நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 3 மே, 2017

விபுலாநந்தர் ஆவணப்படப் பதிவு நினைவுகள்!


பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்

ஆவணப்படம் எடுத்தல் என்பது அவ்வளவு எளிய செயல் அன்று. அதுவும் அயல்நாட்டில் பிறந்த ஒருவரை - எந்தப் பின்புல உதவியும் இல்லாமல் படமாக்குவது  அரிதினும் அரிதாகும். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கிய கதையை எழுதப் புகுந்தால் அது கம்பராமாயணம்போல் பல கிளைக்கதைகளைக் கொண்டு பரந்து விரியும். விபுலாநந்தருடன் தொடர்புடைய ஒவ்வொரு செய்தியையும் திரட்டுவதும் உறுதிப்படுத்துவதும் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விபுலாநந்த அடிகளார் பணிபுரிந்தமை அனைவரும் அறிந்த செய்தியாகும். அந்த ஒற்றைவரிச் செய்தியை உறுதிப்படுத்த நான்கு நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. முதலில் இற்றைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அரங்க. பாரி அவர்களைச் சந்தித்து ஒளிப்பதிவு செய்து மீண்டோம்.

அடுத்துப் பேராசிரியர் மௌனகுரு அவர்களை இலங்கையில் சந்தித்து ஒளிப்பதிவு செய்த பொழுதும் இதனை உறுதிப்படுத்தினார். மேலும் திருவேட்களச் செய்திகளை விரித்தும் உரைத்தார். இதுவும் போதுமானதாகத் தெரியவில்லை. விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி செய்த காலத்தில், அந்நாள் துணைவேந்தர் அவர்கள் அடிகளார் வகுப்பிலிருந்து திரும்பிவரும்வரை தமிழ்த்துறைத் தலைவர் அறையில் காத்திருந்த ஒரு நிகழ்வைப் பேராசிரியர் கு.சிவமணி வேறு வகையில் சொன்னார். அதுவும் ஒருநாள் பதிவானது.

விபுலாநந்தரின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பணிக்காலத்தை நேரில் கண்ட சான்றாக இருப்பவர் பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்(அகவை 102) என்பதறிந்து அவரிடம் சில விவரங்களைப் பெற அவரின் சென்னை இல்லத்திற்கு ஒருநாள் சென்றோம்.

முன்பே பேராசிரியர் இலெ.ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களை நேரில் கண்டு உரையாடியுள்ளேன். இந்தமுறை பேராசிரியரைச் சந்தித்தபொழுது உடல் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். ஆச்சி அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் என் வருகையையும், விருப்பத்தையும் சொல்லி நம் பேராசிரியர் அவர்களைப் படுக்கையிலிருந்து எழுப்பி, அழைத்து வந்து கூடத்தில் அமர வைத்தனர். என்னை அறிமுகம் செய்துகொண்டு, என் பெயர், பணி விவரம் கூறினேன். ஆனால் எதுவும் ஐயா அவர்களுக்குக் காதில் விழவில்லை. விபுலாநந்த அடிகளாரின் அண்ணாமலை நகர் வாழ்க்கையைக் குறித்த விவரங்களை அறிய வந்துள்ளமையை, என் வலிமையைக் கூட்டிப் பலமுறை எடுத்துரைத்தும் அவர்களுக்கு உணர்த்தமுடியவில்லை.

அந்த நேரத்தில் ஆச்சி அவர்கள் ஒரு குறிப்புச் சொன்னார்கள். தடித்த எழுத்துகளில் வேண்டிய விவரங்களை எழுதிக் காட்டும்படிச் சொன்னார்கள். அவ்வாறும் செய்து பார்த்தேன். அப்பொழுதும் வேண்டிய விவரங்களைப் பெறமுடியவில்லை. மீண்டும் ஒவ்வொரு எழுத்தாக எழுதி, விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பணியாற்றிய விவரத்தைப் பதிவு செய்தோம். இந்தமுறை தொடர்பு இல்லாத பல செய்திகள் அவர் உரையுடன் கலந்து வந்தன. அவை யாவும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாறாகும். இடையில் விபுலாநந்தர் குறித்த அரிய செய்திகளையும் பேராசிரியர் தெரிவித்தார். அரிய பல செய்திகளைக் கொண்ட நீண்ட ஒளிப்பதிவாக இது இருந்தது. முழுமையாகப் பதிவுசெய்தோம்.


பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த, பல்லாயிரம் பேராசிரியர்களைச் சந்தித்த, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்ப் பேராசிரியராகவும். பொறுப்புத் துணைவேந்தராகவும் (பலமுறை) இருந்த பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் அவர்களின் உரை எங்கள் ஆவணப்படத்தின் முதன்மைப் பதிவாக இருக்கும். மூத்த தமிழறிஞரின் குரலைப் பதிவு செய்து ஆவணப்படுத்திய மனநிறைவுடன் புதுவைக்குத் திரும்பினோம்.1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் பெரு முயற்சியில் உருவாகிவரும்
விபுலாநந்தர் ஆவணப் படத்தினைக் காண ஆவலுடன்காத்திருக்கிறேன் ஐயா