நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 25 மார்ச், 2008

அண்ணா பரிமளம் நினைவுகள்...


அண்ணா பரிமளம்

கண்ணியம் இதழில் அண்ணா பரிமளம் அவர்கள் எழுதிய குறிப்புகள், படைப்புகளைப் பல ஆண்டுகளாகப் படித்துள்ளேன்.கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் வழியாக அண்ணா பரிமளம் அவர்கள் பற்றி அறிந்து வைத்திருந்தேன்.

திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவராக, தந்தை பெரியாரின் தொண்டராக, தமிழகத்தின் அறிவுசான்ற முதல்வராக விளங்கிப் பல இலக்கம் தம்பிமார்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர் அறிஞர் அண்ணா. இவரின் வளர்ப்புச் செல்வமே அண்ணா பரிமளம்.

தந்தையார் அவர்கள்மேல்அவருக்கு இருந்த பற்று அளவிடற்கரிது. தந்தையாரின் படைப்புகளை, படங்களை, ஆவணங்களைத் தொகுத்து அவர்தம் பெயரில் இணையதளம் நிறுவிப் பராமரித்து வந்தார்கள்.

தற்செயலாக அத்தளத்தைப் பார்வையிட்டபொழுது பயனுடைய பல தகவல்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் பக்கத்தில் ஓர் இணைப்பு வழங்கிவிட்டு என் மகிழ்ச்சியை அவர்களுக்குத் தெரிவித்து ஒரு மின்மடலிட்டேன். அவர்கள் எனக்குத் தொலைபேசியில் பேசி வாழ்த்துச் சொன்னார்கள். அண்ணாவின் நூற்றாண்டு ஒட்டி ஒரு பரப்புரை அறிக்கை என் முகவரிக்கு நூற்றுக்கணக்கில் தனித்தூதில் அனுப்பிவைத்தார்கள். எனக்கு மடலும் எழுதியிருந்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற புதுவைச்சிவம் நூற்றாண்டு அரசு விழாவில் பேச வந்தபொழுது என் பெயர் சொல்லி விழாக் குழுவினரை வினவியுள்ளார்கள். என்னைப் பார்க்கும் ஆவலை அனைவரிடமும் வெளிப்படுத்தி, என் தொலைப்பேசி எண்ணைப் பலரிடம் கேட்ட பொழுது தற்செயலாக நான் அங்குச் சென்றேன். அப்பொழுது திரு. தமிழ்மணி உள்ளிட்ட அன்பர்கள் அண்ணா பரிமளம் ஐயா என்னைத் தேடியதாகச் சொன்னார்கள்.

நானும் அவர்களைப் படத்தில்தான் பார்த்திருந்தேன். நண்பர்களின் துணையுடன் அவரைக் கண்டு வணங்கிப் பொன்னி ஆசிரியவுரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை என்னும் இரு நூல்களைக் கொடுத்து மகிழ்ந்தேன். சென்னை வந்து காண்பதாகச் சொல்லி விடைபெற்று வந்தேன்.

அத்தன்பின் ஓரிரு மின்னஞ்சல் விடுத்தேன். அவரைக் காண ஆவலாக இருந்ததேன். இன்று கல்லூரிப்பணி முடிந்து இல்லம் திரும்பியபொழுது சுவரில் காணப்பட்ட செய்தித்தாளில் அண்ணாமகன் மறைவு என்ற செய்தி கண்டு கலங்கினேன்.

பண்புள்ள பெருமகனார் திடுமென நீர்பாய்ந்து மறைவுற்றது வருத்தமளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் கூறிக் கையற்று நிற்கிறேன்.

4 கருத்துகள்:

nayanan சொன்னது…

பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத் துயரம் வேதனை அளிக்கிறது.
பதிவிட்டமைக்கு நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Thamizhan சொன்னது…

மதிப்பிற்குரிய மருத்துவர் பரிமளம் அவர்களின் மறைவு அறிஞர் அண்ணா
பற்றி இப்போதுதான் அறிய முனைந்திருக்கும் பல இளைஞர்கட்குப் பேரிழப்பு.
அண்ணா பேரவை மூலம் அவர் ஆற்றிய தொண்டு மிக்க அருமையானது.
அறிஞர் அண்ணாவின் பேச்சுகள்,எழுத்துக்கள் மற்ற செய்திகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.
அந்தத் தொண்டு முழுமையடைய வேண்டும்.ஆர்வலர்கள் வந்தால் உடன் உழைத்து உதவி செய்வோம்.அதுவே அவருக்குச் செய்யும் அன்பு மரியாதையாகும்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
தாங்கள் குறிப்பிட்டதுபோல் அண்ணா அவர்களின் முழுமையான வரலாறு எழுதவும் படைப்புகளை வெளிக்கொணரவும் என்னால் இயன்ற பணிகளைச் செய்து அண்ணா பரிமளம்
நினைவுகளை நிறைவேற்றுவோம்.
முன்பே பரிமளம் ஐயாவைக் கண்டிருந்தால் அவர்வழிப் பல தகவல்களைப் பெற்றிருக்கலாம்.
மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.நாக.இளங்கோவன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.இரா.செழியன்
ஐயா கட்டுரை இன்று((26.03..08)
தினமணியில் வெளிவந்ததுள்ளது.
அண்ணா பற்றியும் அவர்தம்குடும்பத்தினர் இயல்புபற்றியும்,பரிமளம் அவர்களின் உயர்பண்பு பற்றியும் எழுதியுள்ளார்கள்.
கற்கும்பொழுது கண்ணீர் வருகிறது.
'அன்பிற்கு உண்டோ அடைக்கும்தாழ்?'
மு.இளங்கோவன்