நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
ஈழத்துப்பூராடனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத்துப்பூராடனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 மே, 2017

கன்னங்குடா உழுதொழிற் பள்ளு: பதிப்புரையும் முன்னுரையும்


ஈழத்துப்பூராடனார்

(கட்டுரை விளக்கம்: அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலைத் தமிழகத்தில் மறுபதிப்புச் செய்ய ஐயாவிடம் இசைவு வேண்டினேன். ஐயா அவர்களும் இசைவு வழங்கியிருந்தார்கள். நூல் அச்சிட்டு, மேலட்டை அச்சிட்டு ஐயாவின் பார்வைக்கும் அனுப்பியிருந்தேன். பொருள் முட்டுப்பாடு காரணமாக நூலை அச்சிடாமல் இருந்தேன். 13.12.2007 இல் எழுதிய நூல் பதிப்புரை இன்று கண்ணில் தென்பட்டது. யாருக்கேனும் பயன்படும் என்று பதிப்புரையை மட்டும் என் வலைப்பதிவில் பதிகின்றேன். யாரேனும் முன்வந்தால் கன்னங்குடா உழுதொழிற் பள்ளினை வெளியிடலாம்).

கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலின் ஆசிரியர் ஈழத்துப்பூராடனார் ஆவார். இவர் ஈழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெருமை இவருக்கு உண்டு. தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, நாட்டுப்புறவியல், சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் எனப் பலதுறை நூல்களை இவர் தந்துள்ளார். பல களஞ்சியங்களையும் இவர் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு என்பது பிற பள்ளு நூல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு உள்ளது. கடவுளின் பெருமை, அரசனின் பெருமை கூறும் வண்ணம் பிற பள்ளுநூல்கள் இருக்க, இப் பள்ளுநூல் உழவர்களுக்கும்- உழவுத் தொழிலுக்கும் முதன்மைதரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நெல்வகை, மாட்டுவகை, உழுதொழில் மக்களின் பேச்சுவழக்குகள், கூத்துவகைகள், கலையுணர்வு, காதல்வாழ்க்கை, உழவுமுறை முதலியவற்றை விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சிற்றிலக்கியம் என்ற பழைய வடிவத்தை எடுத்துக்கொண்டாலும் வாழும் காலத்து வாழ்க்கையினையும் சமூக நடப்புகளையும் ஆசிரியர் இணைத்து எழுதியுள்ளார்.

கன்னங்குடா  நூல்பெயர்

கன்னங்குடா என்பது தென் ஈழத்தின் மட்டக்களப்பு அடுத்த உழுதொழில் ஊர். பாரதக்கதையில் குறிப்பிடப்படும் கன்னன்(கர்ணன்) நினைவாக இவ்வூர் பெயர்பெற்றதை ஆசிரியர் 'ஈகையாலே உயிர்துறந்த இரப்பார்க்குக் கொடையளித்த மாகையன் கன்னனவன் மாட்சியுள்ள பெயர்பூண்டு' என்று குறிப்பிடுவர். இவ்வூரில் பண்டைத்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களும், பண்பாடுகள், கூத்துக்கலைகள் வழிபாட்டுமுறைகள் இன்றும் சிதைவுறாமல் உள்ளன. கன்னங்குடா கூத்துக்கலையின் தொட்டில் என்னும் சிறப்புடையது என்று சி.மௌனகுரு மதிப்பிடுவர்.

இவ்வூர் நெய்தல் சார்ந்த மருதநில ஊர். இங்கு 350 குடும்பங்களாக ஏறத்தாழ 1500 சிவனிய வழிபாட்டு மக்கள் வாழுகின்றனர். இவ்வூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இருபாங்கு கூத்துகள் (தென்மோடி,வடமோடி) படைக்கப்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட அண்ணாவிமார்கள் வாழ்ந்தனர். இங்கு உழவர்களே மிகுதியாக உள்ளனர். அவர்களின் வாழ்வியல் சார்ந்த செய்திகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பு மாநிலத்தின் வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் வயற்களச் சொற்கள் மிகுதி. அச்சொற்கள் யாவும் உழவுத்தொழிலின் தொழில்நுட்பச் சொற்களாகும். அச்சொற்களையும்,அச்சொற்களைப் பயன்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் வண்ணம் அமைந்த இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

உள்ளடக்கச் செய்திகள்

கடவுள் வணக்கம், பாடுகளம் பற்றிய சிறப்பு, போடியார் எனப்படும் பண்ணையாரின் வீட்டு அமைப்பு,போடியாரின் வருகை, வயல்வேலை தொடங்குதல், வயல்அதிகாரி, முல்லைக்காரன் (வேலையாள்) தோற்றம், உழவர்களின் மனைவிமார் தோற்றம், கழனிக் கன்னியர் நாட்டுவளம் பாடுதல், போடியார் படியளத்தல், போடியாரிடம் மள்ளர் மாரியம்மன் சடங்கு செய்ய வேண்டுதல், மழைவேண்டிப் பூசை செய்தல், மழைபொழிதல், வெள்ளம் வடிதல், மட்டக்களப்பு வாவியின் சிறப்பு, ஆற்றுமீன்கள், வயல்வேலை தொடக்கம், மாட்டுவகைகள், போடியார் உழவைத் தொடங்குதல்,கலப்பை வகை, அமைப்பு, நெல்வகை, இளையபள்ளியின் மோகத்தால் பள்ளன் கடமை தவறல், பண்ணைக்காரன் முருகனை வினவல், இளையாள்-மூத்தாள் ஏசல், போடியார் முருகனைக் கண்டித்தல் - தண்டித்தல், இரு மனைவியரும் மன்னிக்க வேண்டுதல், முருகனை மாடு முட்டுதல், இரு மனைவியரும் புலம்பல், போடியார் பொறுப்பேற்றல், முருகன் வேளாண் வெட்டுக்கு ஆயத்தம் செய்தல், வசந்தன் கூத்து, போடியார் வீட்டு விருந்து, போடியாரின் அன்புரை, கள்ளுண்டு மகிழல், புதுப்புனலாடல், போடியாரின் புரட்சி எண்ணம் முதலியவற்றை விளக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது.

நூலின் புதுமைச்செய்திகள்

ஈழத்துப்பூராடனார் 'பள்ளு' என்னும் பழையவடிவத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் பல புதுமைகளைக் காலச் சூழலுக்கு ஏற்பச் செய்துள்ளார். கடவுள்வாழ்த்து, குடும்பக்கட்டுப்பாடு, சாதிமறுப்புத் திருமணம் முதலிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ஈழத்துப்பூராடனார் வயற்களச் சொற்கள் அழியாமல் காக்கவும், வயற்கள மக்களின் வாழ்க்கையமைப்பும், அதில் தொடர்புடைய கலைகளைப் பாதுகாக்கவும் இப்பள்ளு நூலைப் படைத்துள்ளார். இந்நூலுள் ஈழத்தில் வழங்கும் பல கலை வடிவங்களைக் குறிப்பிட்டும் விளக்கமாக எடுத்துரைத்தும் உள்ளார். மழைக்காவியம்,  குரவையிடல்,  வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து, கொம்பு விளையாட்டு, கண்ணகையம்மன் வழிபாடு, வதனமார் சடங்குவசந்தன்கூத்து (வேளாண்மை வெட்டு), கும்மி, புனலாட்டு, பப்புருவாகன் கூத்துநம்பிக்கைகள், குறிகேட்டல் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார் (மேலும்இதுபற்றி அறியஎன் வாய்மொழிப்பாடல்கள் நூலில் ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்னும் கட்டுரையைக் காண்க).

ஈழத்துப்பூராடனார் மக்களிடம் வழங்கும் பல வழக்குச் சொற்களையும்வழக்குத் தொடர்களையும் தம் நூலில் பதிவுசெய்துள்ளார். 'தம்பியுள்ளான் படைக்கஞ்சான்', தானாடாவிட்டாலும் தன் தசைகளாடும்', 'பிஞ்சிலே பழுத்துவிட்டாய்', 'தலைபோக வந்தது தலைப்பாகையோடு போனதடா', 'ஆட்டு மாட்டைக்கடித்தபுலி ஆயனையே எதிர்த்தாற்போல' என்னும் தொடர்கள் இதற்குச் சான்றாகும்.

ஈழத்துப்பூராடனார் வயற்களமக்களின் உழுதொழிற் சொற்களைப் பதிவு செய்யும் நோக்கமும் இந்நூலில் நிறைவேறியுள்ளது. போடியார், முல்லைக்காரன், அதிகாரி, வட்டை, கமக்காரன், வட்ட விதானையார், இழவான், கடியன், சலவைக்காரன், பதக்கடை, துமி, வதனமார் சடங்கு, உம்மாரி, வேளாண்மை வெட்டு முதலான எண்ணிறந்த சொற்களை நூலாசிரியர் இந்நூலில் பதியவைத்துள்ளார். அகரமுதலிகளில் இணையவேண்டிய ஈழத்தின் பேச்சுவழக்குச்  சொற்களை இந்நூல் தாங்கியுள்ளது.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். எனவே அண்மைக் காலமாகத் தமிழிலக்கிய வரலாறு உலக அளவில் விரித்து எழுதப்பட்டு வருகின்றது. கல்லூரி மாணவப் பருவத்திலேயே உலக அளவில் தமிழ்இலக்கிய வளர்ச்சி, தமிழ் ஆராய்ச்சி பற்றி அறிந்த நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபொழுது அயலகத்தமிழ் பற்றி அறியவும் ஆராயவும் தலைப்பட்டேன்.

1997 இல் அயலகத்தமிழ் என்னும் ஏடு தொடங்க முயன்றேன். அவ்வேட்டை மனத்தில் கொண்டே அயலகத்தமிழ் என்னும் ஒரு கட்டுரையை அந்நாளில் வெளியிட்டேன்(..நி). இவ்வாறு அயலகத்தமிழ் பற்றி அறியவும் ஆராயவும் வித்திட்டது அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்களின் நூல்களாகும். அப்பெருமகனாரின் கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலில் உழுதொழில் மக்களின் வாழ்வினை அறிந்து மகிழ்ச்சியுற்றிருந்தேன். உழவர்குடியில் பிறந்த எனக்கு  அந்நூலில் வேட்கை ஏற்பட்டமை வியப்பன்று. இந்நூல் தமிழகத்து மக்கள் அறியவேண்டும் என்னும் நோக்கில் மறுபதிப்பாக வெளியிட நினைத்தேன். அவ்வாறு வெளியிட இசைவு தந்ததுடன் தமிழகப் பதிப்பிற்கான வழிகாட்டலையும் ஈழத்துப்பூராடனார் வழங்கினார். அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் நன்றி உரியவாகும்.

முதற்பதிப்பில் இருந்த சில எழுத்துப்பிழைகள் இப் பதிப்பில் களையப்பட்டுள்ளன. வடிவமைப்பில் சில செப்பங்களைச் செய்துள்ளேன். எழுத்து வடிவம் முதற்பதிப்பில் பழைய எழுத்து வடிவில் இருந்தது. இப்பதிப்பில் தமிழக அரசு பின்பற்றும் எழுத்துவடிவம் பின்பற்றப்பட்டுள்ளது.


கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலை அச்சிட உதவிய அண்ணன்மார் கே.அறிவுமதி, வே.இளங்கோ, .தேவநேயன், பொறியாளர் இராச.கோமகன், கணேசமூர்த்தி (சோதி எண்டர்பிரைசசு), வடிவமைப்பில் உதவிய வசந்தகுமார், தட்டச்சில் உதவிய தங்கை இரமா ஆகியோர்க்கு என்றும் நன்றியன்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி-605 003

13.12.2007

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்...



அறிஞர் ஈழத்துப்பூராடனார்( க.தா.செல்வராசகோபால்) அவர்களால் எழுதப்பெற்று திரு. அருள்சுந்தரம் விஷ்ணுசுந்தரம், திரு. பொன்னம்பலம் சிவகுமாரன் ஆகியோரால் பதிப்பு கண்டுள்ள வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல் 2011 ஆவணியில் விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியத்தின் ஆதரவில் வெளிவந்துள்ளது. 292 பக்கத்தில் அழகிய வண்ணப் படங்களையும், பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் நிலப்படங்களையும் கொண்டு நேர்த்தியான அச்சில் குறிக்கோள் நோக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டாளர்களுக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும்.

நீராவிக் கப்பல்கள் அறிமுகத்தில் இருந்த காலச் சூழலில் பாய்மரக்கப்பல் கட்டுவதில் பேரறிவுபெற்ற தமிழர்களின் கப்பல்கட்டும் திறம், கடல்வழி குறித்த அறிவு, காற்றின் போக்கு அறியும் உயர் அறிவு, கப்பல் செலுத்தும் அறிவு, கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் போர்த்தொழில் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்ட ஆவணமாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. உரைநடையில் அன்னபூரணிப் பாய்மரக் கப்பலின் வரலாற்றை எடுத்துரைக்கும் அறிஞர் ஈழத்துப்பூராடனார் பாட்டுவடிவிலும் இந்த வரலாற்றைப் பதிவுசெய்துள்ளார். ஏழு அதிகாரங்களாகப் பல்வேறு தலைப்புகளில் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.

அன்னபூரணிப் பாய்மரக் கப்பல் எந்த ஆண்டில் கட்டப்பட்டது, கட்டியவர்கள் யார், அதன் உரிமையாளர் யார்? இந்தக் கப்பலை விலைக்கு வாங்கிய இராபின்சன் என்ற அமெரிக்க செல்வந்தரின் கப்பல் ஈடுபாடு, அன்னபூரணி அமெரிக்காவுக்குப் பயணப்பட்ட வரலாறு, பாதை, வழியில் அன்னபூரணி சந்தித்த சவால்கள், அன்னபூரணிக் கப்பலைச் செலுத்திய மீகாமர்கள் யாவர்? அவர்களின் திறம் என்ன? எந்த நாளில் அமெரிக்கா அடைந்தது? கப்பலையும் மீகாமன்களையும் கண்ட அமெரிக்க மக்கள் அடைந்த மகிழ்ச்சி, இக்கப்பல் வருகை குறித்து அமெரிக்க ஏடுகள் வெளியிட்ட படங்கள், செய்திகள் யாவும் சிறப்பாக இந்த நூலில் உள்ளன.

மேலும் கடல்தொழிலிலும், கப்பல் கட்டும் தொழிலிலும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளுக்கு இருந்த பேரறிவு யாவும் இந்த நூலில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. அக்காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த கப்பல்கள், அதனை இயக்கிய மீகாமன்கள் குறித்த செய்திகளும் சிறப்பாக உள்ளன. இலங்கையின் வரலாறு, அங்கு நடைபெறும் கண்ணகியம்மன் வழிபாடு, பிற பண்பாட்டு நிகழ்வுகளையும் நூலாசிரியர் சிறப்பாகத் தந்துள்ளார். நூலின் பின்பகுதியில் கிழக்கு இலங்கை குறித்த பல அரிய செய்திகள் தரப்பட்டுள்ளன.

அன்னபூரணி கப்பல் 1930 இல் சுந்தர மேத்திரி என்பவரால் கட்டப்பட்டது. இக்கப்பலின் உரிமையாளர் தமிழகம் தேவகோட்டையைச் சேர்ந்த நாகப்ப செட்டியார் ஆவார். நாகப்ப செட்டியாரிடம் இருந்து இராபின்சன் என்ற அமெரிக்கர் உருவா இருபத்தைந்தாயிரம் (9000 அமெரிக்க டாலர்) விலைக்கு வாங்கினார். இந்தக் கப்பலை இராபின்சன் வாங்குவதற்கு வல்வெட்டித்துறை கதிர்வேலு என்பவர் உதவியுள்ளார்(பக்கம் 23). இக்கப்பலை அமெரிக்கா கொண்டுசெல்ல மேலைநாட்டு மீகாமன்கள் முன்வராத சூழலில் 1930 முதல் இக்கப்பலை இயக்கிய  தண்டையல்(கேப்டன்) தம்பிப்பிள்ளை என்பவர் இதனை அமெரிக்கா கொண்டுசெல்ல முன்வந்தார். அன்னபூரணியை அமெரிக்காவுக்குக் கொண்டு சேர்த்தோர் விவரம் வருமாறு:

1.   கனகரத்தினம் தம்பிப்பிள்ளை, அகவை 48, தண்டையல்
2.   சின்னத்தம்பி சிதம்பரப் பிள்ளை, அகவை 28
3.   தாமோதிரம் பிள்ளை சபாரெத்தினம், அகவை 28
4.   பூரணவேலுப்பிள்ளை சபாரெத்தினம், அகவை 29
5.   ஐயாத்துரை இரத்தினசாமி, அகவை 24

27.02.1937 இல் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்ட அன்னபூரணி கப்பல் 7 நாளில் கொழும்பு சென்றது. அங்கு 23 நாள் தங்கி 27.03.1937 இல் ஏடன் துறைமுகத்தை அடைந்தது. அதன் பிறகு எட்டு மாதங்கள் இங்குத் தங்கி,1810.1937 இல் மீண்டும் பயணத்தைத் தொடங்கி போர்ட் சூடான், சுவைசு, எகிப்து, போர்ட் செயிட், கண்டியா, சிப்ரால்டர், பேர்மியுடா கமில்டன் சென்று, மாசசூட் மாநிலத்தின் குளொசெசுடர் துறைமுகத்தை 01.08.1938 இல் அடைந்தது என்ற விவரங்கள் இந்த நூலில் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

அன்னபூரணி கப்பல்  இரட்டைப் பாய்மரக் கப்பல்; பத்தாயிரம் மூட்டை அரிசி ஏற்றலாம். இதனை உருவாக்கியவர் சுந்தர மேத்திரி. தேக்குமரத்தில் 90 அடி நீளத்தில் இந்தக் கப்பலைக் கட்டினார். இலங்கை-அமெரிக்கா இடைப்பட்ட ஊர்களில் அன்னபூரணி கப்பல் தரித்து நின்றபொழுது அந்த ஊர்களைக் கப்பலில் பயணம் செய்தவர்கள் சுற்றிப்பார்த்துள்ளனர்.

இராபின்சன் அவர்கள் கொழும்பிலிருந்து தம் மனைவியுடன் புதியதாக வாங்கிய அன்னபூரணி கப்பலில் பயணம் செய்தார். இதற்காகக் கொழும்பில் கப்பல் தரித்து நின்றபொழுது கப்பலில் குளியல் அறை, கழியல் அறை, படுக்கை அறை, ஆகிய வசதிகளைச் செய்துகொண்டார். அவசரத் தேவைக்காக எண்ணெயால் இயங்கும் சுழல் விசிறி இயந்திரம் ஒன்றையும் கொழும்பு வோக்கர்சு(Walkers) நிறுவனத்தாரின் உதவியுடன் பொருத்திக்கொண்டார்.

இராபின்சன் அன்னபூரணிக் கப்பலைத் தமதாக்கிக் கொண்டபொழுது இதற்குத் தம் மனைவியின் பெயரை அமைத்து, புளோரன்சு சி. இராபின்சன் என்று அமைத்துக்கொண்டார்.

இந்தக் கப்பலை அமெரிக்காவுக்குச் செலுத்திச் சென்றவர்கள் 1982 வரை உயிருடன் வல்வெட்டித்துறையில் வாழ்ந்துள்ளனர் என்ற செய்திகளை இந்த நூலில் அறியும்பொழுது வியப்பும் மலைப்பும் ஏற்படுகின்றது. அன்னபூரணிக் கப்பலின் பாதுகாப்புக்காகச் சாண்டோ சங்கரதாசு என்ற பெருவீரர் சென்றதாகவும் இவர் சுவிசு கடற்கரை வரை சென்று அன்னபூரணியைப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு இடையில் ஈழம் திரும்பியதாகவும் இந்த நூலில் குறிப்பு உள்ளது(பக்கம்35).

வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்ற இந்த நூலில் அன்னபூரணி கப்பல் பற்றிய செய்திகளை விளக்கும் பல நூல்களின் பெயர்களை நூலாசிரியர் மேற்கோளாகத் தந்துள்ளமை மேலாய்வு செய்ய விழைவார்க்குப் பெரும் பயன் தரும்.

ஈழத்தில் வல்வெட்டித்துறை மிகச்சிறந்த கடல் வாணிகத்தளமாக இருந்துள்ளதை இந்த நூலின் குறிப்புகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இங்கிருந்து அயல்நாடுகளுக்குச் சென்ற கப்பல்கள், அதனை இயக்கியவர்கள், கப்பல் தரகர்கள், கப்பலின் உரிமையாளர்கள், அந்தக் கப்பலில் வணிகத்திற்கு அனுப்பப்பட்ட பொருள்கள் குறித்த விவரங்களும் தரப்பட்டுள்ளன. அக்காலத்தில் கப்பல்துறையில் பேரறிவுகொண்டு திகழ்ந்தவர்கள் பலரைப் பற்றிய குறிப்புகள் நூலில் உள்ளன.

அன்னபூரணிக் கப்பலின் படமும் அக்கப்பலை இயக்கிச் சென்ற கப்பல் தொழிலாளர்களின் படமும் இராபின்சனின் குடும்பத்தினர் படமும் இந்த நூலில் இடம்பெற்று நூலைப் பெரும் மதிப்பிற்குரியதாக மாற்றியுள்ளது.

வல்வெட்டித்துறையின் வரலாற்றுப்பெருமை குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கடலாய்வு, புவியாய்வு, வரலாற்று ஆய்வு, வளியாய்வு செய்வாருக்கும் இலங்கை வரலாற்று ஆய்வு ஆர்வலர்களுக்கும் பயன்தரத்தக்க நூல் இது.

நூல் கிடைக்குமிடம்:
ரிப்ளக்சு அச்சகம்
RIFLEX CREATIVE SOLUTIONS,INC,

CANADA

வெள்ளி, 18 நவம்பர், 2011

அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல்வெளியீட்டு விழா



நினைவில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்கள் எழுதிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்னும் நூல்வெளியீட்டு விழா கனடாவில் உள்ள கந்தசாமிக் கோயிலில் எதிர்வரும் 11.12.2011 மாலை 5 மணிக்கு அ.சி.விஷ்ணுசுந்தரம் நினைவுநிதியத்தின் சார்பில் நடைபெறுகின்றது.

அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்கள் மறைவுக்கு முன்பாக எழுதிமுடிக்கப்பெற்ற இந்த நூல் ஈழத்துத் தமிழர்கள் கப்பல்கட்டும் துறையில் மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் என்பதையும் மிகச்சிறந்த கடல்வாணிகம் செய்தவர்கள் என்பதையும் எடுத்துரைக்கும் நூல். அன்னபூரணி கப்பல் பற்றியும் அதனை உருவாக்கியத் தொழில்நுட்பக்கலைஞர்கள், அதனை விரும்பி விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் பற்றியும், அந்த அன்னபூரணி கப்பல் ஈழத்திலிருந்து அமெரிக்கா சென்ற வரலாறு பற்றியும் மிகச்சிறப்பாக அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதியுள்ளார்.

ஐயாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வெளிவரும் இந்தப் படைப்பைத் தமிழர்கள் ஆர்வமுடன் வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம்.

நூல் வெளியீடு சிறக்க அறிஞர் ஈழத்துப்பூராடனார் தமிழகத்தில் தொடங்கிய பொன்மொழிப் பதிப்பகத்தின் சார்பில் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

வியாழன், 2 ஜூன், 2011

இணையவெளியில் ஈழத்துப்பூராடனார் பாடல்

இணையவெளியில் ஈழத்துப்பூராடனார் பாடல் கேட்கக் கிடைக்கின்றது.

யூ டியூப் தளத்தில் உள்ளது.

http://www.youtube.com/watch?v=InEwmANBOGQ

கேட்டு மகிழுங்கள்/ நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

ஐயாவின் பாடல்களும், படைப்புகளும் உலகத் தமிழரின் இல்லங்களுக்குச் செல்லும்
இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் தமிழ் அன்பர்களுக்கு எங்களின் பாராட்டும் வாழ்த்துகளும்.

புதன், 22 டிசம்பர், 2010

தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்!


ஈழத்துப்பூராடனார் ( 13.12.1928- 20.12.2010)


  தமிழீழத்தில் பிறந்து கனடாவில வாழ்ந்து வந்த தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூரடனார் 20.12.2010 இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து அவர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகின்றது.

  ஈழத்து அரசியல் போராட்டம் காரணமாகக் கனடாவில் வாழ்ந்து வந்த ஈழத்துப்பூராடனார் தமிழீழத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகமுத்து சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாளுக்கும் மகனாக 13.12.1928 இல் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் செல்வராசகோபால் ஆகும். செட்டிப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தாலும் தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.

  இவர் தொடக்கக்கல்வியைக் குருக்கள்மடம் மெதடிசுத மிசன் தமிழ்ப்பாடசாலையிலும் உயர் கல்வியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும்,மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும், குடந்தையிலும் (தமிழகம்) பயின்றவர். ஈழத்தில் தம் ஆசிரியர் பணியை முப்பத்தைந்து ஆண்டுகள் செய்து 1985 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். கனடாவில் தம் குடும்பத்தினருடன் வாழ்ந்துவந்த ஈழத்துப்பூராடனார்க்கு அகவை எண்பத்திரண்டு. தள்ளாத அகவையிலும் தமிழ்ப்பணிபுரிவதில் சோர்வின்றிக் காணப்பட்டவர். உடலில் பல்வேறு நோய்கள் காணப்பட்டாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது எழுதுவதிலும், அச்சிடுவதிலும், அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பிவைப்பதிலும், அன்பர்களுக்கு மடல் வரைவதிலும் ஈடுபட்டு விருப்போடு செயல்பட்டு வந்தவர். இவர் இளம் அகவையில் பெற்ற பல்வேறு பயிற்சிகள் இவருக்குத் தமிழ்ப்பணி புரிவதற்குத் துணையாக இருந்தது.

  ஈழத்துப்பூராடனார் இளம் அகவையில் ஆசிரியர் பயிற்சி பெற்றதுடன் அமையாமல் ஓவியம். தட்டச்சு, சுருக்கெழுத்து, அச்சுக்கலை. ஓமியோ மருத்துவம் முதலானவற்றிலும் பயிற்சிபெற்றவர். தமிழ்மொழியில் நல்லபுலமை பெற்றதுடன், ஆங்கிலம், சிங்களம் முதலான மொழிகளையும் நன்கு அறிந்தவர். ஈழத்துப்பூராடனாரின் குடும்பம் தமிழறிவு பெற்ற குடும்பமாகும். இவரின் பாட்டனார் புலவர் இ.வ.கணபதிப்பிள்ளை, பெரியதந்தை வரகவி சின்னவப் புலவர், கலாநிதி ஏ.பெரியதம்பிப் பிள்ளைப்பண்டிதர் முதலானவர்கள் வழியாக இவருக்குத் தமிழறிவும் தமிழுணர்வும் கிடைத்தது.

  ஈழத்துப்பூராடனார் தமக்குப் பதினேழு அகவை இருக்கும்பொழுது பாடல் வரைந்து அதனை வீரகேசரி இதழில்(1945 சனவரி) வெளிவரச் செய்தார். அதனைக் கண்ட புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஈழத்துப்பூராடனாரை அழைத்து எழுத்துத் துறையில் ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்தபொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, சிறீலங்கா முதலான ஏடுகளில் எழுதி,கதை, கட்டுரைகள்,தொடர்கள் வெளிவந்தன. அதுபோல் தமிழகத்திலிருந்து வெளிவந்த தமிழன், கல்கி, திங்கள், ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற ஏடுகளிலும் எழுதினார்.1954 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலியில் ஈழத்துப்பூராடனாரின் பேச்சு ஒலிபரப்பாகத்தொடங்கியது.

  ஈழத்துப்பூராடனார் இலக்கிய ஆர்வம் நிறைந்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று அவர்தம் இலங்கையில் தேற்றாத்தீவு இல்லத்தில் அமைந்திருந்த நூலகம் ஆகும். அங்கிருந்த நூல்கள் யாவும் ஈழத்துப்பூராடனாரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டன. கட்டம் செய்யப்பெற்று, வரிசை எண் இடப்பட்டு, பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அரிய நூல்களின் சேமிப்பகமாகக் காட்சியளித்தது. ஆனால் அங்கு இருந்த போர்ச்சூழலும் குடும்பம் கனடாவிற்குக் குடிபெயர்ந்ததாலும் நூல்கள் சரியாகப் பராமரிக்க முடியாமல் சிதைந்தன.

  இந்நூலகத்தில் தமிழ். ஆங்கிலம்,சிங்கள மொழிகளில் அமைந்த பல்லாயிரம் நூல்கள் இருந்துள்ளன.இவற்றுள் கலைக் களஞ்சியம், அகராதிகள், இலக்கண, இலக்கியநூல்கள், ஆய்வுநூல்கள்,நெடுங்கதைகள், மருத்துவம், சோதிடம், ஓவியம், அறிவியல், வடமொழி மறைநூல்கள், சித்தாந்த நூல்கள், சைவம். வைணவம், கிறித்தவம், இசுலாம், பொளத்தம் சார்ந்த நூல்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இதுநாள்வரை வெளிவந்திருந்த திரைப்படப் பாடல்கள், வசனங்கள் முதலியனவும் இருந்தன. இவற்றுடன் சிற்றிலக்கிய நூல்கள், அம்மானை, பெரியெழுத்துக் கதைகள், 1938 இலிருந்து இலங்கைப் பாடசாலைகளில் பயன்பாட்டிலிருந்த புத்தகங்கள், செய்யுள் நூல்கள், கணக்கு, வரலாறு ,புவியியல், பொருளியல், ஆசிரியர் பயிற்சியில் கற்பிக்கப்பட்ட உளவியல் நூல்கள், கல்விநூல்கள், கற்பித்தல் முறைகள், தேர்வுவினாக்கள், பல்வேறு இதழ்கள், இதழ்களின் நறுக்குகள், பல்வேறு கைப்படிகள் எனப் பல்வேறு நூல்கள் இருந்தன. இவை ஈழத்துப்பூராடனாரால் பெரும் பொருள்செலவில் வாங்கிப் பாதுகாக்கப்பட்டவை.

  ஈழத்துப்பூராடனார் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும் தந்தையார் நடத்தி வந்த மனோகரா அச்சகத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தார். தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் அச்சகப்பொறுப்பு முழுவதையும் கவனிக்க வேண்டியநிலை ஈழத்துப்பூராடனாருக்கு அமைந்தது.1980-1984 ஆம் ஆண்டுகளில் ஈழ விடுதலைப்போர் வடிவம் பெற்றபொழுது போராட்டக் குழுவினர்க்குத் துண்டறிக்கை அச்சிட்டுஅளித்தமையை அறிந்த அரசும் காவல்துறையும், இராணுவமும் இவரின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தொடங்கின.பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார்.எனவே இனியும் தமிழீழத்தில் தங்கியிருப்பது சரியில்லை என முடிவெடுத்துத் தம் மனோகரா அச்சகத்தை நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு,கனடாவிற்குக் குடிபெயர்ந்தார். 

  ஈழத்துப்பூராடனார் ஈழத்தில் வாழ்ந்தபொழுது இவர்தம் தமிழ்ப்பற்று அறிந்த அரசினர் இவர்தம் ஈழத்துப்பூராடனார் என்னும் புனைபெயரில் அமைந்திருந்த ஈழம் என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது எனக்கண்டித்தனர்.(1979முதல் அரசினர் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்ளைக் கண்காணிக்கத் தொடங்கியமையை நினைவிற்கொள்க).

  ஈழத்துப்பூராடனார் 1985 இல் கனடாவிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்குச் சென்றபிறகு தமிழர்கள் பலரும் குடிபெயர்ந்து வசிக்கத் துணையாக இருந்தார்.தமிழ்மக்கள் பயன்பெறும்வண்ணம் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திப் பல பணிகளையும் செய்தார்.அவற்றுள் ரிப்ளக்சு அச்சகம், சீவா பதிப்பகம், நிழல் என்னும் பெயரில் இதழ் நடத்தியது, தமிழ்கற்பிக்கும் பணியில் ஈடுபட்டமை, உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்-கிளை ஏற்படுத்தியமை, இவர்தம் மகன் சார்ச் இதயராச் அவர்கள் வழியாகத் தமிழ்மகன் என்னும் திரைப்படம் உருவாக்கியமை, தம் மக்களுடன் இணைந்து தமிழ்க்கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் தமிழ்நூல் வெளியிட்டமை (பெத்லேகம் கலம்பகம்)(1986) முதலியன இவர்தம் பணிகளுள் குறிப்பிடத்தக்கன.

ஈழத்துப்பூராடனார் எழுத்துப்பணிகள்

  ஈழத்துப்பூராடனார் இளம் அகவையிலே எழுதத் தொடங்கிவிட்டார். தம்பெயரிலும்,கதிர்,கதிர்வள்ளிச்செல்வன், பூராடனார், ஈழத்துப்பூராடனார் என்னும் பெயர்களிலும் பல்வேறு கதை, கட்டுரை, திறனாய்வு, கவிதை, மொழிபெயர்ப்புகள் எனப் படைத்துள்ளார்.இவர்தம் எழுத்தாளுமை பதிப்பு, படைப்பு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, தொகுப்பு என்று பன்முகத்தன்மை கொண்டது.

பதிப்புப்பணிகள்

  ஈழத்துப்பூராடனார் தாம் பல நூல்களை எழுதியதுடன்,தம்மையொத்த எழுத்தாளர்கள் நூல்களை வெளியிடவும்,பதிப்பிக்கவும் பல்வேறு வகைகளில் துணை நின்றுள்ளார்.ஈழத்தில் இருந்தபொழுது தம்முடைய மனோகரா அச்சகம் வழியும்.கனடாவில் ரிப்ளக்சு அச்சகம் வழியும் பல்வேறு நூல்கள் வெளிவரத் துணையாக இருந்துள்ளார்.மேலும் தமிழகத்தில் நல்ல நூல்கள் பதிப்பிக்கவேண்டும் என்ற நோக்கில் இவர் நெறிப்படுத்தலில் பொன்மொழிப் பதிப்பகம் செயல்படுகின்றமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது (பொன்மொழிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்டசோழபுரம் (வழி).அரியலூர் மாவட்டம்-612901)

  ஈழத்துப்பூராடனார் எழுதத் துடிக்கும் நூலாசிரியர்களை இனங்கண்டு அவர்களின் நூல்களைத் தாமே முயன்று பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டவர்.இவருடைய உதவியால் நடராசா,சற்குணம் ஆகிய இருவரும் எழுதிய நாவலர் பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலும்,கா.சிவப்பிரகாசம் அவர்களின் விபுலானந்தரின் கல்விச்சிந்தனைகள் நூலும், ச.நவரத்தினத்தின் கிழக்கின் பேரொளி புலவர்மணி நூலும், சிவகுமாரன் கதைகள் நூலும் வெளிவந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கன.இவை தவிர ஈழத்து அறிஞர்கள் பலரின் நூல்களைத் தாமே பதிப்பித்துள்ளார்.

ஈழத்துப்பூராடனார் மொழிபெயர்ப்புப் பணிகள்

  ஈழத்துப்பூராடனார் பிறமொழி அறிவின் துணைகொண்டு பலநூல்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார்.இவற்றுள் ஆங்கிலத்திலிருந்து புகழ்மிக்க கிரேக்க காவியங்களான இலியட்,ஒடிசியை மொழிபெயர்த்தமை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.இவ்வாறு மொழிபெயர்த்த பொழுது கிரேக்க நூல்களின் மூலநூலைத் தழுவித் தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார். கோமரின் இலியட் காவியம் 2400 வெண்பாக்களாகவும், ஒடிசி காவியம் 2400 விருத்தப்பவாகவும்(1990) படைக்கப்பட்டுள்ளன. மேலும் கிரேக்க நாடகங்கள் பல பன்னிரண்டு தொகுதிகளாகவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் 'சொபிக்கொலசின் நாடகங்கள்' 'அயிலசியசின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கப் பெருமைக்கு உரியன.


  ஈழத்துப்பூராடனார் பலதுறை அறிவுபெற்றவர். தமிழின் இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கூடாது என இவர் எழுதியுள்ள நூல்களும் அறிக்கைகளும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகும். கணிப்பொறி உலகில் எழுத்துச்சீர்திருத்தம் தேவையற்றது என்பது இவர்கொள்கை.தாம் இதுநாள்வரை படைத்துள்ள நூல்கள் யாவற்றையும் பழைய எழுத்துவடிவுகளில் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார். அவ்வகையில் இவர் படைத்துள்ள தமிழ் எழுத்துகளின் உறுப்பு இலக்கணம் உணர்த்தும் எழுத்துநூல் (உரையுடன்), தமிழ் எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள், மின்கணனித் தமிழ் எழுத்துச் சீரமைப்பு தேவைதானா? தமிழ் அச்சுக்கலையில் மின்கணனி எனும் கொம்பியூட்டரின் பிரவேசம் என்பன தமிழுலகம் அறியத்தகும் நூல்களாகும்.

  தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை எனவும்,தேவையற்றது எனவும் சொற்போர்புரியும் நாம் அனைவரும் படித்து இன்புறத்தக்கன. அதுபோல் பழைய தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பினர்.இது குறித்து இவர் வெளியிட்ட அறிக்கை உலகம் முழுவதும் இவரால் அனுப்பி வைக்கப்பெற்றது.

இசைத்தமிழ் நூல்கள்

  ஈழத்துப்பூராடனார் இசைத்தமிழ் குறித்த நூலொன்றையும் வெற்றிலை(பக்.80) என்னும் பெயரில் இசைப்பாடலாக எழுதியுள்ளார்.

நாடகத்தமிழ் நூல்கள்

  ஈழத்துப்பூராடனார் தமிழின் ஒருபிரிவான நாடகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார்.இவை உரையாகவும்,செய்யுளாகவும் அமைகின்றன.மதங்கசூளாமணி என்னும் நூலினை விபுலானந்த அடிகளார் இயற்றினார்.இதில் வடமொழிச் சொற்கள் மிகுதியும் கலந்துகிடந்தன.இவற்றின் கருத்தைத் தழுவி ஈழத்துப்பூராடனார் மதங்க சூளாமணியின் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி கூத்துநூல்விருத்தம் என்னும் பெயரில் 320 செய்யுள் கொண்ட நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூலின் சிறப்பு என்னவெனில், பாடல்களுக்கு உரைவரையும் போக்கே தமிழ் உலகில் காணப்படுவது. நம் ஈழத்துப்பூராடனார் விபுலானந்தரின் உரைக்குப் பாடல் எழுதியுள்ளார்.


  ஈழத்துப்பூராடனார் கூத்தர் வெண்பா(821 செய்யுள்),கூத்தர் அகவல், நாடகத்தமிழ், மணிமேகலை(தென்மோடி). சிலப்பதிகாரம்(வடமோடிக்கூத்து), கனடாக்குறவஞ்சி நாடகம், கிழக்கு ஈழமரபுவழி இருபாங்குக் கூத்துக்கலை ஆய்வுக்கான தகவற்திரட்டு முதலான நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் பிற எழுத்தாளர்களுடன் இணைந்து பல நூல்களை நாடகத்துறையில் உருவாக்கியுள்ளார்.

  ஈழத்துப்பூராடனாரின் தமிழழகி காப்பியம் என்னும் நூல் ஒன்பது காண்டங்களாக 12000 செய்யுள்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. தமிழரின்மொழி,கலை,பண்பாடு,இனம்,வரலாறு,இலக்கம், இலக்கியம் பற்றிய பல தகவல்களைக்கொண்டு இந்நூல் உள்ளது.ஒவ்வொரு காண்டமும் 300 பக்கங்களைக்கொண்டது.

ஈழத்துப்பூராடனாரின் வரலாற்று நூல்கள்


  ஈழத்துப்பூராடனார் ஈழத்தின் வரலாற்றை அறிவதற்குப் பயன்படும் வண்ணம் யாரிந்த வேடர்(1965), ஈழத்தின் வரலாறு(1986) என்னும் நூல்களை எழுதியுள்ளார்.

ஈழத்துப்பூராடனார் உரைநூல்கள்

  ஈழத்துப்பூராடனார் உரைநடை எழுதுவதில் வல்லவர் என்பதுபோல் பிற நூல்களுக்கு உரை வரைவதிலும் வல்லவர்.அவ்வகையில் இவர் சீமந்தனி புராணம்(வித்துவான் பூபாலபிள்ளை), கதிர்காம சதகம்(இ.வ.கணபதிப்பிள்ளை) முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

ஈழத்துப்பூராடனார் பனைஓலையிலிருந்து பதிப்பித்த நூல்கள்

  ஈழத்துப்பூராடனார் பனைஓலைகளிலிருந்தது சில நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளார்.அவற்றுள் கபோத கா,தை(1970) இரண்ய சம்கார அம்மானை(1966) குறிப்பிடத்தக்கன.


ஈழத்துப்பூராடனார் இயற்றிய சிற்றிலக்கியங்கள்

  ஈழத்துப்பூராடனார் சிற்றிலக்கியங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். புயற்பரணி என்னும் பெயரில் 625 செய்யுட்கள் கொண்ட நூலையும், ஈழத்துப் போர்ப்பரணி என்னும் பெயரில் 525 செய்யுள் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை தவிர வறுமைப்போர்ப் பரணி என்னும் நூலையும் இயற்றியுள்ளார். விபுலானந்தர் பிள்ளைத்தமிழ்(1984), ஈழத்து இரட்டையர் இரட்டை மணிமாலை(1984), புலவர்மணிக்கோவை (1984) முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

ஈழத்துப்பூராடனார் எழுதிய மட்டக்களப்பு குறித்த நூல்கள்

  ஈழத்துப்பூராடனார் எழுதிய நூல்களுள் அறிஞர் உலகம் ஏற்றுப்போற்றும் நூல்கள் அவர் மட்டக்களப்பு தொடர்பில் இயற்றப்பட்டவற்றை எனில் மிகையன்று.ஏனெனில் இந்நூல்கள் மட்டக்களப்பு வரலாறு அறிவிப்பதோடு அமையாமல் அங்கு வழக்கிலிருக்கும் பழந்தமிழ்ச் சொற்கள்,வாழ்க்கை முறைகள்,பண்பாடு எனப் பல்துறைப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அந்நூல்கள் வெளிவந்துள்ளன. அவ்வகையில்,


1.மட்டக்களப்புப் பிரதேசத்தின் வழக்கு மரபுச்சொற்கள் சொற்றொடர்களினதும் அகராதி(1984)

2.மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை(1984)

3.நீரரர் நிகண்டு(1984)

4.மட்டக்களப்புச் சொல்வெட்டு(1984)

5.மட்டக்களப்புச் சொல்நூல்(1984)

6.மட்டக்களப்பு மாநில உபகதைகள்(1982)

7.சீவபுராணம் நெடுங்கதை(1979)

8.மட்டக்களப்பு மக்களின் மகிழ்வுப் புதையல்கள்(1978)

9.மட்டக்களப்புப் பனையோலைச் சுவடிகள்(1980)

10.மட்டக்களப்பியல்

11.மட்டக்களப்பு உழவர்மாட்சிக் கலம்பகம்

12.கன்னங்குடா உழுதொழிற்பள்ளு

13.மீன்பாடும் தேன்நாடு

14.வசந்தன்கூத்து ஒருநோக்கு

15.வயலும் வாரியும்

16.மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை

முதலியன குறிப்பிடத்தக்கன.

ஈழத்துப்பூராடனார் கிறித்தவசமயத்தைப் பின்பற்றுபவர். இச்சமயம் சார்ந்து பல நூல்களை இயற்றியுள்ளார். இவர்தம் வாழ்க்கைமுறை என்பது அனைத்துச் சமயத்தாரையும் ஆரத்தழுவிப் போற்றும் வகையினது.இவர் கணிப்பொறி வழி அச்சிட்ட முதல்நூல் பெத்லேகம் கலம்பகம்(1986) கிறித்தவசமயம் சார்ந்த நூலாக இருப்பினும் சைவசமயம் சார்ந்த பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார்.இவர்தம் தமிழ்ப் பணியைப் போற்றி இசுலாமிய சமயம் சார்ந்த பெரியவர்கள் பாராட்டு செய்துள்ளனர்.இவரின் வினைப்பாடுகளும் வெளிப்பாடுகளும் தமிழ் தமிழர் நலம்சார்ந்து அமைந்தது.


ஈழத்துப்பூராடனார் பெற்ற சிறப்புகள்

ஈழத்துப்பூராடனார் தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதிச் செயல்பட்டதால் இவர்தம் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினரும், நிறுவனங்களும் பாராட்டிச் சிறப்புச் செய்துள்ளன.இவற்றுள் இந்து பண்பாட்டு அமைச்சின் நாடகசேவை விருது(1982), மட்டக்களப்பு கலை பண்பாட்டு அவை வழங்கிய இலக்கியமணி விருது,கனடாவில் வழங்கப்பட்ட பாராட்டுப்பதக்கம்( 1994), தொரன்றோ சேக்கம் நிறுவனத்தின் கேடயமும்(1987),மொரீசியசில் வழங்கப்பட்ட தமிழ்நெறிப்புலவர் விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இவர்தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டி வழங்கிய முனைவர் பட்டமும்(Doctor Of Letters)(2000), தமிழர் தகவல் விருது(1992),தாமோதரம் பிள்ளை விருது(1998) முதலியன குறிப்பிடத் தக்கன.


ஈழத்துப்பூராடனார்

ஈழத்துப்பூராடனார் வெற்றிக்குக் காரணம்

  ஒரு மாந்தன் இல்வாழ்க்கையிலும்,இலக்கிய உலகிலும் இணைந்து வெற்றிபெறுவது அரிதாகவே நிகழும்.அத்தகு அரிய வாழ்க்கை ஈழத்துப்பூராடனார்க்கு அமைந்துள்ளதைப் பெருமையோடு சுட்டிச் சொல்லவேண்டும். அவர்தம் அருமை மனைவியார் வியறிசு பசுபதி அவர்கள் தமிழ் பயிற்றுவித்தலில் நல்ல பட்டறிவுடையவர். ஈழத்துப்பூராடனாரின் மக்கட் செல்வங்கள் அச்சுத்துறையிலும், கணினித் துறையிலும் வல்லுநர்கள்.எனவே உலகில் முதன்முதல் கணிப்பொறியில் தமிழ்நூல் அச்சிடும் நுட்பத்தைக் கண்டுபிடித்தனர். வெற்றியுடன் செயல்படுத்தினர். அம்மக்களுள் ஒருவர் கனடாவில் அச்சுக்கூடம் நிறுவியும் பதிப்புப் பணியில் ஈடுபட்டும் புகழ்பெற்றவர். இன்னொரு மகனார் இதயராச் அவர்கள் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும்,நடிகராகவும் புகழ்பெற்றவர்.ஈழத்துப்பூராடனார் அன்பும் அடக்கமும் உருவானவர். அனைவரிடமும் மனம் ஒன்றிப்பழகுவது இவர்தம் இயல்பு,நன்றி மறவாமை என்னும் பண்பு இவரை உயர்நிலைக்குக் கொண்டு சென்றது. ஆசிரியர்களித்தும், நண்பர்களிடத்தும் இவர்கொண்ட மதிப்பும் சிறப்பும் இவர்தம் சான்றாண்மைக்குச் சான்று.

  ஈழத்துப்பூராடனார் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அந்நூல்கள் யாவும் இன்று கிடைக்காமையை உணர்ந்து ஒவ்வொரு நூல்பற்றிய விவரங்களை அறிவிக்கும் அமைப்பில் நானும் எந்தன் நூல்களும் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் பதிப்புத்துறை சார்ந்தும், தமிழக, ஈழத்து,கனடா சார்ந்த பல்வேறு தகவல்களைத் தருகின்றன.இவ்வாறு காலந்தோறும் நூல்களை ஈழத்துப்பூராடனார் வெளியிட்டாலும் இந்நூல்கள் செம்பதிப்பாகத் தமிழ் உலகிற்குக் கிடைக்கவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.

  ஈழத்துப்பூராடனார் ஆசிரியப்பணியில் இணைந்து நல்லாசிரியராக விளங்கியதுடன் நாள்தோறும் கற்கத் தக்கனவற்றைக் கற்றும், செய்யத் தக்கனவற்றைச் செய்தும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர்தம் நூல்கள் தமிழின் அச்சு,இதழியல், கல்வியியல், நாட்டுப் புறவியல்,வரலாறு,சமயம்,பண்பாடு,இனப்பரவல்,திரைப்படம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கும் தகவல்களஞ்சியமாகவும், ஆவண மாகவும் உள்ளன.பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியவை இவர்தம் படைப்புகள்.ஆய்வாளர்களுக்குப் பல்வேறு களங்களில் ஆராய்ச்சி செய்ய உதவுவன.

  வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்னும் நூலினை வெளியிடுவதற்குப் பணிகள் நிறைவுற்ற நிலையில் தம் எண்பத்திரண்டாம் அகவையில் கனடாவில் இயற்கை எய்தியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அவரின் நூல்கள் இருந்து நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும்.

(முன்பு திண்ணை இணைய இதழில் வெளியான என் கட்டுரையின் திருந்திய வடிவம் தேவை கருதி மீண்டு வெளியிடப்பெறுகின்றது)

வியாழன், 11 பிப்ரவரி, 2010

பன்முகத் தமிழ் ஆய்வறிஞர் ஈழத்துப்பூராடனார்

ஈழத்துப்பூராடனார் (க.தா.செல்வராசகோபால்) 
(13.12.1928 - 20.12.2010)
 
 தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் (இலக்கியம், இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள். 
 
 சிலர் சொல்லாராய்ச்சித் துறையில் மட்டும் ஈடுபட்டுத் தம் பேரறிவு கொண்டு உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் இலக்கண நூல்களை மட்டும் நுண்ணிதின் ஆய்ந்து அறிஞர்களாக விளங்குவார்கள். சிலர் பக்திப் பனுவல்களில் ஈடுபட்டு மெய்யுணர்ந்து மேன்மை பெறுவது உண்டு. சிலர் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகத் தமிழுக்கு ஆக்கம் தேடியிருப்பார்கள். சிலர் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை அறிவதில் தம் வாழ்நாள் ஆய்வைச் செலவிட்டிருப்பார்கள். சுருங்கச்சொன்னால் சிலர் இயலிலும், சிலர் இசையிலும், சிலர் நாடகத்திலும். இன்னும் சிலர் இப்பகுப்பில் அடங்காத பிற துறைகளிலும் தம் கால் பதித்து அறிஞர்களால் பாராட்டப்படுவது உண்டு. மேற்குறித்த பல துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்து இன்னும் முற்றாகத் தமிழகத்தாரால் அறியப்படாமல் இருக்கும் அறிஞர்களுள் இலங்கையில் பிறந்து இன்று கனடாவில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(பிறப்பு 13.12.1928) அவர்களின் படைப்புகளை யான் பதினேழாண்டுகளாக நன்கு அறிவேன். எண்பத்திரண்டு அகவையிலும் அடக்கமும் அமைதியும் கொண்டு தமிழுக்கு உழைப்பதைத் தம் கடமையாகக் கொண்டு இவர் இயங்குகிறார். 
 
 பதிப்புத்துறையில் இவருக்கு மிகப்பெரிய பட்டறிவு உண்டு என்பதாலும்,தாமே அச்சுக்கூடம் வைத்திருப்பதாலும் தமிழுக்கு ஆக்கமான நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்.தம் நூல்களைத் தமிழ் வழங்கும் உலகப் பல்கலைக்கழகம் சிலவற்றிற்கு அன்பளிப்பாக வழங்குவதைக் கடமையாகக்கொண்டவர்.கனடாவில் இவர்களின் அச்சகம் சிறப்புடன் செயல்படுகிறது.நூல்களும்,இதழ்களும் குறிப்பிடத்தகும் தரத்துடன் வெளிவருகின்றன்றன. ஈழத்துப்பூராடனாரின் படைப்புகள் கண்டு உலகமே வியக்கும்படியாக இவர் தம் தமிழ்ப்படைப்புகள் உள்ளன. 
 
 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாவுக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப்பூராடனாரின் இயற்பெயர் க.தா.செல்வராசகோபால் என்பதாகும். தமிழ், ஆங்கிலம்,சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர்.இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு (1983 அளவில்) இவர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர். 
 
 ஈழத்துப்பூராடனாரின் நூல்கள் பலவும் பலவகையில் தொகுத்தும் வகுத்தும் ஆராயத்தக்க பெருமைக்கு உரியன. ஒவ்வொரு படைப்புகளும் துறைவாரியாகவும் ஒட்டுமொத்தமாகவும் ஆய்வு செய்வதற்குரியன. இவரின் சிறப்பு காட்ட ஓரிரு நூல்களை இங்கு அறிமுகம் செய்ய நினைக்கிறேன். முன்பே இவர் பற்றி எழுதியுள்ளேன். அண்மையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியரும் உலகின் மிகச்சிறந்த அகராதியியல் அறிஞருமாகிய வ.செயதேவன் அவர்கள் அறிஞர் ஈழத்துப்பூராடனாரின் நீரரர் நிகண்டு என்னும் அரிய நூல் பற்றிய வியந்து விரிவாக உரையாற்றினார். இருபதாம் நூற்றாண்டு நிகண்டு நூல்களுள் நீரரர் நிகண்டுக்கு ஒரு சிறந்த இடம் உண்டு என்பது வ.செயதேவனாரின் புகழ்மொழியாகும். அத்தகு நிகண்டு நூல் இருபதாம் நூற்றாண்டில் படைத்த பெருமைக்கு உரியவர் நம் ஈழத்துப்பூராடனார். நிகண்டு நூல் படித்தவரிடம் வெகுண்டு பேசக்கூடாது என்பார்கள். படைத்தவரைப் பற்றி என்னென்பது? 
 
 ஈழத்துப்பூராடனார் செய்யுள் நடையில் இந்த நிகண்டு நூலைப் படைக்க அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார். மட்டக்களப்பில் பயிலப்பட்டுவரும் சொற்கள் மற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குப் புதியதாக இருப்பதுடன் மட்டக்களப்பில் இருப்பவர்களுக்கே பல தடுமாற்றங்களை உண்டு பண்ணுவதை உணர்ந்து ஆசிரியர் இந்த நூலை இயற்றியுள்ளார். ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை, 1.உயர்திணைப் பெயர் மஞ்சரி(11 செய்யுள்) 2.அஃறிணைப் பெயர் மஞ்சரி(12 செய்யுள்கள்) 3.தொழிற்பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்) 4.இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்) 5.கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்) என ஐந்து வகையாகப் பகுத்துத் தமிழுக்கு அணிசெய்யும் அழகிய நூலைத் தந்துள்ள இவர் பணியை எவ்வளவு போற்றினாலும் தகும். வழக்கில் பொருள் விளங்காத சொற்களை நிலைப்படுத்தி விளக்கம் தந்துள்ளமை போற்றுதலுக்கு உரிய ஒரு செயலாகும். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984 இல் முதல்பதிப்பும் (48 பக்கம்), இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தது. மட்டக்களப்பிற்கு மாட்சி தரும் பாடும் மீன் என்னும் நீரரர் மகளிரின் பெயரில் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது. 
 
  மட்டக்களப்புச் சொல்வெட்டு என்னும் நூலில் அறிஞர் ஈழத்துப்பூராடனார் மட்டக்களப்பில் வழங்கும் சொற்கள் சில சங்க நூல்களில் வழங்குவதைச் சிறப்பாக ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். அவ்வகையில் கிளை, கல்லை வைத்தல்,தூளியில் வைத்தல், முல்லைக்காரன், குடிதை, கடுக்கன், வண்ணக்கர், கட்டாடி, கட்டாடியார், பரிகாரி-பரிகாரியாள், கலத்திற் போடல், கால் மாறுதல், பரத்தை என்னும் பன்னிரு சொற்களும் மட்டக்களப்புப் பகுதியில் எவ்வாறு வழக்கில் இருக்கின்றன என்று ஆராய்ந்துள்ளார். 
 
  "இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி" என்னும் ஈழத்துப்பூராடனாரின் மற்றொரு சொல்லாய்வுக்கு உரிய நூலும் குறிப்பிடத் தகுந்ததே ஆகும்.மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்த அரிய சொற்களைத் தொகுத்து வழங்கியுள்ள பணியை இன்றைய இலங்கை மக்களின் இடப்பெயர்வுச்சூழலில் எண்ணிப்பார்க்கும்பொழுது ஒரு மிகப்பெரிய வரலாற்று அழிவிலிருந்து தமிழ்ச்சொற்களை மீட்ட பெருமைக்கு உரியவராக அறிஞர் ஈழத்துப்பூராடனார் நமக்கு விளங்குகிறார். 1984 இல் வெளிவந்த 60 பக்க நூலாக இது விளங்குகிறது. பாழடைந்த மண்டபங்கள் போலும் பெருநோயினுக்கு ஆட்பட்ட ஊர்போலும் ஆள் அரவமற்றுக் காட்சி தரும் இன்றைய இலங்கையில் தமிழர் வரலாறு துடைத்தழிக்கப்படுவதற்கு முன் இத்தகு நூல் வெளிவந்துள்ளமை வரலாற்றில் நினைக்கத் தகுந்த ஒன்றாகும். 
 
  இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள், பழக்க வழக்கம் பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். மட்டக்களப்பின் மகிழ்வுப்புதையல்கள், கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள், வயல் இலக்கியம், ஊஞ்சல் இலக்கியம், வசந்தன்கூத்து ஒரு நோக்கு, மட்டக்களப்பு மாநில உபகதைகள் போன்ற நூல்கள் இவரின் நாட்டுப்புறவியல் துறைக்குரிய பங்களிப்பாக விளங்குகின்றன. நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். அவற்றுள் கூத்தர் வெண்பா,கூத்தர் விருத்தம்,கூத்தர் குறள்,கூத்தர் அகவல்,மட்டக்களப்பு மாநில இருபாங்குக் கூத்துகளை விளக்கும் வகையில் இவர் தந்துள்ள கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு, கூத்துக்கலைத் திரவியம், வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும், கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன், தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும், கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை, இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும், மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை என்னும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பனவாகும். 
 
 மொழி பெயர்ப்பு வகையில் நம் ஈழத்துப் பூராடானார் அவர்கள் தம் பன்மொழி அறிவுகொண்டு பல நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார். கிரேக்க நாட்டின் ஆதி கவிஞரான ஓமரின் இலியட்,ஒடிசி காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார்.மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.இதுவரை கிரேக்க நூல்கள் தமிழுக்கு அறிமுகம் இல்லாத சூழலில் நம் ஈழத்துப்பூராடனாரின் பணிகள் போற்றத் தகுந்தன. இலங்கையில் பிறந்து கல்விப் பணியாற்றி ஓய்வாக வாழ்க்கை வாழ வேண்டிய சூழலில் இனப்போராட்டம் காரணமாக இடம்பெயர்ந்தாலும் தம் தமிழாய்வுக்கு விடை தராத ஈழத்துப்பூராடனாரின் கிரேக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் இங்குத் தனித்துச் சுட்டத்தக்கன. 
 
  ஈழத்துப்பூராடனாரின் கிரேக்க காவிய மொழிபெயர்ப்பு அறிஞர் ஈழத்துப்பூராடனார் கிரேக்கமொழியில் ஓமர் எழுதிய ஒடிசி, இலியட்டு காவியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை போற்றத்தகுந்த பணியாகும்.கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதை மூலமாகக் கொண்டு நம் ஈழத்துப்பூராடனார் தமிழில் செய்யுளில் தந்துள்ளார். தமிழ்போல் உயரிய மொழியான கிரேக்க மொழி பாவியங்கள் அந்தமொழியின் இலக்கியச் செழுமையை உணர்த்துவதுடன் கிரேக்க மக்களின் கடல் பயண அறிவு, இசையறிவு, நாடக அறிவு என யாவற்றையும் காட்டும் ஆவணமாக உள்ளது. 2089(8355 பாடலடிகள்) செய்யுள் விருத்தங்களால் அமைந்தது ஈழத்துப்பூராடனாரின் ஒடிசி மொழிபயர்ப்பு நூலாகும்.ஈழத்துப் பூராடனார் தம் ஒடிசி மொழிபெயர்ப்பு பற்றி பின்வரும் சில குறிப்புகளைத் தம் நூலுள் வழங்கியுள்ளார். 
 
  "1.இதனை நான் செய்யுள் விருத்தங்களாலேயே செய்துள்ளேன்.ஆனால் சொல்லப்படும் பொருட்களுக்கு ஏற்பப் பகுத்தபோது செய்யுள்களின் வரிகளின் தொடர்புக்காக இடைக்கிடையே விருத்தங்களின் அடிகள் பிரிந்துள்ளன.... 2.ஹோமர் இதனை நாடக வடிவில் அமைத்தார்.நாடகத் தமிழிற்கு இம்முறை ஒத்துவரவில்லை. ஆதலால் இந்த விதிக்குச் சற்று விலகியுள்ளேன். 3.கருத்துகளையுங் கற்பனைகளையும் அப்படியே எடுத்துக் கையாண்டுள்ளேன்.அதைவிட ஆங்காங்கு எனது சொந்தக் கற்பனைகளைத் தமிழ் மரபுக்கு ஏற்பப் புகுத்தியுள்ளேன். 4. அநேகமான கிரேக்கப் பெயர்களைத் தவிர்த்து முக்கியமான பாத்திரங்களின் பெயரை மாத்திரம் எடுத்தாண்டுள்ளேன்... 11. இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல. ஒரு தமிழாக்கம். எனவே இவ்வாக்கத்தில் வரிக்கு வரி சமதையான சொல்லாட்சி இல்லாவிட்டாலும் கருத்தாட்சிக்கரைவு இல்லாத கட்டுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளது. 12. கிரேக்கப் பெயர்களைக் கதைத் தொடர்புக்காக ஆங்காங்கு கையாண்டுள்ளோம். ஏனைய இடங்களில் மன்னன், இளவரசன், இராணி என்ற பொதுப் பெயரிட்டே வழங்கப்பட்டுள்ளது. மாறுவேடத்தில் ஞானத் தேவதையோ அல்லது பிறரோ வருமிடங்களில் அவர்களின் பாற்பெயர் கொண்டே குறிப்பிடப்பட்டுள்ளது." பக்கம்13,14) ஓடிசு என்னும் வீரனைப் புகழ்ந்து பாட தெமட்டகொல் என்ற பாடகன் அழைக்கப்படான். அவன் ஆமையோட்டுடன் எருமைக் கொம்பை இணைத்து அமைத்த பனிரெண்டு நரம்புள்ள வாத்தியக் கருவியை மீட்டி கவிபுனைந்து பாடினான் என்னும் குறிப்பைப் படிக்கும்பொழுது நமக்குப் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் இயல்பாக நினைவுக்கு வருகின்றன.
 
 சிலம்பின் கானல்வரியும் கண்முன் நிற்கின்றது. "போரிடு எருதின் கொம்பிற் பொன்னிற ஆமையோட்டு தாரிய குடமுந் தண்டும் தகைபெறு நரம்புஞ் சேர்ந்த சீரிய யாழின் ஓசை செகமெலாம் பரவுமாறு பாரினில் ஓடி சென்னும் பலவான் திறாயின் போரில் ஆற்றிய தீரமெல்லாம் அசைமிகு சொல்லென் வண்ணந் தீற்றிய சித்திர மாகத் தெளிவுற வரைந்து காட்ட காற்றெனும் பெண்ணா ளஃதை க் காதெனும் கிண்ணத் தூற்ற மாற்றெதுஞ் செய்யா ராகி மக்கள் மகிழுவுற் றாரே" (ஒடிசி,பக்கம் 132) என்று தமிழாக்கம் என்று கூற முடியாதபடி இயல்பான தமிழ் நடையில் வரைந்துள்ள பாங்கு எண்ணி மகிழ வேண்டியுள்ளது. 
 
 ஒடிசி காப்பியம் கிரேக்க மக்களின் வாய்மொழிக்கதைகளைக் கேட்டு ஓமரால் கி.மு.4ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கின்றன.சாவாத பாடல்களைத் தந்த தமிழ்ப்புலவர்களின் தெளிவான வரலாறுகள் கிடைக்காமல் போனதுபோல் ஓமரின் வரலாறும் நமக்குத் தெளிவாகக் கிடைக்க வில்லை.இதனையெல்லாம் அறிஞர் ஈழத்துப் பூராடனார் தம் படைப்பில் குறித்துக்காட்டியுள்ளார். கிரேக்க நாட்டுக் காப்பியமாதலின் அதனை விளங்கிக்கொள்ள நமக்கு உதவியாக ஈழத்துப்பூராடனார் பலவகையான படங்கள், ஓவியங்கள், முன்னுரைகள், குறிப்புகள், விளக்கங்கள், கப்பல் அமைப்பு, கப்பல் பயணத்தைக் குறிக்கும் வரைபடம், கதைச்சுருக்கம் யாவற்றையும் வழங்கிப் படிக்க விரும்புபவர்களைப் படைப்புடன் நெருங்கி உறவாட வைக்கின்றார். 
 
 ஈழத்துப்பூரடானார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.11100 பாடல்வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுளது.கிரேக்கமொழி,ஓமரின் காப்பியங்கள் பற்றி ஈழத்துப் பூராடனார் பின்வரும் குறிப்புகளைத் தந்துள்ளார். "கிரேக்க மொழி தமிழைப் போன்று செம்மொழி இலக்கியம் படைத்த ஒரு பண்டைய மொழி.இதில் உள்ள மகாகாவியங்களில் ஹோமர் மகாகவியின் ஒடிஸ்சியும் இலியட்டும் மிகவும் பழமையுஞ் சிறப்பும் வாய்ந்தவை. இதன் கிளைக் கதைகளாகவே ஆதிக் கிரேக்கத்தின் பிந்திய இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவை அநேகமாக நாடக வடிவிலேயே அமைந்துள்ளன. கப்பற் பயணங்களிற் தேர்ந்தவராய் கிரேக்கர் முதலிடம் வகுத்ததுபோல் நாடக அரங்குகளை அமைப்பதிலும் நடத்துவதிலும் அவர்கள் தலையா சிறப்புற்றிருந்தனர். எனவே நாடக இலக்கியங்கள் அங்கு நிலைபெற்று வளரலாயிற்று"(இலியட் பக்கம் 8).
 
  இலியட் காப்பியம் பற்றி ஈழத்துப் பூராடனார் முன்னுரையில் "இலியட் ஒரு முழுப் போர்க்காவியம்.அகியர்கள் அல்லது ஆர்க்கோசர் என அழைக்கப்படும் கிரேக்க நாட்டவர்களுக்கும் இலியர்கள் அல்லது திறஜானர் எனப்படும் திறாயர்களுக்கும் இடையில் தொடர்ந்து பத்து வருட காலமாக நிகழ்ந்து ஒரு போரின் வரலாற்றை இலியட் காவியம் எடுத்துக் கூறுகின்றது. இலியட் நாட்டில் நடந்த போராதலால் இலியட் எனும் பெயரை இக்காவியம் பெற்றது"என்று நூலின் பெயர்க்காரணத்தை ஆசிரியர் விளக்குகிறார் (இலியட்,பக்கம் lviii) இலியட் காப்பியத்தின் கதையில் இடம்பெறும் பல கிளைக்கதைகள்தான் பினபு எழுந்த கிரைக்க நாடகங்களுக்கு உதவியாக இருந்தன. ஒவ்வொரு காவியத்திற்கும் அடிப்படையாக ஒரு பெண் இருப்பதுபோல்(இராமயணத்தில் சீதை இருப்பது போல்) இலியட் காவியத்தில் ஹெலன் என்னும் பெண் காரணமாக இருக்கின்றாள். இவள் கிரேக்க நாட்டை ஆண்டுவந்த வீரன் அகாமெமேனோன் தம்பியின் மனைவி. அங்கு விருந்தாளியாக வந்திருந்த இலிய நாட்டு இளவரசன் அவளை மயக்கிக் கவர்ந்து செல்கிறான். இது ஒரு கௌரவப் பிரச்சினையாகி விடுகின்றது. இதனால் அவளை மீட்டு வருவதற்காகக் கிரேக்கர்கள் படை எடுத்துச் சென்று போர் செய்கின்றார்கள். 
 
  "இருபத்தினாலு அங்கங்கள் உள்ளதாகப் பத்து வருடங்கள் நடைபெற்ற இப்போர் நிகழ்வுகளைக் ஹோமர் செய்யுள் நடையில் எடுத்துக்கூறியுள்ளார்."பண்டைகாலத்தில் எழுதப்பட்ட நம் புறநானூறு தனித்தனியான போர்க்களக்காட்சிகளை விளக்குவதுபோல் பத்தாண்டுகள் நடைபெற்ற கிரேக்க போர் குறித்து எழுந்த கிரேக்க இலக்கியமும்,சங்கச்செவ்வியல் இலக்கியங்களும் காலத்தால் ஒரே பொருண்மையில் படைக்கப்பட்டுள்ளதை இங்கு இணைத்து எண்ணிப்பார்க்க வேண்டும். பண்டைக்காலத்தில் கூத்தும் நாடகமும் செழித்திருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 99 வகையான கூத்துகளை எடுத்துக்காட்டும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியாக்குநல்லார் தமிழகத்தின் செழித்த கூத்து மரபுகளை நமக்கு நினைவூட்டியுள்ளது போல் கிரேக்கர்களின் நாடக,இசையறிவு யாவும் கிரேக்கமொழியில் இருந்துள்ளதை ஈழத்துப் பூராடனார் தமிழுக்கு வழங்கியுள்ள தமிழாக்கத்தின் வழியாக அறியமுடிகிறது. 
 
 அண்மைக்காலமாக ஈழத்துப்பூராடனார் ஐங்குறுநூற்று அரங்கம்,சூளாமணித் தெளிவு, கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம், நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக் கண்ணோட்டம், சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்,பெருங்கதை ஆய்வுநோக்கு, உள்ளிட்ட நூல்கள் பற்றிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். 
 
  தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ்நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக(2070 பக்கங்களில்) உருவாக்கியுள்ளார்.தமிழ்மொழியின் தோற்றம்,அதன் சிறப்பு உணர்த்தும் நூலாக இது உள்ளது. இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும்,உலகளவில் தமிழ்ப்பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார். 
 
 தமிழ் கணிப்பொறித்துறையில் இவர் குடும்பத்தார் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர்.இவர்கள் வெளியிட்ட பெத்லகேம் கலம்பகம் என்ற நூலே தமிழில் கணிப்பொறியில் அச்சான முதல்நூலாக விளங்குகிறது. ஈழத்துப்ப்பூராடனார் தமிழ்த் திரைப்படக்களஞ்சியம் அறுபது தொகுதிகளாக உருவாக்கியுள்ளார். ஈழத்து தமிழறிஞர்கள் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் மிகச்சிறந்த நூல்களைத் தந்துள்ள மூத்த தமிழறிஞரான ஈழத்துப்பூராடனார் போன்ற அயல்நாட்டில் வாழும் தமிழறிஞர்களை வரும் செம்மொழி மாநாட்டில் சிறப்பிப்பதன் வழியாக அவர்களின் வாழ்நாள் பணியைப் போற்றிய சிறப்பை நாம் பெறுவோம். 
 
 இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்ப்பணியாற்றிவரும் ஈழத்துப்பூராடனாரைப் போற்றுவோம்!அவர் நெஞ்சம் நிறைந்த வாழ்த்தினைப் பெறுவோம்!! 
 
ஈழத்துப்பூராடனார்
  ஈழத்துப்பூராடனார் தம் நூலகத்தில் 
  ஈழத்துப்பூராடனாரின் இன்னொரு தோற்றம் 
 
ஈழத்துப்பூராடனார் தம் நூலகத்தில்