நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 டிசம்பர், 2019

கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் – பேராசிரியர் தெ. முருகசாமி சிறப்புரை – காணொலி!





 தமிழ் உணர்வு தழைத்த உறவுடையீர்!

 உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் 20.12.2019 மாலை, புதுவை செகா கலைக்கூடத்தில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள். பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்குப் புதுவைத் தமிழறிஞர்களும், பெங்களூரிலிருந்து திருவாளர் பார்த்தசாரதி அவர்களும், மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் பொறியாளர் ந. சுந்தரேசன் அவர்களும், சென்னையிலிருந்து திரு. சேது அவர்களும் வருகைபுரிந்து, நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

 பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் தொல்காப்பியத்திலும், கம்பராமாயணத்திலும், பிற தமிழ் நூல்களிலும் பெரும் புலமை பெற்றவர்கள். எனவே, பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கி, இவ்வுரையை அமைத்த பேராசிரியர் அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு ஊக்கம் நல்கி, உதவிய அனைவருக்கும் நன்றியுடையோம். இக்காணொலியைக் கண்ணுறும் அன்பர்கள் தங்கள் நண்பர்களையும் கண்டு, தமிழின்பம் பெற வலியுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்த்தாயின் திருவடிக்கு இவ் ஆவண மலரினைப் படையலிடும் இப்பிறவி நினைந்து மகிழ்கின்றோம்.

காணொலி கேட்க இங்கு அழுத்துங்கள்.

வியாழன், 26 டிசம்பர், 2019

“செம்மொழி” இதழாசிரியர் எம்.இலியாஸ் அவர்கள் நீடு வாழ்க!


எம்.இலியாஸ்
(ஆசிரியர்- செம்மொழி)

 சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் செம்மொழி இதழின் ஆசிரியரும், தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளரும், எங்களின் நெஞ்சம் நிறைந்தவருமான அண்ணன் எம். இலியாஸ் அவர்களின் பிறந்த நாளான (திசம்பர் 26) இன்றைய நாளில் அவரைப் போற்றி வாழ்த்துவதில் நெஞ்சம் நிறைவடைகின்றேன்.

 கோவை செம்மொழி மாநாட்டில் தொடங்கிய எம் நட்பு, வளர்பிறைபோல் வளர்ந்து, சிங்கப்பூர் செல்லும்பொழுதெல்லாம் கண்டு உரையாடும் குடும்பநட்பாக மலர்ந்துள்ளமை நினைத்து, மகிழ்கின்றேன்.

 எம்.இலியாஸ் அவர்கள் சிறந்த பேச்சாளர்; கட்டுரையாசிரியர்; பன்னூலாசிரியர்; அரசியல் தலைவர்களுடனும், தமிழறிஞர்களுடனும் நெருங்கிப் பழகுபவர்; இளையவர்களையும் முதியவர்களையும் ஒருசேரப் போற்றும் உயர்ந்த உள்ளத்தினர். அனைவருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர்.

 சிங்கப்பூர் அதிபராக விளங்கிய மாண்பமை எஸ்.ஆர். நாதன் அவர்களின் அன்பைப் பெற்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்களின் உள்ளம் நிறைந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கவிக்கோ, நாகூர் ஹனிபா உள்ளிட்ட பெருமக்களின் தொடர்பைப் போற்றி மதித்தவர்.

 சிங்கப்பூர் செல்லும் தமிழ் ஆர்வலர்களுக்கு நிழல்தரும் மரமாகவும், பயன்தரும் மரமாகவும் விளங்கும் பெருந்தகையாளர்.

 திருமுல்லைவாசலைப் பிறப்பிடமாகக் கொண்ட அண்ணன் எம்.இலியாஸ் அவர்கள் தமிழகத்தையும் சிங்கப்பூரையும் இணைக்கும் தமிழ்ப்பாலமாக விளங்குபவர். இவரின் செம்மொழி இதழ்ப்பணியும், தமிழவேள் கோ.சாரங்கபாணியாரை முன்னிலைப்படுத்திச் செயல்படும் செயல்பாடுகளும், சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகளுக்குத் துணைநிற்கும் இவரின் பெரும்பண்பும் இவருக்கு நிலைத்த புகழைத் தரும். அண்ண! சுற்றமும் நட்பும் சூழ, நீடு வாழி!



வெள்ளி, 20 டிசம்பர், 2019

கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் சிறப்பு உரையரங்கம்!




  மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் ந. சுந்தரேசனுக்குத் 
தொல்காப்பியத் தொண்டர் விருதளித்து மகிழும் 
உலகத் தொல்காப்பிய மன்றத்தார்.

புதுச்சேரி, உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் 20.12.2019 மாலை, செகா கலைக்கூடத்தில் கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்னும் தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. பிரான்சு பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் தெ. முருகசாமி “கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தை உள்வாங்கிக்கொண்டு, கம்பர் தம் இராமாயணத்தை எழுதியுள்ள சிறப்பினைத் தக்க மேற்கோள்கள் கொண்டு இந்த உரையரங்கில் பேராசிரியர் தெ. முருகசாமி நிறுவினார். மேலும் தொல்காப்பியர் குறிப்பிடும் “மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்”, “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”, “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ”, “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்னும் நூற்பாக்களோடு பொருந்திப்போகும் கம்பராமாயண வரிகளை எடுத்துரைத்தும். தொல்காப்பியர் குறிப்பிடும் வேற்றுமைகள், இடைச்சொற்களைக் கம்பர் பயன்படுத்தியுள்ள பாங்கினை எடுத்துக்காட்டியும், தமிழ் இலக்கிய உலகில் ஒரு முன்னோடிப் புலவராக கவிச்சக்கரவர்த்தி கம்பர் விளங்கியமையை எடுத்துரைத்தார்.

ஆத்திரேலியாவின், மெல்பர்ன் தமிழ்ச் சங்கத் தலைவர் பொறியாளர் ந. சுந்தரேசனுக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருது அளித்து உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் பாராட்டப்பட்டது. நற்றமிழ் நாவரசி பூங்குழலி பெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார்., முனைவர் தூ. சடகோபன் நன்றியுரை வழங்கினார்.  பெங்களூரிலிருந்து திரு. பார்த்தசாரதி கலந்துகொண்டு நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்ந்தார். தமிழறிஞர்களும், தொல்காப்பிய ஆர்வலர்களும் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையுரை

பேராசிரியர் தெ. முருகசாமி சிறப்புரை


புதன், 11 டிசம்பர், 2019

பட்டி சு.செங்குட்டுவனாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!



பட்டி. சு. செங்குட்டுவன்


  பட்டி சு. செங்குட்டுவன் என்று நடுநாட்டுப் படைப்பாளர்களால் பெரும் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஆசிரியர் பெருமான் பட்டி சு. செங்குட்டுவன் ஐயா இன்று(11.12.2019) இயற்கை எய்தினார் என்ற செய்தியை நண்பர் புகழின் பதிவு வழியாக அறிந்து பெருந்துயருற்றேன். பட்டியுடன் கால்நூற்றாண்டு காலம் பழகியுள்ளேன்.

  1997 இல் நான் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றியபொழுது, பட்டி சு. செங்குட்டுவனாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன். அவர் அப்பொழுது செஞ்சிக்கோட்டைக்கு அருகில் உள்ள பெருவளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பேசுவதற்கு (1997) எம்மை அழைத்திருந்திருந்தார். நானும் பேராசிரியர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றச் சென்றோம். பேருந்தில் இறங்கி, உள்ளடங்கியிருந்த அந்த ஊருக்கு எங்களை அழைத்துச் செல்ல இரண்டு மாணவர்கள் வந்திருந்தனர். நாங்களும் உரிய நேரத்தில் சென்று, உரையாற்றினோம்.

பெருவளூர்ப் பள்ளி என்பது நான் பயின்ற பள்ளிபோல் சிற்றூர்ப்புறத்தின் சிற்பம் போல் இருந்தது. நாட்டுப்புறப் பாடல்களில் கும்மி, கோலாட்டம், ஒப்பாரிப் பாடல்களைப் பாடி நான் விளக்கியதால் மாணவர்களும் தாய்மார்களும் குழுமி, எங்களை அழைத்து வந்த பட்டியாரை நெஞ்சாரப் பாராட்டினார்கள். பட்டியும் எங்கள் அறிவார்வத்தை, அப்பகுதி மக்களுக்கு அறிமுகம் செய்து போற்றினார். அதன் பிறகு தொடர்ந்து நட்பில் இருந்தோம். கலை இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு, நெஞ்சு நிறைவாகப் பேசி மகிழ்ந்தோம்.

  அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த பட்டி. சு. செங்குட்டுவன் ஐயா இயற்கை எய்திய செய்தி ஈட்டியால் நெஞ்சாங்குலையில் குத்தியதுபோல் எம்மைத் தாக்கியது. திருமுதுகுன்றப் பகுதியில் கலை இலக்கிய முயற்சியில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபட்ட நல் உள்ளம் இயற்கையில் இன்று கரைந்தமை வருத்தம் தருகின்றது. அன்னாரைப் பிரிந்துவருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.