நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 25 ஜூலை, 2024

இணைய ஆற்றுப்படை குறித்து முனைவர் பா. வளன் அரசு....



அன்பார்ந்த தம்பி முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு,

வணக்கம். வாழிய நலம்.

இணைய ஆற்றுப்படை என்னும் அரிய பனுவலை 563 அடிகளுடன் ஆசிரியப்பாவால் வழங்கியுள்ள பாங்கு பெரிதும் பாராட்டத்தக்கது

இணையத்தளங்கள் ஐம்பது பற்றிய தொகுப்பு பேருதவி புரிகிறது. தமிழ் இணையத் துறைக்குப் பங்களித்தோர் பட்டியலை ஒளிப்படத்துடன் நல்கியது பெருமிதம் தருகிறது

ஒல்லும் வகையெல்லாம் தமிழ் தழைத்தினிதோங்க விழைந்து உழைத்திடும் தங்களைப் போற்றி மகிழ்கிறன்

தங்கள் முயற்சி திருவினை ஆக்குவது உறுதி

பா. வளன் அரசு

21.07.2024

சனி, 13 ஜூலை, 2024

பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் இணைய ஆற்றுப்படை நூலினை அறிமுகப்படுத்தும் வலையொளி!


 முனைவர் பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழும் இணையமும் அறிந்த பேராசிரியர் ஆவார். வாணியம்பாடியில் மருதர் கேசரி ஜெயின் மகளிர்  கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். இணைய ஆற்றுப்படை நூலினை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து, வலையொளியாக வெளியிட்டுள்ளார். அவர்தம் அன்புக்கும் அறிமுகத்துக்கும் நன்றி.

வாய்ப்புடையோர் கேட்டு மகிழுங்கள்.

இணைப்பு


View Synonyms and Definitions

வியாழன், 11 ஜூலை, 2024

மலேசியத் தமிழ் வள்ளல் மாரியப்பன் ஆறுமுகம் மறைவு!


மாரியப்பன் ஆறுமுகம் 


மு.இளங்கோவன், மாரியப்பனார், வாணன் (கோப்புப் படம்)


(இடமிருந்து இரண்டாவது: மாரியப்பனார், கோப்புப் படம்)

மலேசியத் திருநாட்டின் கிள்ளான் நகரில் சி. எஸ். கே. வணிக நிறுவனத்தை நடத்திவந்தவரும், தமிழ்நெறிக் கழகம், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு  தமிழமைப்புகளின் வழியாகத் தமிழ்த் தொண்டாற்றியவரும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களை ஆதரித்து, புரந்து வந்தவருமான தமிழ் வள்ளல் மாரியப்பன் ஆறுமுகம் அவர்கள் (அகவை 74) இன்று (11.07.2024) மாலை 5 மணியளவில் மாரடைப்பால், மலேசியாவில் இயற்கை எய்தினார் என்ற பெருந்துயரச் செய்தியறிந்து, பெருங்கவலையுற்றேன். மாரியப்பனாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கின்றேன்

மாரியப்பனார் அவர்கள் 14.10.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் ஆறுமுகம் பொன்னன், பேச்சாயி சடையன் என்பதாகும். தோட்டத் தொழிலாளியின் மகனகாப் பிறந்து, தொழிலதிபராக உயர்ந்தவர். மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர். திருக்குறளைப் பரப்பிய பெருமைக்குரியவர். தமிழகத்திலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் தமிழ் அறிஞர்கள், தொண்டர்களை வரவேற்று, விருந்தோம்பி வழியனுப்பி வைக்கும் பெரும்பண்பினர். அ. பு. திருமாலனார், குறிஞ்சிக்குமரனார் உள்ளிட்ட மலேசியத் தமிழறிஞர்கள் மீது மிகப்பெரும் பற்றுடையவர். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் திருவள்ளுவர் தவச்சாலை உருவாக்கியபொழுது பெரும்பொருள் நல்கியவர். இளங்குமரனாரைப் பலமுறை மலேசியாவுக்கு அழைத்து, தமிழ்ப்பொழிவுகள் ஆற்றுமாறு செய்தவர். 

மாரியப்பனார் அவர்களுடன் நான் கால் நூற்றாண்டுக்காலம் பழகியுள்ளேன். முதன் முதல் 2001 மலேசியாவுக்குச் சென்றது முதல் இந்நொடி வரை அவர்தம் நட்பினை உயர்வாகப் போற்றி வருகின்றேன். அவர்தம் ஒத்துழைப்புடன்தான் என் நூல்கள் மலேசியாவில் வெளியீடு கண்டன. அவர் இல்லம் தமிழறிஞர்களை வரவேற்றுத் தங்க வைக்கும் தமிழ்க்குடில் ஆகும். என் நூல்களில் அவரின் திருப்பெயரை எப்பொழுதும் நன்றிப்பெருக்குடன் பொறிக்கும் வகையில் நான் மிக உயர்வாக மாரியப்பனாரைப் போற்றி வந்தேன். அண்மையில் வெளிவந்த இணைய ஆற்றுப்படை நூலில் அவருக்கு நன்றி சொல்லி, அவர்தம் திருப்பெயரைப் பொறித்துள்ளேன். ஐயாவின் பார்வைக்கு அந்த நூல் செல்லும் முன்னர் ஐயா அவர்கள் இயற்கை எய்தியமை பெருந்துயரமாக அமைந்துவிட்டது. 

மாரியப்பனார் அவர்களின் துணைவியார் வெற்றிச்செல்வி அம்மா, தம்பி வாணன், தோழர் சசி அவர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களின் துயரில் நானும் பங்கேற்கின்றேன். மாரியப்பனாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்வோம். அதுவே அவருக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும். 

வாழ்க! மாரியப்பன் ஆறுமுகம் அவர்களின் பெரும்புகழ்

வியாழன், 4 ஜூலை, 2024

புதிய வரவு: இணைய ஆற்றுப்படை


 

கணினி, இணையத்தில் தமிழ் இணைந்த வரலாறு அரை நூற்றாண்டைத் தொட உள்ளது. கணினி, இணையத்தில் தமிழை இணைப்பதற்குத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் முயன்று உழைத்துள்ளனர். அவர்களின் அறிவுழைப்பை உரைநடையில் நூலாகவும் கட்டுரையாகவும் எழுதி மக்கள் மன்றத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளனர். 

மரபுத் தமிழில் தொழில் நுட்ப வரலாற்றை வரைதல் வேண்டும் என்ற நோக்கில் 563 ஆசிரியப்பாவில் அமைந்த பாடலடிகளில் இணைய ஆற்றுப்படை என்னும் பெயரில் நூல் ஒன்றினை எழுதியுள்ளேன். இந்த நூல் உருவாவதற்கும், பதிப்பாவதற்கும் பெருந்தூண்டுதலாக இருந்தவர் முனைவர் நாக. கணேசனார் ஆவார். இவர் அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின் அறிவியலறிஞர் ஆவார். பலவாண்டுகளுக்கு முன்னர் என் மரபுப் பயிற்சியை அறிந்த இவர் இணைய ஆற்றுப்படையை எழுதுக எனத் தூண்டினார். நானும் நூறு பாடலடிகளை ஆர்வமாக எழுதி அன்றொரு நாள் விடுத்தேன். அதன் பின்னர் “இடைக்கண் முறிந்து”, வேறு பணிகளில் உழன்றவண்ணம் இருந்தேன். 

அண்மையில் நாக. கணேசனார் மீண்டும் இணைய ஆற்றுப்படையை உருவப்படுத்தி அனுப்புக என்றார். வேனில் விடுமுறைக்காலம் தொடங்கியது… வெப்பக் கடுமையில் வீட்டில் முடங்கியிருந்தபொழுது இணைய ஆற்றுப்படையை முழுமையாக நிறைவு செய்து அனுப்பினேன். அவரின் திருத்தங்களாலும், செய்திச் சேர்க்கைகளாலும் ஆற்றுப்படை பொலிவுபெற்றது. தஞ்சைப் பேராசிரியர் முனைவர் இரா. கலியபெருமாள், தமிழாகரர் பேராசிரியர் தெ. முருகசாமி ஆகிய தமிழ்ப் பெரியோர்கள் நூலினை மேற்பார்வையிட்டதுடன் நூலுக்குரிய வாழ்த்துரைகளை வழங்கினர். 

இந்த நூலில் தமிழ் நிலச் சிறப்பு, தமிழர் பெருமை, தமிழுக்கு அவ்வப்பொழுது பிற இனத்தாரால் நடந்த கேடுகள், அதனைத் தடுத்து நிறுத்திய தமிழர்களின் ஈகங்கள், தமிழ் மக்களின் உலகப் பரவல், கணினி இணையம் அறிமுகம், கணினி, இணையத்தின் பயன்கள், இவற்றில் தமிழை உள்ளிட உழைத்த அறிஞர்கள், மென்பொருள் கண்டோர், எழுத்துருக்கள் தந்தோர், தமிழ் வளம் தாங்கிய இணையத் தளங்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பணிகள், நூலகம், தமிழ் விக்கி உள்ளிட்ட உயர்பணியாற்றும் இணையத்தளங்களின் அறிவுக்கொடைகள், தனி மாந்தராக இருந்து அறிவு நல்கை தந்த பெருமக்களின் உழைப்பு முதலியன இந்த நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன. 

தமிழ் வளம் தாங்கிய இணையத்தளங்கள், தமிழ் இணையத்துறைக்குப் பங்களித்தோர் என்ற இரண்டு பின்னிணைப்புகள் நூலின் பெருமைக்கு வலிமை சேர்க்கின்றன. இந்நூலில் முதன்மையான 50 இணையத் தளங்களின் முகவரிகள் உள்ளன. தமிழ்க் கணினி, இணையத்துறைக்குப் பாடுபட்ட 34 ஆளுமைகளின் பணிகளை ஓரிரு வரிகளில் அறிமுகம் செய்து, படத்துடன் வெளியிட்டுள்ளோம். உலக அளவில் இப்பணிகள் விரிந்து நடப்பதால் விடுபட்ட செய்திகள் அடுத்தப் பதிப்பில் இணைக்கப்படும். 

மரபினைக் காப்போம்! புதுமையைப் போற்றுவோம் என்ற அடிப்படையில் இணைய ஆற்றுப்படையை வாங்கிப் படியுங்கள். பரப்புங்கள். 

புதுமையை விரும்பும் ஆசிரியப் பெருமக்கள், பேராசிரியர்கள், கணினி இணைய ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்த நூலினை வாங்கிப் படிப்பதுடன், மாணவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். தமிழ் தழைக்கட்டும். 

நூல்: இணைய ஆற்றுப்படை

ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்

பதிப்பாசிரியர்: முனைவர் நாக. கணேசன்

பக்கம்: 48

விலை: 100 உருவா

தொடர்புக்கு: muetamil@gmail.com / +91 9442029053 புலனம், பேசி

Rephrase with Ginger (Ctrl+Alt+E)