முனைவர் வீ. சேதுராமலிங்கம்
[முனைவர் வீ. சேதுராமலிங்கம் அவர்கள் விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் பிறந்தவர். பள்ளி ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல்வேறு பிள்ளைத்தமிழ் நூல்களை எழுதியவர். நூல்களுக்கு உரை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் நெறிப்படுத்தலில் இராமநாதபுர வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழக அரசின் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்.]
தொல்காப்பிய ஆய்வுகளில் ஈடுபட்டு உழைக்கும்பொழுது எதிர்பாராத வகையில் அரிய முத்துகள் போலும் பல்வேறு உண்மைகள் அவ்வப்பொழுது வெளிப்பட்ட வண்ணம் உள்ளன. அவ்வகையில் தொல்காப்பியர் பெயரில் இரண்டு பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன என்ற உண்மையை அண்மையில் அறிந்தபொழுது வியப்பாக இருந்தது. 2015 நவம்பர்த் திங்களில் பேராசிரியர் வீ. சேதுராமலிங்கம் அவர்களும், 2021 ஆம் ஆண்டில் புலவர் ஆ. காளியப்பன் அவர்களும் தொல்காப்பியர் பெயரில் பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றியுள்ளனர். பிள்ளைத்தமிழ் நூல் என்பது பழைய மரபு வடிவமாகும். பாட்டுடைத் தலைவரின் பெருமையுரைக்கும் இத்தகு மரபு வடிவங்களில் எழுதுவோர் அருகிவரும் வேளையில் இப்பெருமக்களின் பணிகள் போற்றிப் பாராட்டத்தக்கன. மேற்கண்ட புலவர் பெருமக்கள் இருவரும் தமிழ்ப் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையிலும் தமக்கிருக்கும் குறைந்த அளவு ஏந்துகளைக் கொண்டு, முந்து தமிழ்ப் புலவரின் பெருமையை நன்றியுடன் போற்றிப் பாடி, உரையுடன் நூல்களை வெளியிட்டமைக்குத் தமிழுலகம் இவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது.
முனைவர் வீ. சேதுராமலிங்கம் அவர்களின் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் நூல் தொல்காப்பியன் சீர், தமிழ்ச்சீர், தமிழ்ச் சான்றோர் சீர், தமிழ்வேந்தர்சீர், தமிழறிஞர்சீர் முதலியனவற்றைப் பேசும் வகையில் 102 ஆசிரியப்பாக்களால் அமைந்துள்ளது. வித்துவான் வீ. சேதுராமலிங்கம் அவர்கள் பாடியுள்ள தொல்காப்பியர் பிள்ளைத் தமிழ் நூலில் தமிழர்களின் மருத்துவம், தமிழர்களின் பண்பாட்டில் சிறந்த செயலைப் போற்றுதல், ஆன்மீகச் சிந்தனை, தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கிய நோக்கு முதலிய செய்திகள் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெற்று, கற்பார்க்குப் பெருமகிழ்வைத் தருகின்றன.
தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் பாடும் முகத்தான்
முருகப்பெருமானின் திருவடியைப் பணிந்து வணங்கி, முருகப்பெருமானின் சிறப்புகளை முதற்பாடலில்
நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் பாடல் அவையடக்கமாக அமைந்து, முனைவர் ஒப்பிலா.
மதிவாணன் வேண்டிக்கொள்ள இந்த நூல் எழுதப்பெற்றுள்ளது என்று நன்றிப் பெருக்குடன் நூலாக்க
வரலாற்றைப் பதிவு செய்துள்ளமை பாராட்டினுக்கு உரியது.
பேராசிரியர் வீ. சேதுராமலிங்கம் அவர்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் மரபு வடிவில் பாடல் புனைவதில் பெருந்திறன்பெற்றவர் என்பதை இவர்தம் ஆசிரியப்பாவடிகள் நமக்குக் காட்டுகின்றன. தொல்காப்பியர் என்னும் குழந்தையைக் கண்ணபெருமான் காத்தருள வேண்டும் என்பதை நம் புலவர் பெருமான் சேதுராமலிங்கனார்,
மேவிய
வேந்தர் குலத்துதித்து
மென்மை ஆயர் குலம்வளர்ந்தான்
வேதியர் போலக் கீதைதந்த
மேன்மைக் கண்ணன் அடிபணிவாம்
தாவில்
குன்றக் குன்றவரால்
தழைவயல் உழந்துழை உழவர்களால்
தாழ்கடல் உப்பளி உமணர்களால்
தரமிகு பால்தரும் ஆயர்களால்
காவிய
உலகம் கண்எய்தும்
கருத்தைக் கருப்பொருள் துணைகொண்டு
காரண இலக்கணத் தால்விளக்கும்
கவின்தொல் காப்பியன் தனைக்காக்க ((1:6)
என்று பாடியுள்ள திறத்திலிருந்து இவர்தம் யாப்புப் பயிற்சியும், இன்னோசை நயம் ததும்பப் பாட்டியற்றும் புலமையும், சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் அமையும் பெரும்புலமையும் நன்கு விளங்குகின்றன. இந்த நூலில் இடம்பெற்றுள்ள பல பாடல்களில் சித்தர் மருத்துவச் செய்திகள் பொருத்தமுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த நூல் விரித்து ஆராயத்தக்க அரும்படைப்பாகும். இது நிற்க.
சேதுராமலிங்கனார் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழைப் போல் வேறுபல சிற்றிலக்கியங்களையும் படைத்துத் தமிழுக்குப் பெருமைசேர்த்துள்ளார். தொண்ணூறு அகவையிலும் தளராமல் தமிழ்ப்பணியாற்றும் இப்பெருமகனாரின் தமிழ் வாழ்க்கையை அன்பர்களின் பார்வைக்கு அறிமுகம் செய்கின்றேன்.
முனைவர் வீ. சேதுராமலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை
சிவ. வீ. சேதுராமலிங்கம் அவர்கள் விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் வாழ்ந்த சிவ. இராம. வீராண்டியா பிள்ளை, சிவ.வீர. வள்ளியம்மை ஆகியோர்க்கு மகனாக 11.10.1935 இல் பிறந்தவர்.
மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டம் பெற்றவர். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியர் பயிற்சி பெற்றவர்.
பேராசிரியர் தமிழண்ணல் மேற்பார்வையில் இராமநாதபுர வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றமை குறிப்பிடத்தக்க செய்தியாகும். நடுவப்பட்டி, தியாகராசபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தம் பணியை 1957 முதல் 1973 வரை ஆற்றியவர். இராமநாதபுரம், சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் 1974 முதல் 1995 வரை தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1998 முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி மாணவர்களுக்குப் பழந்தமிழ் நூல்களைப் பாடமாக நடத்திய பெருமைக்குரியவர்.
பல்வேறு கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், கவியரங்குகள், சமயச் சொற்பொழிவுகள், தொடர்பொழிவுகள் என்று தம் பணிகளை வகுப்பறைகளைக் கடந்தும் செய்தவர். அவ்வகையில் பாவைப் பொழிவுகளைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் செய்து வருபவர். இராமாயணம், பாரதம், பெரியபுராணம் குறித்த பொழிவுகளையும் ஆற்றி மக்களுக்குச் சமய உணர்வு தழைக்க உழைத்தவர்.
தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதுபெற்ற பெருமைக்குரியவர்(2020).
பேராசிரியர் வீ. சேதுராமலிங்கம் அவர்களின் துணைவியார் பெயர் இராமலட்சுமி என்பதாகும்.
முனைவர் வீ. சேதுராமலிங்கம் அவர்கள் கட்டுரைகள், பாடல்கள், உரையாசிரியர் பணி என்று பல்வேறு தமிழ்ப் படைப்புகளை வழங்கியுள்ளார். பல்துறை வித்தகராகப் பணியாற்றியுள்ள இவர்தம் தமிழ்க் கொடைகளைக் கீழ்வரும் தலைப்புகள் நமக்கு உணர்த்தும்.
முனைவர் வீ. சேதுராமலிங்கம் தமிழ்ப் படைப்புகள்:
1. வள்ளல் பச்சையப்பர் பிள்ளைத் தமிழ்
2. புரட்சித்தலைவியின் பிள்ளைத்தமிழ்
3. பிள்ளையார்பட்டி பிள்ளைத்தமிழ்
4. திருத்தணி முருகன் பிள்ளைத்தமிழ்
5. வள்ளலார் பிள்ளைத்தமிழ்
6. திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ்
உரையாசிரியர்
1. தமிழ்த்தாய் பிள்ளைத்தமிழ்
2. தென்காசித் தலபுராணம்
3. நீதி நூல்கள்
4. ஏரகப் பல்வண்ணத்தந்தாதி
படைப்பு
1. தெம்மாங்குப் பூந்தமிழ்
சென்னைப் பல்கலைக்கத்தின் பாடத்திட்டத்திற்காகச் சங்க இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, திருக்குறள் கட்டுரைகள் என்று பல்வேறு தலைப்புகளில் பாட நூல்களை எழுதியளித்தவர்.
இவர்களுக்கு நன்றி:
முனைவர் ஔவை ந. அருள், இயக்குநர், தமிழ்
வளர்ச்சித்துறை
முனைவர் நாக. கணேசன், அமெரிக்கா
கவிஞர் தஞ்சை பீட்டர், பேதுரு பதிப்பகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக