நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 26 ஜனவரி, 2009

மருத்துவமனையில் ஒரு தமிழ் அரிமா...குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்கள்.


குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்கள்.

புதுச்சேரியில் எங்கள் இல்லத்திற்கு நேற்று அண்ணன் சனதா மாணிக்கம் அவர்கள் வந்திருந்தார். இவர் எங்கள் ஊரில் சனதா மளிகை(சனதா கட்சி தொடங்கப்பட்ட அன்று ஒரு சிறுகடை வைத்தார்.அன்று முதல் அவருக்குச் சனதா என்ற பெயர் நிலைத்துவிட்டது)என்ற ஒரு மளிகைக்கடையும்,சனதா அழகுப்பொருள் அங்காடி என்று ஒரு கடையும் வைத்துள்ளார்.

பொதுப்பணிகளில் ஆர்வம் காட்டுபவர்.அதனால் ஊரினரின் எதிர்ப்புகளைக் கணக்கின்றிப் பெற்றவர்.அவரின் நேர்மைக்குத் தண்டனையாகும்படி ஒரு முறை அவர் வீடு,மளிகைக்கடை எல்லாம் சமூக எதிரிகளால் அடித்துநொறுக்கப்பட்டது.அவர் கையில் வீச்சரிவாள் பாய்ந்தது. அப்படிப்பட்ட நிலையிலும் துணிச்சலுடன் நின்று (சிங்கத்தை அதன் குகையில் சென்று) கண்டவர்.


சனதா சி.மாணிக்கம்

எங்கள் ஊரான உள்கோட்டையில் தந்தை பெரியார் சிலையைத் தனியொருவராக நின்று அமைத்தவர்.பல மாணவர்கள் படிக்க உதவியவர்.தானே வலிய சென்று உதவுவது இவர் இயல்பு.அவ்வாறு உதவி பெற்றவர்கள் யாரும் அவர் உதவியை நினைவு கூர்ந்தது இல்லை. மாறாக அவரிடம் பகைமை பாராட்டித் தொல்லை தருவர்.இவற்றையெல்லாம் வாழ்நாள் முழுவதும் கண்ட இவர் தொடர்ந்து பனைமரம்போலும் உதவிக்கொண்டே இருப்பவர்.

புதுச்சேரிக்கு நான் பணிமாறுதல் பெற்று வந்த பிறகு மாதம் ஒருமுறை வந்து எங்களை மகிழ்வூட்டுவது அவர் இயல்பு.இந்த முறையும் புதுச்சேரியில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்கள் உரையாற்ற உள்ளதாகவும் அதன்பொருட்டுத் தாம் வந்ததாகவும் கூறினார்கள்.அத்துடன் குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்கள் உடல்நலமின்றி இங்குதான் மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறினார்.

புதுச்சேரி சிப்மர் மருத்துவமனையில் காட்டியதாகவும் அங்கு மருத்துவர்கள் பார்க்கமுடியாது எனக் கூறியதால் மகாத்துமா காந்தி பெயரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் எனவும் கூறினார்.அப்படியென்றால் காலையில் சென்று ஐயாவைக் கண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டோம்.

25.01.2009 காலையில் புறப்பட்டு இருவரும் பேருந்தேறிப் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள மகாத்துமா காந்தி மருத்துவமனையில் இறங்கும்பொழுது காலை 8.15 மணியிருக்கும். மருத்துவமனை மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.வணிக நோக்கில் செயல்பட்டாலும் அனைத்து வசதிகளையும் கொண்ட நான்கடுக்கு மாடியாக மருத்துவமனை மிகப்பெரியப் பரப்பில் அமைந்துள்ளது.நான்காம் மாடிக்குத் தூக்கி வழியாகச் சென்றோம்.கதிர் ஐயா அவர்களின் பேச்சொலி யானையின் பிளிறல்போல் இருக்கும்.அக்குரல் ஒலி சன்னமாகக் கேட்டது.ஒலியின் ஓசை வந்த திசையில் நடந்து சென்று ஐயாவைக் கண்டு வணங்கினோம்.

அண்ணன் சனதா மாணிக்கம் கையை ஐயா அவர்கள் பற்றிக்கொண்டு உணர்வு வயப்பட்டு தெரிந்தார்கள்.என்னைக் கண்டதும் உணர்வு மேலிட்டு ஆரத் தழுவ முயன்றார்கள். அமைதிப்படுத்தி இருக்கச் செய்து ஐயாவை மெதுவாகப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க உதவினோம்.கிழங்குபோல் இருந்த உருவம் வாடிய கீரைத்தண்டு போல் இருந்தது.கால்,கை வீக்கம் இருந்தது.மாம்பழத்தை அழுத்தினால் என்ன தன்மையில் இருக்குமோ அந்தத் தன்மையில் இருந்தது.சிறுநீரகம் சரியாக இயங்காததால் இந்த நிலை என்றார்கள்.

அவர்களின் துணைவியார் தனியே எங்களை அழைத்து இரண்டு சிறுநீரகங்களும் பழுதுபட்டன. குருதியைக் கிழமைக்கு ஒருமுறை தூய்மை செய்யவேண்டும் என்றனர். அதற்குத் தொகை மிகுதியாகச் செலவாகும் என்றனர்.அதுவும் புதுச்சேரியில் தங்கி ஆண்டுக் கணக்கில் பார்க்க இயலாது எனக் குடும்ப நிலையைச் சொன்னார்கள்.மூன்று நாளாக தீவிரப் பண்டுவப்பிரிவில் வைத்திருந்தனர் எனவும் நேற்றுதான் பொதுப்படுக்கைக்கு மாற்றினர் எனவும் கூறினார். இவ்வாறு ஐயா நலம்பெற உதவியவர் தம் இளவல் கதிர் முத்தையனார் அவர்கள் என்று எடுத்துரைத்தார்.ஐயாவுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கியது.

நாங்கள் அவர்களிடம் நலம் வினவவும் அவர்கள் எங்களை நலம் வினவவுமாக மெதுவாகப் பேச்சுத் தயங்கித் தயங்கி வேகம் எடுக்கத் தொடங்கியது.பல நாள் பேச்சுக்கு உகந்த உணர்வுடையவர்கள் கிடைக்காததால் ஐயா பேச வாய்ப்பின்றி இருந்தார்கள்,மெதுவாக ஒவ்வொரு சொற்களாகத் தலைகாட்டத் தொடங்கிய அவர் பேச்சு வேகமெடுத்தது.

நான், "ஐயா நீங்கள் களைப்பாக இருக்கின்றீர்கள்.அமைதியாக ஓய்வெடுங்கள்.சிறிதுநேரம் கழித்துப்பேசுவோம்" என்றேன்.அதை அவர்கள் மனத்தில் வைக்கவில்லை.தமிழின் நிலை பற்றியும்,தம் தமிழ்ப்பற்றுக்குக் காரணமான ஆசிரியர்கள் பற்றியும் தாம் செய்த தமிழ்ப்பணிகள் பற்றியும் சற்றொப்ப இரண்டு மணிநேரம் பேசி ஓய்ந்தார்கள்.இதற்குப் பிறகும் பேசினால் ஐயா அவர்களுக்கு உடல் மிகவும் பாதிக்கும் என அஞ்சி அவர்களை அமைவுப்படுத்தி மெதுவாக விடைபெற்றோம்.

குடந்தைக் கதிர் தமிழ்வாணன் யார்? அவரின் வியத்தகு பணிகள் என்ன? தமிழக வரலாற்றில் அவர் இடத்தை நிரப்ப ஆள் உள்ளனரா? அவருக்கும் எனக்குமான தொடர்பு என்ன? அவருக்குத் தமிழ் உணர்வுடையவர்களாகிய நாம் இப்பொழுது உடன் என்ன செய்யவேண்டும்? என்பன பற்றியெல்லாம் அடுத்த பதிவில் இடுவேன்.

திரு.கதிர்.தமிழ்வாணனார் செல்பேசிஎண்:
+91 9487077184
திரு.கதிர்.முத்தையனார்(இளவல்) செல்பேசி எண்:
+91 9944478763

3 கருத்துகள்:

Yazhini சொன்னது…

தமிழ் அறிஞர்களை - உலகத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டும் உங்கள் சீரிய பணி வளர்க ! குடந்தைக் கதிர் தமிழ்வாணன் ஐயா விரைவில் நலம் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட விழைகின்றோம்.

SP.VR. SUBBIAH சொன்னது…

தமிழில் மேமையுற்றுத் திகழும் உங்களுக்குத்
தலை வணங்கி என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

அத்துடன் நட்சத்திர வாரத்திற்கும் வாழ்த்துக்கள்

நா. கணேசன் சொன்னது…

அன்பின் இளங்கோ,

கதிர். தமிழ்வாணன் ஐயாவுக்கு
உதவி வேண்டி தமிழில் பற்றுடைய
ஒரு 100 பேருக்கு உங்கள் பதிவுகளை
இன்று அனுப்பிவைக்கிறேன்.

நிச்சயம் யாராவது உதவ முன்வருவர்.

நம்பிக்கையுடன்,
நா. கணேசன்