நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 2 மார்ச், 2009

குடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உடல் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது!

தமிழ் அறிஞர் குடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்கள் இன்று(02.03.2009) காலை 6.45 மணியளவில் கும்பகோணத்தில் உள்ள அவர் இல்லத்தில் இயற்கை எய்தினார்.இச்செய்தி அறிந்து தமிழ் உணர்வாளர்கள் குடந்தை,தஞ்சை,புதுவை,கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் திரண்டனர்.

கதிர் தமிழ்வாணன் அவர்களின் கண்கள் கொடையாக வழங்க முன்பே உறுதி செய்திருந்ததால் மருத்துவர்கள் குழு வந்து கண்களை எடுத்துச்சென்றனர்.தமிழ் உணர்வளர்கள் கும்பலிங்கனார் இளஞ்சேட்சென்னி,பேகன், சனதா மாணிக்கம், ஆ.பிழைபொறுத்தான், கதிர் முத்தையன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு இரங்கல் கூட்டத்தில் உரையாற்றினர்.தி.மு.க.சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. உபயதுல்லா(தஞ்சை) அவர்கள் கலந்துகொண்டு அனைவருக்கும் இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் பகல் 1 மணியளவில் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவர்களிடம் பிற்பகல் 2.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.

குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இயற்கை எய்தினார்



உலகத் தமிழ்க்கழகத்தின் பொதுச்செயலாளரும் குடந்தைப் பகுதியில் தங்கித் தமிழாசிரியர் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்தவரும் பாவாணர் கொள்கைகளில் ஆழமான பிடிப்பு கொண்டவருமான குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இன்று 02.03.2009 காலை 6.35 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதிர்.தமிழ்வாணனார், இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புற்று அண்மையில் புதுச்சேரி மகாத்துமா காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தார்.சிறிது முன்னேற்றம் கண்ட அளவில் குடந்தையில் உள்ள அவர்தம் இல்லத்தில்(54 பாவாணர் இல்லம், சான் செல்வராசு நகர், குடந்தை(புதிய பேருந்து நிலையம் கீழ்ப்புறம்) ஓய்வெடுத்து வந்தார்.அவர்களை இரண்டு முறை நேரில் சென்று கண்டு நலம் வினவி வந்தேன்.

இன்று காலை நான் வகுப்பறையில் இருக்கும்பொழுது செல்பேசி வழியாகப் பேராசிரியர் குணசேகரன் அவர்கள் இத் தகவலைத் தெரிவித்தார்.உடன் கதிர் ஐயா அவர்களின் துணைவியாரிடம் பேசி என் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

கதிர் ஐயா அவர்கள் காலை 6.35 மணியளவில் மாநிலச் செய்திகேட்டுக்கொண்டிருந்ததாகவும் நல்ல நிலையிலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறினார்கள்.கண் கொடை வழங்க முன்பே உறுதிமொழி செய்திருந்தார்.அதன் பிறகு உடற்கொடை செய்யவும் ஆவணம் தயாரித்து வைத்திருந்தார்.அதன்படி பகல் ஒரு மணியளவில் இல்லத்திலிருந்து உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பெற்று கண் கொடை வழங்கி, இங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஐயாவின் உடலை நேரில் கண்டு அக வணக்கம் செய்யலாம்.
இவர் பற்றி முன்பே என் பதிவில் செய்திகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் அ.குணசேகரன் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்
அவர் செல்பேசி எண் : 9487031795