நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 11 டிசம்பர், 2019

பட்டி சு.செங்குட்டுவனாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!



பட்டி. சு. செங்குட்டுவன்


  பட்டி சு. செங்குட்டுவன் என்று நடுநாட்டுப் படைப்பாளர்களால் பெரும் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஆசிரியர் பெருமான் பட்டி சு. செங்குட்டுவன் ஐயா இன்று(11.12.2019) இயற்கை எய்தினார் என்ற செய்தியை நண்பர் புகழின் பதிவு வழியாக அறிந்து பெருந்துயருற்றேன். பட்டியுடன் கால்நூற்றாண்டு காலம் பழகியுள்ளேன்.

  1997 இல் நான் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றியபொழுது, பட்டி சு. செங்குட்டுவனாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன். அவர் அப்பொழுது செஞ்சிக்கோட்டைக்கு அருகில் உள்ள பெருவளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பேசுவதற்கு (1997) எம்மை அழைத்திருந்திருந்தார். நானும் பேராசிரியர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றச் சென்றோம். பேருந்தில் இறங்கி, உள்ளடங்கியிருந்த அந்த ஊருக்கு எங்களை அழைத்துச் செல்ல இரண்டு மாணவர்கள் வந்திருந்தனர். நாங்களும் உரிய நேரத்தில் சென்று, உரையாற்றினோம்.

பெருவளூர்ப் பள்ளி என்பது நான் பயின்ற பள்ளிபோல் சிற்றூர்ப்புறத்தின் சிற்பம் போல் இருந்தது. நாட்டுப்புறப் பாடல்களில் கும்மி, கோலாட்டம், ஒப்பாரிப் பாடல்களைப் பாடி நான் விளக்கியதால் மாணவர்களும் தாய்மார்களும் குழுமி, எங்களை அழைத்து வந்த பட்டியாரை நெஞ்சாரப் பாராட்டினார்கள். பட்டியும் எங்கள் அறிவார்வத்தை, அப்பகுதி மக்களுக்கு அறிமுகம் செய்து போற்றினார். அதன் பிறகு தொடர்ந்து நட்பில் இருந்தோம். கலை இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு, நெஞ்சு நிறைவாகப் பேசி மகிழ்ந்தோம்.

  அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த பட்டி. சு. செங்குட்டுவன் ஐயா இயற்கை எய்திய செய்தி ஈட்டியால் நெஞ்சாங்குலையில் குத்தியதுபோல் எம்மைத் தாக்கியது. திருமுதுகுன்றப் பகுதியில் கலை இலக்கிய முயற்சியில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபட்ட நல் உள்ளம் இயற்கையில் இன்று கரைந்தமை வருத்தம் தருகின்றது. அன்னாரைப் பிரிந்துவருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.



கருத்துகள் இல்லை: