நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 பிப்ரவரி, 2023

முரம்பு பாவாணர் கோட்டத்தில் நடைபெற்ற பாவாணர் பிறந்த நாள் விழா!

ஆ. நெடுஞ்சேரலாதன் அவர்கள் மு.இளங்கோவனுக்கு ஆடை அணிவித்தல்


மும்பை சு. குமணராசன் அவர்கள் மு.இளங்கோவனைச் சிறப்பித்தல்

 மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாள் விழா 2023, பெப்ருவரி 9 ஆம் நாள் விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அடுத்துள்ள முரம்பு பாவாணர் கோட்டத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தமிழறிஞர்கள் பாவாணர் சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக விழா நடைபெறும் பாவாணர் பாசறைக்கு வருகைபுரிந்தனர். அறிஞர் தளவை இளங்குமரனார் அவர்கள் கொடியேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். ஆடல், பாடல் நிகிழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. பாடகர் திருவுடையான் பெயர் தாங்கிய குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்வில் பாவாணரின் சிறப்புகளையும், ஆராய்ச்சிப் பணிகளையும் நன்கு உணர்ந்த அறிஞர் பெருமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

பாவாணர் கோட்டத்தின் முகப்பில் அறிஞர்கள்

திருக்குறள் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள திரு. மா. பொழிலன் அவர்கள் திருக்குறள் சிறப்பு குறித்து அரிய உரை வழங்கினார். மும்பையிலிருந்து வருகைபுரிந்த திரு. சு. குமணராசன் அவர்கள் முதன்மை விருந்தினர்களுக்குப் பயனாடை போர்த்தி, நூல்களை அன்பளிப்பாக வழங்கி, வாழ்த்திப் பேசினார். புதுச்சேரியிலிருந்து வருகைபுரிந்த பாவாணர் கொள்கை பரப்புநர் விருதுபெற்ற முனைவர் மு.இளங்கோவன், தமிழில் தமக்கு ஈடுபாடு வருவதற்குக் காரணமாக அமைந்த நிகழ்வுகளையும் தாம் செய்துவரும் தமிழ் ஆய்வுப்பணிகளையும் அவையில் பகிர்ந்துகொண்டார். மூத்த அறிஞர் வை. மு.கும்பலிங்கம் அவர்கள் பாவாணர் வழிச் செம்மல் விருது பெற்று, அரியதோர் உரை வழங்கி அவையினரை மகிழவைத்தார். மதுரையிலிருந்து வருகைபுரிந்த திரு. வரதராசன் அவர்கள் தம் தமிழ்த்தொண்டுகளை அவையினர்க்கு நினைவூட்டி, அறிவார்ந்த மக்களாகத் தமிழ் மக்கள் மிளிரவேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். பாவலர் முனைவர் பா. எழில்வாணன் அவர்களின் வருகையும் பாவும் அனைவராலும் பாராட்டும்படியாக இருந்தன. பட்டி மன்றம், நூல் வெளியீடு என்று பல நிகழ்வுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

மு.இளங்கோவன் ஏற்புரை

விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அடுத்துள்ள முரம்பு என்னும் ஊரில் அமைந்துள்ள பாவாணர் கோட்டம், பாவாணர் பாசறை என்னும் இரண்டையும் உலகத் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு சென்று பார்க்க வேண்டும். இக்கோட்டம் முழுமையாக உருவாவதற்குத் தங்களால் இயன்ற கைப்பொருளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். பாவாணர் இளம் அகவையில் பயின்ற, பணிபுரிந்த ஊரில் இத்தகு நினைவிடத்தை உருவாக்கியுள்ள பாவாணர் கோட்டத்தினர் பாராட்டிற்கு உரியவர்கள். க.ப. அறவாணன், இரா. இளவரசு, குடந்தை. கதிர். தமிழ்வாணன், தமிழண்ணல், சேலம் வேள்நம்பி உள்ளிட்ட தமிழறிஞர்களின் படங்களைப் பாசறை அரங்கில் வைத்துப் போற்றியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. 

மிகச் சிறந்த தமிழ்ப்பணியைத் தக்க அன்பர்களின் துணையுடன் செய்துவரும் தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன் அவர்கள் தமிழர்களின் நன்றிக்கு உரிய பெருமகனார் ஆவார். 

தொடர்புக்கு: தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன் 9443284903

கருத்துகள் இல்லை: