சி. வேலுசுவாமி (02.04.1927 - 24.05.2008)
புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மொழி,
இலக்கியம், கலை வளர்ச்சிக்குத்
தொடர்ந்து பாடுபட்டு
வருகின்றனர். அந்த வகையில் மலேசியத் தமிழர்களின் தமிழிலக்கியப் பணிகளும், பங்களிப்புகளும்
தாயகத் தமிழகத்தார் அறியத்தக்க வகையில் தகுதியுடையனவாக உள்ளன. மலேசியாவில் வாழும் தமிழர்களின்
எண்ணிக்கை ஏறத்தாழ இருபது இலட்சம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய நாட்டின்
வளர்ச்சியிலும், அரசியலிலும், தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால் தமிழர்களுக்கு
உரிய சிறப்பு மலேசியாவில் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளது.
தமிழ் மாணவர்கள் கல்விபெறுவதற்குச் சிறப்பான வசதிகளை
அந்த நாட்டு அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. மலேசியாவில் 524 தமிழ்ப் பள்ளிகள் மொழியையும்,
இலக்கியத்தையும் கற்பிக்கும் பணியைச் சிறப்பாக செய்துவருகின்றன. இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாட நூல்களையும் பிற துறைசார்ந்த, அரிய
நூல்களையும் பலவகையில் எழுதித் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளனர். அந்த வகையில் குறிப்பிடத்தக்க
எழுத்தாளர்களுள் ஒருவர் கவிஞர் சி. வேலுசுவாமி ஆவார்.
மலேசியப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும்
கடமையாற்றிய சி. வேலுசுவாமி (02.04.1927 - 24.05.2008) பன்முகத் திறமைகொண்ட படைப்பாளியாக
வாழ்ந்துள்ளதை அவரின் படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர்,
சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலமுனைகளில் செயல்பட்டுள்ள சி. வேலுசுவாமி திருக்குறளுக்கு
உரையெழுதிய உரையாசிரியராகவும் விளங்கியுள்ளார். கோலாலம்பூரில் இயங்கிய குறள் இயக்கம்
வழியாகத் திருக்குறள் வகுப்புகளை நடத்தித் திருக்குறள் நூல் மலேசிய மண்ணில் பரவுவதற்கு
வழியமைத்தவர். திருக்குறள் மணிகள் என்ற நூலையும் வெளியிட்டவர். தமிழ்நேசன் நாளிதழில்
திருக்குறளை உரைநடையாக அறத்துப்பால் முழுமைக்கும் எழுதி வெளியிட்டவர். தமிழ்-மலாய்-ஆங்கிலமொழி
அகராதி உருவாக்கிய வகையில் மும்மொழி வளர்ச்சிக்கும் பாடுபட்டவராகவும் சி. வேலுசுவாமியின்
பணிகள் நீட்சிபெறுகின்றன.
பண்டித வகுப்பில் மூன்றாண்டுகள் பயின்று தமிழ்ப்புலமை
கைவரப்பெற்ற இவர், தமிழாசிரியராகவும், போதனாமுறைப் பயிற்சிக் கல்லூரியில் பகுதிநேர
விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். மாணவர்களின் உள்ளம் அறிந்து கற்பிக்கும் இவர்,
சிறந்த பாட நூல்களை எழுதி, நிலைத்த புகழ்பெற்றுள்ளார். தமிழ்ப்பண்ணை நடத்திய சிறுகதைப்
போட்டியில், இவர் எழுதிய ’மீனாட்சி’ என்னும் சிறுகதை தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
இந்தக் கதை அக்கரை இலக்கியம் என்னும் பெயரில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட நூலில் இடம்பெற்றது.
தமிழகத்து ஏடுகளான கலைமகள், தீபம், மஞ்சரி முதலிய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.
தமிழ்முரசு, தமிழ்நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, ஜனோபகாரி, வளர்ச்சி, வெற்றி போன்ற ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியவர்.
மலேசியாவில்
நெகிரி செம்பிலான் மாநிலம், ரந்தாவ் (Rantau) என்ற ஊரில் வாழ்ந்த சின்னசுவாமி, அங்கம்மாள்
ஆகியோரின் மகனாக, சி.வேலுசுவாமி 02.04.1927 இல் பிறந்தவர். "லிங்கி" எஸ்டேட்
தோட்டப்பள்ளியில் படித்தவர். எழாம் வகுப்பு வரை படித்த பிறகு, ஆசிரியர் பயிற்சி பெற்று
தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தலைமையாசிரியர் நிலைக்குப் பின்னாளில் உயர்ந்து
ஓய்வுபெற்றவர். 1946 இல் இலட்சுமி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு
எட்டுக் குழந்தைகள் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.
மலேசியாவில் தொடக்க நாள்களில் பாட நூல்கள் அச்சிடுவதற்கு
வசதிகள் இல்லை. இந்தியாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பாட நூல்கள் வரவழைக்கப்பட்டன.
மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு (1957) பாட
நூல்கள் அச்சிடும் பணி தொடங்கியது.
மலேசியாவில் அச்சகங்களோ, போதிய பதிப்பகங்களோ தொடக்க
காலத்தில் இல்லை. அக்காலத்தில் மனோன்மணி புத்தகசாலை,
கிருஷ்ணா புத்தகசாலை, விவேகானந்தா புத்தகசாலை, மயிலோன்(Mylone) புத்தகசாலை உள்ளிட்ட
சில பதிப்பகங்களே இருந்தன. தோட்டப்பள்ளியில்
ஆசிரியராக இருந்த சி.வேலுசுவாமி நற்றமிழ்த் துணைவன் (கட்டுரைகள்) என்ற தலைப்பில் ஒன்றாம்
வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படித்துப் பயனடையும் வகையில் பயிற்சி
நூல்களை உருவாக்கினார். சந்திரன் என்ற புனைபெயரில் இந்த நூலை இவர் எழுதினார். மனோன்மணி
பதிப்பகத்தின் வழியாக நற்றமிழ்த் துணைவன் 1963 முதல் 2009 வரை 33 பதிப்புகளைக் கண்டது.
மலேசியாவில் அனைவருக்கும் அறிமுகமான நூலாக இந்த நற்றமிழ்த் துணைவன் பயிற்சிநூல் உள்ளது.
சி. வேலுசுவாமி அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியதால்
பல்வேறு புனைபெயர்களில் எழுதத் தொடங்கினார். சரவணபவன், சந்திரன், தமிழ்வாணன், கவிதைப்பித்தன்,
இளங்கவிஞன், ஏச்சுப்புலவன் உள்ளிட்ட பல பெயர்களில் இவர் பலதுறை சார்ந்து நூல்களை எழுதியுள்ளார்;
பதிப்பித்துள்ளார். இவர்தம் நூல்களையும் படைப்புகளையும் முறைப்படுத்தி வெளியிடும்பொழுது
மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் நூல்களாக இருக்கும். இவர் மலேசிய மொழியிலிருந்து
தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகள் வெளிவராமல் போனமை தமிழுக்கு இழப்பேயாகும்.
மலேசிய மொழி படியுங்கள், பழமொழி விளக்கம், இலக்கணச்
சுருக்கம், நற்றமிழ்த் துணைவன், கவிஞராகுங்கள் என்பன இவரின் பெருமையுரைக்கும் நூல்களாகும்.
மலாய்-தமிழ்-ஆங்கில மொழி அகராதிகளை மாணவர்களுக்கும், பெரியவர்களுக்குமாக இவர் வெளியிட்டுள்ளமை
மொழி வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தியாகும். இந்த அகராதிகள் பல பதிப்புகளைக் கண்டு,
பல்லாயிரம் படிகள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
’திருமகள்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு உரிய இதழை சி. வேலுசுவாமி 27 ஆண்டுகளாகத்
தொடர்ந்து நடத்தியவர். ’பக்தி’ என்ற சமய இதழை 14 ஆண்டுகள் நடத்தியவர். இந்து சமயத்தில்
ஈடுபாடு கொண்ட இவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு ஆன்மீக நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
மிகச் சிறந்த முருகபக்தரான சி.வேலுசுவாமி மலேசிய இந்து சங்கப் பிரச்சாரக் குழுவைச்
சார்ந்தவராக விளங்கியவர். இசையுடன் பாடி விளக்கும் ஆற்றலும், தமிழ் இலக்கியப் பயிற்சியும்
இவருக்கு இருந்ததால் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். திருமகள் அச்சகம், திருமகள்
பதிப்பகம், சரவணபவன் பதிப்பகம் என்று பல்வேறு நூல்வெளியீட்டகங்களை நடத்தியவர்.
சி.வேலுசுவாமி குழந்தைப் பாடல்கள் வரைவதில் பெரும்புலமை
பெற்றிருந்தவர். பாட்டுப்பாடலாம், நான் பாடும் பாட்டு, தேனீயைப் பாரீர், பாட்டெழுதப்
பழகுங்கள், அருள்புரிவாய் என்ற தலைப்புகளில் இவர் வெளியிட்ட குழந்தைப் பாடல் நூல்கள்
மலேசியப் பின்புலத்தில் சிறந்த படைப்புகளாக வெளிவந்துள்ளன. இவரின் அருள்புரிவாய் நூலுக்குக் கவியரசு கண்ணதாசன்
வரைந்துள்ள அணிந்துரைப் பாடல் சி.வேலுசுவாமியின் கவிதைப்பணிக்குச் சூட்டப்பெற்ற மணிமகுடம்
எனில் பொருந்தும்.
"............................
சிறுவர்க்
காகத் திறத்துடன் வடிக்கும்
வியத்தகு
கவிஞர் வேலு சாமி
இந்நூல்
தன்னை இயற்றித் தந்துள்ளார்!
அருள்புரிவாய்
என ஆரம்ப மாகித்
தொடரும்
இஃதோர் சுவையுள்ள நூலே!
கலைமகள்
பற்றிக் கார்முகில் பற்றிப்
பலகா
ரத்தில் பலவகை பற்றி
ஒலிக்கும்
பறவைகள் ஓசைகள் பற்றிப்
பூக்கள்
நிறத்துப் புன்னகை பற்றி
வாழை
பற்றி, வானொலி பற்றி
நன்றி
பற்றி, நால்திசை பற்றிச்
சாலை
விதிகள் சாற்றுதல் பற்றி
எறும்பைப்
பற்றி எலிகளைப் பற்றி
பாரதி
பற்றி பாமதிக் பற்றி
வண்ண
வண்ண வார்த்தைக ளாலே
சின்னச்
சின்ன சிறுவர்கள் பாட
வேலுச்
சாமி விரித்த பாடல்கள்
பிள்ளைகள்
அறிவைப் பெரிதும் வளர்க்கும் ...
வேலுச்
சாமிஓர் வீட்டின் விளக்கு!
பல்லாண்
டிவரைப் பரமன் காக்க! "
என்று
கண்ணதாசன் வேலுசுவாமியைப் பற்றி எழுதியுள்ளமை இலக்கிய வரலாற்றில் இவரின் இருப்பை உறுதி
செய்யும் கவிதைப் பத்திரமாகும்.
"கவிதைப்பித்தன் கவிதைகள்" என்ற தலைப்பில்
இவரின் கவிதைகள் 1968 இல் நூலாக வெளிவந்தன. தமிழகப் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்,
மலேயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஈ.ச. விசுவநாதன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்த
இந்த நூலில் தனிப்பாடல்களும், இசைப்பாடல்களும், வானொலிக் கவியரங்கப் பாடல்களுமாக
72 கவிதைகள் உள்ளன. வெற்றி, மலைமகள், மாதவி, தமிழ்நேசன், மலைநாடு உள்ளிட்ட ஏடுகளில் வெளிவந்த படைப்புகளே இவ்வாறு
நூலுருவம் பெற்றுள்ளன. வெண்பா, விருத்தம், சிந்து, கொச்சகக் கலிப்பா வடிவங்களில் மரபுநெறி
நின்று பாடியுள்ளமை சி.வேலுசாமியின் தமிழ்ப்புலமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. மலேசிய
நாட்டுத் தலைவர் துங்கு அவர்களையும், மலேசிய நாட்டு வளத்தையும், கூட்டுறவுச் சிறப்பையும்,
தமிழர் நிலையையும், தமிழ்ச் சிறப்பையும் பல பாடல்களில் இந்த நூலில் ஆசிரியர் பாடியுள்ளார்.
03.05.1964 இல் கோலாலம்பூர் நகர மண்டபத்தில் நடைபெற்ற பாரதிதாசன் மறைவுகுறித்த இரங்கல்
கூட்டத்தில் கலந்துகொண்டு,
நின்பாட்டால்
உணர்ச்சி எழும், நித்தம் நித்தம் நான்படிப்பேன்.
துன்பத்திலும்
நின்கவிதை துயரோட்டும் நன்மருந்தாம்;
என்னின்பத்
தமிழ்க் கவிஞா! ஏனய்யா நீமறைந்தாய்?
கண்ணில்லா
அந்தகனுன் கனமறியாக் காரணமோ?
என்று
பாடியுள்ளமை பாவேந்தர் பாரதிதாசன்மேல் இவருக்கு இருந்த பற்றினைக் காட்டும் பாடல் வரிகாளாகும்.
மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து,
பலவாண்டுகள் செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். மலேசியத் தமிழ்
எழுத்தாளர்கள் குறித்த விவரத் திரட்டினை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர். எழுத்தாளர்
சங்கம் சார்பில் ஏடு என்ற இதழ் வெளிவருவதற்கு வழிசெய்தவர். மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்
சங்கத்திலும் தம் பங்களிப்புகளை வழங்கியவர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை
மலேசியாவில் நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்காற்றியவர். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மலேசியக் குழுவினருள் ஒருவராகக் கலந்துகொண்டவர்.
கவிஞர் சி. வேலுசுவாமியின் தேர்ந்தெடுத்த கவிதைகளை மலேசியத் தேர்வு ஆணையம், உயர்நிலைப்பள்ளி(SPM)
மாணவர்களின் பாட நூலில் 2001 ஆம் ஆண்டு முதல் இணைத்துள்ளது. மலேசியத் தமிழ்க் கல்வித்துறைக்கு
இவர் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் மலேசிய அரசு (PPN) Pingat Pangkuan Negara) என்ற
பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
ஆசிரியர் பணி, பதிப்புப்பணி, சொற்பொழிவுப்பணி,
படைப்பு நூல்கள், அகராதி நூல்கள், கல்வி நூல்கள் உருவாக்கியதன் வழியாக மலேசியத் தமிழ்
இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடத்தினைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கவிஞர் சி. வேலுசுவாமியின்
இதழ்ப்பணிகளும், படைப்புப்பணிகளும் விரிவாக ஆராய்வதற்குரிய களங்களைக் கொண்டுள்ளன.
வேலுசாமியார் திருக்குறள் உரைத்திறன் அறிய இங்கு அழுத்துக.
நன்றி:
தி இந்து (தமிழ்) நாளிதழ் 23.01.2018
திரு. சி. வே. கிருஷ்ணன்(மலேசியா)
திரு. வேங்கடரமணி(மலேசியா)
குறிப்பு:
இக்கட்டுரையை எடுத்தாள்வோர் எடுத்த இடம், கட்டுரையாளன் பெயர் சுட்டுங்கள்.