நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 அக்டோபர், 2025

முதுமுனைவர் அரு. மருததுரை மறைவு!

 

பேராசிரியர் அரு. மருததுரை

(02. 04. 1951 - 21.10.2025) 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்தியவருமான முதுமுனைவர் அரு. மருததுரை அவர்கள் 21.10.2025 அன்று திருச்சிராப்பள்ளியில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். பேராசிரியரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வில் இணைவதற்குப்(1993) பெருந்துணையாக இருந்தவர் நம் பேராசிரியர் அவர்கள். ஆய்வு மாணவனாக நான் இருந்தபொழுதும், சில காலம் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களுடன்  இசைக்களஞ்சியப் பணியில் ஈடுபட்டிருந்தபொழுதும் பெருந்துணையாக இருந்தவர். இயல்பிலேயே மாணவர்களுக்கு உதவும் பண்புகொண்டவர். மிகச் சிறந்த தமிழ்ப்பற்றும் தமிழ் இன உணர்வும்கொண்டு விளங்கிய பேராசிரியரின் மறைவு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

பேராசிரியர் அரு மருததுரை அவர்கள் 02. 04. 1951 இல் முசிறிக்கு அருகில் உள்ள சிற்றூரில் பிறந்தவர். தமிழில் முதுகலை, முனைவர், முது முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 35 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்து, இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், புல முதன்மையர், சிறப்புநிலைப் பேராசிரியர் எனப் பல நிலைகளில் பணியாற்றியவர். இவரின் மேற்பார்வையில் 15 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 

தணிகைப் புராணம் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும்(1982), மூவர் தேவாரத்தில் சிவபெருமான் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முது முனைவர் பட்டமும்(1987) பெற்றவர். 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் உமையாள்புரம் செவ்வந்திலிங்கபுரம் என்னும் ஊரில்  கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி என்னும் கல்லூரியை நிறுவி, அதன் முதல்வராகவும் இயக்குநராகவும் தமிழ்ப்பணி செய்தவர். 

பேராசிரியர் அரு. மருததுரை அவர்கள் நாட்டுப்புறவியல் ஆய்வாளராக விளங்கியதுடன் சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம் எனப் பல துறைகளில் பங்களிப்பு நல்கியவர். 

முதுமுனைவர் அரு. மருததுரை அவர்களின் தமிழ்க்கொடை 

1.   புராண இலக்கிய வரலாறு, 1998

2.   தமிழில் கொலைச்சிந்து, 1991

3.   அழகு நாச்சியம்மன் திருக்கோயில்(வரலாறும் கும்மியும்) 1992

4.   புராண இலக்கியச் சிந்தனைகள், 1992

5.   நாட்டுப்புற வழிபாட்டுக் கூத்துகள், 1993

6.   நாட்டுப்புற வாழ்வியல், 1995

7.   வளநாடு பொன்னர் சங்கர் வரலாறு, 1999

8.   மூவர் தேவாரத்தில் சிவ வடிவங்கள், 1998

9.   நாட்டுப்புற நிகழ் மரபுகள், 1998

10. பாபா சாகிப் அம்பேத்கர், சாகித்ய அகாதெமிக்காக(தமிழாக்கம்)

11. நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள், 1998

12. கலைஞர் வளர்தமிழ் 2010, பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள். 

புதினம்: 

1.   மூனுவேட்டி (2011)  

சிறுகதைகள் 

1.   மாசி மலை, 2009

2.   புருவை 2013

3.   வாகனை, 2018

4.   குருவிக் கதிர், 2019

5.   முள்ளு முருங்கை, 2021

6.   காமங்கறி, 2022 

சிறுவர் இலக்கியம் 

1.   சின்னமணிக் குயிலே,  2021

2.   நல்லதே நடக்கும், 2021

3.   தேவதை வந்தாள், 2022

4.    MOTHERLY LOVE (2023)

5.    MANCHE JARUGUTUNDHI (Telugu) (2023)

6.    BHALAA HII HOGAA (Hindi) (2023)

7.    AAGUVUDELLA OLLEYADE (Kennada) (2023)

8.   FOX FESTIVAL (English) (2023) 

கருத்துகள் இல்லை: