடலூரில் (திருப்பாதிரிப்புலியூரில்) சு.உமா அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

 பேராசிரியருக்கு மூன்று மக்கள் செல்வங்கள். 1.மருத்துவர் ப.உ.இலெனின், புதுச்சேரியில் உள்ளார். 2. நீதியரசர் ப.உ.செம்மல், 3. பொறிஞர் ப.உ.தென்றல். அனைவரும் தக்க பணிகளில் சிறப்புற்று விளங்குகின்றனர்.

 பழமலை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டம் (எம்.ஃபில்) பெற்றவர். கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் திறம்படப் பேராசிரியர் பணிபுரிந்தவர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து (19.04.1991- 31.05.2001) ஓய்வு பெற்றவர். பேராசிரியர் பழமலை அவர்கள் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதால் இன்றும் அவரைப் பழைய மாணவர்கள் மிக உயர்வாகப் போற்றி மதிக்கின்றனர்.

த. பழமலையின் தமிழ்ப்படைப்புகள் :

கவிதை

1.சனங்களின் கதை, 1988,1996
2.குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், 1991
3.இவர்கள் வாழ்ந்தது, 1994
4.இன்றும் என்றும், 1998
5.முன் நிலவுக்காலம், 1999
6.புறநகர் வீடு, 2000
7.இரவுகள் அழகு, 2001
8.வேறு ஒரு சூரியன், 2002

உரைநடை

நரபலி நூல்

9.அண்ணன் குப்புசாமி இன்னும் ஆழமானவர்-வாழ்க்கைக் குறிப்புகள், 1978
10.நரபலி:தெய்வங்கள்,திருவிழாக்கள், 2002
11.திருக்குறளார் வீ.முனிசாமி வாழ்வும் பணியும், 2003
12.பாம்புகள் சிறுகதைகள், 2003
13.தெரியாத உலகம், 2004
14.தருமபுரி(தகடூர் நாட்டுத் தகடூர்) மண்ணும் மக்களும், 2005


தருமபுரி நூல்


திருக்குறளார் வீ,முனிசாமி நூல்

பாடல்கள்
15.துப்பாக்கிகாரனின் புல்லாங்குழல் பாடல்கள்-12
16.நாங்கள் பாடினோம், 2006

நாங்கள் பாடினோம்

பேராசிரியர் த.பழமலை  முகவரி:
த.பழமலை
37, இளங்கோ வீதி, சீனிவாசநகர், வழுதிபிராட்டி(அ.நி),
கண்டர்மானடி (வழி), விழுப்புரம் மாவட்டம் -605 401

(விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நடைதூரத்தில் வீடு உள்ளது)

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர்


அடிகளாசிரியர்


அடிகளாசிரியர்


அடிகளாசிரியர்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம், வரலாறு, மதிப்பீடு என்னும் பொருளில் யான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள் எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களைக் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.

அவ்வாறு கற்ற நூல்களுள் "தண்ணிழல்" என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. அதனை இயற்றியவர் பேராசிரியர் அடிகளாசிரியர். அவர்களின் திருமகனார் அ. சிவபெருமான் அவர்கள் வழியாக அந்நூலும், அந்நூலாசிரியரான அடிகளாசிரியர் அவர்களும் அறிமுகமானார்கள். அந்நூல் மரபு இலக்கணத்தில் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றை ஆற்றொழுக்காக நவிலும் நூல். அதனைக் கற்று மகிழத் தமிழில் நல்ல பயிற்சியுடையவர்களுக்கே இயலும்.

அந்நாளில் மரபுப்பாடல் எழுதுவதில் வல்லமை பெற்றிருந்த யான் அந்நூல் பற்றிப் பின்வரும் மதிப்புரையைக் கட்டளைக் கலித்துறையில் யாத்து திரு. அடிகளாசிரியர் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அப்பாடல்கள் வருமாறு :

அட்டியில் நற்கை அகத்தில் தொழுதேன்!

வருந்திய நெஞ்சுடன் வண்டமிழ் காக்கச் சிலவினைகள்
மருந்தெனச் செய்து மயங்கி உழன்று மடிகையிலே
அருந்தமிழ் வல்ல அடிகளின் தண்ணிழல் நூலமுதம்
பொருந்தியென் நெஞ்சைப் புலவிருந்(து) ஊட்டிப் புதுக்கியதே!

கழக இலக்கியம் கற்ற அடிகள் புலமைநலம்
அழகிய நூலினுள் ஆர்ந்து விளங்கி அழகுவிடப்
பழகு குழந்தை படிப்பதாய்ப் பன்முறை வாய்விடுத்தே
ஒழுகிய ஓசையில் ஓங்கி ஒலித்தேன்! உவகையுற்றே!

கலிப்பா வகையைக் கண்டு நடுங்கும் புலவரிடைச்
சலிப்பே எழாஅது செந்தமிழ் வண்ணம் சிறந்திலங்கப்
புலிப்பால் நிகர்த்த பெருந்தமிழ்ச் சீரைப் புகன்றதுபோல்
வலிப்பாய் எழுதியும் வண்டமிழ் போற்றியும் வாழுகவே!

வாழும் புலவர் வளமனை வாங்கி,வதிகையிலே
கூழை உணவினில் கூட்டி மிகவுண்டு,கூர்வறுமை
ஆழும் அறிஞரே! ஆக்கப் பணிகள் அணிபெறுமேல்
வீழும் புரட்டுகள்! வெண்ணிலா என்று விளங்குவையே!

எழுதிக் குவித்த எனதின் புலவ! அடிகளரே!
புழுதியும் குப்பையும் பொத்தகப் பேரில் புறம்வருதல்
கழுதைகள் சில்ல கடித்தே குதப்பிக் கருத்துரைத்தல்
இழுவைச் செயலாய் இருக்க,இதனில் விலகினரே!

விருத்த வகையில் விரிதமிழ் யாப்பை விதந்துரைத்துத்
திருத்திநற் செய்தியைத் தீட்டினீர் தேன்போல் செழுந்தமிழின்
பருத்த பலநூல் பயின்றீர்! பெரும்புலம் நூல்வடிவில்
துருத்தி வெளிவரும் தூய்மை தொழுது மகிழ்ந்திடவே!

புறநூல் பயிலப் புகுவோர் நுமதரும் தண்ணிழலைத்
திறமாய்ப் பயின்று திகழ்தமிழ்க் கோட்டை அடைவரெனில்
மறக்களம் கண்ட மகிழ்வை அடைவரே! மாற்றறியா
அறப்பா அமைத்த அறிஞ! அடைக பெரும்புகழே!

காதல் இயம்பக் கனித்தமிழ் வாழும் எனமுழங்கி
நோதல் உறும்புல மன்றில் நுமைப்போல் புறமதனை
ஈதலைச் செய்தவர் யார்நவில்? எம்போல் இளையவரோ
மூதர் அவையின் முனைமுகம் தங்க அருளுகவே!

பொருளும் உவமையும் பூட்டிப் புலவயல் சீருறவே
அருளால் உழுத அடிகளே! அன்னைத் தமிழினத்தார்
தெருளா(து) உமதடி தெய்வப் பொருளதாய்த் திகழ்தலையின்
சுருள்முடி தாங்கிச் சுமக்க இனியும் துலங்குவரே!

மீன்கள் உலவும் மிளிர்வயல் தன்னில் மருட்டிசில
தோன்றி இருப்பின் துணைவிழி காண்குறும்! ஆங்கதுபோல்
ஈன்றநற் பாட்டில் எதுகையின் மோனையின் ஈட்டமெண்ணி
ஊன்று வடசொல் உலவுதல் உள்ளம் உணருவதே!

மட்டுரை என்று மனந்தான் மகிழ்ந்தே உவப்புறநீர்
கட்டுரைப் பாங்கில் கதையை விளக்கினீர்! கண்டுவந்தேன்!
வெட்டுரை போன்று விரிதமிழ்க் கல்லில் பொறித்திடுநும்
அட்டியில் நற்கை அகத்தில் தொழுதேன்! அடிபணிந்தே!

(அடிகளாசிரியரின் தண்ணிழல் நூலுக்கு 04.06.1993 இல் யான் எழுதிய மதிப்புரைப்பாடல்)


தண்ணிழல்(1990)

இப்பாடல்கள் என் அரங்கேறும் சிலம்புகள்(2002) நூலில் இடம்பெற்றதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமான செய்தியும் இல்லாது அடிகளாசிரியர் பற்றி நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தேன்.

திருச்சிராப்பள்ளியில் வதியும் திரு. அடிகளாசிரியர் அவர்களின் மாணவர் புலவர் தமிழகன் ஐயா அவர்கள் சிலநாள் அடிகளாசிரியர் மாண்பைச் சொல்லக் கேட்டுள்ளேன். பல நிறுவனங்களில் படிப்பு, ஆய்வு, பணி எனச் சுழன்றுகொண்டிருந்த என் வாழ்வில் அண்மைக் காலமாக அடிகளாசிரியரைக் கண்டு வணங்கும் வேட்கை மேம்பட்டு நின்றது.

சின்னசேலம் அருகில் உள்ள ஊரில் பிறந்து திருவண்ணாமலையில் மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் நண்பர் அ. சிவராமன் அவர்களின் தொடர்பு அமைந்த பொழுது, அவரின் ஊருக்கு அருகில்தான் அடிகளாசிரியரின் ஊர் அமைந்திருப்பதாகவும், அவரைக் காணத் தம் நண்பர் வழியாக உதவுமுடியும் எனவும் உறுதியுரைத்தார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி அடிகளாசிரியரைக் கண்டுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். முதல்நாள் இரவு திட்டமிட்டு 09.08.2008 வைகறையில் துயிலெழுந்து, புதுச்சேரி-விழுப்புரம்-கல்லக்குறிச்சி- வழியாகச் சின்னசேலம் சென்றேன்.

முன்பே திடமிட்டபடி மின்துறைப் பொறியாளர் வேலுமணி அவர்கள் எனக்காக உந்து வண்டியுடன் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். காலை பத்து மணிக்குதான் என்னால் அங்குச் செல்லமுடிந்தது. பேருந்து மெதுவாகச் சென்றதால் காலத் தாழ்ச்சி.

சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இருவரும் கூகையூர் செல்லும் கரிச்சாலையில் மகிழ்ச்சியாகப் பயணம் செய்தோம். திருச்சிராப்பள்ளி செல்லும் சாலை என்பதால் சாலை வசதி நன்கு உள்ளது என்றார் வேலுமணி. மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அப்பாதையின் இருமருங்கும் இருப்பதால் நல்ல விலைக்கு நிலம் விற்பதாகவும் சொன்னார். வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலங்களில் இருந்தன. சுற்றுச்சுவர் இல்லை. படல் இல்லை. காப்பாளர் இல்லை. இயற்கை வாழ்க்கை நிகழ்த்தும் அம்மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். கிணற்றுப் பாசனம் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மட்டும் இருக்கும் அப்பகுதியில் புதியஅரிசி ஆலைகள் மிகுதி. நெல் அறைக்க ஏற்ற பதமான சூழல் அங்கு உள்ளது.

சோளம், கரும்பு, மஞ்சள், கருணைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சின்ன சேலம் பகுதியில் அதிகம் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் மஞ்சளுக்கு ஈரோட்டுச் சந்தையில் நல்ல விலை கிடைக்குமாம். மஞ்சள் அறுவடை, சோளம் அறுவடை பற்றிய செய்திகளை நண்பர் வேலுமணி அவர்கள் சொல்லிக்கொண்டே வந்தார். போகும் பொழுது வழியில் ஒரு கொல்லையில் சோளத்தட்டைகள் உள்ள வயலில் இறங்கி ஒரு உந்து ஏரோட்டத் தொங்கியது. அங்கிருந்த தட்டைகள் கண்ணுக்குத் தெரியாதபடி மண்ணுடன் மண்ணாக மக்கச்செய்யும்படி, நொய்மணலாக அந்த வண்டி மாற்றியது. இதனை மீண்டும் திரும்பி வரும்பொழுது கண்டேன்.

இதமான காற்றை உள்வாங்கிக்கொண்டே 12 கல் தொலைவில் இருந்த கூகையூர் என்னும் ஊரை அடைந்தோம். அவ்வூர் குகையூர் எனவும் அழைக்கப்படும். வெள்ளாற்றங்கரையின் வடகரையில் அமைதியான பண்புடைய மக்கள் காணப்படும் அவ்வூரில் இறங்கி, அடிகளாசிரியர் வீடு எது? என வினவினேன்.


அடிகளாசிரியர் வாழும் இல்லம்

சாலையை ஒட்டியிருந்த இரண்டாவது வீட்டை அடையாளம் கண்டேன். அமைதியாக ஒரு கோயில் உள்ளே நுழைவதுபோல் மெதுவாகச் சென்றேன். கூரை வீடு என்றாலும் நெருக்கடி இல்லாமல் அகன்று இருந்தது. வீட்டின் உள்ளே திண்ணை போன்ற பகுதியில் அகவை முதிர்ந்த தோற்றத்துடன் துறவி போலும் மழிக்கப்படாத முகத்துடன் அறிவில் முதிர்ந்த அறிஞர் உட்கார்ந்திருந்தார். வணக்கம் தெரிவித்து அவர்களின் தமிழ்த் திருவடிகளைப் பணிவுடன் தொட்டு வணங்கினேன்.  ஆம்.

பதினைந்து ஆண்டுகளாக நான் காண நினைத்த வடிவம் அஃது. பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் அவர்கள்தான் நான் கண்டு வணங்கிய வடிவம். 99 அகவையாகும் நிலையிலும் நல்ல பார்வை நலத்துடனும் நினைவாற்றலுடன் காணப்பட்டார். அவருக்குக் காது கேட்காதோ என நான் நினைத்துக் கத்திப்பேச முயன்ற பொழுதெல்லாம் அதற்குத் தேவை இல்லாமல் போனது.

அடிகளாசிரியர்

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். புதுச்சேரியிலிருந்து வந்துள்ளமையைச் சொன்னதும் அவர் மகன் புதுச்சேரியில் இருப்பதைச் சொன்னார்கள். நான் வாழும் வீட்டின் அருகில்தான் அவர் குடியிருப்பதை உணர்ந்துகொண்டேன். அவரைப்  பற்றி எடுத்துரைத்து அவருடன் தொடர்புகொள்ளும்படி சொன்னார்கள்.

வழக்கமாகக் கால் மணி நேரம் மட்டும் அமர்ந்து உரையாடிவிட்டு ஓய்வெடுக்கும்படியான தளர்ந்த உடல்நிலை கொண்ட பேராசிரியர் அடிகளாசிரியர் ஒரு மணிநேரம் என்னுடன் பேசியவண்ணம் இருந்தார். அவர் பேச்சைக் கால் மணி நேரம் அளவு என் நாடாப்பெட்டியில் பதிந்துகொண்டேன். பேச்சு குழறாமல் இருந்தது. ஆனால் முதுமை கனிந்திருந்ததை உணர முடிந்தது.


அடிகளாசிரியர்

அவர் இளமைக்காலம் தொடங்கி தமிழ்ப் பேராசிரியராக, ஆய்வறிஞராக விளங்கிய அவர் தம் வாழ்க்கை வரலாற்றைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே யான் அவர்தம் இளையமகன் முனைவர். அ. சிவபெருமான் (அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர்) அவர்கள் வழியாக ஓரளவு அறிந்தவன் எனினும் ஐயா வழியாக, அவர் பற்றிய சில வாழ்க்கை நிகழ்வுகளைக் கேட்டுப்பதிவு செய்துகொண்டேன். அவரைப்பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டேன். அனைத்திற்கும் பேராசிரியர் அவர்கள் எனக்கு அனுமதி தந்து ஒத்துழைப்பு நல்கினார்கள்.

இடையிடையே அன்பர்கள் சிலர் வந்து அடிகளாரிடம் திருநீறு பெற்று வாழ்த்துப் பெற்றுச் சென்றார்கள். அடிகளாசிரியர் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரிடத்து நிறைந்த ஈடுபாடு கொண்டவர். அவர் கொள்கையில் ஈர்ப்புண்டு தம் பெயரை அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டாராம். மறைமலைஅடிகளார் மயிலம் கல்லூரிக்கு வந்தபொழுது அடிகளாரை வரவேற்று,

எத்தனையோ புலவர்கள்முன்பு இருந்தார்கள் என்றாலும் இவர்கள் எல்லாம்
அத்தனையும் தமிழ்த்தாயை ஆரியத்தின் அடிச்சிஎன ஆக்கி வைத்தார்!
உத்தியினில் மிகச்சிறந்த உரவோனே! நீயுதிக்க ஒருதா னாகி
முத்தனைய தமிழ்சிறக்கும் வகைகண்டாய் நீவாழி! முன்பி னோடே!

என்று பாடியதை அடிகளாசிரியர் நினைவிலிருந்து சொன்னமை கண்டு வியப்படைந்தேன். இப்பாடல் கேட்ட அடிகளார் தமக்கு இத்தகுதிகள் உண்டு என ஏற்றுக்கொண்டாராம்.

யார் இந்த அடிகளாசிரியர்?

பேராசிரியர் அடிகளாசிரியர் என்றால் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு அறிந்தவர்களுக்கு நன்கு புரியும். தொல்காப்பியப் பதிப்பில் இவருக்கு இணையாக ஒருவரைக் காட்டமுடியதபடி ஆழமான, விளக்கமான பதிப்பை வழங்கியவர். தம் ஆராய்ச்சியால் உழைத்து உருவாக்கிய இலக்கண நூல்களைப் பிறர் பதிப்பிக்க முன்வராதபொழுது தாமே அச்சிட்டு வெளியிட்டவர். விற்போரும் வாங்குவோரும் இன்மையால் ஊர் ஊராக விற்கச் சென்று விற்பனை ஆகாமல் பல்வேறு பொருள் தட்டுப்பாடுகளால் தளர்வுற்றவர்.

கடைசிவரை கூரை வீட்டில் வாழும்படி இவர் வறுமையில் வாட நேர்ந்தது. முத்தமிழ்க் காவலர்கள் கூட இவர் தொல்காப்பியத்தை விலைக்கு வாங்காமல் அலைய வைத்தமை இவர் வாழ்வில் காணக் கிடைக்கும் செய்திகளாகும். கும்பகோணத்தில் இருந்த வணிகர் ஒருவர் வெள்ளிக்கிழமை எனத் தம் பணப்பெட்டியைத் திறக்காதபொழுது அவருக்கு இலவயமாக ஒரு தொல்காப்பியப் பதிப்பை அன்பளிப்பாக வழங்கிய கொடையுள்ளம் கொண்டவர் நம் அடிகளாசிரியர்.


தொல்காப்பியம்(1969)

தமிழ்க் கல்வெட்டுகள், சோதிடம் பற்றிய பேரறிவு பெற்றவர் இவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (இளம்பூரணம்), சொல்லதிகாரம் (சேனாவரையம்), பொருளதிகாரம் (செய்யுளியல்-பேராசிரியம்), தொல்காப்பியம் பொருளதிகாரம் (ஏனைய இயல்கள்) எனத் தொல்காப்பியப் பதிப்புகளில் ஈடுபட்டு இவர் வெளிப்படுத்தியுள்ள பதிப்பு நூல்கள் உலகத் தரத்தின. பல பாடவேறுபாடுகளை நுட்பமாகக் கண்டவர்கள், புதுப்புதுப் பொருள்களைக் கண்டு சொன்னவர். யோகக்கலையில் வல்லவர். பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார். தஞ்சாவூர் சரசுவதி மகாலுக்காகப் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். பல நூல்கள் இன்னும் பதிப்பிக்கப்பெறாமல் உள்ளன. ஏறத்தாழ அறுபது நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் தொல்காப்பியப் பதிப்புகளும் சமயநூல் பதிப்புகளும் குறிப்பிடத்தகுந்தன.

அடிகளாசிரியரின் தமிழ் வாழ்க்கை

அடிகளாசிரியர் விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சி வட்டத்தின் தென்கோடியில் உள்ள கூகையூரில் பிறந்தவர் (1910 சாதாரண ஆண்டு, சித்திரைத் திங்கள் ஐந்தாம் நாள், ஞாயிற்றுக்கிழமை). இவர் தம் பெற்றோர் பெரியசாமி ஐயர் (பார்ப்பனர்களைக் குறிக்கும் ஐயர் இல்லை), குங்கும அம்மாள். வீரசைவ மரபினர். அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி என்பதாகும். மறைமலையடிகளார் தொடர்பிற்குப் பிறகு தம் பெயரைத் தனித்தமிழாக்கி அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டார்.

அடிகளாசிரியரின் ஏழாம் அகவையில் தந்தையார் இயற்கை எய்தினார். எனவே அடிகளாசிரியர் தம் தாய்மாமனான பெரம்பலூருக்கு அண்மையில் உள்ள நெடுவாசல் என்னும் ஊரில் வாழ்ந்த கு.சுப்பிரமணிய தேவர், கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் வளர்ந்தார். தாய்மாமன்கள் மருத்துவம், சோதிடம் வல்லவர்கள். அவர்கள் வீட்டில் தங்கித் தமிழும் வடமொழியும் பயின்றார்.

பெரம்பலூரில் வாழ்ந்த மருத நாடார் என்பாரிடம் சோதிடக் கலையை முறையாக அறிந்தவர். முசிறியில் வாழ்ந்த அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய வீ. குமார வீரையர் என்பவரிடம் நன்னூல் காண்டிகையுரையைப் பாடம் கேட்டவர். 1937 இல் இவர் தனித்தேர்வராகத் தேர்வெழுதி 1937 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றவர்.

14.07.1938 இல் மயிலம் திருமடத்தில் தமிழ்க்கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில்  முதல் ஆசிரியராக  இவர் அமர்த்தம் பெற்றார். அங்கு விரிவுரையாளராகவும், துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார். அதுபொழுது மறைமலையடிகளார், நா.மு.வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகியதாக அறியமுடிகிறது.

அடிகளாசிரியர் அவர்களின் துணைவியார் பெயர் சம்பத்து (அகவை 80). கூகையூரில் அடிகளாசிரியருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு எட்டு மழலைச்செல்வங்கள் வாய்த்தன. அவர்களுள் ஆண்மக்கள் நால்வர். 1.அ.பேராசிரியர்(மறைவு), 2.அ.இளங்கோவன், 3.அ.நச்சினார்க்கினியன், 4. அ.சிவபெருமான். பெண்மக்கள் நால்வர்.1.திருநாவுக்கரசி, 2. குமுதவல்லி, 3.செந்தாமரை, 4.சிவா(மறைவு). அடிகளாசிரியர் வீரசைவ மரபினர் என்பதால் இறையீடுபாடு கொண்டு விளங்குகிறார்கள்.

கடவுள் மறுப்பாளர்கள் பலரும் இவருக்கு அணுக்கமான நட்பிற்கு உரியவர்கள். தந்தை பெரியாரை உயர்வாக மதிப்பவர். பிறர் மனம் புண்படாதபடி பழகும் பாங்கினர். எளிய வாழ்க்கை, தூய வாழ்க்கை இவருடையது. இவருக்குப்பணிவிடை செய்யும் அன்பர் அடிகளாசிரியரை மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறார். கிழமைதோறும் மருத்துவர் ஒருவர் வந்து அடிகளாசிரியர் உடல்நிலையை ஆய்வு செய்து அறிவுரை சொல்கின்றார். இம்மருத்துவர் அடிகளாசிரியர் மேல் அன்பும் மதிப்பும் கொண்டவர் என்பதால் தம் மருத்துவ ஆய்வைத் தொழிலாகச் செய்யாமல் தன் குருவிற்குச்செய்யும் பணிவிடையாகச் செய்வதை அறியமுடிந்தது.


03.07.1950 முதல் 03.07.1970 வரை தஞ்சை-கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கினார். இவர் வகுப்பில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்கள் விரும்பிப் பாடம்கேட்பது உண்டாம். கடுஞ்சொல் சொல்லாதவர். இவருக்குச் சினம் வருவதே இல்லையாம். இவர்மேல் மாணவர்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு இவரிடம் படித்த மாணவர்கள் கூட இப்பொழுதும் இவரை வீடு தேடி வந்து பார்த்துச் செல்கின்றனர் என்றால் இவரின் பெருமை விளங்கும்.

கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது அருகில் உள்ள சிவன் கோயிலில் சைவ சித்தாந்த வகுப்புகளை இலவயமாக நடத்தியுள்ளார். இதில் பல மாணவர்கள் கற்றுள்ளனர். இங்குப் பணிபுரியும்பொழுது பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். சரசுவதிமகால் நூலகம் இதில் இவரைப் பயன்படுத்திக் கொண்டது.

1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராகப் (1977) பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

20.01.1982 முதல் 01.10.1985 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப்புலத்தில் சிறப்புநிலை இணைப்பேராசிரியராக அமர்ந்து தொல்காப்பிய ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார். மூப்பின் காரணமாகத் தாமே அப்பணியிலிருந்து விலகி வந்தாலும், வீட்டிலிருந்தபடியே அப்பணியை நிறைவுசெய்து வழங்கினார். அவ்வகையில் தொல்காப்பியம் செய்யுளியல், பிற இயல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டது. இவர்தம் அருமை உணர்ந்த மாணவர்கள் பலர் இவரை வந்து காண்பதும் உரையாடி மகிழ்வதுமாக உள்ளனர். அதிசயப் பிறவியாக எந்த நோய் நொடியும் இன்றி, கூரைவீட்டில் வாழ்ந்துவரும் தமிழறிஞரை வணங்கி மகிழ்ந்த நினைவுகளுடன் வெள்ளாற்றங்கரையில் இருந்த, கோயில்களையும் இயற்கை அழகையும் கண்டு மகிழ்ந்த மன நிறைவுடன் புதுச்சேரிக்குப் பேருந்தேறினேன்.

அடிகளாசிரியர் தமிழுலகிற்கு வழங்கிய தமிழ்க்கொடை:

1.அருணகிரி அந்தாதி(1967) சரசுவதி மகால் வெளியீடு.
2.மருதூரந்தாதி உரை(1968)
3.காலச்சக்கரம் 1969,79(சோதிடம்)
4.வராகர் ஓரா சாத்திரம் 1970,78,90
5.சிவஞானதீபம் உரை 1970
6.சிவப்பிரகாச விகாசம் 1977
7.முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உரை 1938
8.சேக்கிழார் பிள்ளைத்தமிழ் உரை 1967
9.தமிழகக் கல்வெட்டு விளக்கவுரை 1967(மு.கோவிந்தராசனாருடன்)
10.திருவலஞ்சுழி தேவாரப்பாடல்கள் உரை 1958
11.திருவாசகக்கோயில் திருப்பதிகம் உரை 1956
12.சிவபுராணச் சிற்றுரை 1986,99
13.சதமணிமாலை மூலமும் உரையும் 1990
14.சித்தாந்த சிகாமணி அங்கத் தலத்திரட்டு உரை 1991
15.சிவஞானபால தேசிகர் திருப்பள்ளி எழுச்சி உரை 1991
16.குதம்பைச்சித்தர் பாடலும் உரையும் 1999
17இட்டலிங்க அபிடேகமாலை மூலமும் உரையும் 2001
18.சசிவன்ன போதம் மூலமும் உரையும் 2002
19.பஞ்சதிகார விளக்கம் மூலமும் உரையும் 2003

பதிப்பு நூல்கள்

20.வீரசைவப் பிரமாணம் 1936
21.சதமணிமாலை 1938
22.சிவப்பிரகாச விகாசம் 1939
23.காமநாதர் கோவை 1957
24.மேன்மைப் பதிகம் 1957
25.சதுர்லிங்க தசகோத்திர சதகம் 1958

ஆராய்ச்சி நூல்கள்

26.தொல்காப்பியம்- எழுத்து-இளம்பூரணம் அரிய ஆராய்ச்சிப்பதிப்பு 1966
27.ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம்(செ.ப.)
28.தமிழ் இலக்கண இலக்கியங்களில் சைவசித்தாந்தம்,1978
29.தொல்காப்பியம்-சொல்-இளம்பூரணம், த.ப. 1990
30தொல்காப்பியம்-பொருள்-செய்யுளியல், த.ப.1985
31.தொல்காப்பியம்-பொருள்-எட்டு இயல்கள் (அச்சில்)

படைப்பிலக்கிய நூல்கள்

32.பிள்ளைப்பாட்டு 1945
33.திரு அரசிலிக்காதை 1948
34.குழந்தை இலக்கியம் 1963
35.சான்றாண்மை 1964-1975

சான்றாண்மை(1964)

36.சென்னிமலை முருகன் தோத்திரம் 1980
37.அரசியல் இயக்கம் 1981
38.பல்சுவைப் பண்ணத்திப் பாடல்கள் 1983
39.அருள்மிகு மாரியம்மன் திருப்பதிகம் 1982
40.உளத்தூய்மை,1984,1994
41.தண்ணிழல் 1990
42.மறவர் நத்தக் குன்றமரும் திருமுருகன் 1993
43.தொழிலியல் 1993
44.மெய்பொருட்காதை
45.தமிழ் மாண்பும் தமிழ்த்தொண்டும் 1996
46.ஒண்பான்கோள் வணக்கப்பாடல்கள் 1993
47. சிறுவர் இலக்கியம்

சிறுவர் இலக்கியம்

உரைநடை

48.எங்களூர்
49.தொடக்கப்பள்ளி - நாடகம்
50.வீரசைவ சிவபூசாவிதி 1949
51.விலையேற்றமும் வாழும் வழியும் 1984
52.திருமூலரும் பேருரையும் 1998
53.காயத்துள் நின்ற கடவுள்,1999
54.திருவாசக அநுபூதி 2000
55.கீதையின் அறிவுப்பொருள் 2000
56.திருமந்திர உணர்வு 2001
57.தொல்காப்பியச் செய்யுளியல்-உரைநடை (அச்சில்)
58,திருமந்திரத்தில் எட்டாம் திரும்முறை,2005

திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம்


வெளிவர வேண்டிய நூல்கள்

1.கலித்தொகை உரை (குறிஞ்சிக்கலி)
2.பிரபுலிங்கலீலை
3.அடிகளாசிரியர் சமுதாயப்பாடல்கள்
4.அடிகளாசிரியரின் இலக்கணக் கட்டுரைகள்
5.அடிகளாசிரியரின் இலக்கியக் கட்டுரைகள்
6.திருக்குறள் உரை
7.முப்பால் உரைநடை
8.சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம் மூலமும் உரையும்

பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் முகவரி:

பேராசிரியர் திரு.அடிகளாசிரியர்
குகையூர்-அஞ்சல்
நயினார் பாளையம்-வழி
கல்லக்குறிச்சி-வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
6006 306

பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் அவர்களின் திருமகனார்:

முனைவர் அ.சிவபெருமான்
தமிழ்ப்பேராசிரியர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர்,சிதம்பரம்.
செல்பேசி: 9443099936

* கட்டுரை,படங்களை எடுத்தாள விரும்புபவர்கள் இத்தள முகவரி குறிப்பிடுவதுடன்,இணைப்பும் வழங்க வேண்டுகிறேன்.

* இக்கட்டுரை அடிகளாசிரியர் மறைவுக்கு முன்பு எழுத்தப்பட்டது. 08.01.2012 இல் அடிகளாசிரியர் இயற்கை எய்தினார்.