நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 மார்ச், 2024

தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பு!

 


 முனைவர் மு. இளங்கோவன் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவிப்பு. அருகில் முனைவர் நெய்தல்நாடன், பாவலர் தமிழ்நெஞ்சன் உள்ளிட்ட தமிழன்பர்கள்.

 புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பில் தமிழ் இலக்கணத் தந்தை ஒல்காப் புகழமைந்த தொல்காப்பியனாரின் திருவுருவச் சிலைக்கு முழுமதி நாள் மலர் வணக்கம் செய்யும் பத்தாம் திங்கள் நிகழ்வு 25.03.2024(திங்கள்) காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது

 புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவுநர் கலைமாமணி முனைவர் நெய்தல்நாடன் தலைமையில்  நடைபெற்றது.


  புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறை  இணைப்பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன்  தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் வணக்கம் செலுத்தியதுடன், தொல்காப்பியச்  சிறப்புரைக்கும் உரை  நிகழ்த்தினார்.  

 நிகழ்வுக்கு வந்திருந்தவர்களைக்  கவிஞாயிறு  முருகு. மணி வரவேற்றார். நிகழ்ச்சியின் நிறைவில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் நன்றி கூறினார். காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் பாவலர் வேணு. ஞானமூர்த்தி, புதுவைத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் . திருநாவுக்கரசு, .ரா.பூபதி அறக்கட்டளைச் செயலர் செந்தமிழ்த்தொண்டர் சவரி. பத்மநாபன், ஆன்மிகச் செம்மல் . முத்துஐயாசாமி, கவிச்சுடர் கே.சி.செயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திங்கள், 25 மார்ச், 2024

பேராசிரியர் தா.வே.வீராசாமி

 


பேராசிரியர் தா.வே.வீராசாமி

 

 [பேராசிரியர் தா.வே. வீராசாமி அவர்கள் அகராதிக்கலை வல்லுநர்; பதிப்புக்கலை அறிஞர்; இலக்கியத் திறனாய்வாளர்; மொழிபெயர்ப்பு வல்லுநர் எனப் பன்முக அறிஞராக அறியப்படுபவர். புதினங்கள் (நாவல்கள்) குறித்த திறனாய்வு நூல்களை வழங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பெருமைக்குரியவர். ] 

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வு மாணவனாக இருந்தபொழுது (1993-97), மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. நண்பர்களின் வேண்டுகோளின்படி சில காலம், விடுதியின் செயலராகவும் இருந்தேன். அப்பொழுது முனைவர் வீர. முத்துக்கருப்பன் அவர்கள் துணைவேந்தராகவும், முனைவர் சி. தங்கமுத்து அவர்கள் பதிவாளராகவும் இருந்து, பல்கலைக்கழகத்தை வழிநடத்தினர். அப்பல்கலைக்கழத்தில் அமைய இருந்த பாரதிதாசன் உயராய்வு மையத்திற்கு விரிவுரையாளராக, பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த என்னைப் பணியமர்த்தும் ஒரு சூழல் பல்கலைக்கழகத்தில் நிலவியது. மாண்புநிறை துணைவேந்தர் அவர்களும் மதிப்பிற்குரிய பதிவாளர் அவர்களும் எனக்குப் பணிவழங்க ஆர்வமாக இருந்தனர். ஆயின் அது நடைபெறுவதற்குத் தடையும் தோன்றியதால் என் பட்டம் பெறுவதே முதல் பணி என்றும், பட்டம் இருந்தால் எங்கும் வேலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நினைத்து, பல்கலைக்கழகத்துப் பணியை நினைவிற்கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்திவந்தேன். இது நிற்க. 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயராய்வு மையத்திற்குப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பேராசிரியர் தா. வே. வீராசாமி ஐயா அவர்கள் 01.12.1995 இல் பணியமர்த்தப்பட்டார்கள். பாரதிதாசன் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து நூல் வெளியிட்ட சிறப்புணர்ந்து, பல்கலைக்கழகம் அவருக்குப் பணி ஆணை வழங்கியது. பேராசிரியர் தா.வே.வீ. அவர்கள் விருந்தினர் விடுதியில் தங்கவும், மாணவர் விடுதியிலிருந்து அவர்களுக்கு உணவு செல்லவும் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருந்தது. தா. வே. வீ. அவர்களை முன்பே நூல்களின் வழியாக அறிவேன் எனினும் அப்பொழுதுதான் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. விடுதியிலிருந்து உணவு செல்வதால் விருந்தினர் இல்லத்தில் தனித்து உண்ணாமல் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்த விரும்பிய பேராசிரியர் தா.வே. வீ அவர்கள் விடுதிக்குச் சில பொழுதுகளில் வந்துவிடுவார்கள். நான் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்ததால் என்மீது அளவுக்கு அதிகமான அன்பும் ஈடுபாடும் நம் பேராசிரியருக்கு இருந்தது. உண்பதற்கு முன்பாக என் அறைக்கு வந்து, என்னையும் அழைத்துச் செல்வார்கள். சில நாள்களில் இருவரும் இணைந்தே அலுவலகம் செல்வதும் விடுதிக்குத் திரும்புவதுமாக இருப்போம். அவர்தம் அலுவலகம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் அருகில் இருந்தது. ஓர் அறையில் தா.வே.வீ அவர்களும் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களும் அமர்ந்து அவரவர் ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். நடைப்பயிற்சியின்பொழுது தமிழகத்துக் கல்வி நிலை, அவர்தம் கல்வியார்வம், ஆய்வு ஆர்வம், திரைப்படம் பார்க்கும் ஆர்வம், அடிக்கடி சினம் கொள்ளும் இயல்பு யாவற்றையும் என்னிடம் ஒரு வகுப்புத் தோழரைப் போல் கூறி மகிழ்வார். 

 நண்பர்களுடன் உணவு விடுதிகளுக்குச் சென்றால் நம்மைப் பணம் கொடுக்க அனுமதிக்க மாட்டார். மாணவர்கள் பணநெருக்கடியில் இருப்பார்கள் என்பதே காரணம். நேரந் தவறாமை, கடும் உழைப்பு, இலக்கியத்தை நுட்பமாக நோக்கிப் பார்க்கும் புதிய பார்வை யாவும் அவரிடம் நான் கண்ட உயர்பண்புகளாகும். தம் ஆசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களின் சிறப்புகளையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றிய தம் பட்டறிவுகளையும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த நினைவுகளையும் ஒவ்வொரு நாளும் பேராசிரியருடன் அமையும் உரையாடலின்பொழுது அறிந்துகொள்வேன். பல மாதங்கள் பேராசிரியர் தா.வே.வீ. அவர்களுடன் பழகிய நான் வேறு நிறுவனத்தில் பணியாற்றச் சென்றதால் தா.வே.வீ. அவர்களின் தொடர்பு பின்னாளில் குறைந்தது. 

பாரதிதாசன் ஆய்வுகளில் முன்னின்று உழைத்த பெருமகனார் தாவே.வீ. அவர்கள் சிலவாண்டுகளுக்குப் பின்னர் இயற்கை எய்திய துன்பச் செய்தியறிந்து அந்நாளில் துயருற்றேன். அதன் பிறகு தா.வே.வீ. அவர்களின் தமிழ்ப்பணிகளைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்து எழுத வேண்டும் என்று நினைத்தும் சிறிய அளவில்தான் என்னிடம் குறிப்புகள் இருந்தன. போதிய குறிப்புகள் கிடைப்பதில் காலம் தாழ்ந்தது. அண்மையில் பேராசிரியர் சோ. பாண்டிமாதேவி அவர்கள் தா.வே. வீராசாமி அவர்களின் வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். அந்நூலைப் பெற்று தா.வே.வீ. அவர்களின் ஆளுமையை முழுவதுமாக அறிந்துகொண்டேன். அவர்தம் நூலில் தா.வே. வீராசாமி குறித்த விரிவான செய்திகளும் அவரின் படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும் விரிவாக இடம்பெற்றுள்ளன. தா.வே.வீ. அவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்திய முனைவர் சோ. பாண்டிமாதேவி அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது. தா.வே.வீ. அவர்களின் திருமகனார் திருவாளர் கண்ணப்பனார் அவர்களும் தம் தந்தையார் குறித்த விவரங்களை உரையடலில் மகிழ்வுடன் பகிர்ந்துகொள்வார். 

பேராசிரியர் தா.வே. வீராசாமி அவர்களின் இளமைப் பருவம்: 

தா. வே. வீராசாமி அவர்கள் 01.02.1931 இல் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் வேங்கடாசலம் – தெய்வானை அம்மாள் ஆகும். இளம் அகவையிலேயே தந்தையார் இயற்கை எய்திய காரணத்தால் தமையனார் தா.வே. சுந்தரம் அவர்களால் வளர்க்கப்பெற்றவர். தாராபுரம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். அப்பள்ளியில் பணியாற்றிய கா. காழிப்பனாரிடம் தமிழ் பயின்றவர். காழிப்பனார் சீர்திருத்தக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தா. வே. வீ. பள்ளியிறுதி வகுப்பினை 1948 இல் நிறைவு செய்தவர். பள்ளிக் கல்வி வரைதான் தொடர் படிப்பு இருந்தது. அதன்பிறகு தம் சொந்த முயற்சியால் படித்து, உயர்நிலையை எய்தினார்.  1958 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் தேர்வில் தேறியவர். 1959 இல் இளங்கலைத் தமிழ் பயின்றவர். 1961 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலை முதுவர் பட்டம் பெற்றவர். 

தா. வே. வீராசாமி அவர்கள் 1949 இல் எழுத்தராகத் தம் பணியைத் தொடங்கினார். 1951-53 இல் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிலவும் பணியாற்றவும் வாய்ப்பு அமைந்தது. 1953-58 வரை கோவை இராமலிங்கம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1958 முதல் 1968 வரை கோவை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 



திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களை நெறியாளராகக் கொண்டு, பெரியபுராணம் இலக்கணம் – சொல்லடைவுகள் (Grammatical Study of Periyapuranam with Index ) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார் (1962- 1966). அதன் பிறகு கோவை  பூ. சா. கோ. கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் (1967-69), 1969 முதல் 1972 வரை கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகவும், 1972 முதல் 1973 வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறைத் தலைவராகவும், 1973 முதல் 1975 வரை மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறையின் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். 

1975 முதல் 1983 வரை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1983 முதல் 1991 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பியல் துறைப் பேராசிரியராகவும், பெருஞ்சொல்லகராதியின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் கூடுதல் பணியாற்றியவர். 1992 முதல் 1993 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகராதித் துறையின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் 1994 முதல் 1995 வரை திருவனந்தபுரம் உலகத் திராவிட மொழியியல் ஆய்வுப்பள்ளியின் சிறப்புநிலை ஆய்வாளராகவும் பணியாற்றியவர். 01.12.1995 முதல் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றிப் பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பாவுக்கு அடைவு தயாரித்து வழங்கியவர். 

பேராசிரியர் தா. வே. வீராசாமி அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், செர்மன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். சாகித்ய அகாதெமிக்காக அலாகரஞ்சன் தாஸ் குப்தாவின் புத்த தேவ போஸ் என்னும் நூலை மொழிபெயர்த்துள்ளார். அதுபோல் நேருவின் வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்துள்ளார். 

தா. வே. வீராசாமி அவர்கள் 23 - க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். 250 - மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார். இவரின் மேற்பார்வையில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் நாவல்கள் குறித்த ஆய்வுகள் முதன்மையிடத்தில் இருந்ததால் இவரின் நூல்கள், கட்டுரைகள் யாவும் நாவல்கள் குறித்து மிகுதியாக இருந்தன. இவரின் மாணவர் அறிவழகன் (கவிஞர் அறிவுமதி அவர்களின் உயிர்த்தோழர்) (கடலூர்) ஜெயகாந்தன் ஆய்வடங்கள் நூலை வெளியிட்டவர். 

தா. வே. வீராசாமி அவர்களுக்கு 08.07.1957 இல் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் இராமலெட்சுமி ஆகும். இவர்களுக்கு மணிமேகலை, கண்ணப்பன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

தமிழ் ஆய்வுலகில் தனித்ததோர் அடையாளம் பெற்றிருந்த அறிஞர் தா.வே. வீராசாமி அவர்கள் தாம் முன்னாளில் பயின்ற பள்ளியில் சிறப்பு விருந்தினராகச் சென்று, உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு, 11.07.1997 இல் இயற்கை எய்தினார். 

முனைவர் தா. வே. வீராசாமியின் தமிழ்க்கொடைகள்: 

1.   உழைப்பின் வெற்றி (1962)

2.   வெற்றியின் இருமுகம் (1969)

3.   பொன்குஞ்சு (1970)

4.   தமிழ்ச்சுடர் (1970)

5.   பட்டறையிலே பாரதிதாசன் (1971)

6.   தமிழ் நாவல் – ஓர் முன்னோட்டம் (1973)

7.   Tamil An Intensive Course (Co – Author) 1973

8.   ஆய்வுக் கதிர் (1974)

9.   தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளம் (ப.ஆ.) (1975)

10. தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 1 (1975)

11. கல்கி அகிலன் படைப்புக்கலை (1977)

12. தமிழ் சமூக நாவல்கள் (1978)

13. தமிழ் நாவல் வகைகள் (1979)

14. தமிழ் நாடக வரலாற்றில் பாரதிதாசன் (1981)

15. தந்திவனப் புராணம் (ப.ஆ) (1981)

16. தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வம் (1981)

17. பாரதி இலக்கியம்: ஒரு பார்வை (1982)

18. புத்த தேவ போஸ் (1982)

19. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி (1986)

20. தமிழ் நாவல் இயல்(1986)

21. பெருஞ்சொல் அகராதி தொகுதி 1 (1988)

22. தமிழ்க் காப்பியக்கொள்கை- கம்பராமாயணம், வில்லிபாரதம் (1988)

23. அகராதிக் கலை (1989)

24. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் (1985)

25. பாரதிதாசன் கவிதைகளில் அருஞ்சொல்லகராதி (மணிமேகலை வெண்பா) 1996 







நன்றி: முனைவர் சோ. பாண்டிமாதேவி அவர்கள்

 

 

ஞாயிறு, 24 மார்ச், 2024

“யாப்பு விளக்கம்” தந்த பாவலர் ப. எழில்வாணன்

பாவலர் . எழில்வாணன் 

[பாவலர் . எழில்வாணன் அவர்கள் மரபு பாடல்கள் இயற்றுவதிலும், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் வரைவதிலும் ஈடுபாடு கொண்டவர். பள்ளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்யாப்புத்துறையில் பேரீடுபாடு கொண்டவர். இவர் இயற்றிய செந்தமிழ்ச் செய்யுட்கோவை, யாப்பு விளக்கம் என்னும் நூல்கள் இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தவை.] 

 தென்மொழி, தமிழ்ச்சிட்டு உள்ளிட்ட தூய தமிழ் ஏடுகளைப் படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் பாவலர் ப. எழில்வாணன் என்பதாகும். தமிழ்ப்பற்றும், தமிழ்ப் புலமையும் ஒருங்கே வாய்த்த இப்பெருமகனார் ஆசிரியர் பணியின் வழியாகவும், நூலாக்கப் பணிகளின் வழியாகவும் தூய தமிழ்த்தொண்டாற்றி வருபவர். அன்பும் எளிமையும் ஓருருக் கொண்டமை போல உருத்தோற்றம் கொண்ட இத்தமிழ்த்தொண்டரின் வாழ்வியலையும் பணிகளையும் அறிதல் தமிழர் கடமை. 

 பாவலர் ப. எழில்வாணன் அவர்களின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். அது வடமொழிப் பெயர் என்பதால் எழில்வாணன் எனத் தம் பெயரை மாற்றி அமைத்துக்கொண்டவர். இவர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் விருப்பாச்சி என்னும் ஊரில் 01.02.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் பழனியப்பன் – காளியம்மாள் என்பதாகும். விருப்பாச்சி என்னும் ஊர் மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்து வேளாண்மையாலும், மலை வாழைப்பழத்தின் சிறப்பாலும் புகழ்பெற்ற ஊராகும். 

 ப. எழில்வாணன் பள்ளிக் கல்வியை விருப்பாச்சியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும்(1955-60), நடுநிலைக் கல்வியை அவ்வூரில் உள்ள ஆர். சி. பாத்திமா நடுநிலைப் பள்ளியிலும், பின்னர் உயர்நிலைக் கல்வியைக் கருவூர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்(1964-67). 

 பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடித்த ப. எழில்வாணன் மேலூர் அரசினர் ஆதாராப் பயிற்சிப் பள்ளியில் ஈராண்டுகள் பயின்று இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். 

 1973 ஆம் ஆண்டில் பள்ளபட்டி உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியேற்றவர். ஆசிரியர் பணியில் இருந்தவாறே படித்துப் புலவர் பட்டமும் இலக்கிய இளையர் பட்டமும் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக, இளைஞர் இலக்கியம் – பள்ளிப்பறவைகள் –ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் பாரதிதாசன்- பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து மெய்ம்மவியல் முதுவர் (எம்.ஃபில்) பட்டம் பெற்றவர். பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக, முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி 31.05.2008 இல் பணி நிறைவு பெற்றவர். 

 ப. எழில்வாணன் பிற அன்பர்களுடன் இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார். இயற்கை வடிவங்கள், நீதிகேட்ட நெடும்பயணம், வாழ்த்துகிறோம், மனிதனைத் தேடுகின்றேன், கூடிக்கூவும் குயில்கள், நெம்புகோல்கள், காவிரி, புதியதோர் உலகு செய்வோம். இன்றைய குலுக்கல்கள், தமிழ்த் தொண்டர் கா.சு, உழைப்புச் செம்மல் கலைஞர், பாவலர் நெஞ்சில் பேராசிரியர் உள்ளிட்ட நூல்களில் இவர்தம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 



 தமிழ் உணர்வு கொண்ட பல படைப்புகளைத் தமிழகத்தின் முன்னணி ஏடுகளில் எழுதியவர். அவ்வகையில் மாலைமுரசு, வல்லமை, ஏர் உழவன், செந்தமிழ்ச் செல்வி, தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம், இயற்றமிழ், குறளியம், வள்ளுவர் வழி, குறள் மணம், தமிழ்ப்பாவை, எழுகதிர், வண்ணப்பூங்கா, தமிழ்நேசன் (மலேசியா), கவிக்கொண்டல், குயில், தேவி (கிழமை இதழ்), எழுத்துலகம், தமிழ்ப்பேழை, துளி, அன்பே, திறவுகோல், பன்மலர், புதுவெள்ளம், நிலா, ஏழைதாசன், தமிழ்வளம் உள்ளிட்ட பல ஏடுகளில் எழுதித் தமிழ்த்தொண்டாற்றியவர். 

 மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு(1987), மும்பையில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்குகள் எனப் பல்வேறு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு தம் பங்களிப்பை நல்கியவர். 

 ப. எழில்வாணனின் சிறப்புகளை உணர்ந்து, பல்வேறு தமிழ் அமைப்புகள் இவரைப் பாராட்டியுள்ளன. அவ்வகையில் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை “கவிமாமணி” விருதினையும், இலக்கணப் புலவர் சரவணத் தமிழன் அவர்கள் “பைந்தமிழ்ப் பாவலர்” விருதினையும், இயற்றமிழ்ப் பயிற்றகம் “யாப்புப் புலவர்” என்ற விருதினையும், உலகத் திருக்குறள் உயராய்வு மையம் “திருக்குறள் விருதி”னையும், தமிழ்ச் சான்றோர் பேரவை “மொழிப்போர் மறவர்” என்ற விருதினையும்(1999), தமிழ்நாடு அரசு “நல்லாசிரியர்” விருதினையும், “தமிழ்ச் செம்மல்” விருதினையும், சென்னைப் பாவேந்தர் பாசறை “பாவேந்தர் விருதி”னையும் வழங்கியுள்ளனர். 

 ப எழில்வாணன் அவர்கள் 2014 இல் வெளிவந்த ஒக்கேனக்கல் என்னும் திரைப்படத்தில் பூவே பூவே ஏனோ நாணமோ என்னும் பாடலை எழுதியுள்ளார். எதிர்வினை என்னும் திரைப்படத்திற்கும் பாடல் புனைந்துள்ளார். 

 ப. எழில்வாணனின் சிறப்பினைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் கீழ்வரும் பாடலில் சிறப்புறப் புகழ்ந்து பாடியுள்ளார். 

தப்பெழுதாமல் எழுதும் தனித்தமிழ்ப் பெரும்பற்று; தகைசால் பண்பு;

கொப்புளித்துப் பிறமொழிச்சொல் துப்பிவிட்டுத் தூய தமிழ் கூறும் வேட்கை;

அப்பழுக்கில்லாத உள்ளம்; அணையாத நல்லுணர்வு; இங்கு ஆருக்கென்றால்

மெப்புதலுக்கில்லாமல் உரைக்கின்றேன் எழில்வாணன் விழிமுன் நிற்பார். 

புலவர் ப. எழில்வாணன் எழுதிய நூல்கள்: 

1.   ஒரு சொட்டுக் கண்ணீர்(1985)

2.   நீ தமிழ் மகனா (1987)

3.   செந்தமிழ்ச் செய்யுட்கோவை(1990)

4.   கலைஞரின் வாகையும் மார்கழிப் பாவையும்(1990)

5.   தமிழ்ச்சோலை(2010)

6.   பன்மலர்த்தேன்(2010)

7.   துன்பம் நீக்க வள்ளுவர் கூறும் வழிகள்(2014)

8.   குறும்பாவியங்கள்(2014)

9.   சிறுவர் புரட்சிக் கதைகள் (2017)

10. இளைஞர் இலக்கியமும் பள்ளிப்பறவைகளும்(2017)

11. வெற்றி பெறுவோம் (2019)

12. யாப்பு விளக்கம் (2021)

 




செவ்வாய், 19 மார்ச், 2024

முனைவர் மு. இளங்கோவன் உருவாக்கிய மின் உள்ளடக்கங்கள் (E. Content)

 


 

தொல்காப்பியம், நாட்டுப்புறவியல் சார்ந்த அறிஞர்களின் உரைகளை / வாழ்வியலை ஆவணப்படுத்தி அறுபதுக்கும் மேற்பட்ட காணொலிப் படைப்புகளாக யுடியூப் வழியாகப் பொதுவெளியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 5,32,788 பேர் பார்த்துள்ளனர் (17.03.2024 வரை). இப்பணியில் துணைநின்ற அனைவரையும் நன்றியுடன் போற்றி வணங்குகின்றேன்.

 

1.   தொல்காப்பியம் எழுத்ததிகாரம் அறிமுகம், பேராசிரியர் ந. இரா. சென்னியப்பனார் உரை

https://www.youtube.com/watch?v=_mfnvLKEnd0&ab_channel=MuElangovan

 

2.   தொல்காப்பியம் சொல்லதிகாரம் அறிமுகம், பேராசிரியர் ந.இரா. சென்னியப்பனார் உரை

https://www.youtube.com/watch?v=IacWD6zV1ro&ab_channel=MuElangovan

 

3.   தொல்காப்பியம் பொருளதிகாரம், அறிமுகம், பேராசிரியர் ந. இரா. சென்னியப்பனார்

https://www.youtube.com/watch?v=8AHc5oOcTuU&ab_channel=MuElangovan

 

4.   தொல்காப்பியச் சிறப்புகள், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை

https://www.youtube.com/watch?v=fURvAXvwjvc&ab_channel=MuElangovan

 

5.   தொல்காப்பியம் அறிமுகம், முனைவர் கோ. விசய வேணுகோபால் உரை

https://www.youtube.com/watch?v=t_rBh2QObuU&ab_channel=MuElangovan

 

6.   தொல்காப்பியச் சிறப்புகள், கு.வெ. பாலசுப்பிரமணியன் உரை, 2017

https://www.youtube.com/watch?v=G1kYzYMm2d4&ab_channel=MuElangovan

 

7.   தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு, புலவர் பொ. வேல்சாமி உரை, 2016, திசம்பர்

https://www.youtube.com/watch?v=7bLxtBFcces&ab_channel=MuElangovan

 

8.   தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை, 2016, திசம்பர்

https://www.youtube.com/watch?v=yqy0Jzi0fYU&ab_channel=MuElangovan

 

9.   தொல்காப்பியமும் உரையாசிரியர்களும், புலவர் பொ.வேல்சாமி, 2016

https://www.youtube.com/watch?v=UmNLv0XHZ70&ab_channel=MuElangovan

 

10.  தொல்காப்பியமும் வடமொழி மரபும், புலவர் பொ.வேல்சாமி, 2016

https://www.youtube.com/watch?v=vaVKOqYj34o&ab_channel=MuElangovan

 

11.  தமிழ் மரபில் தொல்காப்பியம் - புலவர் பொ.வேல்சாமி சிறப்புரை, 2016

https://www.youtube.com/watch?v=UAGis_WtXOs&ab_channel=MuElangovan

 

12.  தொல்கப்பியப் பதிப்புகள், புலவர் பொ.வேல்சாமி, 2016

https://www.youtube.com/watch?v=9VlAorsaSHQ&ab_channel=MuElangovan

 

13.  நானும் தமிழும், பொ. வேல்சாமி உரை, திசம்பர் 2016

https://www.youtube.com/watch?v=5mWrN5Z6ag0&ab_channel=MuElangovan

 

14.  தொல்காப்பியத்தின் உந்தி முதலா, முந்துவளி… விளக்கம்: மருத்துவர் மேரி கியூரி பால், 2016

https://www.youtube.com/watch?v=LU866aw5Ac8&ab_channel=MuElangovan

 

15.  தொல்காப்பியத்தில் இசை, முனைவர் இராச. கலைவாணி, 2016, ஏப்ரல்

https://www.youtube.com/watch?v=dBNaHIb-dc0&ab_channel=MuElangovan

 

16.  தொல்காப்பியம் மரபியல், இராச. குழந்தைவேலனார் உரை, 2016, மே

17.  https://www.youtube.com/watch?v=JYo33-PAPFw&ab_channel=MuElangovan

 

18.  தொல்காப்பியச் சிறப்புகள், முனைவர் க. இராமசாமி உரை, 2023

https://www.youtube.com/watch?v=iS_PvEPji5M&ab_channel=MuElangovan

 

19.  தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள், பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, 2022, சனவரி

https://www.youtube.com/watch?v=w4lOU5ufi-Y&ab_channel=MuElangovan

20.  வடமொழி ஒரு செம்மொழியா, பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, சனவரி, 2022

https://www.youtube.com/watch?v=MDzsUHPySSY&ab_channel=MuElangovan

 

21.  ஒப்பில் தொல்காப்பியம், பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, சனவரி 2022

https://www.youtube.com/watch?v=h4DFfYFlGb0&ab_channel=MuElangovan

 

22.  தொல்காப்பியம் குறித்த பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, நவம்பர் 2019

https://www.youtube.com/watch?v=MGpAAx7pXXg&ab_channel=MuElangovan

 

23.  தொல்காப்பியப் பெருமை - புலவர் வீ. செந்தில்நாயகம் உரை, நவம்பர் 2019

https://www.youtube.com/watch?v=DKvylgQc81Q&ab_channel=MuElangovan

 

24.  மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் - சிறப்புரை: முனைவர் எஸ். ஆரோக்கியநாதன், சூலை 2019

https://www.youtube.com/watch?v=lK2t6D0PutY&ab_channel=MuElangovan

 

25.  தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள்- பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் நேர்காணல், சனவரி, 2019

https://www.youtube.com/watch?v=MP3tvRD-C2I&ab_channel=MuElangovan

 

26.  தமிழக நாட்டுப்புறவியல்- சிறப்பு நேர்காணல்: பேராசிரியர் சரசுவதி வேணுகோபால், சனவரி 2019

https://www.youtube.com/watch?v=fRWj9N4a2HA&ab_channel=MuElangovan

 

27.  தொல்காப்பியம் அறிமுகம், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, பிப்ரவரி 2016

https://www.youtube.com/watch?v=ILuQW5LgefU&ab_channel=MuElangovan

 

28.  தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் – தமிழாகரர் தெ. முருகசாமி சிறப்புரை, ஏப்பிரல் 2017

https://www.youtube.com/watch?v=2nQTQrHxY2M&ab_channel=MuElangovan

 

29.  தொல்காப்பியம்- சேனாவரையர் உரைத்திறன், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, பிப்ரவரி, 2018

https://www.youtube.com/watch?v=dpV-68RgupI&ab_channel=MuElangovan

 

30.  சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள் - சிறப்புரை: பேராசிரியர் தெ. முருகசாமி, சூலை, 2019

https://www.youtube.com/watch?v=iCoH2s3RYj4&ab_channel=MuElangovan

 

31.  கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, திசம்பர், 2019

https://www.youtube.com/watch?v=JcTPa7znbZQ&ab_channel=MuElangovan

 

32.  இன்றைய நிலையில் ஞா. தேவநேயப் பாவாணரின் ஆய்வுகள் - பேராசிரியர் ப. மருதநாயகம் சிறப்புரை, நவம்பர் 2018

https://www.youtube.com/watch?v=6RRfqN0vvkY&ab_channel=MuElangovan

 

33.  தொல்காப்பியம் – செய்யுளியல் ஓர் அறிமுகம், முனைவர் தி. செல்வம் உரை, மார்ச்சு 2016

https://www.youtube.com/watch?v=Su-9eD-V9cQ&ab_channel=MuElangovan

 

34.  அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம், பேராசிரியர் ஆ. செல்லப்பெருமாள் சிறப்புரை, மார்ச்சு 2016

https://www.youtube.com/watch?v=-Wc5dqHPqD4&ab_channel=MuElangovan

 

35.  தனித்தமிழ் இயக்கம், புலவர் இரா. இளங்குமரனார் உரை, பிப்ரவரி, 2016

https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg&ab_channel=MuElangovan

 

36.  தமிழ் மரபுத் திருமணங்களை நடத்துவது எப்படி? – முதுமுனைவர் இரா. இளங்குமரனார் சிறப்புரை, திசம்பர் 2019

https://www.youtube.com/watch?v=bo09sOb3y3Q&ab_channel=MuElangovan

 

37.  தொல்காப்பியமும் வள்ளலாரும் - சிறப்புரை: தவத்திரு ஊரன் அடிகளார், பிப்ரவரி 2016

https://www.youtube.com/watch?v=Haum_OEZmk4&ab_channel=MuElangovan

 

38.  தொல்காப்பியம் உரியியல், சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்களின் சிறப்புரை, மே 2016

https://www.youtube.com/watch?v=mYu49p7XDMg&ab_channel=MuElangovan

 

39.  பேராசிரியர் சுசுமு ஓனோ நினைவுரை - முனைவர் பொற்கோ, சூன் 2019

https://www.youtube.com/watch?v=hKXa6nfzJY0&ab_channel=MuElangovan

 

40.  தனித்தமிழ் இயக்கம், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா உரை, பிப்ரவரி 2016

https://www.youtube.com/watch?v=YqgRtO7MSL4&ab_channel=MuElangovan

41.  முதுபெரும் புலவர் இரா. கலியபெருமாள் நேர்காணல், திசம்பர் 2018

https://www.youtube.com/watch?v=te_8VLxJ1PU&ab_channel=MuElangovan

 

42.  இலங்கை எழுத்தாளர் தி. ஞானசேகரன் நேர்காணல் – காணொளி, திசம்பர் 2016

https://www.youtube.com/watch?v=LgCAYbJ6HQw&ab_channel=MuElangovan

 

43.  மேலப்பாதி திரு. வி. க. நூல் நிலையம் நூலகர் சு. பாலகிருட்டினன் ஐயா நேர்காணல், திசம்பர் 2016

https://www.youtube.com/watch?v=p_5aZbh5dCk&ab_channel=MuElangovan

 

44.  பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் - புலவர் நா. தியாகராசன் உரை, அக்தோபர், 2016

https://www.youtube.com/watch?v=jeKuGh4yh2s&ab_channel=MuElangovan

 

45.  மக்கள் கலைக்கழகத்தின் நாட்டுப்புறப் பாடல்கள்கோனேரி இராமசாமி உரையும் குழுவினரின் பாடல்களும், ஆகத்து 2017

https://www.youtube.com/watch?v=HyvtH_IpQTg&ab_channel=MuElangovan

 

46.  ரியூனியன், யோகக்கலை வல்லுநர், ஆச்சாரியா சுவாமி நீலமேகம், சனவரி 2024

https://www.youtube.com/watch?v=EzL56C-4jvM&ab_channel=MuElangovan

 

47.  தனித்தமிழ் மறவர் கடவூர் மணிமாறன் வாழ்வும் பணியும் – காணொலி, ஏப்பிரல் 2023

https://www.youtube.com/watch?v=TrBf-w4_7CI&ab_channel=MuElangovan

 

48.  தமிழிசைத் துறைக்கு ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு - முனைவர் மு.இளங்கோவன் கருத்துரை, சூலை 2020

https://www.youtube.com/watch?v=YUAtaVcjxhE&ab_channel=MuElangovan

 

49.  தமிழ் வளர்ச்சி பெற... - பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, பிப்ரவரி 2020

https://www.youtube.com/watch?v=UQpcUquexUo&ab_channel=MuElangovan

 

50.  வீரமாமுனிவரின் தேம்பாவணி – பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, பிப்ரவரி 2020

https://www.youtube.com/watch?v=BhB6l-FB7Hw&ab_channel=MuElangovan

 

51.  திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் தமிழ்ப் பணிகள் – தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் மற்றும் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளின் உரைகள் சனவரி, 2019

https://www.youtube.com/watch?v=vMpfIfMZ60Q&ab_channel=MuElangovan

 

52.  தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின் 14 நூல்கள் வெளியீட்டு விழா காணொலி, சனவரி 2019

https://www.youtube.com/watch?v=4hqv-iImKUA&ab_channel=MuElangovan

 

53.  உலகத் தொல்காப்பிய மன்றம்- கங்கைகொண்டசோழபுரம் கிளை தொடக்க விழா!, நவம்பர் 2018

https://www.youtube.com/watch?v=Ii9nPAcwQ-k&ab_channel=MuElangovan

 

54.  நடவுப் பாடல்கள் – முனைவர் மு.இளங்கோவன் (பொதிகைத் தொலைக்காட்சி) https://www.youtube.com/watch?v=SCv07cc33Jc&ab_channel=MuElangovan

 

55.  பேராசிரியர் “செம்மொழி” க. இராமசாமி அவர்களின் வாழ்வும் பணிகளும் – நேர்காணல்

https://www.youtube.com/watch?v=16mz8TXIheM&ab_channel=MuElangovan