நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 2 பிப்ரவரி, 2023

தன்மானப் புலவர் தங்க. சங்கரபாண்டியன்

 

          புலவர் தங்க. சங்கரபாண்டியன்


  மின்னஞ்சலும், வாட்சப் உரையாடல்களும் கோலோச்சும் இக்காலத்தில் அஞ்சலட்டைகளிலும் அலுவலக உறைகளிலும் எழுதும் பழக்கம் குறைந்து வருவதை யாவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் தொடர்ந்து மடல் இலக்கியத்தை வளர்த்தும்வரும் தமிழ்த்தொண்டர்கள் தமிழகத்தில் அங்கொருவர் இங்கொருவர் என்று இருப்பதையும்  ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அத்தகையோருள் தங்க. சங்கரபாண்டியனார் குறிப்பிடத் தகுந்தவர்.

  தமிழ் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள், மடல்கள் எழுதி வெளியிட்டுவரும் தமிழாசிரியர் தங்க. சங்கரபாண்டியன் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 20. 08 1948 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் ச.தங்கவேலனார், க. கண்ணம்மா  ஆகும். அரக்கோணத்தில் உள்ள . சி. எஸ். ஐ.சென்ட்ரல் பாடசாலை, தூய அந்திரேயர் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர். தன்னார்வமாக பி. லிட், முதுகலை, தமிழாசிரியர் பயிற்சி முடித்து, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவ்வகையில் விவேகானந்தா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி,  மணலிபுதுநகர்;  கிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி ,    திருவொற்றியூர்;  தூய பவுல், மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர்;  தரும  மூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன்  செட்டி மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் ஆகிய பள்ளிகளில் பணியாற்றி, நன்மாணாக்கர் பல்லாயிரவரை உருவாக்கிய பெருந்தகையாளர் தங்க. சங்கரபாண்டியனார் ஆவார்.

இலக்கிய ஆர்வம் :

     பள்ளியில் படித்த போதும், கல்லூரியில் படித்த போதும் மாணவர்களால் இலக்கிய மன்றச் செயலாளராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  பள்ளி ஆண்டு மலரான  “மழலை மொழியில்”  கதை, கட்டுரை கவிதைகள் எழுதியவர்.  பள்ளி, கல்லூரிகளில் நடந்த அனைத்துப் பேச்சு, எழுத்துப் போட்டிகளில்  பரிசுகள் பெற்றவர்.  கல்வியியல் கல்லூரியில் பயின்றபோது இலயோலா கல்லூரியில் நடந்த அனைத்துக் கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றவர்.

எழுதிய நூல்கள்:

     ஏறத்தாழ  40  நூல்கள் எழுதியுள்ளார்.   “ வேழவேந்தன் கவிதைகள் ஒரு மதிப்பீடு” என்ற இவரின் நூலை அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்  வெளியிட்டுப் பொன்னாடை போர்த்தி இவருக்குக் கணையாழி அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இவர் எழுதிய “ பெரியாரே என் தலைவர்” என்னும் நூலுக்குச் சேலம் கே. ஆர். ஜி. நாகப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கிப் பாராட்டியது.

கடித இலக்கியப் பணிகள் :

     தமிழில் வெளிவரும் எல்லாச் சிற்றேடுகளிலும் பல்லாண்டாகத் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார்.  கடிதங்கள் மூலம் இவர் புகழ்பெற்றவர்.   இவரது கடிதங்கள் வெளிவராத  ஏடுகளே  இல்லை எனலாம்.  கடித இலக்கியத்திற்குப் பெருந்தொண்டு ஆற்றியவர்களில் இவரே தலைசிறந்தவர்.  கடித இலக்கியத்தில் இவருக்கு  வழிகாட்டியாக இருந்தவர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சி. ஆகியோர்  ஆவர்.   அவர்கள் வழியைப் பின்பற்றி இன்றும் கடித இலக்கியம் படைத்து வருபவர்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விவரம்:

     இவர் கடந்த பல ஆண்டுகளாகச் சென்னை வானொலியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சென்னை வானொலி நிலையத்தாரால் சிறந்த வானொலி நேயர் என்னும் சான்றிதழ் பெற்றவர் இவர் சென்னை வானொலியைத் தவிர விவிதபாரதி வர்த்தக  ஒலிபரப்பு  நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.  இவரின் மெல்லிசைப்  பாடல்களையும், குழந்தைப் பாடல்களையும், நாட்டுப்புறப் பாடல்களையும், பலமுறை ஒலிபரப்பி சென்னை வானொலி  இவருக்கு ஆதரவு அளித்தது.  மேலும் வேரித்தாஸ் வானொலி, வத்திகான்  வானொலி, சீன வானொலி ஆகியவற்றிலும்  இவரது எழுத்துக்கள் ஒலிபரப்பப்பட்டன.   இவர் சென்னை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் பல்லாண்டாகப் பங்கேற்று வருபவர்.  மக்கள் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பங்கேற்றிருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியினரும், மக்கள் தொலைக்காட்சியினரும் இவரின் வீடு தேடி வந்து இவரைப் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் எழுதிய நூல்களுள் சில :

1. அகிலம் போற்றும் அறிவியல் அறிஞர்கள்

2. வியத்தகு விஞ்ஞான வித்தகர்கள்

3. அறிய வேண்டிய அறிவியல் செய்திகள்

4. அறிவியல் கருவூலம்

5. பெரியார் பேசுகிறார்

6. அண்ணா பேசுகிறார்

7. அம்பேத்கர் பேசுகிறார்.

8. அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி 

9. சமாதான காவலர் நேரு

10. நேருவின்  சொற்பொழிவுகள்

11. வேழவேந்தன் கவிதைகள் - ஒரு மதிப்பீடு

12. தங்க. சங்கரபாண்டியன் கவிதைகள் 

13. உயர்வைத் தரும் உன்னத மொழிகள் 

14. வடவெல்லைத் தமிழ்  மாமுனிவர் மங்கலங் கிழார்.

15. பெரியாரின் பெருவாழ்வு 

16. திறனாய்வுச் செம்மல் தி. க. சிவசங்கரன்

17. சிறுவர்க்கான  சிறந்த பாடல்கள்

18. குத்தூசி குருசாமியின் கட்டுரைகள்  ( தொகுப்பு )

19. குத்தூசி குருசாமியின் சிறுகதைகள் ( தொகுப்பு )

20. சிந்தனைச்  சிதறல்கள் 

பெற்ற பட்டங்களில் சில :

1. பெரும் புலவர்

2. புலவரேறு

3. புலவர் திலகம்

4. பகுத்தறிவுக் கவிஞர்

5. கண்ணியச் செம்மல்

6. மடல் மன்னன்

7. தன்மானப் புலவர்

8. மனிதநேயச் சிந்தனையாளர்

9. இலக்கியச் சிற்பி போன்ற பல்வேறு விருதுகளைப்  பெற்றவர். 

இவருக்குச்  “ சீர்மிகு  எழுத்தாளர்” விருதைத் தமிழ்நாடு சிற்றிதழ்ச் சங்கத்தார் வழங்கினர்.  மனித நேயச்  சிந்தனையாளர் பட்டம் தருமபுரி தகடூரான் தமிழ் அறக்கட்டளை வழங்கியது.   இலக்கியச் சிற்பி  கண்ணியச் செம்மல் போன்ற பட்டங்களைக்  கண்ணியம் மாத ஏடு வழங்கியது. “மடல் மன்னன்”  என்னும் பட்டம் காலஞ்சென்ற திறனாய்வுச் செம்மல் தி.க.சி. அவர்களால் வழங்கப்பட்டது.

இவர் தோற்றுவித்து நடத்திய அமைப்புகள் விவரம்:

     1960-70 ஆம் ஆண்டுகளில் இவர் அரக்கோணத்தில் பகுத்தறிவுப் பாசறை,  தமிழ்ச்சங்கம், எழுத்தாளர் மன்றம்,  தனித்தமிழ்க் கழகம், போன்ற அமைப்புகளைத் தோற்றுவித்துப் பணியாற்றியவர்.   தமிழ்நாடு அளவில் தமிழ்நாடு சோசலிசப் பேரவை என்னும் அமைப்பைத் தம் நண்பர் பா. சாரதியுடன் சேர்ந்து  நடத்தியவர்.   தமிழ்நாடு சோசலிசப் பேரவை என்னும் அமைப்பை நடத்தியபோது இவரும் இவர் நண்பர் பா. சாரதியும் அமைப்பாளர்களாக  இருந்து தமிழ்நாடு சோசலிசப் பேரவையினர் சென்னை தெருக்களின் பெயர்ப் பலகையிலுள்ள சாதிப் பெயர்களைத் தார் கொண்டு அழித்தனர்.  அப்போது  கல்லை சி. பழனி என்னும் சோசலிச பேரவைத் தலைவர் கைது செய்யப்பட்டுச் சிறையில்  அடைக்கப்பட்டார்.  இதன் பயனாகச் சில நாட்களில் தமிழக அரசே (அந்நாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள்) தெருப்பெயர் பலகையிலிருந்த சாதிப் பெயர்களை அழித்தது.   தோழர் செஞ்சட்டை பஞ்சாட்சரத்துடன் இணைந்து பகுத்தறிவு சமதர்ம இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றியவர்.   தூக்குத் தண்டனை ஒழிப்பு இயக்கம் நடத்தியவர்.  தமிழக அரசுடனான இவரது இடையறாத கடிதப் போக்குவரத்தால் தூக்குத் தண்டனை கைதிகள் ஆயுள் தண்டனை  கைதிகளாக  ஆக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதழ் ஆசிரியராக  ஆற்றிய பணிகள்:

இவர் “லீகல் லிங்க்”, “தி ஹீயூமன்”   இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.   நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் நடத்திய “மன்றம்”  வார இதழில் சில காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் தற்போது “ நம்மால் முடியும்”  ஏட்டின் துணையாசிரியராகவும்,  “ மனோரஞ்சிதம்” ஏட்டின் ஆசிரியராகவும் திறம்படச் செயலாற்றி வருகிறார்.

பேச்சாற்றல் :

     தங்க. சங்கரபாண்டியனார் நாவீறு படைத்த நாவலர் ஆவார். பல்வேறு மேடைகளில் பேசி பரிசும்  பாராட்டும் பெற்ற சொல்லேர் உழவர். தமிழில்  அழகாகப் பேசக்கூடியவர்.

அமைப்புகளுடனான தொடர்பு : 

இவர்  பல்வேறு  இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு வருபவர்.  குறிப்பாக எருக்கஞ்சேரியிலுள்ள நண்பர்கள் குடும்ப  நற்பணி மன்றத்தின் ஆலோசகராகத் தற்போதும் செயலாற்றி வருபவர்.

பிற விவரங்கள் :

1.திருக்குறளில் மிகுந்த  நாட்டம் உள்ளவர்.   திருக்குறளைப் பரப்பும் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

2.இவர்  சிற்றிதழ்,  நூல்கள் தொகுப்பாளர்.

3.இவர் ஆயிரக்கணக்கில் நூல்களையும் சிற்றிதழ்களையும் தொகுத்து நூலகம் அமைத்து ஆய்வு செய்து வருகிறார்.

4.இவரின் “மணிவிழா”  சென்னையில் இரண்டுமுறை மிகச்   சிறப்பாக இவரின் நண்பர்களால் நடத்தப்பட்டது. 

5. 75 அகவையாகும் இவருக்கு  2022 ஆம் ஆண்டில் இவரின் பவழவிழா  கொண்டாடப்பட்டு 300 பக்க அளவிலான பவழ விழா மலர் வெளியிடப்பட்டது.  அண்மையில் இவருக்குச் சில அமைப்புகளால்  தமிழ்ச் சான்றோர், மற்றும் செந்தமிழர் காவலர்  போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.

        கடும்  உழைப்பாளியும்,  தீவிரப் பொது நல ஆர்வலருமான  தங்க.சங்கரபாண்டியனார் எதிர்வரும் காலங்களிலும் தமிழ்ப்பணிகளில் தொய்வின்றித் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்பது நம் வேட்கை. 



இல்ல முகவரி :

தங்க. சங்கரபாண்டியனார்,

G-1, எம்.பி.ஆர்லி அடுக்ககம்,

முதல் முதன்மைச் சாலை,

இலட்சுமி நகர், பொழிச்சலூர்,

சென்னை 600 074.

 

 

 

 

                                   

 

 

கருத்துகள் இல்லை: