நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 1 மார்ச், 2008

புறநானூற்று உண்மைகள்

தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்குப் பெருந்துணை செய்யும் நூல் புறநானூறு ஆகும்.புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக்கொண்ட நூல் இஃது.எனினும் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை(267,268).பதினான்கு பாடல்களை இயற்றியுள்ள புலவர்களின் பெயர் தெரியவில்லை(244,256,257,263,297,307,323,327,328,333,339,340,355,361)(2+14+=16).சில பாடல்கள் சிதைந்துகாணப்படுகின்றன.ஏறத்தாழ 18o புலவர்களின் பெயர் இந்நூலின்வழி அறியமுடிகிறது(கழகம்).ஒளவை துரைசாமியார் 155 புலவர்களின் வரலாற்றுக்குறிப்புகளை விளக்கியுள்ளார்.

புறநானூற்றில் அமைந்துள்ள பாடல்கள் சில ஒழுங்குமுறையில் உள்ளன.

முதல்பாடல் கடவுள் வாழ்த்து.
2-86 மூவேந்தர்கள் பற்றியன.
87-165 வள்ளல்கள் பற்றியன.
166-181 படைத்தலைவர்கள் பற்றியன.
182-195அறிவுரைப்பாடல்கள்;
196-256 துன்பியல் செய்திகள் இடம்பெறுவன.
257-400 வரையுள்ள பாடல்கள் புறத்திணைகளானஅமைந்துள்ளன.

வெட்சி(257-270),
வஞ்சி,
உழிஞை(271-272),
தும்பை(273-310),
வாகை(311-335),
காஞ்சி(336-366),
பாடாண்(367-400)

எனும் திணை சார்ந்து பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.(நன்றி:சங்க கால மன்னர்களின் காலநிலை,உ.த.நி.)

புறநானூற்றில் புலவர்களின் பெயர் 'அர்' ஈற்றிலும்,அரசர்களின் பெயர் 'அன்' ஈற்றிலும் குறிக்கப்பட்டுள்ளன.
புறநானூற்றில் பண்டைத்தமிழரின் போர்,அறம்,கொடை,மானம்,வீரம் முதலிய இயல்புகள் பதிவாகியுள்ளன.பழந்தமிழ்நூல்களின் வழி அரசன்,புலவர் பற்றிய தெளிந்த வரலாற்றைத் துல்லியமாகக் கணிக்க இயலாமல் இடர்ப்படும் தன்மையை இந்நூலிலும் காண்கிறோம். புறநானூற்றுப் புலவர்களின் பெயர்ப்பட்டியல் அடுத்த பதிவுகளில் உள்ளிடுவேன்.

4 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

பேரன்பு முனைவர் அவர்களுக்கு,
வாழ்த்துக்களும் நன்றியும்.
புறநானூற்றுப் பாடல் ஒன்றையும் இணைத்துத் தாருங்கள்.

தங்கள் கட்டுரைகளில் ஒவ்வொரு பாடல் இணைத்துத் தந்தால் இளைய தலை முறைக்கு உதவும்.

மாணவச் செல்வங்களையும் அவர்களுக்குப் பிடித்ததைப் பற்றி
எழுதச் சொல்லி வெளியிட வேண்டுகிறேன்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம் ஐயா,
சங்க இலக்கியம் தொடர்பான அரிய செய்திகள் பல அச்சு வடிவில் உள்ளன.இணையத்தில் ஒருங்குகுறியில் இல்லை.எனவே அத்தகு பயனுடைய செய்திகளை இணைக்க விரும்புகிறேன்.

அவ்வாறு நாம் பல இரவு கண்விழித்து, உழைத்து வெளிப்படுத்துபவற்றை மிக எளிதாக சிலர் படியெடுத்துத் தங்கள் பெயரில் வெளியிட்டுவிடுகின்றனர்.
எனவே சிறு சிறு அரிய குறிப்புகளை
மட்டும் வெளியிட்டு வருகிறேன்.பிற செய்திகளைப் பின்பு வெளியிடுவேன்.

செய்யவேண்டிய பணிகளை விட்டுவிட்டு செம்மொழியின் பெயரில் ஊர்வலம் விட்டு, வாணவேடிக்கை நடத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பற்றி என்ன சொல்வது?

தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்ற பெரியார் அவர்களை எண்ணிப்பார்க்கவும்.

தங்கள் ஊக்க உரைகளுக்கு என்றும் நன்றியன்.
மு.இ

வெற்றி சொன்னது…

பதிவுக்கு மிக்க நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
ஊக்க மொழிகளுக்கு நன்றியன்.
மு.இ