நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 20 ஜூன், 2023

இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல் - அறிமுகம்

 தமிழிசைத் துறையிலும் நாட்டுப்புறப் பாடல் துறையிலும் ஈடுபாடு கொண்ட முனைவர் மு.இளங்கோவன், இசைத்தமிழ்க் கலைஞர்கள் என்னும் பெயரில் நோக்கீட்டு நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இசைத்தமிழ் ஆராய்ச்சித்துறைக்கு இந்த நூல் முக்கியப் பங்காற்றுகின்றது. இசைத்தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவரையும் ஒற்றை வரியில் பட்டியலிட்டுக் காட்டும் இந்த நூலில் உலக அளவில் இசைத்தமிழ்த் துறையுடன் தொடர்புடைய 5764 பேர்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, டென்மார்க், கனடா, இங்கிலாந்து, பிரான்சு, பர்மா, ஆஸ்திரேலியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளில் இயங்கிய - இயங்கும் இசைத்தமிழின் பல்துறைக் கலைஞர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள முதல் முயற்சி இது.  

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வீ..கா. சுந்தரம் அவர்களின் உதவியாளராக இருந்து தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி வெளிவருவதற்குத் துணைநின்ற மு.இளங்கோவன் தமிழிசை ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். இவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார், யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணப்படங்களை உருவாக்கியவர். தொல்லிசையும் கல்லிசையும் என்ற தலைப்பில் ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்துள்ள தமிழிசை சார்ந்த செய்திகளை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர். தம் ஆவணப்படம் உருவாக்கத்திற்காக இதுவரை இசைத்தமிழ் சார்ந்து இயங்கக் கூடிய அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், குறித்த விவரங்களைத் திரட்டியபொழுது இசைத்தமிழ் என்பது உலக அளவில் பரந்து விரிந்த துறையாக இருப்பதை அறிந்தார். இத்துறை சார்ந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதைக் கவனித்த மு.இளங்கோவன்  அந்த விவரங்களைத் தொகுத்து இசைத்தமிழ்க் கலைஞர்கள் என்னும் தலைப்பில் இப்பொழுது வெளியிட்டுள்ளார். 

இசைத்துறைக் கலைஞரின் பெயர், அவரின் நிபுணத்துவம் அமைந்த துறை, நாடு அல்லது ஊர் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ள இந்த நூலில் அரிய தகவல்கள் பல கிடைக்கின்றன. சென்னையில் அமைந்துள்ள மியூசிக் அகாதெமியில் இதுவரை இசைக்கச்சேரிகள் செய்துள்ள கலைஞர்கள், சென்னை அண்ணாமலை மன்றத்தில் பண்ணாராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பணியாற்றிய இசையறிஞர்கள், மதுரை இசைக்கல்லூரிகளில் பணியாற்றிய அறிஞர்கள், திருக்கோவில்களிலும் திருமடங்களிலும் ஓதுவார்களாகத் தமிழிசை முழக்கமிட்ட அறிஞர்களின் பட்டியல்களை இந்த நூல் கொண்டுள்ளது. வீணை, வயலின், நாகசுரம், தவில், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு இசை வல்லுநர்களைப் பற்றிய குறிப்புகளை இந்த நூல் கொண்டிருப்பதுடன் தமிழகத்தின் பாரம்பரிய இசைக்கருவிகளான சங்கு, உடுக்கை, பம்பை, மகுடம், உள்ளிட்ட கருவிகளை இசைக்கும் கலைஞர்களையும் ஆவணப்படுத்தியுள்ளது. 

தஞ்சைப் பெரியகோவிலில் இராசராசன் காலத்தில் தேவாரம் பாடியவர்கள், கருவி இசைத்தவர்கள் குறித்த தனிப்பட்டியல், தமிழகத்தில் புகழ்மிக்க தவில், நாகசுரக் கலைஞர்கள் குறித்த அறிஞர் பி.எம். சுந்தரம் தொகுத்தளித்த பட்டியல், ஓதுவார்கள் மற்றும் திருமுறைப் புரவலர்களின் பட்டியல், தமிழகத்தில் வழக்கில் இருந்த இசைக்கருவிகளின் பட்டியல், இன்றைய வழக்கத்தில் பிறமொழிப் பெயரில் இசைக்கப்படும் இசைக்கருவிகளின் பட்டியல் என்று விரிவான ஆராய்ச்சி நூலாகவே இந்த நூல் அமைந்துள்ளது. 

இசைத்துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள், இசைத்தமிழ் ஆர்வலர்கள் கையில் இருக்க வேண்டிய அரிய ஆவணம் இந்த நூல். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் நூலகத்திலும் இருக்க வேண்டிய நோக்கீட்டு நூல் இதுவாகும். 

“குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா” என்ற பாடலை இயற்றியவர் இராஜாஜி என்று இந்த நூல் பதிவு செய்துள்ளது. ஆர். வேலாயுத ஓதுவார் என்பவர் தருமபுரம் சாமிநாதனின் குரு என்பதும், இசைத்தென்றல் மாரியப்பன், மலேசியாவைச் சார்ந்தவர் என்பதும், இராமசாமி சிவன் என்பவர் பெரியபுராணக் கீர்த்தனைகள் இயற்றியவர் என்பதும், எல் ஆர். ஈஸ்வரியின் இயற்பெயர் லூர்து மேரி ராஜேஸ்வரி என்பதும், எலிகேட்ஸ் டேவிட் ஆறுமுகம் என்பவர் மலேசியாவில் புகழ்பெற்ற பாடகர் என்பதும் கும்பகோணம் குருசாமிதாஸ் சிந்துப்பாடல், டேப் பாடகர் என்பதும் இந்த நூலின்வழி வாசகர்கள் தெரிந்துகொள்ளும் அரிய செய்திகளாகும். மேலும் குருஜி ஏ.எஸ் .இராகவன் திருப்புகழ்ப் பாடகர் என்பதும் கோபால் நாயக் என்பவர் மாலிக்காபூரால் அழைத்துச் செல்லப்பட்ட இசையறிஞர் என்பதும், சிவகுருநாதன் பிள்ளை என்பவர் மயிலம் திருமடத்தில் தேவாரப் பாடசாலையில் பணியாற்றினார் என்பதும் சொக்கம்பட்டி ஜமீன் சின்னச்சாமி தேவர் வீணை வாய்ப்பாட்டில் வல்லவர் என்பதும் திருவாரூர் கோவிலில் குடமுழா இசைப்பவர் சுமதி மதியழகன் என்பதும் பசுவந்தனை சி. பிச்சாண்டி அண்ணாவி என்பவர் உருவாக்கிய தாளசக்கரம் நெல்லையில் அமைந்துள்ள கோவிலில் இடம்பெற்றுள்ளது என்பதும் இந்த நூலில் கண்டு மகிழத்தக்க பிற செய்திகளாகும்.  

பல்துறை இசை ஈடுபாடும், பன்னாட்டுத் தொடர்பும், ஆராய்ச்சி நுட்பமும், பதிப்பு அனுபவமும் கொண்டவர்களால்தான் இதுபோன்ற பணிகளைச் செய்ய முடியும். உலக அளவில் அமையும் பட்டியல் இந்த நூலில் உள்ளதால் விடுபாடுகள் ஏற்படுவது இயல்புதான். இந்த நூலில் இணைக்கப்பட வேண்டிய இசைக்கலைஞர்கள் தங்களுக்குத் தெரிந்தால் muetamil@gmail.com என்ற முகவரிக்குத் தெரிவிக்குமாறு நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு மிக்க முன்னுரையும், செல்வ புவியரசனின் அணிந்துரையும் நூலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. 

304 பக்கம் கொண்ட இந்த நூல் 350 உரூபாய் விலையுடையது. 

நூலைப் பெறுவதற்கு muetamil@gmail.com / + 9442029053 என்ற தொடர்பு எண்ணைப் பயன்படுத்தலாம்

கருத்துகள் இல்லை: