நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 10 ஜூலை, 2023

தமிழ் விக்கி - தூரன் விருது..

 


 தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில்பெரியசாமித் தூரன் நினைவாக, ஆண்டுதோறும் தமிழ்விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதையான பெரியசாமித் தூரனின் பங்களிப்பைப் போற்றும் முகமாக இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது எனக்கு (மு. இளங்கோவன்) அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைப் பணிவுடன் நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் சிறப்பு விருது எழுத்தாளர்  எஸ்.ஜே.சிவசங்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா ஈரோட்டில் ஆகத்து மாதம் 5, 6 தேதிகளில்(சனி, ஞாயிறு) நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நேரில் வாழ்த்துவதற்கு என் மீது அன்பு பாராட்டும் நண்பர்களாகிய தங்களையும் மகிழ்ச்சியுடன் அழைக்கின்றேன். 

இந்த விருது என் கால் நூற்றாண்டுக்கும் அதிகமான தமிழ்ப்பணிகளைப் போற்றும் வகையில் வழங்கப்படுகின்றது. இலக்கிய ஆய்வு, நாட்டுப்புறவியல், இணையம், ஆவணப்படம் உருவாக்கம், இசைத்தமிழ் ஆய்வுகள் என்று இயங்கிய என் பல்துறைப் பங்களிப்பை உலகுக்கு அறிமுகம் செய்யும் வகையிலும் போற்றும் வகையிலும் வழங்கப்படுகின்றது. தமிழாய்வுத்துறையில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உந்துதலையும் ஊக்கத்தையும் இந்த விருது அறிவிப்பு எனக்கு ஏற்படுத்தியுள்ளது.. இந்த விருதுக்கு என் பெயரை முன்மொழிந்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களையும் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களையும் நன்றியுடன் போற்றுகின்றேன். இந்த விருது அறிவிப்புச் செய்தியை அறிந்து வாழ்த்திய நண்பர்களையும் இணையதளங்கள், நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சிகளில் வெளியிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்களையும் நன்றியுடன் வணங்குகின்றேன். 

என் பணிகள் குறித்த அறிமுகம் கீழ்வருமாறு விருது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. 

// 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கிதூரன் விருது ஆய்வாளர் மு. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறதுசென்ற முப்பதாண்டுகளில் ஓர் கல்வியாளராகவும் ஆய்வாளராகவும் மு. இளங்கோவன் ஆற்றியுள்ள பணிகள் மிக விரிவானவை. தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர். பாரதிதாசன படைப்புகள் பெரும்பாலும் வெளிவந்த  பொன்னி இதழ்களை மீட்டுத் தொகுத்தவர். தமிழறிஞர்களின் வாழ்க்கைகளைத் தேடித்தேடி ஆவணப்படுத்தியவர். இசைத்தமிழ் ஆய்வாளர்களை  ஆவணப்படுத்தியவர். கணினித்தமிழைப் பரவலாக்கியவர். தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுத்தவர். கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்த மு. இளங்கோவன் புதுச்சேரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.// 

நன்றி: ஜெயமோகன் இணையதளம்


கருத்துகள் இல்லை: