[பேராசிரியர் சி. சுப்பிரமணியன் தெ. தி. இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். நாகர்கோவிலை அடுத்துள்ள வடிவீசுவரம் ஊரினர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வெளிவந்த சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம் முதலிய நூல் உருவாக்கத்தில் பெருந்தொண்டாற்றியவர். தமிழ் இலக்கணத்திலும் மொழியியலிலும் ஆழ்ந்த புலமையுடையவர்.]
புதுவையில் உள்ள கம்பன் கலையரங்கில் சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் ப. அருளி ஐயாவின் நூலொன்று வெளியீடு கண்டது. அவ்வெளியீட்டு விழாவில் மெலிந்த உருவிலான அறிஞர் ஒருவர் பேசத் தொடங்கினார். அவர்தம் பேச்சில் அரங்கம் அமைதி காத்தது. நாஞ்சில் நாட்டுப் பேச்சொலிப்பும், தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோள் காட்டித் தம் கருத்தை முன்வைத்த பாங்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. நூல் சிறப்பை மதிப்பிட்டு அந்த அறிஞர் விளக்கும்பொழுது, “பலவாண்டுகளாகத் தொல்காப்பியத்தைப் பயிற்றுவிக்கும் எமக்கு, நூலாசிரியர் ப. அருளியார் தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்துக்காட்டி இந்த நூலில் விளக்கும் நுட்பங்கள் இதுவரை புலப்படாமல் இருந்துள்ளன என்பது தெரிகின்றன” என்று தம் உரையில் வியப்புற்றார். சொல்லாய்வறிஞர் ப. அருளியாரின் அறிவாற்றலை வியந்த வியப்பும், அவர்தம் புலமையைப் போற்றிய பெருந்தன்மையும் இன்றும் எம் செவிகளில் - சிந்தைகளில் இனிதே ஒலித்துக்கொண்டுள்ளன.
சொல்லாய்வறிஞர் ப. அருளியாரின் நூலினை வியந்து அவ்வாறு உரையாற்றியவர் அறிஞர் சி. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் ஆவார்கள். அவர்தம் பெருமையைப் பல ஆண்டுகளாக அறிஞர்கள் வாயிலாகக் கேட்டு மகிழ்ந்த நான் அவரைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் நாகர்கோவிலில் அமைந்துள்ள அவர் இல்லத்துக்கு 2019 நவம்பர் மாதத்தில் ஒருநாள் சென்றுபார்த்தேன்.
அங்குச் சென்ற பிறகுதான் பேராசிரியர் சி.
சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி தெரியவந்தது. அவர்களின் துணைவியார் உடல்நலம்
பாதிக்கப்பட்டிருந்தமையை அருகில் வசித்த பேராசிரியர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். அவதம்
வீடு காவல்துறை அலுவலகமாகக் குடிக்கூலிக்கு விடப்பட்டிருந்தமையையும் அறிந்து, மேலதிக
விவரங்களைப் பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினேன். இது நிற்க.
பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்கள் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் பலரையும் தெடர்புகொண்டு பேராசிரியர் வாழ்க்கைக் குறிப்பை அறிய முனைந்தேன். போதிய விவரங்களை அறிந்தோர்களின் அறிமுகம் எமக்கு அமையவில்லை. ஆயின், முனைவர் சி. இலட்சுமணன் அவர்கள் தாம் வெளியிட்டுள்ள ஆய்வுலகு போற்றும் அறிஞர்கள் என்ற நூலினை ஒளியச்சு எடுத்து, அனுப்பியிருந்தார்கள். அதில் இடம்பெற்றிருந்த முனைவர் என். கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையில் சி.சு. குறித்த பல விவரங்கள் கிடைத்தன. அறிஞர் பா. வளன் அரசு அவர்கள் வெளியிட்டுள்ள “தமிழகப் புலவர் குழு அணியும் பணியும்” என்ற நூலில் சில விவரங்கள் கிடைத்தன. பேராசிரியர் குறித்த விவரங்களை அறிந்தோர் பகிர்ந்துகொண்டால் பேராசிரியரின் தமிழ்ப்பணி முழுமையாகத் தமிழுலகுக்குத் தெரியவரும். பேராசிரியரின் ஒளிபடத்துக்காகப் பலரை அனுகியும் கிடைக்கவில்லை. கிடைத்த பழைய படம் ஒன்றினைப் பொலிவுபடுத்தித் தமிழுலகின் பார்வைக்கு அறிஞர் சி.சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை முன்வைக்கின்றேன்.
பேராசிரியர் சி. சுப்பிரமணியனின் தமிழ் வாழ்க்கை:
பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள வடிவீசுவரம் என்னும் ஊரில் வாழ்ந்த சி. சிவதாணு பிள்ளை, கு. வள்ளியம்மாள் ஆகியோரின் மகனாக 31.08.1923 இல் பிறந்தவர்.
சி. சுப்பிரமணியன் தொடக்கக் கல்வியை ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் உயர்நிலைக் கல்வியைத் தமிழ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழத்தின் வித்துவான் தேர்வெழுதியும் வெற்றிபெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக இடைநிலைக் கல்லூரியில் சேர்ந்து பயின்று தேர்ச்சி பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.
நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். அக்கல்லூரியின் தமிழ்த்துறையின் தலைவராகவும், கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், திருவனந்தபுரம் திராவிட மொழியியல் பள்ளி முதலிய கல்வி நிறுவனங்களில் ஆய்வறிஞராகப் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம் முதலிய களஞ்சியப் பணிகளில் முனைப்புடன் பணியாற்றியவர். செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், செந்தமிழ் இதழ்களில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்தவர். பல்வேறு மலர்களின் பதிப்பாசிரியராக இருந்து பணியாற்றியவர். தொல்காப்பியத்துக்கு உரை வரைதல், வகுப்பு நடத்துதல், விளக்கம் வழங்குதல் முதலிய பணிகளை ஆர்வமுடன் செய்தவர்.
பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்களின் பேச்சொலியியல் நூலினைப் பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழகற்றியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டில் வெளியான இந்த நூல் நாட்டார் வழக்காற்றியல் துறை மாணவர்களுக்குப் பாட நூலாகவும் இருந்துள்ளது. பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்கள் மிகச் சிறந்த மொழியியல் அறிஞர் என்பதை இந்நூல் மெய்ப்பிக்கின்றது. பேச்சொலி என்னும் தலைப்பில் அமையும் இந்த நூல் 12 துணைத்தலைப்புகளால் அமைந்துள்ளது. அவை: 1. மொழி, 2. ஒலிப்பியல், 3. ஒலிப்பியல் அமைவு முறை, 4. அலை ஒலிப்பியல், 5. ஒலியனியல், 6. இயல்பு ஒலிப்பியல், 7. ஒலி, ஒலியன் அமைவு முறை, 8. இன்னிசை ஒலிப்பியல், 9. புணரொலிப்பியல், 10. வரலாற்றுமுறை ஒலிப்பியல், 11. ஒலியும் வரியும், 12. ஒலியியல் முடிவுகள் என்பனவாகும்.
பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்களின் தமிழ் இலக்கணக் கலைக்களஞ்சியம் நூல் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய நூல்களில் உள்ள இலக்கணக் கலைச்சொற்களை அடையாளம் கண்டு, கருத்தியல் பொருண்மைகளை எடுத்துக்காட்டும் அரிய நூலாகும். 1306 கலைச்சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அறிஞர் சு. இராசாராம் அவர்களின் துணையுடன் இந்த நூல் செம்பதிப்பினைக் கண்டுள்ளது.
பேராசிரியர் சி. சுப்பிரமணியனின் தமிழ்க்கொடை:
பேராசிரியர்
சி. சுப்பிரமணியன் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமைகொண்டவர்கள். தமிழ்
இலக்கண இலக்கியங்களில் ஆழங்கால்பட்ட புலமையுடையவர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் வாய்க்கப்பெற்ற
இவர் தமிழ் இலக்கணங்களை மொழியியல் கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட
கட்டுரைகளையும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் தம் ஆய்வுகளின் வழியாக வழங்கியவர்.
பேராசிரியர்
சி. சுப்பிரமணியன் நூல்கள்:
- வாய்மொழிக் கட்டுரைகள்
- ஆய்வுக்கட்டுரைகள்
- கோசிகன்
- சிந்தனைகள் (செய்யுள்)
- பேச்சொலியியல்
- பேச்சுக் கூறுபாட்டியல்
- தமிழ் இலக்கணக் கலைக்களஞ்சியம்
- தொல்காப்பியம் – எழுத்து – உரை- மொழியியல் பார்வையுடன்
- Tolkappiyam – Phonology
- Commonness in the metre of Dravidian Languages
நன்றி:
- தமிழகப் புலவர் குழு அணியும் பணியும், பா.வளன் அரசு
- ஆய்வுலகு போற்றும் தமிழறிஞர்கள், முனைவர்
சி. இலட்சுமணன்
- முனைவர் என். கிருஷ்ணன்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக