நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 24 மார்ச், 2008

புதுவைப் பல்கலைக்கழகக் கருத்தரங்க வாயிலிலிருந்து...

 புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, புதுவை இலக்கியப்பொழில் அமைப்பு நடத்திய கருத்தரங்கிற்குச் சென்று வந்தேன். பல்கலைக்கழகக் கணக்குத் துறையில் உள்ள கருத்தரங்க அறையில் காலை 10.30மணிக்குக் கருத்தரங்கம் தொடங்கியது. புலவர் பூங்கொடி பராங்குசம் வரவேற்புரை. முனைவர் அ.அறிவுநம்பி கருத்தரங்க நோக்க உரையாற்றினார்.

 முனைவர் இரா.திருமுருகனார் தமிழிசைப் பாடல் துறைக்குப் புதுவைச் சிவம் ஆற்றியுள்ள பணிகளை நினைவு கூர்ந்தார். நைவளம் நட்டபாடையாகி, இன்று கம்பீர நாட்டை எனப்பெயர் பெறுவதை விளக்கினார். காரைக்கால் அம்மையார் பாடல் (கொங்கை...), சம்பந்தர் தேவாரம், திரைப்படப் பாடல்கள் (இது ஒரு பொன்மாலைப் பொழுது. என்னவளே...) என்பன நட்டபாடையே என்று விளக்கினார். பாவேந்தர் பல திரைப்பட மெட்டில் அமைந்த பாடல்களைப் பாடியுள்ளதை எடுத்துக்காட்டினார்.

 அரசு இசைக்கல்லூரிகளில் தமிழிசை அறிஞர்களின் பெயர்களை வைக்காமல் தியாகராசர், சியாமா சாத்திரி, தீட்சிதர் எனப் பெயர் வைத்துள்ளதைக் கண்டித்தார். இசை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு என நினைக்கும் போக்கு உள்ளது. கர்நாடக இசை என்பது தமிழர்களுடையது என்றார். பகுத்தறிவாளருக்கு இசையில் ஈடுபாடு இல்லாமல் உள்ளதைக் குறிப்பாகத் தந்தை பெரியாரின் இசைகுறித்த கருத்தை நினைவூட்டினார். அண்ணாவுக்குத் தமிழிசையில் இருந்த ஆர்வத்தைப் பாராட்டினார். புதுவைச் சிவம் தமிழர்களுக்குத் தேவையான கருத்துகளை இசையில் தாளம் தட்டாத பாடல்கள் வழி எழுதியதை விளக்கினார்.

 திராவிட இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட தோப்பூர் திருவேங்கடம் புதுவைச் சிவத்தின் படத்தைத் திறந்துவைத்து உரையாற்றினார். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் திராவிட இயக்க வரலாற்றை நினைவு கூர்ந்தார். திராவிட இயக்கத்தினரின் கோட்பாடுகளாக மூன்றைக் குறிப்பிட்டார். 1.தமிழ்மொழி, இனம் பற்றிய கோட்பாடு 2. சமூகநீதிக் கோட்பாடு 3. பகுத்தறிவுக் கோட்பாடு என்பன அவை. இக்கோட்பாடுகளை வலியுறுத்திக் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் எனத் திராவிட இயக்கத்தினர் பல வடிவங்களில் படைப்புகளைச் செய்தனர். இவ் வடிவங்களைப் புதுவைச்சிவம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.

 வாணியம்பாடியில் பெரியார் 1939 இல் நாடகத் தலைமையேற்றுக் குசேலன் நாடகம் இரணியன் நாடகம் பற்றி தெரிவித்த கருதுகளை நினைவுகூர்ந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு புத்தர் பிறந்த நாளில் வைத்ததற்குக் காரணம் ஆங்கிலேயர் கேக் வெட்டுவது போல் நாங்கள் பிள்ளையார் உடைக்கிறோம் என்றதை நினைவுகூர்ந்தார். இனிக் கோயில்களில் நுழையும் உரிமைப் போராட்டத்தை விட்டுவிட்டு கோயிலுக்குத் தொடர்பு இல்லாதவர்களை வெளியேற்றும் போராட்டம் தேவை என்றார். மக்களை அறிவாளிகளாக மாற்றும் இடங்களை, வாய்ப்புகளைப் பெரியார் விரும்பினார். மூடர்களாக்கும் எவற்றையும் கண்டித்தார்.

 ஒருகாலத்தில் குழந்தைத் திருமணம் நடந்தது. ஒரு காலத்தில் நாற்பது வயதுவரை திருமணம் ஆகாத பெண்கள் சமூகத்தில் இருந்தனர். அலங்கா நல்லூர் சல்லிக்கட்டுக்குத் தடை என்றதும் கொதித்தெழுந்த தமிழக இளைஞர்கள் சேதுக்கால்வாய்த் தடைக்குக் கொதித்து எழாதது ஏன் என்று வினவினார். புதுவைச் சிவம் பெரியார் கொள்கைகளைத் தாங்கி எழுதியுள்ள படைப்புகளுள் சிலவற்றை எடுத்துரைத்தார்.

 பிற்பகல் அமர்வில் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தலைமையில் மூவர் கட்டுரை படித்தனர். வே.ஆனைமுத்து அவர்கள் தம் தலைமையுரையில் தம் பெரியார் இயக்க இணைவு பற்றிய வரலாற்றை நினைவுகூர்ந்தார். ஈழத்துச் சிவானந்த அடிகளின் திராவிடநாடு இதழ் வெளியீட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டினைக் குறிப்பிட்டார். இந்தி எதிர்ப்புப் போரில் 'இந்தி ஒழிக' என முதல் குரல் கொடுத்தவர் அவர் என்றார்.

 கர்ப்ப ஆட்சி என்ற தலைப்பில் பெரியார் இயற்றிய நூல் பற்றியும் அதற்கு எழுந்த எதிர்ப்பு, வரவேற்புப் பற்றியும் எடுத்துரைத்தார். புதுவைச் சிவத்தின் கோகிலராணி நாடகத்தில் உள்ள புராண எதிர்ப்புக் கருத்துகளை எடுத்துரைத்து அவர்தம் படைப்புகளின் சிறப்பினை நினைவுகூர்ந்தார். தமிழுக்கு, தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை, செயல்களை, ஊடங்களைத் தடை செய்யும் ஆட்சி அதிகாரம் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் மனுநீதி, சுக்கிரநீதி உள்ளிட்ட ஐந்து நூல்களின் வழி வடிவமைக்கப்பட்டுள்ளதை அரங்கிற்கு விளக்கினார்.

 நிறைவுரையாகப் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள் அண்ணா
முதலானவர்கள் நாடகம் எழுதுவதற்கு முன்பே புதுவைச் சிவம் நாடகம் படைத்துள்ளார். அக்காலச் சூழலைத் திறனாய்வாளர்கள் மனத்தில் கொண்டு திறனாய வேண்டும். கவிதை, சிறுகதை, நாடகத்துறையில் அவரின் பங்களிப்பு தமிழகத்திற்குச் சரியாக அறிமுகம் ஆகாமல் உள்ளது. அவற்றை அறிமுகம் செய்யவேண்டும் என்றார். பல்வேறு செய்திகளை மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் எடுத்துரைத்துப் புதிய திறனாய்வுச் சிந்தனைகளை அரங்கில் எடுத்துரைத்தார். உருசிய நாட்டுக் கவிஞர் மாயாகாவ்சுகி போல் இவர் தென்னாட்டு மாயாகாவ்சுகி என்று சிவத்தைப் புகழ்ந்தார். புதுவைச் சிவத்தின் படைப்புகள் மாணவர்களுக்கு அறிமுகமான ஒரு நல்ல கருத்தரங்காக இது அமைந்திருந்தது.

 வே.ஆனைமுத்து அவர்களின் பேச்சில் நான் வெளியிட்டுள்ள பொன்னி தொர்பான நூல்கள், பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வினை நினைவு கூர்ந்தார். அவருக்கு என் நன்றி.என் முனைவர் பட்ட ஆய்வில் புதுவைச்சிவம் பற்றி விரிவாக 1996 இல் எழுதியுள்ளதும் 16.08.1995 இல் புதுவைச் சிவம் வாழ்வும் படைப்புகளும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை படித்துள்ளதும் 02.11.2007 இல் திண்ணை இணையதள இதழில் மறுமலர்ச்சிக் கவிஞர் புதுவைச்சிவம் என எழுதியுள்ளதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அன்புள்ள இளங்கோவன்,
மிகச் சிறப்பான வலைப்பூவை வெளியிட்டுவருகிறீர்கள்.
தமிழ்ப்பேராசிரியர்களில் உங்களைப் போன்று இணையதளத்தைப் பயன்படுத்துவோர் மிக அரிது.
நல்ல நிகழ்ச்சிகளை நல்ல முறையில் அறிமுகப்படுத்தும் தங்கள் பேருள்ளம் வாழ்க.எல்லாச் சிறப்பும் தங்களுக்கு எய்துக.வாழ்த்துகள்.
மறைமலை இலக்குவனார்
சென்னை-600101
தொலைபேசி.044+26153561

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பாராட்டினைத் தலைவணங்கி
ஏற்கிறேன்.
மு.இளங்கோவன்