நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

பாவாணரைப் போற்றுவோம்!.



மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாளாம் இன்று(பெப்ருவரி 7) அவர்தம் பெருமைகளைத் தமிழார்வலர்கள் உலகின் பல பகுதிகளிலும் தங்களுக்கு அமைந்த வாய்ப்புகளுக்கு ஏற்ப நினைவுகூர்ந்து வருகின்றனர். கொள்கையுறுதியாலும், ஆராய்ச்சித் திறனாலும், மொழிக்காப்பு முன்னெடுப்புகளாலும் போற்றப்படும் தமிழ் அறிஞர்களுள் நம் மொழிஞாயிறு பாவாணர் அவர்களே முதலிடத்தில் இருப்பதை அறிஞருலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. தம் முதல் ஆராய்ச்சி நூலான ஒப்பியன் மொழிநூலே தமிழாய்வுலகை அசைத்துப் பார்த்தது. இளைஞர்களுக்குத் தமிழின் செழுமையையும் தொன்மையையும் நினைவூட்டியது. அந்த நூலைக் கற்ற ஒரு மிகப்பெரும் அணியினர் தமிழகத்தில் மொழிக்காப்பு மறவர்களாகச் சுடர்விட்டு விளங்கியமையைத் தமிழுலகம் கண்டது. பாவாணரின் தலைமாணாக்கராக விளங்கிய பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் முயற்சியால் பாவாணரின் பெருமையைத் தமிழுலகம் அறிந்தது. பாவாணருக்குத் தொண்டர்களும், பற்றாளர்களும் உலகம் முழுவதும்  தோன்றியவண்ணம் உள்ளனர். பாவாணர் மறைவுக்குப் பிறகும் அவரின் நூல்கள் இன்றும் ஆர்வமுடன் வாங்கிப் பயிலப்படுகின்றன. அவரின் ஆராய்ச்சிப் பணிகள் அறிஞர் பெருமக்களால் தொடர்கின்றன. 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்… 

1981 ஆம் ஆண்டு, அரியலூர் மாவட்டம் உள்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவனாகப் பயின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது  பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழினை உறுப்பாண்மைக் கட்டணம் கட்டிப் படிக்கத் தொடங்கினேன். பலவாண்டுகளாக அந்த இதழ் வெளிவந்துகொண்டிருந்தாலும் என் கையினுக்குக் கிடைத்த முதல் இதழில் பாவாணர் மறைந்தார்! என்னும் தலைப்பிட்டு ஆசிரியவுரை எழுதப்பெற்றிருந்தது. பாவாணரின் பெருமைகளையும் சிறப்புகளையும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதாக அந்த ஆசிரியவுரை இருந்தது. அதனை ஆர்வமாகக் கற்று, உள்ளத்துள் பதித்தேன். அந்த நாள் முதல் பாவாணரின் நூல்களைப் பயிலத் தொடங்கினேன். மேல்நிலைக் கல்விக் காலத்திற்குள் பாவாணரின் பெரும்பான்மை நூல்களைக் கற்கும் வாய்ப்பு அமைந்தது. கல்லூரிப் பருவத்தில் பாவாணர், பெருஞ்சித்திரனார், அருளியார், வ.சுப. மாணிக்கனார், மறைமலையடிகளார் நூல்களை ஆழ்ந்து கற்கும் சூழலை அமைத்துக்கொண்டேன். அந்நூல்களைக் கற்ற நாள் முதல் தூய தமிழில் உரையாடுவதும், எழுதுவதும், தமிழ்ப்பெயர்களை வைக்குமாறு ஆர்வலர்களுக்கு நெறிகாட்டுவதும் என் இயல்புகளாக இருந்தன. என்னுடன் பயின்ற மாணவர்களும் எனக்குப் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களும் என் தமிழ் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தி வளர்த்தனர். பாவாணர் நெறியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பலருடன் பழகவும் அவர்களின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் சூழல்களும் அமைந்தன. 

தமிழுக்கும் தமிழர்களுக்கும் பயன்படும் பல்வேறு பணிகளை இந்த நொடி வரை நான் ஆர்வமுடன் செய்து வருவதை அருகிலிருந்தும் அயலிலிருந்தும் பழகுபவர்கள் நன்கு அறிவார்கள். எம் ஊர்ப்பகுதியிலும் எம் நட்பு வட்டத்திலும் இருப்போர்க்குத் தமிழில் பெயர் சூட்டுவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளேன். மணவினை உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தமிழில் நடத்துமாறு அனைவரிடத்தும் வேண்டிக்கொள்வது உண்டு. தமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளை நண்பர்களுடன் இணைந்து இன்றும், இனியும் செய்வதும் என் இயல்பே. அவ்வகையில் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், தவத்திரு விபுலாநந்த அடிகளார், இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்ட அறிஞர்களின் தமிழ்ப்பணிகளும் இவர்களை ஒத்த தமிழ்த்தொண்டர்கள் பல நூற்றுவரின் தமிழ்ப்பணிகளும் என்னால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படிப்பதும், ஆராய்வதும், எழுதுவதுமாக இருக்கும் என் முயற்சிகளைத் தமிழகத்திலும் அயல் மண்ணிலும் வாழும் அன்பர்கள் ஊக்கப்படுத்திப் பாராட்டி, என்னை மேலும் மேலும் வளர்த்தெடுத்து வருகின்றனர். அவ்வகையில் கீழ்வரும் ஒரு பாராட்டு நிகழ்வு என் வாழ்வில் கிடைத்த பெருமைக்குரிய நிகழ்வாக அமைய உள்ளது.

ஆம்! 

விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அடுத்துள்ள தெற்குச் சோழபுரத்திற்கு அருகில் உள்ள முரம்பு பாவாணர் கோட்டத்தார் 09.02.2023 இல் தாம் எடுக்கும் பாவாணர் பிறந்தநாள் விழாவில் பாவாணர் கொள்கை பரப்புநர் என்னும் விருதளித்து என்னைப் பாராட்ட உள்ளனர். இந்த நிகழ்வில் தமிழகத்தின் பெருமைக்குரிய அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு பேரணி, நூல் வெளியீடு, பட்டிமன்றம், பாவரங்கம், சிறப்புப் பேருரை, கருத்துரை உள்ளிட்ட நிகழ்வுகளின் வழியாகப் பாவாணருக்குப் பெருமை சேர்க்க உள்ளனர். அறிஞர் அ. நெடுஞ்சேரலாதன் ஐயா அவர்களின் வினையாண்மையில், பாவாணர் பற்றாளர்கள் எடுக்கும் விழாவில் வாய்ப்புடையோர் கலந்துகொண்டு, பெருமை சேர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை: