நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 7 அக்டோபர், 2019

தருமன் தர்மகுலசிங்கம் என்னும் மொழிபெயர்ப்பாளர்…


மொழிபெயர்ப்பாளர் தர்மகுலசிங்கம், பவானி ஆகியோரின் 
திருமண நினைவுநாளில் நேரில் வாழ்த்தும் மு.இளங்கோவன்

நார்வே நாட்டின் பேர்கன் தமிழ்ச் சங்கத்தாரின் அழைப்பை ஏற்று, ஈராண்டுகளுக்கு முன் (2017, சூன்)  நார்வே நாட்டிற்குச் சென்றிருந்தேன். இலங்கைப் பேராசிரியர்கள் அ. சண்முகதாஸ் ஐயாவும் எங்கள் அன்னையார் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் இப்பயணத்துக்கு வழி அமைத்தனர்.  பேர்கனில் அண்ணன்மார் மக்வின் சத்தியா, செயசிங்கம் ஆகியோரின் அன்பான விருந்தோம்பலில் சிலநாள் திளைத்தேன். நோர்வே நாட்டில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க் கல்வி குறித்து அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு இந்தப் பயணத்தின் வழியாக அமைந்தது. தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவில் ஒரு சிறப்புரையாற்றவும் பணிக்கப்பட்டிருந்தேன். பேர்கன் பணிகளை முடித்த பிறகு, அருகில் உள்ள டென்மார்க்கு நாட்டிற்குச் சென்று தருமன் தர்மகுலசிங்கம் அவர்களைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருந்தேன். என் வருகையைத் தருமா அவர்கள் அறிந்து, அன்புடன் வரவேற்றார்.

முன்பே திட்டமிட்டவாறு பேர்கன் தமிழ்ச் சங்கத்தின் பணிகளை முடித்துக்கொண்டு, பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி அம்மா, நண்பர்கள் மக்வின், செயசிங்கம் ஆகியோருடன் பேர்கன் விமான நிலையம் வந்தேன். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அடுத்த விமானத்துக்குக் காத்திருந்தேன்.

நம் ஊர் வழக்கப்படி மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே சென்று காத்திருந்தேன். நான் செல்லும் விமானத்துக்கு என ஓரிருவர் மட்டும் வந்திருந்தனர். கூட்டம் குறைவாக இருந்ததால் நமக்குரிய விமானம் ஏறும் இடம் இதுதானா என்று எனக்கு ஐயம் ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகளை வினவி உறுதிசெய்துகொண்டேன். விமானம் புறப்படுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகத்தான் அந்நாட்டு மக்கள் வருகின்றனர். மிக இயல்பாகப் பேருந்தில் ஏறி அமர்ந்துகொள்வதுபோல் எளிமையாக அமர்ந்து கொள்கின்றனர். நம்மூர் போல் அதிகார, கெடுபிடிகள் ஏதும் இல்லை. அனைவரும் அன்பொழுக நடந்துகொள்கின்றனர். ஒருவரை ஒருவர் முடிந்த அளவு உதவுகின்றனர். முகத்தில் புன்னகை தவழ்வதைக் காணமுடிகின்றது. பேர்கனில் விமானத்தைப் பிடித்து, ஒருமணி நேரத்தில் டென்மார்க்கின், கோபனகன் நகரம் வந்து இறங்கினேன். கோபனகன் வானூர்தி நிலையத்திலிருந்து, இயல்பாக வெளிவந்தேன். பிற்பகல் நேரம் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. விமான நிலையத்தில் தொடர்வண்டி ஏறி, கோபனகன் நடுவண் தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தேன். தர்மா அவர்களின் இல்லம் அமைந்திருக்கும் வேயன் (vejen) என்ற இடத்திற்குச் செல்ல ஒரு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு, நான் பயணிக்க வேண்டிய தொடர்வண்டி நடைமேடையை அடைந்தேன். நான் செல்ல வேண்டிய வண்டி வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். குளிர்க்காற்று மெல்ல வீசியது. வந்து நிற்கும் வண்டி நமக்கானதாக இருக்குமோ என்று ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். வரையறுத்த நேரத்திற்கு முன்பாகவோ, பின்பாகவோ அவ்வூரில் வண்டிகள் வாரா என்பதைப் பின்னர்தான் புரிந்துகொண்டேன். நினைவுக்கு அங்கு சில படங்களையும் எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு நொடியும் ஒரு ஆண்டாக நகர்ந்தது.

வேயன் நகருக்குச் செல்லும் வண்டி சரியான நேரத்துக்கு (மாலை 4.31 மணிக்கு) வந்து நின்றது. என்னுடன் பயணிப்பவர்களிடம் நான் செல்ல வேண்டிய வண்டி இதுதானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, ஏறி, எனக்குரிய இடத்தில், என் பொதிகளுடன் அமர்ந்துகொண்டேன். அக்கம் பக்கத்தில் அமர்ந்தவர்கள் படிப்பதும், எழுதுவதுமாக இருந்தனர். கொண்டுவந்த உணவுப்பண்டங்களைச் சுவைத்து உண்டபடி சிலர் வந்தனர். தொடர்வண்டியின் தூய்மையும், ஒருவருக்கொருவர் நாகரிகாமாக நடந்துகொள்ளும் முறையும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பயணச்சீட்டு சோதனையாளர் வந்து சீட்டுகளை வாங்கிப் பார்த்து, உறுதிப்படுத்தினார். இரவு 07.07 மணிக்கு வேயனை அடைந்தேன். நான் வரும் வண்டியையும் இருக்கையையும் முன்பே தர்மா அவர்களுக்குத் தெரிவித்திருந்ததால் ஐயா அவர்கள் தொடர்வண்டி நிலையம் வந்து, நான் இறங்கும் இடத்தில் நின்று, வரவேற்று, இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

உறவினர்கள், நண்பர்களுடன் தருமகுலசிங்கம் அவர்களின் 
திருமண நினைவுநாள் கொண்டாட்டத்தில்

தர்மா அவர்களின் திருமணநாளாக அன்றைய நாள் இருந்தது.  எனவே அவர்தம் இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் சூழ இருந்தனர். நானும் இணைந்துகொண்டமை அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் தர்மா அவர்களுக்கும், அவர்களின் துணைவியாருக்கும் வாழ்த்துரைத்தோம். நான் பொன்னாடை அணிவித்து, நூல்களை வழங்கி இருவரையும் வணங்கி, வாழ்த்தினேன். அனைவருக்கும் சிறப்புணவு இரவு உணவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெடுநாழிகை உரையாடிய உண்டோம். பின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.

காலையில் எழுந்து கடமைகளை முடித்து, தர்மாவுடன் இணைந்து உணவு உண்டேன். பிற்பகல் மீன் வறுவலை நம் தர்மா அவர்களே மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். உண்பதும் உரையாடுவதுமாக அன்றையப்பொழுது பயனுடையதாக இருந்தது. தர்மா அவர்களுடன் உரையாடியபொழுது அவர்தம் நீண்டநெடிய வாழ்க்கைப் பயணத்தையும் குடும்ப நிலையையும், சமூகப்பணிகளையும் அறிந்து அவர்மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது. தருமா அவர்கள் இலங்கையில் பிறந்தவர். பொதுவுடைமைச் சிந்தனையாளர். சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டவர். டென்மார்க்கு நாட்டிற்கு வந்த பிறகு டென்மார்க்கு மொழியைக் கற்று, அந்நாட்டு இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டவர். அவர்தம் டேனிஷ் மொழிபெயர்ப்புப் பணிக்காக அந்த நாட்டின் அரசு சிறப்பினைப் பெற்றவர். அவர்தம் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்று, உயர்நிலையில் உள்ளனர் என்பதெல்லாம் அவர் உரையாடலில் தெரிந்துகொண்டேன்.

டேனிஷ் மொழியின் முதன்மை எழுத்தாளரான ஆண்டர்சன்(அனசன்) அவர்களின் வாழ்க்கையையும் படைப்புகளையும் தர்மா அவர்கள் மொழிபெயர்த்துள்ளார் (நியு செஞ்சுரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது). இவர்தம் பொன்விழா, மணி விழாவை ஒட்டி வெளிவந்த மலர்களில் உலகின் பல பகுதியிலிருந்தும் சான்றோர் பெருமக்கள் எழுதிய எழுத்தோவியங்கள் இடம்பெற்றுள்ளன.
தர்மன் இலங்கையில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கரவெட்டி, கன்பொல்லை என்ற ஊரில் – நெல்லியடி பட்டினசபையின் கனுவில் (இரண்டாம்) வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஆண்டார் வளவில் வாழ்ந்த சின்னத்தம்பி தங்கம் – சித்தன் தருமன் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். பிறந்த ஆண்டு 1957 ஆம் ஆண்டு மார்ச்சு 10(பங்குனி மாதம் 10 ஆம் நாள்) ஆகும். வதிரி மிஷன் ஆரம்ப பாடசாலை, கரவெட்டி சரசுவதி வித்தியாசாலை, கரவெட்டி ரீநாரத வித்தியாலயம், வதிரி (கரவெட்டி) திரு. இருதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றவர். கொழும்புத் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் கல்வி பயின்றார்.  கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர் தாம் பயின்ற ரீநாரத வித்தியாலயத்திலும் கம்பகஃதிவுலப்பிட்டிய சரசுவதி பிரிவெனவிலும்  ஆசிரியர் பயற்சி பெறுவதற்காக உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொதுவுடைமை இயக்கம், சாதியொழிப்பு இயக்கம் உள்ளிட்ட இயக்கச் சார்புகளில் ஈர்க்கப்பட்டவர். 1977 ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களினால் மனமுடைந்து, 1979 ஆம் ஆண்டில் பிரான்சுக்குப் புறப்பட்டார். பிரான்சு வாழ்க்கைக்குப் பிறகு டென்மார்க்கு நாட்டில் தங்கி, தம் இல்லற வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

டென்மார்க்கு நாட்டில் அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டு, பொதுப்பணியில் ஆர்வமாக உழைத்தார். டென்மார்க்கு டெமாக்கரடிக் கட்சியில் இவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. இதனால் இலங்கை சென்ற டென்மார்க்கு அரசியல் குழுவில் இவரும் இடம்பெற்றார். புலம்பெயர் தேயங்களில் வாழும் தமிழர்கள் சிறந்த கல்வியறிவு பெற்று, ஒவ்வொரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் கொண்டவர் நம் தர்மா. கலை, இலக்கியம், அரசியல், சமூகப்பணி எனப் பன்முகத் திறமையுடைவர்.

தர்மகுலசிங்கம் டேனிஷ் அகதிகள் குழுவில் (Danish Refugee Council) மொழிபெயர்ப்பாளராகவும், டேனிஷ் குடிவரவுப் புலத்தில் (Luth Advokatfirma Aabenaraa, Denmark) டேனிஷ் – தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் 1988 முதல் உள்ளார். மேலும் டேனிஷ் அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார்.தர்மகுலசிங்கத்தின் முதல் புத்தகம் 1996 இல் வெளிவந்தது. கடந்த இருபதாண்டுகளில் ஐரோப்பாவில் வெளிவரும் பல்வேறு இதழ்களில் கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து எழுதி வெளியிட்டு வருகின்றார். டென்மார்க்கின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின்(அனசன்) தேவதைக் கதைகள் 31  ஐ தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து,  தாய், பாட்டி என்னும் இரு தொகுதிகளாக தமிழில் வழங்கியுள்ளமை மிகப்பெரும் பணியாகும். தாய் சிறுகதைத் தொகுப்பிற்கு 1997 இல் இலங்கை அரசின் சாகித்ய விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தேடல் – சில உண்மைகள் என்ற இவரின் நூலும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். ஆண்டர்சன் என்ற டேனிஷ் எழுத்தாளரின் பல வகைப் படைப்புகளையும் தமிழிற்கு அறிமுகம் செய்த பெருமை தர்மகுலசிங்கத்தைச் சாரும். அனசனின் 54 கதைகள் கொண்ட மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்றை 2007 இல் வெளியிட்டுள்ளார்.

டென்மார்க்கு தமிழ் இலக்கியக் கழகம், வயன் நகர இசைப்பள்ளி, தமிழ் இசைப் பண்பாட்டுப் பள்ளி, டேனிஷ் – தமிழ்ப் பதிப்பகம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆகிய அமைப்புகளிலும், நிறுவனங்களிலும் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். 1997 - இல் இலங்கை தேசிய சாகித்ய விருது உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவர். ஐரோப்பியா நாடுகளில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் தலைமை தாங்கி, நடத்திவரும் தர்மகுலசிங்கம் சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்ற விருப்பம் உடையவர்.

புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்கள் படைப்பு இலக்கியங்களையும், மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் தந்து தமிழ் மொழிக்கு இலக்கிய வளம் சேர்த்துவருகின்றனர். அந்த அந்த நாட்டு அரசியல், கலை இலக்கிய முயற்சிகளுக்குப் பெருந்துணை புரிகின்றனர். அவ்வகையில் டென்மார்க்கு நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்து, தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்க்கும் நல்லுள்ளம் வாய்த்த இலக்கிய ஆளுமையாக நம் தருமன் தர்மகுலசிங்கம் இயங்கி வருகின்றமை பாராட்டிற்குரியது. இவர் தொண்டு தொடர்வதாகுக.

**** இக்கட்டுரையின் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.


கருத்துகள் இல்லை: