நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 19 செப்டம்பர், 2019

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!
தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவுக்கு அண்மையில் மலேசியா சென்றிருந்த நான் இரண்டு நாள் மட்டும் அந்நாட்டில் தங்குவதுபோல் இருந்தது. குறைந்த காலம் தங்கியதால் மிகவும் நெருங்கிய நண்பர்கள் பலரைக் காண இயலாமல் போனது. அவர்களுள் சுங்கைப்பட்டானியில் வாழும் மருத்துவர் டத்தோ சுப்பிரமணியன் அவர்களும் அம்மா டத்தின் தாமரைச்செல்வி அவர்களும் அடங்குவர். மலேசியா செல்லும்பொழுதெல்லாம் டத்தோ அவர்களின் இல்லம் சென்று, கண்டுபேசி, தங்கிவருவது வழக்கம். இந்த முறை தொலைபேசியில் பேசி, வரமுடியாத என் நிலையைத் தெரிவித்தேன். நிலைமையை உணர்ந்த அவர்களும் அன்புடன் தங்கள் வாழ்த்துகளைப் பரிமாறினர். அதுபோல் பினாங்கு, ஈப்போ பகுதி நண்பர்களையும் காண முடியாமல் போனது.

முதல்நாள் நூல் வெளியீடு இந்தியத் தூதரகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அரங்கில் திட்டமிட்டவாறு சிறப்பாக நடந்தது. தமிழார்வலர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டு என் முயற்சியை ஊக்கப்படுத்தினார்கள். நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகும் இரவு உணவு உண்டவாறு பல்வேறு செய்திகளைப் பேசி மகிழ்ந்தோம். இரவு அருக்காணி பசுமை இல்லத்தில் தங்குவதற்கு மருத்துவர் செல்வம் ஐயா ஏற்பாடு செய்திருந்தார். தமிழுக்குத் தொண்டு செய்யும் மருத்துவர் செல்வம் ஐயா போன்ற பண்புடையவர்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டு உள்ளது. அமைதியும், தூய்மையும் கொண்ட அவ்வில்லத்தில் இரவு அமைதியாகத் துயின்றோம்.

 மறுநாள் காலை எழுந்தோம். ஆசான் மன்னர் மன்னன் அவர்களும், மருத்துவர் செல்வம் அவர்களும் காலைச் சிற்றுண்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்துக் காத்திருந்தனர். அருகில் இருந்த உணவகத்தில் நல்லுணவு கிடைத்தது. வழக்கம்போல் இட்டிலி போன்ற தமிழகத்து உணவையே வெளியூர்ப் பயணங்களில் உண்பது என் வழக்கம். இந்த முறையும் அவ்வாறே உண்டேன். காலை சிற்றுண்டிக்குப் பிறகு, பத்துமலை சென்று திருமுருக வழிபாட்டுடன் நகர்வலம் வந்தோம். மலேசியக் கவிஞர் வேலுசுவாமி அவர்களின் திருமகனார் திரு, கிருட்டினன் ஐயா, என் வருகையறிந்து, பகலுணவுக்கு வருமாறு வற்புறுத்தி அழைக்க, அவருடன் இணைந்து பகலுணவு உண்டவாறு பல்வேறு செய்திகளைப் பேசினோம். எங்கள் உரையாடலில் ஆசான் மன்னர் மன்னன் அவர்களும் உடன் இருந்தார்.   பகலுணவுக்குப் பிறகு இரட்டைக் கோபுர எழிலைக் கண்டு மகிழ்ந்தோம். காற்று வளிப்பாட்டு மகிழ்வுந்துப் பயணம். உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பழங்கள் செறிந்த பனிக்கூழும் கூடுதலாக உண்டதால் உடல் சோர்வாக இருந்தது. இரவு உணவு உண்பதில்லை என்ற முடிவோடு இருந்தேன்

தங்கை சரசுவதி அவர்களும் அவரின் கணவர் பொறியாளர் இரா. பெருமாள் அவர்களும் இரவு உணவுக்கு ஓர் உணவகத்திற்கு வந்தனர். எங்களை அன்பொழுக விருந்தோம்ப, நெடுந்தொலைவு மகிழ்வுந்து ஓட்டி வந்திருந்த அவர்களின் அன்புக்கு யான் யாது கைம்மாறு ஆற்றுவேன்?. இரவு உணவு அவர்கள் உண்ண, நான் உரையாடலில் கலந்துகொண்டேன்.

நாங்கள் நாடு திரும்புவதற்கு உரிய வானூர்தி சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதால், பேருந்தில் தரை வழியாகச் சிங்கப்பூரை அடைய நினைத்தோம். ஆனால் நண்பர்களின் அறிவுறுத்தலின்படி மகிழுந்தில் செல்லும் சூழல் அமைந்தது. நண்பர் ம. முனியாண்டி மகிழுந்தைச் செலுத்த, ஆசான் மன்னர் மன்னன் அவர்களுடன் காலையில் மகிழுந்தில் புறப்படுவதற்குத் திட்டமிட்டிருந்தோம். அந்த வகையில் காலை உணவை முடித்துக்கொண்டு, திருமுருகன் திருவாக்கு பீடம் சென்று, தவத்திரு பாலயோகி சுவாமிகளிடம் வாழ்த்துப் பெற்றோம். சுவாமிகளும் எங்களுக்காக சிறப்பு வழிபாடு நிகழ்த்தி, தாயுள்ளத்தோடு விடை தந்தார்கள்.

காலை 11 மணியளவில் சிங்கப்பூர் நோக்கிய எங்கள் பயணம், பரந்து விரிந்த சோகூர்பாரு நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்தது. தியாகத் திருநாள் விடுமுறை என்பதால் மலேசியச் சாலைகள் நெருக்கடி இல்லாமல் இருக்கும் என நினைத்தோம். ஆனால் எங்களின் எண்ணம் பொய்யாகும் வண்ணம் அங்கங்கு நெருக்கடி அதிகரித்து, பயண நேரம் அதிகமானது. பகல் 2.30 மணிக்குச் சோகூர்பாரு சென்று சேர நினைத்து, அங்குள்ள ஆசான் சேதுபதி அவர்களுக்கும் சோகூர்பாரு தமிழ்ச்சங்கத் தலைவர் வேணுகோபால் ஐயாவுக்கும் தகவல் தெரிவித்தோம். வேறு சில நண்பர்களும் எங்களை வரவேற்கக் காத்திருந்து, நேரக்கழிவு நினைந்து விடைபெற்றுச் சென்றதாக அறிந்தோம். அவர்களோ பகல் ஒரு மணியிலிருந்து எங்களுக்காகக் காத்திருந்தனர். நாங்கள் சென்று சேர்ந்தபொழுது மாலை 4.30 மணியாக இருந்தது. அதன் பிறகு பகலுணவு உண்டபடி உரையாடினோம். ஆசான் மன்னர் அவர்களும் நண்பர் முனியாண்டி அவர்களும் பயணக் களைப்பில் சோர்ந்திருந்தாலும் மனம் திறந்து உரையாடி, மகிழ்வூட்டினர். பகலுணவுக்குப் பிறகு ஆசான் சேதுபதி, சோகூர்பாரு தமிழ்ச் சங்கத்தலைவர் திரு. வேணுகோபால் ஆகியோரிடம் விடைபெற்று, சிங்கப்பூர் நோக்கிப் பயணமானோம்.

மாலை 6.30 மணிக்குச் சிங்கப்பூர் வருவோம் என்று அங்குள்ள நண்பர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்தோம். அதனால் ஏழு மணி முதல் எங்கள் வருகைக்கு நண்பர்கள் காத்திருந்தனர். அவர்களின் பொறுமையைச் சோதிக்குமாறு எங்கள் பயணம் மிகுந்த காலத்தாழ்ச்சியுடன் மெதுவாக அமைந்துவிட்டது. சோகூர்பாருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் உள்ள சிறு பாலத்தைக் கடக்க சில மணிநேரம் அமைந்துவிட்டது. மகிழுந்தில் எண்ணெய் குறைந்து வருகின்றது என்று நண்பர் முனியாண்டி தெரிவிக்க, இடையில் வண்டி நின்றுவிட்டால் எங்கு சென்று எண்ணெய் வாங்குவது? எப்படி பயணத்தைத் தொடர்வது என்ற தயக்கம் இருந்தது. போக்குவரவில் செய்யும் தவறுகளுக்குத் தண்டம் விதிப்பதில் அவர்கள் தயவு காட்டமாட்டார்கள். எனவே விரைந்து சிங்கப்பூர் சென்று எண்ணெய் நிரப்ப வேண்டும் என்று நினைத்தோம். சாலைகளில் மகிழுந்துகளின் நெருக்கம் அதிகமாக இருந்ததால் மெல்ல ஊர்ந்து, ஊர்ந்து சென்று சிங்கப்பூரை இரவு ஒன்பது மணியளவில்தான் அடைந்தோம். குடியுரிமை ஆய்வு, பாதுகாப்பு சோதனைகள் முடித்து, உணவகம் செல்லும்பொழுது 9.30 மணி இருக்கும்.

தமிழ்த்தொண்டர் திரு. மோகன்ராஜ்


எங்கள் வருகை அறிந்த நண்பர்கள் ஒவ்வொருவராக உணவகம் வந்தனர். உணவு உண்டவாறு அனைவரும் நலம் வினவி மகிழ்ந்தோம். எங்கள் வருகைக்காக நண்பர் தமிழ்த்தொண்டர் மோகன்ராஜ் அவர்கள் நெடுநாழிகை காத்திருந்து, அன்புடன் உரையாடினார். எங்களுக்குச் சில பரிசுப்பொருள்களைத் தம் அன்பின் அடையாளமாக வழங்கினார். நண்பர் மோகன்ராஜ் அவர்கள் முகநூல் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் அடிக்கடி தொடர்புகொள்ளும் தொண்டு உள்ளத்தினர். என் தமிழ் ஆக்கப்பணிகளை அவ்வப்பொழுது அறிந்து மகிழ்பவர். ஊக்கப்படுத்துபவர். என் அயலகத் தமிழறிஞர்கள் நூலின் கூடுதல் படிகளை வாங்கி ஆதரவுகாட்டினார். என் வருகை அறிந்த அண்ணன், பொங்கல்விழா நாயகர் மூர்த்தி அவர்களும் வந்து எங்களுடன் இணைந்துகொண்டார். தம்பி தங்க. வேல்முருகன் அவர்களும் திருவாளர் வேங்கைமாறன் அவர்களும் வந்து தம் அன்பை வெளிப்படுத்தினர். எங்களை அழைத்துச் செல்ல திருவாட்டி கல்பனா அம்மா அவர்கள் திருவாளர். செல்வராஜ் அப்பாவுடன் வந்திருந்தார். அனைவரும் நினைவுக்குப் படம் எடுத்துக்கொண்டோம். அப்பா, அம்மாவின் அழைப்பின்படி அவர்களின் இல்லத்திற்கு நள்ளிரவு சென்று, பயணக்களைப்பால் கண்ணயர்ந்தோம்.

மோகன்ராஜ், செல்வராஜ், மு.இ., கல்பனா அம்மா, மன்னர் மன்னன், முனியாண்டி

காலையில் எழுந்து தேநீர், குளம்பி அருந்தினோம். எங்களுக்காக கல்பனா அம்மா அவர்கள் சுவையான சிற்றுண்டி செய்து தந்தார்கள். இனிய பண்ணியமும் இணைந்ததால் அனைவரும் ஆர்வமாக உண்டு முடித்தோம். சிற்றுண்டிக்குப் பிறகு கலா மஞ்சரி நிறுவுநரும் மிகச் சிறந்த ஊடகவியலாளருமான சிங்கப்பூர் திருவாட்டி சௌந்தரநாயகி வைரவன் அவர்களின் இல்லம் சென்று, அவர்களின் தமிழிசைப் பணிகளைப் பாராட்டினோம். இசைத்தமிழுக்கு அவர்கள் ஆற்றும் தொண்டினைத் தொடருமாறு வேண்டி, விடைபெற்றோம். இடையில் என் அருமை நண்பர் கவிஞர் பனசை நடராசனார்க்கும், கவிமாலை மா. அன்பழகனார் உள்ளிட்ட பிற தோழர்களுக்கும் புலனம் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் உரையாடி என் அன்பைத் தெரிவித்தேன்.

எங்களுடன் தொடர்ந்து பயணித்த ஆசான் மன்னர் மன்னன் அவர்களும், அருமை நண்பர் ம. முனியாண்டி அவர்களும் எங்களிடம் விடைபெற்று மகிழுந்தில் மலேசியா புறப்பட்டனர்.

அண்ணன் இலியாஸ் அவர்களுடன்


நாங்கள், சிங்கப்பூர் டன்லப் சாலையில் சங்கம் துணியகம் நடத்திவரும், செம்மொழி ஆசிரியர் திரு. இலியாஸ் அவர்களைக் கண்டு உரையாடினோம். அண்ணன் இலியாஸ் அவர்களைக் கடந்த பத்தாண்டுகளாக நன்கு அறிவேன். தமிழ்ப்பற்றும், இலக்கிய ஈடுபாடும் கொண்ட அவர், செம்மொழி என்ற ஏட்டைத் தொடர்ந்து நடத்தி வருகின்றமை தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். சிங்கை செல்லும்பொழுதெல்லாம் அவர்களின் கடைக்குச் சென்று, குடும்பத்திற்குத் தேவையான துணிகள், வாசனைப் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். இந்த முறை நீண்ட நாழிகை உரையாடி, மகிழ்ந்தோம்.

திரு. இளஞ்செழியன், திரு. ப. புருசோத்தமனுடன்..


பிள்ளைகளுக்கும் வீட்டிற்கும் தேவையான சில பொருள்களும், அணி மணிகளும் அருகில் இருந்த ஹனிபா அண்ணன் அவர்களின் கடையில் வாங்கிக் கொண்டு நகரின் நடுவண் இருந்த சகுந்தலா உணவகத்தில் பகலுணவுக்குச் சென்றோம். எங்களின் வருகைக்காக நண்பர்கள் காத்திருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் இளஞ்செழியன் அவர்களும் அண்ணன் மூர்த்தி அவர்களும் வந்திருந்தனர். என் நண்பர்கள் பாலாவும், பொறியாளர் ப. புருசோத்தமனும் வந்து, தம் அன்பை வெளிப்படுத்தினர். உணவுக்குப் பிறகு அனைவரிடமும் விடைபெற்று, நாங்கள் விமான நிலையம் நோக்கி ஒரு மகிழுந்தில் புறப்பட்டோம். திட்டமிட்டவாறு உரிய நேரத்தில் விமான நிலையம் வந்தோம். எங்களின் கையில் சுமைகள் அதிகம் இல்லாமையால் பொதிகளை விமானத்துக்கு அனுப்பிவிட்டு, மிக எளிதாக பாதுகாப்பு சோதனைகள் முடித்துக்கொண்டு உள்ளே சென்றோம்.

மோகன்ராஜ், செல்வராஜ், மு.இ, கல்பனா அம்மா


திருமதி கல்பனா அம்மா அவர்களின் துணைவரும் எங்களின் அன்புத் தந்தையருமாகிய திருவாளர் செல்வராஜ் அவர்கள், எங்களைக் கண்டது முதல் விமான நிலயம் வந்து வழியனுப்புவது வரை உடன் இருந்து அன்புடன் விருந்தோம்பினார். தந்தையர்க்கு உரிய அத்தனை அன்பையும் பாசத்தையும் எங்களிடம் காட்டினார். “தலைநாள் பழகியமை” போன்று இல்லாமல் பல்லாண்டு பழகியது போன்று அவரின் கேண்மை இருந்தது. பொறுப்புடன் விமான நிலையம்வரை வருகை தந்து வழியனுப்பிய திரு. செல்வராஜ் அப்பா அவர்களுக்கும், பணியின் காரணமாக உடன் வர இயலாமல், எங்களுக்குத் தொலைபேசி வழியாக வாழ்த்துரைத்து வழியனுப்பி வைத்த எங்களின் அன்புத் தாயார் கல்பனா அம்மா அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றி உரியதாகும். 

கருத்துகள் இல்லை: