நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 16 ஜூலை, 2020

புத்தக வேட்கையர்: முனைவர் த. செந்தில்குமார் இ.கா.ப.




முனைவர் த. செந்தில்குமார் .கா.., முனைவர் மு.இளங்கோவன்

கற்கும் ஆர்வமுடைய மாணவனுக்கு இலக்கணம் வகுத்த நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர்,பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி” (நீர் வேட்கையுற்றவன் ஆர்வமுடன் தண்ணீரைப் பருகுவதுபோல் பாடங்களை ஆர்வமுடன் படிக்க வேண்டும்) என்று ஓரடியில் படிப்பார்வத்தைப் பதிவுசெய்துள்ளார். அந்தப் பருகும் வேட்கை கொண்ட புத்தக வேட்கையராக முனைவர் த. செந்தில்குமார் அவர்களைக் காண்கின்றேன்.

தஞ்சையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக முனைவர் த. செந்தில்குமார் அவர்கள் சிலவாண்டுகளுக்கு முன் பணியாற்றிய பொழுது அருமை நண்பர் கரந்தை ஜெயக்குமார், மேலைப்பெருமழை சிவபுண்ணியம் ஆகியோருடன் சென்று சந்தித்தேன். பணிச் சுமைகளுக்கு இடையேயும் நீண்ட நேரம் அறிவுப்பூர்வமாக உரையாடி, வழியனுப்பி வைத்தார்.

த. செந்தில்குமார் அவர்கள் கடமையின் பொருட்டு அண்மையில் புதுச்சேரிக்கு வந்தபொழுது சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சந்திப்பின்பொழுது அவர் அரிதின் உழைத்து எழுதிய, பெரிதினும் பெரிது கேள் என்னும் பெயரிய 432 பக்கம் நூலினை வழங்கினார் (விகடன் பிரசுரம், 2019, விலை 420). நூலினை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, ஓரிரு நாள் நேரம் ஒதுக்கிக் கற்று மகிழ்ந்தேன்.



  கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் போத்திரமங்கலம் என்ற சிற்றூரில் பிறந்து, அரசு பள்ளி, திருச்சி பிசப் ஈபர் பள்ளி, சென்னை சட்டக்கல்லூரி என்று கல்வி கற்று, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னைப் பல்கலைக்கழகத்து முனைவர் பட்டத்துடன் காவல்துறையின் உயர்பொறுப்புகளுள் ஒன்றான மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் இவரின் வாழ்க்கை ஒவ்வொரு சிற்றூர்ப்புற மாணவனுக்கும் முன்மாதிரி வாழ்க்கை என்று துணிந்து சொல்வேன். சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு திசைகாட்டி மரம்போல் வழிகாட்டி உதவும்.

பாட நூல்களைக் கடந்து இவர் படித்து முடித்துள்ள நூல்களின் பரப்பு நமக்கு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகின்றன. உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரையும், சிற்றூர் அரசியல் முதல் பன்னாட்டு அரசியல் வரையும் பயின்ற இவர்தம் அறிவுச் செழுமையை இந்நூலின் வழியாக அறிந்து மகிழ்கின்றேன். வரலாறு, சட்டம், புவியியல், அரசியல், படைப்பு நூல்கள் என இவரின் பரந்துபட்ட வாசிப்பனுவம் இவர்தம் நெருக்கடி நிறைந்த பணிச்சூழலில் எவ்வாறு கைகூடியது என்று வியக்காமல் இருக்க முடியாது.

’பெரிதினும் பெரிது கேள்’ என்ற நூலின் உள்ளே பதினாறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதல் தலைப்பாக அமையும் பெரிதினும் பெரிது கேள் கட்டுரை பாரதியின் ஆத்திசூடியில் அமைந்த தன்னம்பிக்கை வரியாகும். “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற வள்ளுவர் குறளை வழிமொழியும் தொடர்தான் “பெரிதினும் பெரிது கேள்” என்பதாகும். இத்தலைப்பில் அமையும் செய்திகள் 22 பக்கங்களில் அமைந்து, படிப்புப் பழக்கம் நம் வாழ்க்கையை எந்த அளவிற்கு மேம்படுத்தும் என்று தம் அனுபவம் தோய்ந்த எழுத்தில் மிகச் சிறப்பாக எழுதி வழங்கியுள்ளார். குறிக்கோள் நோக்கிய வாழ்க்கையில் படிப்பு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சிறப்பான சான்றுகளுடனும், தகுந்த மேற்கோள்களுடனும் நமக்கு விரித்து எழுதியுள்ளார். எளிய நிலையிலிருந்து உழைத்து முன்னேறிய பலரின் வாழ்க்கையையும், அவர்களின் முன்னேற்றப் பாதைகளையும் எடுத்துரைத்து, வாழ்வில் முன்னேற்றத்திற்குரிய வழிவகைகளை இந்தக் கட்டுரையில் சொல்லியுள்ளார். சிவ நாடார், தியோடர் ரூஸ்வெல்ட், அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்காட்டி, நம்மை ஊக்கப்படுத்துகின்றார். சமகால அறிவின் தேவை, தேடல் உணர்வின் தேவை, புதிய சிந்தனை, சான்றோர் நட்பு, பயணத்தின் அவசியம், செயல்திறன், சோர்வின்மை, அறிவின் அவசியம் என்று ஒவ்வொரு நிமையமும் நம்மை உயர்த்திக்கொள்ள உதவும் வழிமுறைகளை இந்தக் கட்டுரை எங்கும் வலியுறுத்தியுள்ளார்.

த.செந்தில்குமார் வாசிப்பதையே வாழ்க்கையாய் வாழ்ந்தவர் என்பதை இரண்டாம் கட்டுரையில் அழகாகப் பதிவுசெய்துள்ளார். நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் பயிலும்பொழுதே இவருக்குப் புத்தகம் பயிலும் ஆர்வம் வரப்பெற்றதை நினைவோடு பதிவுசெய்துள்ளார். வீட்டிலும் வயல்வெளிகளிலும் துப்பறியும் புதினங்களைப் படித்தமையையும், ஆவினங்குடி கிளைநூலகத்தில் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் உள்ளிட்ட படைப்புகளைப் படித்தமையையும், வகுப்பில் பொதுநூல்களைப் படித்தமைக்காக வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டதையும் மனந்திறந்து எழுதியுள்ளமை இவரின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அறிந்துகொள்வதற்குச் சான்றாக அமைந்துள்ளன. மேலும் திருச்சி பொது நூலகம், சென்னையில் அமைந்துள்ள பல்வேறு ஆராய்ச்சி நூலகங்களில் தாம் கற்ற நூல்களையும், கற்ற முறைகளையும், தம் நூல் தேடலுக்கு உதவிய நல்லுள்ளங்களையும் நன்றியுடன் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு குறிப்பிடும்பொழுது நூலங்களின் வரலாறு, சிறப்புகள், அங்குள்ள வசதிகள் யாவற்றையும் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். நூலகங்களை மாணவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று குறிப்பிடும் செந்தில்குமார் நூலக மேம்பாட்டுக்கு உரிய ஆலோசனைகளையும் குறிப்பிட்டுள்ளார். தம் அனுபவங்களை இடையிடையே பகிர்ந்துகொள்வதால் கற்போர்க்குச் சுவையூட்டும் பல தகவல்கள் கிடைக்கின்றன.

’என்றுமுள தென் தமிழ்’ என்னும் மூன்றாம் இயலில் தமிழ் இலக்கியத் தொன்மையையும், தமிழ் இலக்கிய ஆளுமைகளையும் நமக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் புத்திலக்கிய ஆளுமைகளையும் நமக்கு அடையாளப்படுத்தியுள்ளார். பல நூறு நூல்களையும் நூலாசிரியர்களையும் அறிமுகம் செய்யும் த. செந்தில்குமார் இவற்றையெல்லாம் கற்றிருந்தால்தான் இவ்வாறு சிறப்பாக அறிமுகம் செய்ய முடியும். எனவே இவரின் பன்னூல் பயிற்சியையும், பல்துறை ஈடுபாட்டையும் அறிந்துகொள்ள இந்தப் பகுதிகள் பெருந்துணைபுரிகின்றன. முன்பே நாம் கற்ற பலரின் வரலாற்றில் நம் கவனத்துக்கு வராத பல செய்திகளை நமக்கு இந்த நூலில் தந்துள்ளார்.

த. செந்தில்குமார் அவர்களுக்குத் திருக்குறளில் அமைந்துள்ள புலமையையும் பயிற்சியையும் அறிவதற்குத் திருக்குறள் போற்றுதும் என்ற தலைப்பிலான செய்திகள் உதவும். வ. உ. சி. யின் திருக்குறள், தொல்காப்பிய ஈடுபாட்டை இக்கட்டுரையில் நினைவுகூர்ந்துள்ளமை போற்றுதலுக்கு உரியது.

இராஜராஜ சோழன் வழக்கு எண் : 75 / 18 என்ற கட்டுரை அனைவரும் படித்து மகிழத் தக்க கட்டுரையாகும். தஞ்சைப் பெரிய கோவிலை எடுப்பித்து, சோழப் பேரரசைத் தென்கிழக்கு ஆசிய நாடு முழுமைக்கும் பரப்பிய இராசராச சோழனின் சிலையும் அவரின் தேவியார் உலக மாதேவியாரின் சிலையும்  1932 இல் தஞ்சைப் பெரியகோவிலிலிருந்து மாயமானது. இது பற்றி எந்த வழக்கும் பதியப்படாமல் இருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக த. செந்தில்குமார் பணியேற்றச் சூழலில் 2018 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவுசெய்து, திருவாளர் பொன். மாணிக்கவேலின் வழியாக இச்சிலையைத் தஞ்சைப் பெரிய கோவிலில் மீண்டும் நிறுவிய இவர்தம்  பணி தமிழக வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படும். இந்தக் கட்டுரையில் சோழப் பேரரசின் வரலாற்றை அனைவரும் அறியத்தக்க வகையில் சான்றுகளுடன் எழுதியுள்ளமை போற்றத்தகுந்த ஒன்றாகும். காக்கிச் சட்டை அணிந்த காவல்துறை அதிகாரி ஒரு வரலாற்று அறிஞராகத் திகழ்வதை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

காற்றின் பேரோசை என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையை நான் ஆர்வமாகப் படித்தேன். பழந்தமிழகத்தில் இருந்த இசைக்கருவிகள், இசை நூல்கள், ஆலயங்களில் இசை வளர்க்கப்பட்ட முறை யாவற்றையும் இந்த இயலில் விளக்கியுள்ளார். இந்தச் செய்திகளை எழுதுவதற்குக் களப்பணிகளிலும் செந்தில்குமார் ஈடுபட்டுள்ளமை தெரிந்து, மகிழ்ந்தேன்.
பர்வேஸ் முஷரப் போன்ற இராணுவத் தலைவர்களின் உள்ளத்தையும் இந்த இசை வசமாக்கியுள்ளதை த. செந்தில்குமார் தம் நூலில் பதிவுசெய்துள்ளார் (பக் 194). தமிழிசை மேன்மையை அறிந்துகொள்ள இந்த இயல் உதவும்.

த. செந்தில்குமார் அவர்களின் உள்ளத்தை அசைத்த ஒரு பெருங்கவிஞராக தமிழ் மாமுனிவர் குமரகுருபரர் விளங்குகின்றார். இவர் இயற்றிய நீதிநெறி விளக்கம் நூலில் இடம்பெறும் “மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்..” என்னும் பாடலடி செந்தில்குமாரின் வாழ்க்கையை மாற்றிய வரியாகும். எனவே குமரகுருபரரின் புலமைச் சிறப்பையும், பணிகளையும் மிகச் சிறப்பாக இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். போக்குவரத்து வசதிகள் இல்லாத முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வடநாடு சென்று, அங்கு காசித் திருமடத்தை நிறுவிய அவர்தம் ஆற்றலையும், புலமையையும் வியந்து வியந்து எழுதியுள்ளார்.

ஒன்பதாம் தலைப்பாக அமையும் “பொங்கிவரும் காவேரி” என்ற கட்டுரை எனக்கு மிகவும் விருப்பமான ஒரு கட்டுரையாகும். காவிரியாற்றின் தொடக்கமான தலைகாவிரி தொடங்கி, கடலில் கலக்கும் இடம் வரையில் அமையும் பல ஆறுகளையும், கிளையாறுகளையும், வாய்க்கால்களையும், ஏரி. குளங்களையும் மிகச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். திருச்சி, தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர் மாவட்டங்களைக் காவிரியாறு எவ்வாறு வளப்படுத்துகின்றது என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். இலக்கியச் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகளுடன் புவியியல் அமைப்பை அழகாக எடுத்துரைத்துள்ளார். கல்லணை குறித்த வரலாற்றை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். எதிர்காலத்தில் நில ஆக்கிரமிப்பாளர்களால் காவிரி மண்டலத்தில்  ஆறுகளோ, வாய்க்கால்களோ, ஏரிகளோ, குளங்களோ ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டால் இந்த வரலாற்று நூலின் துணைகொண்டு மீட்டுவிடலாம். அந்த அளவு தமக்குக் கிடைத்த தஞ்சை வாழ்க்கையில் களப்பணியாற்றி, இந்தக் கட்டுரையை வடிவமைத்துள்ளார். காவிரியாற்றின் இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளையும் நமக்கு இந்த நூலில் அறிமுகம் செய்துள்ளார்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் பல்வேறு பணிகளையும், இலக்கியத் தொண்டினையும் தக்க சான்றுகளின் துணையுடன் “மா மலைகளின் மோதல்” என்ற தலைப்பில் அறிமுகம் செய்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பினை அறிந்துகொள்வதற்கு இக்கட்டுரை பெரிதும் உதவும்.

பாரதியின் படைப்புகளில் செந்தில்குமாருக்கு நல்ல பயிற்சியும் ஈடுபாடும் உண்டு. பாரதியை எழுத்தெண்ணிப் படித்தவர். அதனால்தான் பாரதியின் “பெரிதினும் பெரிது கேள்” என்ற தொடரை நூலின் தலைப்பாக்கியுள்ளார். பாரதியின் படைப்பாளுமையையும், தமிழ் இலக்கியத் துறையில் அவருக்கு உரிய இடத்தையும் சிறப்பாக ஆராய்ந்து, பாரதி ஒரு வாழ்வியல் தாக்கம் என்று எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, கீழடி ஆய்வு, குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.

இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தொழில்நுட்ப அறிவு அவசியம் என்பதை வலியுறுத்தி, ’தொழில்நுட்பம் தேர்ச்சிகொள்’ என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அறிவியல் தொழில்நுட்பத் துறையில் சாதித்த பலரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக்காட்டி, அவர்களின் வழியில் நடைபயில நம்மைத் தூண்டுகின்றார்.

’காலந்தோறும் காவல்துறை’ என்ற தலைப்பில் காவல்துறையின் வரலாற்றை உலக அளவில் எடுத்துக்காட்டி, இந்தியாவில் காவல்துறையின் வளர்ச்சியைச் சுவைபட எழுதியுள்ளார். ’மனிதனாகவே பிறப்பேன்’ என்று இறுதி இயல் அமைந்துள்ளது. இதில் படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் பல சான்றுகளைச் செந்தில்குமார் எடுத்துக்காட்டுகின்றார்.  சென்னை வாழ்க்கையில் தாம் எவ்வாறு தேடித் தேடி நூல்களைக் கற்றேன் என்பதைச் சுவைபடப் பகிர்ந்துகொள்கின்றார். அறிஞர் அண்ணா, மாக்யவல்லி, ஹன்றி டேவிட் தோரா, ஹிட்லர், இராகுல்ஜியின் நூல்களை எவ்வாறு படித்தேன் என்பதை இந்தப் பகுதியில் ஆர்வம் பொங்க எழுதிச் சென்றுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பில் போற்றப்படும் க. ப. அறவாணனின் புகழ்பெற்ற நூல்களை எடுத்துக் காட்டுவதுடன், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவும் பிற நல்லறிஞர்களின் நூல்களையும் அறிமுகம் செய்துள்ளார். சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்களைப் படிக்க வேண்டும் என்று மாணவர்களையும் இளைஞர்களையும் நெறிப்படுத்துகின்றார்.

  சென்னையில் தாம் தங்கியிருந்த இடத்தில் படிப்பதற்குச் சூழல் சரியில்லை என்பதால் பேருந்துகளில் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டு, நெடுந்தூரம் பயணம் செய்து படித்த தம் அனுபவங்களையும்  சுவைபட இந்த நூலில் எழுதியுள்ளார்.

  நூல்களைப் படிப்பதையே தம் விருப்பமாக அமைத்துக்கொண்ட த. செந்தில்குமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தம் இல்லத்தில் பாதுகாத்து வருவதைப் பெருமையாகப் பதிவுசெய்துள்ளார். இருக்கும் நூல்களைப் படிக்க நமக்கு வாழ்நாள் போதாது என்று கவலைப்படும் த. செந்தில்குமார் இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தின் வழியாக த.செந்தில்குமார் அவர்களின் இயல்பு, விருப்பமான நூல்கள், விருப்பமான நூலாசிரியர்கள், உள்ளம் கவர்ந்த ஆளுமைகள், நண்பர்கள் குறித்து அறிந்துகொள்ளமுடிகின்றது. ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள முயன்றால் அதன் அடி ஆழம் வரை தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்றார். மேம்போக்கான படிப்பு எதற்கும் உதவாது என்கின்றார். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வோர்க்கு உரிய பல்வேறு நறுக்குச் செய்திகளைப் போகிற போக்கில் வீசிச் செல்கின்றார். இவருக்குப் பிடித்தமான திரைக்கலைஞர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் குறித்த விவரங்களும் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நூல்கள்தான் மனிதர்களைச் சிந்திக்கச் செய்யும்; நூல்கள்தான் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நூல்கள்தான் உலகப் பார்வையைத் தரும் என்று உணர்ந்த முனைவர் த. செந்தில்குமார் போட்டித் தேர்வில் வெற்றிபெற்று, காவல்துறையில் மிகச் சிறந்த சாதனையாளராகச் சுடர்விட்டு ஒளிர்கின்றார். தம் வாழ்க்கைப் பயணத்தை இந்த நூலின்வழியாக  நம்மோடு பகிர்ந்துகொண்டதன் வழியாக அடுத்த தலைமுறைக்கு ஆக்கப்பூர்வமான உதவியினைச் செய்துள்ளார். 

தம்மை உயர்த்தியன புத்தகங்களும் விடா முயற்சியும் என்று கூறும் இவரின் வாழ்க்கையும் பணிச்சூழலும் பரபரப்பும், சவால்களும் நிறைந்தனவாகும். இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு இடையிலும் பெரிதினும் பெரிது கேள் நூலினை எழுதி, படைப்பாளர் வரிசையில் இடம்பிடித்த த. செந்தில்குமாருக்கு நம் அன்பும் வாழ்த்துகளும் உரிய.  “பெரிதினும் பெரிது கேள்” நூலின் தலைப்பு மட்டுமன்று;  நெஞ்சில் ஏந்திக்கொள்ள வேண்டிய சுடர்!

கருத்துகள் இல்லை: