நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஜனவரி, 2018

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்




      தமிழில் கிடைத்துள்ள முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு குறிப்பிடும் கதை இந்த நூலுள் பொதிந்திருந்தாலும் அக்காலத்தில் இருந்த தமிழர்களின் கலைகளைத் தாங்கி நிற்கும் கலைக் கருவூலமாகவும் இந்த நூலைக் குறிப்பிடலாம். தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்த ஆடல், பாடல், கூத்து, இசைக்கருவிகள், அவற்றை இசைக்கும் முறைகள் யாவும் இந்த நூலில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. கதைப்போக்கில் இவ்வாறு பலதுறைச் செய்திகளைத் தாங்கி நிற்கும் நூல் உலகில் வேறுமொழிகளில் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குச் சிலப்பதிகாரம் ஒப்புயர்வற்ற நூலாக விளங்குகின்றது.

     சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கலைக்கூறுகளை நாம் விளங்கிக்கொள்ள சிலப்பதிகாரத்தின் பழைய அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை, பஞ்சமரபு வெண்பாக்கள் பெரிதும் துணைசெய்கின்றன. சிலப்பதிகாரத்தின் கதைப்போக்குகளும், உத்திகளும், இசைப்பாடல்களும், கலை வெளிப்பாட்டு முறைகளும் நமக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றன. இக்கட்டுரை சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து, இந்த நூல் நம் நெஞ்சில் நிலைபெறுகின்றமைக்கான காரணத்தை முன்வைக்கின்றது.

     சிலப்பதிகாரத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் பகுதியாக அடியார்க்கு நல்லாரின் பதிகவுரை நமக்குப் பெருந்துணைபுரிகின்றது. பெரும்பாலும் கல்வியுலகில் இந்தப் பதிகவுரையை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. இப்பதிகவுரை சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் முன்னுரையாக அமைகின்றது.

     அடியார்க்கு நல்லாரின் உரை சிலம்பு முழுமைக்கும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனினும் பதிகத்திலிருந்து ஊர்சூழ் வரி வரை மட்டும் கிடைக்கின்றது (கானல்வரி நீங்கலாக). மதுரைக் காண்டத்தில் வழக்குரை காதை, வஞ்சினமாலை, அழற்படு காதை, கட்டுரை காதை ஆகிய நான்கு காதைகளுக்கும், வஞ்சிக்காண்டம் முழுமைக்கும் அடியார்க்குநல்லாரின் உரை இல்லை.

     நான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களாகிய முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் ஆகியவற்றிற்குரிய ஏறு நிரல் நரம்புகள் இவை இவை, இறங்கு நிரல் நரம்புகள் இவை இவை என்று பதிகவுரையில் அடியார்க்குநல்லார் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை இசை ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்கின்றது. மேலும் ஆதி இசை என்பது முல்லை நிலத்திற்குரிய செம்பாலை (அரிகாம்போதி) என்று சிறப்பித்துக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத் தகுந்தது. அதுபோல் நடுவண் திணையாக விளங்கும் பாலை நிலத்திற்குரிய அதாவது அரும்பாலைக்குரிய (சங்கராபரணம்) நரம்புகள் இவை இவை என்றும் அடியார்க்கு நல்லார் தம் பதிகவுரையில் தெளிவுபடுத்தியுள்ளமையும் இசையாய்வுக்கு உரிய அரிய குறிப்புகளாகும். நூல்தரும் குறிப்புகள் நம்மை வியப்புறுத்தி நிற்பதுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய அடியார்க்கு நல்லார் உரையும் நமக்குப் பல உண்மைகளைப் புலப்படுத்துகின்றது.

காப்பியக் கட்டமைப்பில் புதுமை

     சிலப்பதிகாரத்துக் கதை மக்கள் வழக்கில் இருந்த கதையாக இருந்துள்ளது. அதனை அறிந்த இளங்கோவடிகளார் தம் கலைத்திறன் முழுவதையும் கூட்டிப் பெருங்காப்பியமாகச் செய்துள்ளார். இன்றும் நாட்டார் வடிவில் கோவலன் கண்ணகி கதை வேறு வேறு வடிவங்களில் வழங்குகின்றது. சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகிக்கு இலங்கையின் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. கண்ணகை அம்மன் என்னும் பெயரில் அமைந்த கோயில்களில் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்கள் நடைபெற்றுவருகின்றன. காரைதீவு கண்ணகி அம்மன் கோயில், ஆரையம்பதி கண்ணகியம்மன் கோயில், முல்லைத்தீவு  வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்  உள்ளிட்ட கண்ணகி கோயிலும் அங்கு நடைபெறும் திருவிழாக்களும், நாட்டார் நம்பிக்கைகளும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கன.

     மக்களிடம் பெரு வழக்கில் இருந்த கோவலன் - கண்ணகிக்  கதையை எடுத்துக்கொண்ட இளங்கோவடிகளார் அவர் காலம் வரை பெரு வழக்கில் இருந்த ஆசிரியப்பா வெண்பா வடிவங்களிலிருந்து வேறுபட்டு, இசைப்பாடல்கள் அடங்கிய நூலாகத் தம் காப்பியத்தைச் செய்துள்ளார்.

அரசர்களையும், கடவுளையும் புகழ்ந்து பேசும் மரபிலிருந்து வேறுபட்டு, குடிமக்களைத் தம் காப்பிய மாந்தர்களாக்கிப் புதுமை செய்தார். இயற்கையை வாழ்த்தித் தம் காப்பியத்தைத் தொடங்கி மேலும் புதுமை செய்தார். பின்பு நடக்க உள்ள நிகழ்வுகளை முன்பே குறிப்பால் உணர்த்தும் நுட்பத்தை அறிமுகம் செய்கின்றார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலம்பு மிளிர்கின்றது.

     சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார் (நாக நீள் நகரொடு நாக நாடதனொடு....). காப்பியத்தலைவனை அடுத்த நிலையில் நிறுத்தி அறிமுகம் செய்கின்றார் (பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த...). அக்காலத்தில் நடைபெற்ற திருமண முறைகளை இளங்கோவடிகள் நமக்கு அறிமுகம் செய்கின்றார் (இருபெருங் குரவரும் ஒருபெரு நாளில் மணவணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி..) கண்ணகி கற்பில் சிறந்தவள் என்பதைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் "தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்று.." என்று உவமைகாட்டுவது கற்போரைக் கழிபேருவகை கொள்ளச் செய்வதாகும். "மயன்விதித் தன்ன மணிக்கால மளிமிசை" இருந்த கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டிப் பேசும் பகுதிகள் காப்பிய ஆசிரியரின் பண்பாடு கட்டிக்காக்கும் பகுதியாகும் (உலவாக் கட்டுரையாக்கிய உள்ளத்து மொழிகளை நினைமின்).

     அரங்கேற்று காதையில் மாதவியின் ஆடலும் பாடலும் அழகும் குறிப்பிடும் வகையில் பண்டைக்காலத்து நாட்டிய மேடையையும், அதனை அணிசெய்து அமர்ந்திருந்த தண்ணுமையாசான், குழலாசான், யாழாசான், தமிழ் முழுதறிந்த புலவர் பெருமகனார் உள்ளிட்ட கலைவல்லார்களையும் காட்டுக்கின்றமைகொண்டு, உலக அரங்கில் இப்பேரிலக்கியத்துக்கு நிகராக ஒரு பாவியம் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

அந்திமாலை சிறப்புச்செய் காதையில்,

"நிலவுப்பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற் களித்தாங்
கார்வ நெஞ்சமொடு கோவலற்கெதிரிக்
கோலங்கொண்ட"

மாதவியையும்,

"அஞ்செஞ் சீறடி யணிசிலம்பொழிய
மென்றுகிலல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்குமெழுதாதவளாய்" விளங்கும்
கையறு நெஞ்சத்துக் கண்ணகியையும் அடிகளார் சிறப்பாகப் படைத்துக்காட்டியுள்ளார்.

     இந்திர விழாவின் சிறப்பினையும் பூம்புகார் நகரத்து மக்கள் கடலாடும் காட்சிகளையும் காட்டிய இளங்கோவடிகள் ஏழாம் காதையாக கானல்வரியைப் படைத்து, பண்டைத் தமிழகத்துப் பண்மரபுகளை நிலைப்படுத்தியுள்ளார். கோவலன் இசைக்கத் தொடங்கும் யாழ்க்கருவியை அடிகளார் "மணமகளிர் கோலத்தொடு" ஒப்புமைப்படுத்திக் காட்டி, இக்கருவியின் இசையும், கண்டத்து இசையும் போட்டியிட்டு, இறுதியில் விளரிப்பண்ணாக விரிந்து, கோவலன் - மாதவியின் பிரிவுக்கு இந்தப் பகுதி அடிகோலுகின்றது.

     மாதவியிடம் ஊடல்கொண்ட கோவலன் இல்லம் திரும்புவதும், கண்ணகியுடன் கதிரெழும் முன்னர் பூம்புகார் எல்லை கடப்பதும், கவுந்தியடிகளின் துணையால் நாடு காண்பது, காடு காண்பதும், மாதரி ஐயை தொடர்பால் ஆயர்பாடியில் தங்குவதும், மதுரை நகர் அடைவதும், கோவலன் கொலைக்களப்படுவதும், கண்ணகி வழக்குரைப்பதும், மதுரை மாநகரில் ’தீத்திறத்தார் பக்கம் தீ சேர்வதும்’, பின்னர் பேரியாற்றங்கரையின் வழியில் நடந்து, வேங்கை மர நிழலில் நின்று "வலவன் ஏவா வானூர்தி" ஏறுவதும், குன்றக்குரவர்கள் தம் அரசனான சேரன் செங்குட்டுவனுக்கு நடந்த விவரங்களைக் கூறக் கண்ணகிக்கு கல்லெடுத்து வந்து, படிமம் செய்து, கோயில் எடுப்பித்து, வழிபாடு செய்துவதுமாகக் காப்பியம் நிறைவுக்கு வருகின்றது.

     இளங்கோவடிகள் மூன்று நாடுகளை இணைப்பதும், ஐந்து நிலத்து வாழ்க்கை முறைகளையும் கலைவடிவங்களையும் எடுத்துரைப்பதும் காப்பியத்திற்கு அழகூட்டும் பகுதிகளாகும். முல்லை நிலத்திற்குரிய இசையை (செம்பாலை = அரிகாம்போதி), ஆய்ச்சியர் குரவையிலும், குறிஞ்சி நிலத்திற்குரிய இசையை (படுமலைப் பண்   = நட பைரவி) நடுகற்காதையிலும் குன்றக்குரவையிலும் விளக்கியுள்ளார். நெய்தல் நிலத்திற்குரிய விளரிப்பண் (தோடி), செவ்வழிப்பண் ஆகியவற்றை கானல்வரியில் விளக்கியுள்ளார். மருத நிலத்திற்குரிய மருதப்பண்ணை (கோடிப்பாலை  = கரகரப் பிரியா) வேனிற் காதையில் விளக்கியுள்ளார். பாலை நிலத்திற்குரிய பண்ணைப் (அரும்பாலை = சங்கராபரணம்) புறஞ்சேரி இறுத்த காதையிலும் விளக்கியுள்ளார். மேலும் அக்காலத்தில் மக்கள் வழக்கில் இருந்த வழிபாட்டு முறைகள், தெய்வ நம்பிக்கைகளையும் தம் காப்பியத்தில் இளங்கோவடிகளார் பதிவுசெய்துள்ளார். மக்களின் வாழ்க்கைமுறை, தொழில்கள், நம்பிக்கைகள் யாவும் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.

கதைப்போக்கில் புதுமை

     சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும்பொழுதும், கதையை நகர்த்தும்பொழுதும் தேவையான உவமைகள், பொருத்தமான எடுத்துரைப்புகளை அடிகளார் பின்பற்றியுள்ளார். அக்காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்களையும் நமக்கு நினைவுப்படுத்துகின்றார். "சோமகுண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கும்" பழக்கம் இருந்ததை நினைவூட்டுகின்றார். தலைக்கோல் பட்டம் சமூகத்தில் இடம்பெற்றிருந்ததை எடுத்துரைக்கின்றார். கோவலன் கூறும் குறியாக் கட்டுரைக்கு மறுமொழி பேசாத கண்ணகி, பின்னாளில் "பீடன்று", "சிலம்புள கொண்ம்" "மதுரை மூதூர் யாது" என்று அளவொத்த சொற்களைப் பேசுகின்றாள். பின்னர் கண்ணகியை உரிய இடத்தில் இளங்கோவடிகள் வழக்குரைக்க வைத்துள்ளமை காப்பியத்தைக் கற்போருக்கு ஆர்வத்தை உண்டாக்கும் படைப்பு உத்தியாகும்.

     "மாதரார் தொழுதேத்த" என்ற தொடக்கத்தில் குறிப்பிடும் இளங்கோவடிகள் பின்னாளில் இவ்வையம் கண்ணகியைத் தெய்வமாகப் போற்றும் வகையில் அவளின் பண்புமேம்பட்ட தன்மையினை வளர்த்தெடுக்கின்றார். கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தன் இக்காப்பியத் தலைவிக்குக் கோயில் எடுப்பித்துப் போற்றுவதாலும், கதைத்தலைவி கண்ணகி இலங்கைக்குச் சென்றதாக மக்களிடம் நம்பிக்கை இருப்பதாலும் இது பன்னாட்டுக் காப்பியமாக மிளிர்கின்றது. சிங்கள மக்கள் கண்ணகியைப் "பத்தினி தெய்யோ’ என்று குறிப்பிடுகின்றனர். கேரள மக்கள் "பத்தினித் தெய்வம்" என்று குறிப்பிடுகின்றனர்.

சிலம்பில் இடம்பெறும் இசைப்பாடல்கள்

     சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்கள் பல உள்ளன. அக்காலத்தில் மக்களிடம் இருந்த இசைவடிவங்களை அடிகளார் "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்று தொடங்கும் பாடலே இசைப்பாடலாகும். அதுபோல் கானல்வரியில் இடம்பெறும் பாடல்கள் யாவும் இசைப்பாடல்களே ஆகும். ஆற்றுவரி உள்ளிட்ட பல வரிப்பாடல்கள் உள்ளன.

     அதுபோல் கந்துகவரி என்ற அமைப்பில் சிலப்பதிகாரத்தில் பாடல்கள் உள்ளன. முல்லைநிலை மக்கள் பாடும் முல்லைப்பண்ணில் அமைந்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் குறிப்பிடத் தக்க பாடல்களாகும். குரவைக்கூத்து ஆடும் பெண்கள் பாடும் பாடல்களைக் குன்றக்குரவையில் காணலாம்.

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ;

`பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்,
ஈங்குநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்,
ஆம்பல்அம் தீங்குழல் கேளாமோ? தோழி'

`கொல்லைஅம் சாரல் குருந்துஓசித்த மாயவன்,
எல்லைநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்
முல்லைஅம் தீங்குழல் கேளாமோ? தோழி'

என்னும் ஆய்ச்சியர் குரவையின் பாடல்கள் சிறப்பிற்குரிய பாடல்களாகும்.

 பொன்னிலங்கு பூங்கொடி
           பொலஞ்செய்கோதைவில்லிட 
     மின்னி லங்கு மேகலைகள்
          ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
     தென்னன் வாழ்க வாழ்க என்று
          சென்று பந்த டித்துமே
     தேவரார மார்பன் வாழ்க 
            என்று பந்த டித்துமே.( வாழ்த்துக் காதை 20)

எனத் தொடங்குவன பந்தடிப் பாடலாகும்.

நிறைவுரை

     மக்கள் வழக்கில் இருந்த - மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த கதையைத் தம் கலைத்திறமையால் இளங்கோவடிகள் ஈடிணையற்ற காப்பியமாகப் புனைந்துகாட்டியுள்ளமயை அறிந்த பாரதியார் நெஞ்சையள்ளும் சிலம்பு என்று நெஞ்சு நிமர்ந்து உரைத்துள்ளார். வடமொழிக் காப்பியங்களை அறிந்த பாரதியார், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை என்று எழுதிச் சென்றுள்ளமை இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்க பாட்டுப் பத்திரமாகும்.

குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் கட்டுரையாளர் பெயர், எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.




வெள்ளி, 8 ஜூலை, 2016

புலவர் நா. தியாகராசன்


புலவர் நா. தியாகராசன்

தமிழர்களின் கலைக்கருவூலமான சிலப்பதிகாரத்தின் சிறப்புகள், அதில் இடம்பெற்றுள்ள ஊர்ப்பெயர்கள், கதைமாந்தர்களின் பெயர்கள், சிலப்பதிகாரப் பதிப்புகள், சிலப்பதிகார ஆய்வறிஞர்கள், சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றும் பொழிஞர்கள், பூம்புகார் குறித்த வரலாற்று ஆய்வுகள் என ஒரு நூற்றாண்டுக்குரிய செய்திகள் அனைத்தையும் தம் உள்ளத்தில் தேக்கிவைத்துள்ள, நடமாடும் சிலப்பதிகார ஆய்வடங்கல் என்று புலவர் நா. தியாகராசனைக் குறிப்பிட்டால் சாலப் பொருத்தமாக இருக்கும்.

புலவர் நா. தியாகராசனைப் பலவாண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக நினைவு. அதன் பிறகு குடந்தைக் கல்லூரியில் மீண்டும் சந்திப்பு; பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்த பொதிகை தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிபரப்பின் படப்பிடிப்புக்குப் பூம்புகாருக்குச் சென்றபொழுது மீண்டும் சந்திப்பு; பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழாவுக்குப் புதுவைக்கு வந்தபொழுது சந்திப்பு எனப் புலவருடன் அமைந்த தொடர்பு வளர்பிறைபோல் வளர்ந்துகொண்டே இருந்தது. இடையில் செல்பேசி உரையாடலுக்கும் குறைவில்லை.

அண்மையில் ஒருநாள் புலவரின் செல்பேசி அழைத்தது. மறுமுனையில் அமைந்த அவரின் குரலில் விளரிப்பண் போல் விம்மல் தெரிந்தது. உடல்நலம் பாதிப்புற்றுள்ளதாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். புலவருக்கு ஏதோ நடந்துள்ளது என்று மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கிழமையாக மயிலாடுதுறையில் மருத்துவம் பார்த்துக்கொண்டு, இப்பொழுது மேலப்பெரும்பள்ளம் வீட்டில் ஓய்வில் இருப்பதாக உரைத்தார். நானும் அவருக்கு ஆறுதலாக வரும் காரிக்கிழமையில் இல்லம் வந்து சந்திப்பதாக உரைத்து, உடலைப் போற்றுங்கள் என்று குறிப்பிட்டு, செல்பேசியை நிறுத்தினேன். புலவரின் அறிவாற்றல், பணிகள் மீண்டும் மீண்டும் என் நினைவில் தோன்றி வருத்தியது. எனக்கு அமைந்த அனைத்துப் பணிகளையும் புறந்தள்ளிவிட்டு, இந்தக் காரிக்கிழமை(02.07.2016) பூம்புகார் செல்லத் திட்டமிட்டேன்.

புலவர் நா. தியாகராசனாரைப் பார்த்து, ஆறுதல் சொல்லிவிட்டு வருவது அனைவராலும்  இயலும். அவ்வகையில் எளிய பயணமாக நான் என் பயணத்தை அமைத்துக்கொள்ள விரும்பவில்லை. புலவரின் அறிவாற்றலை எதிர்வரும் காலத்திற்குப் பதிந்துவைக்க எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே என்று என் உள்மனம் நடுங்கியது. புலவரின் உடல்நலனுக்கு ஏதேனும் நடந்தால் பல அரிய செய்திகளை இழந்துவிடுவோமே என்று கவலையுற்று ஒளிப்பதிவுக் கருவிகளுடன் பூம்புகாருக்குப் புறப்பட்டோம்.

காலை பதினொரு மணிக்கு நாங்கள் புலவரின் இல்லத்தை அடைந்தோம். எங்களைக் கண்டதும் புலவருக்குப் புத்துணர்ச்சி வந்தது. அன்பொழுக வரவேற்றார்; வீட்டின் உள்ளே அழைத்துச்சென்று அவரின் சிறந்த சேமிப்பான யாழ்நூலின் முதல்பதிப்பை என் கையில் தந்துவிட்டு நான் அடைந்த மகிழ்ச்சியைக் கண்டு, அவர் மகிழ்ந்தார். அருகில் இருந்த அரிய நூல்களின் தொகுதிகளை ஆர்வமாக அறிமுகம் செய்தார். அப்பொழுது புலவரின் மகனார் தயக்கத்துடன் அருகில் வந்து, அண்மையில் அப்பாவுக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்தது. அமைதியாக உரையாடுங்கள் என்று அன்புடன் குறிப்பிட்டார். இப்பொழுது எனக்குப் புலவரின் உடல்நிலையும் அவரின் பகுத்தறிவு உள்ளமும் புரிந்தது. மெதுவாக உடல்நலம் வினவினேன். நலமாக இருப்பதாகவும், இரண்டு நாளாகப் புத்துணர்வுடன் இருப்பதாகவும் கூறினார்.

அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று, அருகில் இருந்த ஒரு திருக்கோயிலுக்குப் புறப்பட்டோம். இக்கோயில் அருளாளர்களால் பாடல் பெற்றது என்ற குறிப்பைப் புலவரின் வாய்மொழியால் அறிந்தோம். திருக்கோயில் ஒட்டிய ஒரு தோப்பில் அமர்ந்து புலவரின் சிலப்பதிகாரச் சிறப்புரையைப் பதிவு செய்தோம். அரிய செய்திகளைப் புலவர் சொல்ல நினைத்தாலும் அடிக்கடி நாக்கு வறண்டு, பேச்சைத் தடைப்படுத்தியது. இடையிடையே நீரைப் பருகியவாறு புலவர் தம் பேச்சை வழங்கினார். சிலப்பதிகார உரையும், பூம்புகார் வரலாறும் ஒளிக்காட்சியாகப் பதிவாயின. ‘நயாகராஅருவிபோலப் பொங்கிவர வேண்டிய பேச்சு இப்பொழுது, சிற்றூர் ஓடைபோலச் சிறுத்து அமைந்ததைப் புலவரே ஒத்துக்கொண்டார். இந்த அளவாவது கிடைத்ததே என்று நான் ஆறுதல் பெற்றேன்.

புலவர் நா. தியாகராசன் பூம்புகாருக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ள மேலப்பெரும்பள்ளம் ஊரைச் சார்ந்த பெருநிலக்கிழார் மரபினர். மேலப்பெரும்பள்ளம் என்னும் இவ்வூர் திருவலம்புரம் என்னும் பெயரில் சமயவாணர்கள் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. அருளாளர்களால் பாடல்பெற்ற பெருமைக்குரியது இவ்வூர். புலவர் நா. தியாகராசனுக்கு அமைந்த மரபுவழிச்செல்வ வளத்தால் ஊரில் உள்ள அனைவரின் மதிப்புக்கும் உரியவராக விளங்குபவர். இளமைக்காலம் முதல் சிலப்பதிகாரத்தில் நல்ல புலமையும், பயிற்சியும் கொண்டவராக விளங்கி, சிலப்பதிகார அறிஞர்களை அழைத்துப், பூம்புகாரில் சிலப்பதிகாரத் திருவிழாக்கள், ஆய்வரங்குகள், பொழிவுகள் நடைபெற வழிவகுத்தவர். என்.டி. என்று அனைத்து மக்களாலும் அழைத்துப் போற்றப்படும் புலவர் அவர்கள் பேராயக் கட்சியில் ஈடுபாடுகொண்டவர். மூன்று முறை ஊராட்சிமன்றத் தலைவராக இருந்து மக்கள் பணியாற்றியவர்(1963 முதல் 1973 வரை; மீண்டும் 1983 முதல் 1988 வரை). செல்வாக்கும், சொல்வாக்கும் நிறைந்தவர்.

பூம்புகாரின் சிறப்பினை உலகம் அறிவதற்கு ஆய்வறிஞர்களைத் தொடர்ந்து அழைத்துவந்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், வசதிகளையும் செய்து தந்து, பூம்புகார் வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர் நம் புலவர். தூண்டல் இல்லையேல் துலக்கம் இல்லை! இலக்கிய விழாக்களுக்குத் துணை நின்றமை போன்று, பூம்புகாரின் அகழாய்வுப்பணிக்கும், கடலாய்வுப்பணிக்கும் பெருந்துணை செய்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைத் தம் செல்வமாகப் பாதுகாத்து வைத்துள்ளார். புலவரின் தந்தையார் நாகமுத்து படையாட்சி  தம்முடைய இருபதாம் அகவையில்  தென்னாப்பிரிக்கா சென்று பெரும் பொருள் திரட்டியவர்(தென்னாப்பிரிக்கப் போரில் முதல் உயிர்க்கொடை தந்த நாகமுத்து படையாட்சியாரிலும் இவர் வேறானவர்).

நாகமுத்து படையாட்சி தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது காந்தியாரின் போராட்டம் வலுப்பெற்று நடந்துள்ளது. சோகன்சுபர்க்கு, கிம்பர்லி போன்ற இடங்களில் கடைகள் வைத்து நாகமுத்து படையாட்சி பெரும் பொருளீட்டி,1930 ஆம் ஆண்டு அளவில் இந்தியா திரும்பினார். மேலப்பெரும்பள்ளத்தில் மிகுதியான நிலங்களை வாங்கி வேளாண்மையில் ஈடுபட்டிருந்தார். நாகமுத்து படையாட்சி மேலப்பெரும்பள்ளத்தை அடுத்துள்ள திருவெண்காட்டில் பிறந்த உதயம் அம்மையாரை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டார். இவர்களுக்கு ஒன்பது மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதலில் மூன்று பெண்குழந்தைகள் பிறந்தனர். நான்காவது குழந்தையாகப் புலவர் தியாகராசன் 16.12.1928 இல் பிறந்தவர். அடுத்து மூன்று பெண்குழந்தைகளும், 2 ஆண்குழந்தைகளுமாகப் பிறந்தனர்.

நா. தியாகராசன் மேலப்பெரும்பள்ளத்தில் தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியில் பயின்றவர். அதனை அடுத்து மேலையூரில் வாழ்ந்த வாஞ்சிநாத ஐயரிடம் மூன்று ஆண்டு பயின்றவர். இப்பள்ளிப் பருவத்தில் சாரணர் படையில் இணைந்து தொண்டாற்றியவர். பள்ளி ஆண்டுவிழாவில் நந்தனார் வேடமிட்டு நடித்தவர். கலையுள்ளமும், உறுதியான உடலும் இவருக்குப் பள்ளி வாழ்க்கையில் கிடைத்தன. யோகப் பயிற்சியிலும் வல்லவராக விளங்கியவர்.

நா. தியாகராசன் மயிலாடுதுறையில் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர். பள்ளிப்பருவத்தில் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராக விளங்கி, இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நினைவுத் தங்கப்பதக்கம், சுழற்கோப்பைகளைப் பள்ளியில் பெற்றவர். தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று, பொதுத்தொண்டிலும், சமூக சேவையிலும் மாணவப்பருவத்தில் ஈடுபட்டவர். பள்ளியில் மாணவர் தலைவராகப் பணியாற்றியவர். இப்பொறுப்புகள் இவருக்குப் பின்னாளில் மக்கள் தொண்டு செய்யும் வாய்ப்பினைத் தந்தன. பள்ளியின் பொன்விழாவுக்குத் திருவனந்தபுரத்தில் திவானாகப் பணியாற்றிய சி.பி.இராமசாமி ஐயரை அழைத்துப் பேசச்செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

மயிலாடுதுறையில் வாழ்ந்த செயபாரதியை நா. தியாகராசன் 27.08.1953 இல் திருமணம்செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டவர். இவர்களுக்கு எழில், பாரி, பார்த்திபன், இராமன் என்ற நான்கு மகன்களும் வாசுகி என்ற ஒரு மகளும் இல்லறச் செல்வங்களாக வாய்த்தனர்.

1957 இல் மாதவி மன்றம் என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழறிஞர்களை அழைத்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தியமையால் புலவர்களின் தொடர்பு இவருக்கு அமைந்தது. இதனால் தமிழை முறையாகப் பயின்று பட்டம்பெற விரும்பினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966 முதல் 1968 வரை பயின்று புலவர் பட்டம் பெற்றவர்.

புலவர் நா.தியாகராசன் காந்தியக் கொள்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அதனால் இன்றுவரை பேராயக் கட்சியில் ஆர்வமுடன் இணைந்து பணியாற்றிவருபவர். வேளாண்மைச் சங்க ஈடுபாடுகொண்ட இவர் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு உழவர்களின் உரிமை மீட்க சிறைசென்றவர். திருச்சிராப்பள்ளி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர். புலவர் நா.தியாகராசன் புகைப்படக் கலையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அரிய படங்கள் சிலவற்றை எடுத்துப் பாதுகாத்து வருகின்றார். இவரின் படங்களை அக்காலத்து ஏடுகள் ஆர்வமுடன் வெளியிட்டுள்ளன. கலைக்கதிர் இதழினைத் தொடர்ந்து படிக்கும் பழக்கம் உடையவர்.

புலவர் நா. தியாகராசன் மேலப்பெரும்பள்ளத்தின் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தபொழுது ஊருக்கு முதன்முதல் மின்சார வசதி ஏற்படுத்தித் தந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வருதற்குக் காரணமாக இருந்தார். மேலப்பெரும்பள்ளம், சாய்க்காடு பல்லவனீச்சரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கோயில்களின் அறங்காவல் குழுத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கோயில்கள் இவரால் திருக்குடமுழுக்குக் கண்டன. பல்வேறு ஊர்களில் அமைந்த நூலகங்களுக்கு இவர் உறுப்பினராகவும், புரவலராகவும் விளங்கித் தொண்டுசெய்துள்ளார்.

புலவர் நா.தியாகராசன் திரு. சொக்கலிங்கம் பிள்ளையுடன் இணைந்து மேலையூர் தாசில்பண்ணை கௌரி அம்மாளிடம் பேசி, ஐந்து ஏக்கர் நிலம்பெற்று மேலையூரில் கல்லூரி உருவாகக் காரணமாக அமைந்தவர், கீழ்த்திசைப் பண்பாட்டுக் கல்லூரி என்ற பெயரில் 14 மாணவர்களின் சேர்க்கையுடன் 02.05.1964 இல் தொடங்கப்பட்ட கல்லூரியில் பின்னாளில் ஆண்டுக்கு இருநூறுபேர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அன்றைய நாளில் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்பட்டு, பயிற்சிக் கட்டணம் இல்லாமல் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. பூம்புகார்க் கல்லூரியாக மிளிர்ந்துள்ள இக்கல்லூரியில் இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இக்கல்லூரி இன்று தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நிருவாகம் செய்யப்படுகின்றது.

புலவர் நா.தியாகராசன் தொடங்கிய மாதவி மன்றத்திற்குத் தமிழறிஞர்கள் மு. வரதராசனார், ..ஞானசம்பந்தன், .பொ.சிவஞானம், மர்ரே எஸ்.இராஜம், எஸ்.சிவபாதசுந்தரம், .தண்டபாணி தேசிகர், குன்றக்குடி அடிகளார், கி..பெ. விசுவநாதம், தீபம் நா. பார்த்தசாரதி, புலவர் கீரன், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், சி.கோவிந்தராசனார், கோ.வி.மணிசேகரன், உள்ளிட்ட இலக்கியவாணர்கள் வருகை தந்துள்ளனர். வரலாற்று ஆய்வாளர்களான கே.வி.இராமன், சதாசிவ பண்டாரத்தார். முனைவர் மா.இராசமாணிக்கனார், முனைவர் நாகசாமி, முனைவர் நடன. காசிநாதன், முனைவர் மா. சந்திரமூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

புலவர் தியாகராசன் பல்வேறு இதழ்களுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரைந்ததுடன் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். அவ்வகையில் பூம்புகார் வரலாற்று ஆய்வு(1990), கொற்கையும் அயல்நாட்டுறவும்(1993),  பூம்புகாரின் தொன்மை (1967), கணிகையர் (1976), சங்க இலக்கியம் காட்டும் சோழநாட்டில் காவிரிப் பூம்பட்டினம்(2010), கொலைக்களக் காதை, துன்பமாலை, வழக்குரைகாதை (2014), இன்றைய நிலையில் பூம்புகார் - ஒரு வரலாற்றுப் பின்னணி(2014), நாகை மாவட்டத் தொல்லியல் தடயங்கள்(2013) உள்ளிட்ட இவரின் ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

புலவர் நா. தியாகராசன் மூன்று நூல்களை வழங்கியுள்ளார்.

1.பூம்புகார்க் கல்லூரியைத் தொடங்கிவைக்க வந்த மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையார் அவர்களுக்கு மே 1964 இல் வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட The Glori of Kaveripoompattinam
2. பூம்புகார்த் தொழில் மாநாட்டிற்கு வருகைதந்த மத்திய அமைச்சர் மன்மோகன்சிங் அவர்களுக்கு 07.03.1993 இல் வழங்கிய நூல் Historical  Vestiges at Pumpuhar.
3. பூம்புகாரில் வரலாற்று எச்சங்கள்.

பூம்புகாரின் சிறப்புரைக்கும் டிஸ்கவரிசேனல் ஒளிபரப்பிலும், பொதிகை தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், தந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும் புலவர் நா. தியாகராசன் கலந்துகொண்டு பூம்புகார் குறித்த தொன்மையைப் பதிவுசெய்துள்ளார்.

புலவர் நா.தியாகராசன் பூம்புகாரை மீட்டுரைக்க வந்த ஓர் ஆய்வறிஞர் என்று துணிந்து கூறலாம்.

நன்றி: கு. சக்திவேல் எழுதிய புலவர் நா. தியாகராசன் நூல்.

புலவர் நா. தியாகராசனுடன், மு.இளங்கோவன்



வியாழன், 5 ஜூன், 2014

சிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் விளக்கமும்…



புலவர் நா. தியாகராசன்( தலைவர், மாதவி மன்றம், பூம்புகார்)

சிலப்பதிகாரம் குறித்தும் அதன் கதையமைப்பு, இசைக்கூறுகள் குறித்தும் அறிஞர் பெருமக்கள் பலர் அளிக்கும் விளக்கங்களைக் கேட்டுக் கேட்டு அவ்வப்பொழுது மகிழ்வதுண்டு. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார் பாரதியார். அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது “பத்தாண்டுகள் படித்தேன். சிலப்பதிகாரம் கொஞ்சம் விளங்கியது. அறுபதாண்டுகளாகப் படிக்கின்றேன். இன்னும் சில இடங்களில் ஐயம் உள்ளது” என்றார்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு உரைக்கும் நூல் மட்டுமன்று. தமிழர்களின் மலையளவு இசையறிவை விளக்கும் ஒப்பற்ற நூலாகும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்து நிலத்திற்குமான இசையைப் பொருத்தமாக அங்கங்கு இளங்கோவடிகள் வைத்துள்ளார்.  ஒவ்வொரு பாடலடிகளிலும் மிகப்பெரிய உண்மைகளைப் பொதிந்துவைத்துள்ளார். சிலப்பதிகாரத்தை வல்லார்வாய் கேட்கும்பொழுது அரிய உண்மைகள் வெளிப்படும்.

பலவாண்டுகளாக அறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாரின் இசையுரைகளை நாடாக்களிலிருந்து வட்டாக்கிக் கேட்டு வருகின்றேன். அண்மையில் பூம்புகார் சென்றபொழுது புலவர் நா. தியாகராசன் அவர்கள் பழைய ஒலிநாடா ஒன்றைப் பாதுகாப்பாக வைத்திருந்ததைக் காட்டி, இந்த நாடாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடிய கானல்வரிப் பாடல்கள் உள்ளன என்றார். அதனை உடனே கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மேலிட்டது.

1971 ஆம் ஆண்டு காவிரிப்புகும்பட்டினத்தின் கடற்கரையில் சித்திரை முழுநிலவு நாளில் இந்த நாடாவில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது என்ற குறிப்பையும் புலவர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அதனைக் கேட்கமுடியாத அமைப்பில் அந்த நாடா இருந்தது. spool tape recorder இருந்தால் நம் கையினுக்குக் கிடைத்த ஒலிநாடாவைக் கேட்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஐயாவிடம் அந்த நாடாவைப் பெற்று வந்தேன். புதுச்சேரி முழுவதும் அலைந்து பார்த்தோம். இந்த வகைக் கருவி கிடைக்கவில்லை. முகநூலில் இதுகுறித்த உதவி கேட்டபொழுது திரு. எஸ். வி. சேகர் உள்ளிட்ட நம் நண்பர்கள் பலவகையில் வழிகாட்ட முன்வந்தனர். 

இதனிடையே ஒலிப்பொறியாளர் ஒருவரைப் பற்றி அண்ணன் தேவா நினைவூட்டினார். கடந்த வெள்ளியன்று சென்னைக்குச் சென்று என் கையில் இருந்த ஒலிநாடாவைக் கொடுத்து எம் பி. 3 வடிவில் மாற்றித் தரும்படி அந்த ஒலிப்பொறியாளரைக் கேட்டோம். அவர் வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி வட்டில் மாற்றி, இன்று(04.06.2014) வழங்கினார். ஒலித்தூய்மை செய்து கேட்கும் தரத்தில் என் கையினுக்கு நாடா இன்று கிடைத்தது. அரிய புதையல் ஒன்று கிடைத்த மன மகிழ்வைப் பெற்றேன். இரண்டு வட்டில் முதற்படியும், அடுத்த இரண்டு வட்டில் ஒலித்தூய்மை செய்த வடிவும் கிடைத்தன.

ஒரு வட்டில் 25 நிமிடமும் இன்னொரு வட்டில் 45 நிமிடமும் என சற்றொப்ப 70 நிமிடங்கள் சிலப்பதிகாரக் கானல்வரிக்குக் குடந்தை ப. சுந்தரேசனார் விளக்கம் சொல்கின்றார்.(எஞ்சிய சில மணித்துளிகள் அறிஞர் மு. வ. அவர்களின் பேச்சு உள்ளது). சிலப்பதிகாரத்தை ஐயா ப.சு. அவர்கள் எவ்வளவு நுட்பமாகப் படித்துள்ளார் என்பதும் எவ்வளவு பெரிய இசைப்பேரறிவு அவர்களுக்கு இருந்துள்ளது என்றும் இந்த நாடாவைக் கேட்டு வியப்புற்றேன். மரபு வழியான விளக்கங்களைத் தகர்த்தெரிந்து இசை நுட்பம் கலந்த விளக்கம் தருவது பாராட்டும்படியாக உள்ளது. இந்த இசை உண்மைகளை விளக்க மற்ற நூல்களிலிருந்து விளக்கம் காட்டுவது ப. சு. வின் பேரறிவுக்குச் சான்றாகும்(எ.கா. சங்கதி= இயைபு).

கானல்வரியை விளக்கும்பொழுது திங்கள் மாலை வெண்குடையான், மருங்கு வண்டு சிறந்தார்ப்ப, கரிய மலர் நெடுங்கண், கயலெழுதி வில்லெழுதி, தீங்கதிர் வாள்முகத்தாள், நுளையர் விளரி நொடி தருதீம் பாலை எனும் பாடல்களுக்கும் கட்டுரைப்பகுதிகளுக்கும் அளித்துள்ள விளக்கங்கள் மிகச் சிறப்பாக உள்ளன.


தமிழிசையின் மேன்மையை விளக்கும் சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் அளித்த விளக்கத்தை நாற்பத்தியிரண்டு ஆண்டுகளாக, கங்காரு தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல் பாதுகாத்துத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் செயல்பட்ட புலவர் நா. தியாகராசன் அவர்கள் உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டிய பெருமகனார் ஆவார். இவரைப் போலும் மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர்களைக் கொண்டாடும் அளவிற்கு நம் தமிழ்நாடு இன்னும் முன்னேறவில்லை என்று கவலைகொண்டு, அன்னார் நிறைவாழ்வுவாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

மாதவி மன்றத் தலைவர் புலவர் நா. தியாகராசனுடன் மு.இ, (பூம்புகாரில் படப்பிடிப்பின்பொழுது, 20.05.2014)

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

"கோத்த வரிக்கூத்தின் குலம்" - வீ.ப.கா.சுந்தரம் ஐயா நினைவுகள்…


தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதியை உருவாக்குவதில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு யான் உற்றுழி உதவியமை நினைந்து ஐயா அவர்கள் எனக்குக் கையொப்பம் இட்டு வழங்கிய ஆவணம்.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையை நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் படித்துப் பார்த்தேன். கல்லூரியில் பயிலும்பொழுது அரங்கேற்று காதையின் 175 அடிகளும் எனக்கு மனப்பாடம். தமிழன்பர் திரு. ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையைப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் பாடம் கேட்டதைச் சொல்லிச் சொல்லி எனக்கு அரங்கேற்று காதையில் ஓர் ஈர்ப்பை அப்பொழுது ஏற்படுத்துவார்.

பெரும்பாலும் அரங்கேற்று காதை நீங்கலாகவே பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் அமைக்கப்படும். தமிழர்களின் இசையறிவு, நாடக அறிவு என அனைத்துக் கலைக்கூறுகளும் கொண்ட அரிய கருவூலம் அரங்கேற்று காதையாகும். இளங்கோவடிகளின் பேரறிவு இப்பகுதியில் வெளிப்படுவதுடன் கலை ஈடுபாடும், புலமையும் கொண்ட இவருக்கு நிகரான புலவர் உலகில் எந்த மொழியிலும் இல்லை என்று நிறுவத் தகுந்த பகுதி இதுவேயாகும். எனவே இதனை எப்பொழுதும் மனப்பாடமாக ஓதிப் பார்ப்பது என் இயல்பு.

மனப்பாடமாகச் சொல்லும் பொழுது இறுதிப்பகுதியில் ஒரு சொல் மறந்தால்கூட மீண்டும் முதல் அடியிலிருந்து தொடங்கிச் சொல்லிப் பார்ப்பேன். முனைவர் பட்டம் பெற்ற பிறகும் தமிழ் ஆய்வுத்துறையில் பணிகிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டபொழுது  சிலம்பில் கவனம் குறைந்து வேறு துறைகளில் கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது.

ஐயா வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் அணுக்கத்தொண்டனாகவும் ஆய்வு உதவியாளனாகவும் ஒராண்டு இருந்தபொழுது சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் பதின்மூன்றாம் அடியில் இடம்பெறும் “பலவகைக் கூத்தும்” என்ற சொல்லுக்கு விளக்கம் பார்த்தோம். அடியார்க்கு நல்லார் சற்றொப்ப எட்டுப் பக்கங்களுக்கு மேல் இந்த இரு சொல்லுக்கு விளக்கம் சொல்லியுள்ளதை எண்ணி எண்ணி நானும் இசைமேதை அவர்களும் ஒக்க வியப்போம். அடியார்க்கு நல்லாரின் அந்த உரைப்பகுதியில் பழங்கால இசை, கூத்தினைக் குறித்த பல நூல்களின் அடிகள் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும். பல இசை உண்மைகளுக்கு விளக்கம் சொல்லப்பட்டிருக்கும்.

வரி என்ற சொல்லை விளக்கும்பொழுது “அவற்றின் பகுதியெல்லாம் கானல்வரியிற் கூறுதும்” என்று கானல்வரிக்கும் அடியார்க்கு நல்லார் உரைவரைந்த குறிப்பு இப்பகுதியில் இருக்கும். அதனை அடுத்துக் “கோத்த வரிக்கூத்தின் குலம்” என்று நிறைவுறும் ஒரு கலிவெண்பாட்டு உள்ளது. அந்தப் பாட்டு பின்வருமாறு அமையும்.

"சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை,
கொந்தி கவுசி குடப்பிழுக்கை - கந்தன்பாட்
டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி,
சூலந் தருநட்டந் தூண்டிலுடன் - சீலமிகும்,
ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி,
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி - மீண்ட,
கடவுட் சடைவீர மாகேசங் காமன்,
மகிழ்சிந்து வாமன ரூபம் - விகடநெடும்,
பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்,
டத்தசம் பாரந் தகுணிச்சங் – கத்து,
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்,
பறைபண் டிதன்புட்ப பாணம் – இறைபரவு,
பத்தன் குரவையே பப்பறை காவதன்,
பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை - எத்துறையும்
ஏத்திவருங் கட்களி யாண்டு விளையாட்டுக்,
 கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து – மூத்த,
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி,
அழகுடைய பண்ணிவிக டாங்கம் – திகழ்செம்பொ,
னம்மனை பந்து கழங்காட லாலிக்கும்
விண்ணகக் காளி விறற்கொந்தி - அல்லாது,
வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்,
சாந்த முடைய சடாதாரி – ஏய்ந்தவிடை,
தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கம்,
தொக்க தொழில்புனைந்த சோணாண்டு - மிக்க,
மலையாளி வேதாளி வாணி குதிரை,
சிலையாடு வேடு சிவப்புத் - தலையில்,
திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்,
டிருண்முகத்துப் பேதை யிருளன் - பொருமுகத்துப்,
பல்லாங் குழியே பகடி பகவதியாள்,
நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல் - அல்லாத,
உந்தி யவலிடி யூராளி யோகினிச்சி,
குந்திவரும் பாரன் குணலைக்கூத் - தந்தியம்போ,
தாடுங் களிகொய்யு முள்ளிப் பூ வையனுக்குப்,
பாடும்பாட் டாடும் படுபள்ளி – நாடறியும்,
கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே,
துஞ்சாத சும்மைப்பூச் சோனக- மஞ்சரி,
ஏற்றவுழைமை பறைமைமுத லென்றெண்ணிக்,
கோத்தவரிக் கூத்தின் குலம்”

இது அடியார்க்கு நல்லார் தரும் மேற்கோள் பாடலாகும்.

இந்த வரிக்கூத்தின் குலம் பற்றிய பாடல்குறித்து அரும்பத உரைகாரர் எந்தக் குறிப்பும் தரவில்லை என்றும், பதிப்பாசிரியர் உ.வே.சா. அவர்களும், உரையாசிரியர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் அதனை அடுத்து உரை எழுதிய உரையாசிரியர்களும் இந்தப் பாடலை விளக்கவில்லை என்றும் உணர்ந்து இசைமேதை ஐயாவும் நானும் இதற்கு அகரமுதலிகளின் துணைகொண்டு விளக்கம் சொல்ல முயன்றோம். ஐயாவின் வேர்ச்சொல் ஆய்வறிவும், பன்னூல் புலமையும், துறைசார் பேரறிவும் இந்த மேற்கோள் பாடலை விளக்கப் பெரிதும் பயன்பட்டன. சற்றொப்ப எழுபத்து நான்கு சொற்களுக்கு(கூத்துகளுக்கு) விளக்கம் எழுதிய இசைமேதை அவர்கள் இந்த முடிவு முடிந்த முடிவன்று எனவும், மாறுதற்கும், முன்னேறுதற்கும் விரிவுகூறுதற்கும் உரியது என்றும் குறித்துள்ளார்(த.இ.க. களஞ்சியம் தொகுதி 4, பக்கம் 103).

இந்தப் பாட்டுக்கு உரை வரைய வேண்டும் என்றால் நாம் மலையாள நாட்டில் நிகழ்த்தப்படும் கூத்துகளையும், நாட்டுப்புறக் கலைகளையும் ஆராய வேண்டும் என்றும் அப்பொழுது சில கூத்துகள் விளக்கமுறும் என்றும் நான் குறிப்பிட்டேன். நல்ல யோசனை என்று ஐயா உடன் ஒத்துக்கொண்டார். எனக்கும் மகிழ்ச்சி.

மறுநாள் ஐயா அவர்கள் அருகே அழைத்துச் சொன்னார்கள். “இளங்கோ! நீ சொல்வதுபோல் மலையாள நாட்டுக்கெல்லாம் களப்பணிக்குச் சென்று ஆராய்ச்சி செய்து நாம் முழுமையாக வெளிப்படுத்த முயன்றால் களஞ்சியப் பணி நிறைவுறாது என்று  குறிப்பிட்டுவிட்டு, அடுத்து யாழ் குறித்து இரவு முழுவதும் தாமே ஆய்ந்து கண்டு, எழுதிய குறிப்புகளை நாற்பது பக்கத்திற்குமேல் எடுத்து என்னிடம் கொடுத்ததும் கூத்தை மறந்து, யாழ் பற்றிய சொற்களை விரிவாக எழுதத் தொடங்கினேன்…



சனி, 9 மார்ச், 2013

மதனகல்யாணி அவர்களின் சிலப்பதிகாரம் பிரெஞ்சுமொழியாக்கம்




செவாலியே விருதுபெற்ற மதனகல்யாணி அவர்கள் புதுச்சேரியில் இருந்தபடி அமைதியாகத் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். சிலப்பதிகாரத்தின் கதையைப் பிரெஞ்சுமொழியில் இளம் மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் படத்துடன் நூலாக வழங்கியுள்ளார். கண்ணைக்கவரும் அச்சும், விளக்கப்படங்களும் சிறப்பாக உள்ளன. பிரெஞ்சுமொழிக்காரர்களுக்குச் சிலப்பதிகாரத்தை அறிமுகப்படுத்தும் அரிய முயற்சி. அம்மா மதனகல்யாணி அவர்களுக்குப் பாராட்டுகள்.

நூலின் விலை 150. உருவா

நூல் கிடைக்குமிடம்:
.மதனகல்யாணி,
19. குபெர் தெரு. இராசீவ்காந்தி நகர்.
புதுச்சேரி - 605011,இந்தியா

திங்கள், 6 ஜூலை, 2009

கோவையில் சிலப்பதிகார விழா

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நானி கலையரங்கில் எதிர்வரும்11,12-07-2009(காரி,ஞாயிறு)இரு நாளும் சிலப்பதிகார வெள்ளிவிழா நடைபெறுகிறது.

காரி(சனி)க்கிழமை மாலை5.45மணிக்கு முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் ஜி.கோபாலன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். இயகோகோ. சுப்பிரமணியம் அவர்கள் மலர் வெளியிடுகிறார்.கே.வேலு அவர்கள் மலர் பெற்று உரையாற்றுகிறார்.

கிருட்டினா இனிப்பகம் வழங்கும் உ.வே.சாமிநாதய்யர் விருதினை முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களுக்கு வழங்க உள்ளனர்.செல்வி (உ)ருக்குமணி அவர்கள் பூம்புகாரில் சில புகார்கள் என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

12.07.2009 ஞாயிறு காலை ஐ.கே.சுப்பிரமணியன் அவர்கள் உள்ளினும் உள்ளம் சுடும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்

முனைவர் க.முருகேசன் அவர்கள் எழுதிய பூம்புகார் பொற்றொடி என்ற நூலினை முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் வெளியிட வி.செல்வபதி அவர்களும் சங்கரசீத்தாராமன் அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர்.

12.07.2009 காலை,மாலையில் நடைபெறும் விழாக்களில் தமிழகத்தின் புகழ்பெற்ற
பேச்சாளர்கள் சோ.சத்தியசீலன்,அ.அறிவொளி,தெ.ஞானசுந்தரம்,சோதி இராமகிருட்டினன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மாலையில் பேரா.கண.சிற்சபேசன் அவர்கள் நடுவராக வீற்றிருக்கப் பட்டிமண்டபம் நடைபெற உள்ளது.

தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இசை மரபையும் ஆவணப்படுத்திய இளங்கோவடிகளையும் அவர்தம் காப்பியத்தையும் போற்றி எடுக்கப்படும் விழா சிறக்க எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அமையட்டும்.

புதன், 16 ஜூலை, 2008

தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன்...


முனைவர் ச.வே.சுப்பிரமணியன்

 தமிழ் மொழிக்கு அறிஞர் பெருமக்கள் பல வகையில் தொண்டு செய்துள்ளனர். அவ்வறிஞர் பெருமக்களுள் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் 31.12.1929 இல் பிறந்தவர். பெற்றோர் சு.சண்முக வேலாயுதம், இராமலக்குமி அம்மாள்.

 தொடக்கக் கல்வியை விக்கிரம சிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலை தொடக்கப் பள்ளியில் பயின்றவர். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். இடைநிலைக் கல்வியை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு)1950-53 இல் பயின்றவர். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்துபெற்றவர்.

 தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56  இல் தமி ழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராக வீற்றிருந்து, புகழ்பெற்ற பல மாணவர்களை உருவாக்கினார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுத் தமிழன்னைக்கு அழகு செய்து பார்த்தவர். இவர் காலத்தில் வெளியிட்ட நூல்கள் இன்றளவும் அரிய பார்வை நூல்களாகவும் பாடநூல்களாகவும் உள்ளன. கடும் உழைப்பாளியான இவர் தன் மாணவர்களையும் இவ்வாறு வளர்த்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் தமிழறிஞர்கள் பலர் இவர் மாணவர்களாக இருப்பர்.

 அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களால் இதுவரை எழுதப்பெற்ற நூல்களாகத் தமிழில் 54, ஆங்கிலத்தில் 5, மலையாளத்தில் 1 என்ற எண்ணிக்கையில் அமைகின்றன. தமிழகத்தின் எல்லாப் பல்கலைக் கழங்கங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றியுள்ளார். அவை பல நூல்வடிவம் பெற்றுள்ளன.

 தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் பங்கு பெற்றதுடன் இந்திய அளவிலும், உலக அளவிலும் பல கருத்தரங்குளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்ப் பணிக்காக இவர் இலங்கை, மொரீசியசு, செர்மனி, போலந்து, செக்கோசுலேவியா, சப்பான், ஆங்க்காங்கு, தாய்லாந்து, மணிலா, சிங்கப்பூர், மலேசியா, பாரிசு, இலண்டன், ஏதென்சு, கெய்ரோ போன்ற நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.

 இவர் மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ்ப்பற்று மிக்குடைய பேராசிரியர் அவர்கள் 1985 இல் தமிழூர் என்னும் ஊரை உருவாக்கி அங்கு வாழ்து வருகிறார் (நெல்லை மாவட்டம்). இவர்தம் வீட்டின் பெயர் தமிழகம். இடத்தின் பெயர் தமிழ்நகர்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கியவர்.

இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் ஓரிலக்கம் உரூவா உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் இவரால் பெருமை பெற்றன. தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வதிலும், பாடம் சொல்வதிலும் ஒப்பாரின்றி உழைத்தவர். சிலப்பதிகாரம் பேராசிரியரின் உள்ளம் கவர்ந்த நூல் எனில் சாலப் பொருந்தும். சிலம்பினை   இசையுடன் பாடி விளக்கம் சொல்வதில் வல்லவர்.

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் நூல்கள் :

1. இலக்கிய நினைவுகள் 1964
2.சிலம்பின் சில பரல்கள் 1972
3.இலக்கியக் கனவுகள் 1972
4.மாந்தர் சிறப்பு 1974
5.ஒன்று நன்று 1976
6.அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
7.இலக்கிய உணர்வுகள் 1978
8.கம்பன் கற்பனை 1978
9.காப்பியப் புனைதிறன் 1979
10.கம்பனும் உலகியல் அறிவும் 1981
11.கம்பன் இலக்கிய உத்திகள் 1982
12.கம்பன் கவித்திறன் 2004
13.இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
14.இலக்கிய வகையும் வடிவும் 1984
15.தமிழ் இலக்கிய வரலாறு 1999
16.சிலப்பதிகாரம் மூலம் 2001
17.சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001
18.சிலம்பும் சிந்தாமணியும் 1977
19.திராவிட மொழி இலக்கியங்கள் 1984
20.இளங்கோவும் கம்பனும் 1986
21.தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998
22.தமிழில் விடுகதைகள் 1975
23.தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003
24. காந்தி கண்ட மனிதன் 1969
25.பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982
26.நல்வாழ்க்கை 1992
27.மனிதம் 1995
28.மனமும் உயிரும் 1996
29.உடல் உள்ளம் உயிர் 2004
30.தமிழர் வாழ்வில் தாவரம் 1993
31.கூவநூல் 1980
32.சிலப்பதிகாரம் தெளிவுரை 1998
33.சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993
34.தொல்காப்பியம் தெளிவுரை 1998
35.சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001
36.திருக்குறள் நயவுரை 2001
37.திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002
38.சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை 2002
39.கானல்வரி உரை 2002
40.பத்துப்பாட்டு உரை 2002
41.இலக்கணத்தொகை எழுத்து 1967
42.இலக்கணத்தொகை சொல் 1970
43.இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978
44.வீரசோழியம் குறிப்புரையுடன் 1977
45.தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978
46.குவலயானந்தம் சந்திரலோகம் 1979
47.பிரபந்த தீபம் 1980
48.தொல்காப்பியப் பதிப்புகள் 1992
49.மொழிக்கட்டுரைகள் 1974
50.சங்க இலக்கியம் 2006
51.மெய்யப்பன் தமிழகராதி 2006
52.தமிழ் இலக்கண நூல்கள் 2007
53.பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007
54.பன்னிரு திருமுறைகள் 2007
55.Descriptive Grammar of Chilappathikaram 1975
56.Grammar of Akananuru 1972
57.Studies in Tamil Language and Literature 1973
58..Studies in Tamilology 1982 1982
59.Tolkappiyam in English 2004
60.சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டம் மலையாளம் 1966

ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு "தமிழ் ஞாயிறு" என்னும் பெயரிலும், "சாதனைச்செம்மல். ச.வே.சு" என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளன.

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் தொடர்பு முகவரி :

முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
தமிழூர்,
அடைக்கலப்பட்டணம் அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்-  627 808
பேசி : 04633 - 270239

தொடர்புடைய பதிவுக்குச் செல்ல இங்கே அழுத்துக