நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 11 ஜூலை, 2023

வல்லினம் இணைய இதழில் என் நேர்காணல்…

 


2023 ஆம் ஆண்டுக்குரிய தமிழ் விக்கி தூரன் விருதினை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் அண்மையில்  எனக்கு அறிவித்தவுடன் மலேசியாவிலிருந்து எழுத்தாளர் . நவீன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டார். முதலில் நவீன் அவர்கள் எனக்கு வாழ்த்துரைத்ததுடன், தாம் நடத்தும் வல்லினம் இதழுக்கு ஒரு சிறப்பு நேர்காணல் வேண்டும் என்று தம் வேட்கையைத் தெரிவித்தார். ஓரிரு வினாக்களுக்கு விடை சொல்வது என்றால் உடனே இயலும். நீண்ட நேர்காணல் என்றதும் தயங்கியபடியே ஒப்புதல் சொன்னேன். ஆனால் நண்பர் நவீன் அவர்கள் அடுக்கடுக்காக வினாக்களை அனுப்பியவண்ணம் இருந்தார். நானும் உடனுக்குடன் விடைகளை  ஆயத்தம் செய்து அனுப்பியவண்ணம் இருந்தேன். மூன்றுநாள் எடுத்துக்கொண்டு, முப்பத்திரண்டு பக்கம் கொண்ட இந்த நேர்காணலை வடிவமைத்தோம். இருவரும் நேர்காணல் செய்திகள் போதுமென்று முடிவுக்கு வந்ததும் இந்த மாதம் (சூலை) வல்லினம் இதழில் நேர்காணல் வெளியாகும் என்று சொன்னதுடன் சொல்லியவண்ணம் நவீன் அவர்கள் செய்தும்காட்டினார். 

என் கடந்த கால வாழ்க்கையைப் பின்னோக்கி அசைபோடுவதற்கு உரிய உயரிய வாய்ப்பாக இந்த நேர்காணலை எண்ணினினேன். இந் நேர்காணலைக் கண்ணுற்ற அன்பர்கள் இதனை இன்னும் சற்று விரித்தெழுதினால் என்னுடைய தன் வரலாறாகவே அமைந்துவிடும் என்று என் முயற்சிகளை ஊக்கப்படுத்தினர்.  

நண்பர் நவீன் அவர்கள் போகும் போக்கில் நான் சொல்லியுள்ள விடைகளுக்கு உள்ளே இன்னும் எத்தனையோ வரலாறுகள் புதைந்துகிடப்பதை என்னால் உய்த்துணர முடிகின்றது என்று குறிப்பிட்டு ஊக்கப்படுத்தினார். நேரம் வாய்க்கும்பொழுது அடுத்தடுத்த செவ்விகளில் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துகொள்வேன். என் வாழ்வுடன் தொடர்புடைய பலரை நினைவுகூர்ந்துள்ளேன். இன்னும் பலரின் உதவியும் தொடர்பும் பதிவுறாமல் உள்ளதை யான் உணர்வேன். அடுத்தடுத்த வாய்ப்புகளில் என் வளர்ச்சிக்கு உதவிய நல்ல உள்ளங்களை நன்றியுடன் நினைவுகூர்வேன் என்று உறுதியளித்து, இந்த நேர்காணலைப் படித்துப் பார்க்குமாறு என் அன்பு நண்பர்களை வேண்டுகின்றேன். 

இந்த நேர்காணலின் வழியாக என் முயற்சிகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு நல்கிய என் அருமை நண்பர் திரு. ம. நவீன் அவர்களையும் அவர்களின் வல்லினம் இதழாசிரியர் குழுவினரையும், வாசகர்களையும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியால் போற்றி வணங்குகின்றேன்.


வல்லினம் நேர்காணலைப் படிப்பதற்கு இங்கு அழுத்துக.

கருத்துகள் இல்லை: