[பாவலர் ப. எழில்வாணன் அவர்கள் மரபு பாடல்கள் இயற்றுவதிலும், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் வரைவதிலும் ஈடுபாடு கொண்டவர். பள்ளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். யாப்புத்துறையில் பேரீடுபாடு கொண்டவர். இவர் இயற்றிய செந்தமிழ்ச் செய்யுட்கோவை, யாப்பு விளக்கம் என்னும் நூல்கள் இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தவை.]
தென்மொழி, தமிழ்ச்சிட்டு உள்ளிட்ட தூய தமிழ் ஏடுகளைப் படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் பாவலர் ப. எழில்வாணன் என்பதாகும். தமிழ்ப்பற்றும், தமிழ்ப் புலமையும் ஒருங்கே வாய்த்த இப்பெருமகனார் ஆசிரியர் பணியின் வழியாகவும், நூலாக்கப் பணிகளின் வழியாகவும் தூய தமிழ்த்தொண்டாற்றி வருபவர். அன்பும் எளிமையும் ஓருருக் கொண்டமை போல உருத்தோற்றம் கொண்ட இத்தமிழ்த்தொண்டரின் வாழ்வியலையும் பணிகளையும் அறிதல் தமிழர் கடமை.
பாவலர் ப. எழில்வாணன் அவர்களின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். அது வடமொழிப் பெயர் என்பதால் எழில்வாணன் எனத் தம் பெயரை மாற்றி அமைத்துக்கொண்டவர். இவர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் விருப்பாச்சி என்னும் ஊரில் 01.02.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் பழனியப்பன் – காளியம்மாள் என்பதாகும். விருப்பாச்சி என்னும் ஊர் மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்து வேளாண்மையாலும், மலை வாழைப்பழத்தின் சிறப்பாலும் புகழ்பெற்ற ஊராகும்.
ப. எழில்வாணன் பள்ளிக் கல்வியை விருப்பாச்சியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும்(1955-60), நடுநிலைக் கல்வியை அவ்வூரில் உள்ள ஆர். சி. பாத்திமா நடுநிலைப் பள்ளியிலும், பின்னர் உயர்நிலைக் கல்வியைக் கருவூர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்(1964-67).
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடித்த ப. எழில்வாணன் மேலூர் அரசினர் ஆதாராப் பயிற்சிப் பள்ளியில் ஈராண்டுகள் பயின்று இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
1973 ஆம் ஆண்டில் பள்ளபட்டி உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியேற்றவர். ஆசிரியர் பணியில் இருந்தவாறே படித்துப் புலவர் பட்டமும் இலக்கிய இளையர் பட்டமும் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக, இளைஞர் இலக்கியம் – பள்ளிப்பறவைகள் –ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் பாரதிதாசன்- பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து மெய்ம்மவியல் முதுவர் (எம்.ஃபில்) பட்டம் பெற்றவர். பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக, முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி 31.05.2008 இல் பணி நிறைவு பெற்றவர்.
ப. எழில்வாணன் பிற அன்பர்களுடன் இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார். இயற்கை வடிவங்கள், நீதிகேட்ட நெடும்பயணம், வாழ்த்துகிறோம், மனிதனைத் தேடுகின்றேன், கூடிக்கூவும் குயில்கள், நெம்புகோல்கள், காவிரி, புதியதோர் உலகு செய்வோம். இன்றைய குலுக்கல்கள், தமிழ்த் தொண்டர் கா.சு, உழைப்புச் செம்மல் கலைஞர், பாவலர் நெஞ்சில் பேராசிரியர் உள்ளிட்ட நூல்களில் இவர்தம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் உணர்வு கொண்ட பல படைப்புகளைத் தமிழகத்தின் முன்னணி ஏடுகளில் எழுதியவர். அவ்வகையில் மாலைமுரசு, வல்லமை, ஏர் உழவன், செந்தமிழ்ச் செல்வி, தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம், இயற்றமிழ், குறளியம், வள்ளுவர் வழி, குறள் மணம், தமிழ்ப்பாவை, எழுகதிர், வண்ணப்பூங்கா, தமிழ்நேசன் (மலேசியா), கவிக்கொண்டல், குயில், தேவி (கிழமை இதழ்), எழுத்துலகம், தமிழ்ப்பேழை, துளி, அன்பே, திறவுகோல், பன்மலர், புதுவெள்ளம், நிலா, ஏழைதாசன், தமிழ்வளம் உள்ளிட்ட பல ஏடுகளில் எழுதித் தமிழ்த்தொண்டாற்றியவர்.
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு(1987), மும்பையில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்குகள் எனப் பல்வேறு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு தம் பங்களிப்பை நல்கியவர்.
ப. எழில்வாணனின் சிறப்புகளை உணர்ந்து, பல்வேறு தமிழ் அமைப்புகள் இவரைப் பாராட்டியுள்ளன. அவ்வகையில் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை “கவிமாமணி” விருதினையும், இலக்கணப் புலவர் சரவணத் தமிழன் அவர்கள் “பைந்தமிழ்ப் பாவலர்” விருதினையும், இயற்றமிழ்ப் பயிற்றகம் “யாப்புப் புலவர்” என்ற விருதினையும், உலகத் திருக்குறள் உயராய்வு மையம் “திருக்குறள் விருதி”னையும், தமிழ்ச் சான்றோர் பேரவை “மொழிப்போர் மறவர்” என்ற விருதினையும்(1999), தமிழ்நாடு அரசு “நல்லாசிரியர்” விருதினையும், “தமிழ்ச் செம்மல்” விருதினையும், சென்னைப் பாவேந்தர் பாசறை “பாவேந்தர் விருதி”னையும் வழங்கியுள்ளனர்.
ப எழில்வாணன் அவர்கள் 2014 இல் வெளிவந்த ஒக்கேனக்கல் என்னும் திரைப்படத்தில் பூவே பூவே ஏனோ நாணமோ என்னும் பாடலை எழுதியுள்ளார். எதிர்வினை என்னும் திரைப்படத்திற்கும் பாடல் புனைந்துள்ளார்.
ப. எழில்வாணனின் சிறப்பினைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் கீழ்வரும் பாடலில் சிறப்புறப் புகழ்ந்து பாடியுள்ளார்.
தப்பெழுதாமல்
எழுதும் தனித்தமிழ்ப் பெரும்பற்று; தகைசால் பண்பு;
கொப்புளித்துப்
பிறமொழிச்சொல் துப்பிவிட்டுத் தூய தமிழ் கூறும் வேட்கை;
அப்பழுக்கில்லாத
உள்ளம்; அணையாத நல்லுணர்வு; இங்கு ஆருக்கென்றால்
மெப்புதலுக்கில்லாமல் உரைக்கின்றேன் எழில்வாணன் விழிமுன் நிற்பார்.
புலவர் ப. எழில்வாணன் எழுதிய நூல்கள்:
1. ஒரு சொட்டுக் கண்ணீர்(1985)
2. நீ தமிழ் மகனா (1987)
3. செந்தமிழ்ச் செய்யுட்கோவை(1990)
4. கலைஞரின் வாகையும் மார்கழிப் பாவையும்(1990)
5. தமிழ்ச்சோலை(2010)
6. பன்மலர்த்தேன்(2010)
7. துன்பம் நீக்க வள்ளுவர் கூறும் வழிகள்(2014)
8. குறும்பாவியங்கள்(2014)
9. சிறுவர் புரட்சிக் கதைகள் (2017)
10. இளைஞர் இலக்கியமும் பள்ளிப்பறவைகளும்(2017)
11. வெற்றி பெறுவோம் (2019)
12. யாப்பு விளக்கம் (2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக