நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 8 ஆகஸ்ட், 2020

பேராசிரியர் சி. நல்லதம்பி மறைவு!

  பேராசிரியர் சி. நல்லதம்பி

 ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் சி. நல்லதம்பி அவர்கள் இயற்கை எய்திய செய்தியை நண்பர்களின் முகநூல் பதிவுகள் வழியாக அறிந்து பெருந்துயருற்றேன். பேராசிரியர் சி. நல்லதம்பி அவர்களை, நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்ற காலத்திலிருந்து நன்கு அறிவேன். திருப்பனந்தாள் கல்லூரியில் முதுகலை- தமிழ் இலக்கியம் பயின்ற அவர், தருமபுர ஆதீனத்திற்கு உரிமையுடைய கல்லூரியில் இளம் முனைவர் பட்டம் படித்ததாக நினைவு(1990).

 திருப்பனந்தாள் ஏழுகடை மாடியில் தங்கியிருந்து, அவருடன் பழகிய நினைவுகள் நெஞ்சில் தோன்றி மறைகின்றன. சி.நல்லதம்பி அவர்கள் மு. வரதராசனார் நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுடையவர். மண்குடிசை, கள்ளோ காவியமோ, அகல்விளக்கு என அவர் வழியாகவே எங்களுக்கு மு.வ. புதினங்கள் அறிமுகம்.

 மு.வ. புதினங்களில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரங்களையும் அலசி ஆராய்ந்து பேசும் ஆற்றல் உடையவர். அந்தப் புதினங்களில் இடம்பெறும் நற்பண்பு உடைய கதைமாந்தர்களைப் போல் நேரிய வழியில் நடந்தவர். எளிமையானவர். உதவும் உள்ளம்கொண்டவர். அறத்தின்மேல் நம்பிக்கை கொண்டவர். போலிகளைப் புறந்தள்ளியவர். உள்ளும் புறமும் ஒன்றாக இருந்தவர்.  சாலையில் செல்லும்பொழுது நாமெல்லாம் ஏதேனும் குறுக்கு வழி இருந்தால் விரைந்து செல்வதற்கு வாய்ப்பாக குறுக்குவழியில் நடப்போம். ஆனால் நேர்பாதை தொலைவாக இருந்தாலும் அந்த நேர்பாதையில்தான் நடந்து செல்வார். தருமபுரம் கல்லூரியில் பயின்றபொழுது நேர்வழியாகச் சென்று, திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்ததை அடிக்கடி நினைவுகூர்வார்.

 பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நேர்காணலில் சந்திக்க நேர்ந்தது. அதே அன்புநிலை மாறாமல் உரையாடி, ஊக்கப்படுத்தினார். என் கல்லூரிக் கால வாழ்க்கையையும் விடிய விடிய அவருடன் தருக்கம் செய்த நினைவுகளையும் நினைவுகூர்ந்தமை வியப்பாக இருந்தது. தமிழாய்வுத்துறையில் ஈடுபட்டு உழைத்துவரும் என் முயற்சியைக் கேள்வியுற்று மனந்திறந்து பாராட்டினார். தாம் கல்லூரி மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக வகுப்பெடுத்து வருவதாகவும், அதனால் பல மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாகவும் உரையாடலில் தெரிவித்தார். பயிற்சிக்கு உரிய கட்டணமாக எதனையும் பெறுவதில்லை எனவும் விரும்பினால் தரலாம் என்றும் அறிவித்து, தமிழ்த்தொண்டாற்றி வந்துள்ளார்.

 கல்லூரிப் பேராசிரியர்களின் பணி நிரந்தம் சார்ந்த போராட்டத்தில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் சிறைவாழ்க்கையை அனுபவித்தவர்.

 சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வீ. அரசு அவர்களின் அன்புக்குரிய மாணவராக வளர்ந்தவர். அவரிடம் பயிற்சியெடுத்து, ஆடல் பாடல்களில் ஈடுபட்டதை நன்றியுடன் நினைவுகூர்ந்தவர்.

 நல்லதம்பி என்ற பெயருக்கு ஏற்ற வகையில் நல்லதம்பியாகவே வாழ்ந்து மறைந்த பேராசிரியர் அண்ணன் சி. நல்லதம்பி அவர்களின் நினைவினைப் போற்றுவோம்!

கருத்துகள் இல்லை: