[பேராசிரியர் தா.வே. வீராசாமி அவர்கள் அகராதிக்கலை வல்லுநர்; பதிப்புக்கலை அறிஞர்; இலக்கியத் திறனாய்வாளர்; மொழிபெயர்ப்பு வல்லுநர் எனப் பன்முக அறிஞராக அறியப்படுபவர். புதினங்கள் (நாவல்கள்) குறித்த திறனாய்வு நூல்களை வழங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பெருமைக்குரியவர். ]
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வு மாணவனாக இருந்தபொழுது (1993-97), மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. நண்பர்களின் வேண்டுகோளின்படி சில காலம், விடுதியின் செயலராகவும் இருந்தேன். அப்பொழுது முனைவர் வீர. முத்துக்கருப்பன் அவர்கள் துணைவேந்தராகவும், முனைவர் சி. தங்கமுத்து அவர்கள் பதிவாளராகவும் இருந்து, பல்கலைக்கழகத்தை வழிநடத்தினர். அப்பல்கலைக்கழத்தில் அமைய இருந்த பாரதிதாசன் உயராய்வு மையத்திற்கு விரிவுரையாளராக, பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த என்னைப் பணியமர்த்தும் ஒரு சூழல் பல்கலைக்கழகத்தில் நிலவியது. மாண்புநிறை துணைவேந்தர் அவர்களும் மதிப்பிற்குரிய பதிவாளர் அவர்களும் எனக்குப் பணிவழங்க ஆர்வமாக இருந்தனர். ஆயின் அது நடைபெறுவதற்குத் தடையும் தோன்றியதால் என் பட்டம் பெறுவதே முதல் பணி என்றும், பட்டம் இருந்தால் எங்கும் வேலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நினைத்து, பல்கலைக்கழகத்துப் பணியை நினைவிற்கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்திவந்தேன். இது நிற்க.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயராய்வு மையத்திற்குப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பேராசிரியர் தா. வே. வீராசாமி ஐயா அவர்கள் 01.12.1995 இல் பணியமர்த்தப்பட்டார்கள். பாரதிதாசன் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து நூல் வெளியிட்ட சிறப்புணர்ந்து, பல்கலைக்கழகம் அவருக்குப் பணி ஆணை வழங்கியது. பேராசிரியர் தா.வே.வீ. அவர்கள் விருந்தினர் விடுதியில் தங்கவும், மாணவர் விடுதியிலிருந்து அவர்களுக்கு உணவு செல்லவும் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருந்தது. தா. வே. வீ. அவர்களை முன்பே நூல்களின் வழியாக அறிவேன் எனினும் அப்பொழுதுதான் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. விடுதியிலிருந்து உணவு செல்வதால் விருந்தினர் இல்லத்தில் தனித்து உண்ணாமல் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்த விரும்பிய பேராசிரியர் தா.வே. வீ அவர்கள் விடுதிக்குச் சில பொழுதுகளில் வந்துவிடுவார்கள். நான் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்ததால் என்மீது அளவுக்கு அதிகமான அன்பும் ஈடுபாடும் நம் பேராசிரியருக்கு இருந்தது. உண்பதற்கு முன்பாக என் அறைக்கு வந்து, என்னையும் அழைத்துச் செல்வார்கள். சில நாள்களில் இருவரும் இணைந்தே அலுவலகம் செல்வதும் விடுதிக்குத் திரும்புவதுமாக இருப்போம். அவர்தம் அலுவலகம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் அருகில் இருந்தது. ஓர் அறையில் தா.வே.வீ அவர்களும் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களும் அமர்ந்து அவரவர் ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். நடைப்பயிற்சியின்பொழுது தமிழகத்துக் கல்வி நிலை, அவர்தம் கல்வியார்வம், ஆய்வு ஆர்வம், திரைப்படம் பார்க்கும் ஆர்வம், அடிக்கடி சினம் கொள்ளும் இயல்பு யாவற்றையும் என்னிடம் ஒரு வகுப்புத் தோழரைப் போல் கூறி மகிழ்வார்.
நண்பர்களுடன் உணவு விடுதிகளுக்குச் சென்றால் நம்மைப் பணம் கொடுக்க அனுமதிக்க மாட்டார். மாணவர்கள் பணநெருக்கடியில் இருப்பார்கள் என்பதே காரணம். நேரந் தவறாமை, கடும் உழைப்பு, இலக்கியத்தை நுட்பமாக நோக்கிப் பார்க்கும் புதிய பார்வை யாவும் அவரிடம் நான் கண்ட உயர்பண்புகளாகும். தம் ஆசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களின் சிறப்புகளையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றிய தம் பட்டறிவுகளையும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த நினைவுகளையும் ஒவ்வொரு நாளும் பேராசிரியருடன் அமையும் உரையாடலின்பொழுது அறிந்துகொள்வேன். பல மாதங்கள் பேராசிரியர் தா.வே.வீ. அவர்களுடன் பழகிய நான் வேறு நிறுவனத்தில் பணியாற்றச் சென்றதால் தா.வே.வீ. அவர்களின் தொடர்பு பின்னாளில் குறைந்தது.
பாரதிதாசன் ஆய்வுகளில் முன்னின்று உழைத்த பெருமகனார் தாவே.வீ. அவர்கள் சிலவாண்டுகளுக்குப் பின்னர் இயற்கை எய்திய துன்பச் செய்தியறிந்து அந்நாளில் துயருற்றேன். அதன் பிறகு தா.வே.வீ. அவர்களின் தமிழ்ப்பணிகளைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்து எழுத வேண்டும் என்று நினைத்தும் சிறிய அளவில்தான் என்னிடம் குறிப்புகள் இருந்தன. போதிய குறிப்புகள் கிடைப்பதில் காலம் தாழ்ந்தது. அண்மையில் பேராசிரியர் சோ. பாண்டிமாதேவி அவர்கள் தா.வே. வீராசாமி அவர்களின் வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். அந்நூலைப் பெற்று தா.வே.வீ. அவர்களின் ஆளுமையை முழுவதுமாக அறிந்துகொண்டேன். அவர்தம் நூலில் தா.வே. வீராசாமி குறித்த விரிவான செய்திகளும் அவரின் படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும் விரிவாக இடம்பெற்றுள்ளன. தா.வே.வீ. அவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்திய முனைவர் சோ. பாண்டிமாதேவி அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது. தா.வே.வீ. அவர்களின் திருமகனார் திருவாளர் கண்ணப்பனார் அவர்களும் தம் தந்தையார் குறித்த விவரங்களை உரையடலில் மகிழ்வுடன் பகிர்ந்துகொள்வார்.
பேராசிரியர் தா.வே. வீராசாமி அவர்களின் இளமைப் பருவம்:
தா. வே. வீராசாமி அவர்கள் 01.02.1931 இல் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் வேங்கடாசலம் – தெய்வானை அம்மாள் ஆகும். இளம் அகவையிலேயே தந்தையார் இயற்கை எய்திய காரணத்தால் தமையனார் தா.வே. சுந்தரம் அவர்களால் வளர்க்கப்பெற்றவர். தாராபுரம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். அப்பள்ளியில் பணியாற்றிய கா. காழிப்பனாரிடம் தமிழ் பயின்றவர். காழிப்பனார் சீர்திருத்தக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தா. வே. வீ. பள்ளியிறுதி வகுப்பினை 1948 இல் நிறைவு செய்தவர். பள்ளிக் கல்வி வரைதான் தொடர் படிப்பு இருந்தது. அதன்பிறகு தம் சொந்த முயற்சியால் படித்து, உயர்நிலையை எய்தினார். 1958 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் தேர்வில் தேறியவர். 1959 இல் இளங்கலைத் தமிழ் பயின்றவர். 1961 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலை முதுவர் பட்டம் பெற்றவர்.
தா. வே. வீராசாமி அவர்கள் 1949 இல் எழுத்தராகத் தம் பணியைத் தொடங்கினார். 1951-53 இல் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிலவும் பணியாற்றவும் வாய்ப்பு அமைந்தது. 1953-58 வரை கோவை இராமலிங்கம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1958 முதல் 1968 வரை கோவை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களை நெறியாளராகக் கொண்டு, பெரியபுராணம் இலக்கணம் – சொல்லடைவுகள் (Grammatical Study of Periyapuranam with Index ) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார் (1962- 1966). அதன் பிறகு கோவை பூ. சா. கோ. கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் (1967-69), 1969 முதல் 1972 வரை கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகவும், 1972 முதல் 1973 வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறைத் தலைவராகவும், 1973 முதல் 1975 வரை மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறையின் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.
1975 முதல் 1983 வரை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1983 முதல் 1991 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பியல் துறைப் பேராசிரியராகவும், பெருஞ்சொல்லகராதியின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் கூடுதல் பணியாற்றியவர். 1992 முதல் 1993 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகராதித் துறையின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் 1994 முதல் 1995 வரை திருவனந்தபுரம் உலகத் திராவிட மொழியியல் ஆய்வுப்பள்ளியின் சிறப்புநிலை ஆய்வாளராகவும் பணியாற்றியவர். 01.12.1995 முதல் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றிப் பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பாவுக்கு அடைவு தயாரித்து வழங்கியவர்.
பேராசிரியர் தா. வே. வீராசாமி அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், செர்மன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். சாகித்ய அகாதெமிக்காக அலாகரஞ்சன் தாஸ் குப்தாவின் புத்த தேவ போஸ் என்னும் நூலை மொழிபெயர்த்துள்ளார். அதுபோல் நேருவின் வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்துள்ளார்.
தா. வே. வீராசாமி அவர்கள் 23 - க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். 250 - மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார். இவரின் மேற்பார்வையில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் நாவல்கள் குறித்த ஆய்வுகள் முதன்மையிடத்தில் இருந்ததால் இவரின் நூல்கள், கட்டுரைகள் யாவும் நாவல்கள் குறித்து மிகுதியாக இருந்தன. இவரின் மாணவர் அறிவழகன் (கவிஞர் அறிவுமதி அவர்களின் உயிர்த்தோழர்) (கடலூர்) ஜெயகாந்தன் ஆய்வடங்கள் நூலை வெளியிட்டவர்.
தா. வே. வீராசாமி அவர்களுக்கு 08.07.1957 இல் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் இராமலெட்சுமி ஆகும். இவர்களுக்கு மணிமேகலை, கண்ணப்பன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
தமிழ் ஆய்வுலகில் தனித்ததோர் அடையாளம் பெற்றிருந்த அறிஞர் தா.வே. வீராசாமி அவர்கள் தாம் முன்னாளில் பயின்ற பள்ளியில் சிறப்பு விருந்தினராகச் சென்று, உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு, 11.07.1997 இல் இயற்கை எய்தினார்.
முனைவர் தா. வே. வீராசாமியின் தமிழ்க்கொடைகள்:
1. உழைப்பின் வெற்றி (1962)
2. வெற்றியின் இருமுகம் (1969)
3. பொன்குஞ்சு (1970)
4. தமிழ்ச்சுடர் (1970)
5. பட்டறையிலே பாரதிதாசன் (1971)
6. தமிழ் நாவல் – ஓர் முன்னோட்டம் (1973)
7. Tamil An Intensive Course (Co – Author)
1973
8. ஆய்வுக் கதிர் (1974)
9. தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளம் (ப.ஆ.) (1975)
10. தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 1 (1975)
11. கல்கி அகிலன் படைப்புக்கலை (1977)
12. தமிழ் சமூக நாவல்கள் (1978)
13. தமிழ் நாவல் வகைகள் (1979)
14. தமிழ் நாடக வரலாற்றில் பாரதிதாசன்
(1981)
15. தந்திவனப் புராணம் (ப.ஆ) (1981)
16. தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வம் (1981)
17. பாரதி இலக்கியம்: ஒரு பார்வை (1982)
18. புத்த தேவ போஸ் (1982)
19. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி (1986)
20. தமிழ் நாவல் இயல்(1986)
21. பெருஞ்சொல் அகராதி தொகுதி 1 (1988)
22. தமிழ்க் காப்பியக்கொள்கை- கம்பராமாயணம்,
வில்லிபாரதம் (1988)
23. அகராதிக் கலை (1989)
24. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் (1985)
25. பாரதிதாசன் கவிதைகளில் அருஞ்சொல்லகராதி (மணிமேகலை வெண்பா) 1996
நன்றி: முனைவர் சோ. பாண்டிமாதேவி அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக