நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன்




வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன்

புதுவைப் பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வந்த காலம்(1992)  முதலாக ஓர் இனிய குரலுக்கு மயங்கிக் கிடந்த செவிக்கு, மீண்டும் ஓர்  இசைவிருந்து அண்மையில்  பரிமாறப்பட்டது. ஆம். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிகழ்ச்சிக்குத் தவத்திரு ஊரன் அடிகளார் வந்ததை அறிந்து, புதுவைத் தமிழன்பர்கள் திரளாக அரங்கிற்கு வந்து பெருமை சேர்த்தனர். அவர்களுள் வில்லிசை வேந்தர் . பட்டாபிராமன் அவர்களின் வருகையைத் தனித்துச் சுட்டியாதல் வேண்டும்.

தொல்காப்பிய மன்றத்து நிகழ்ச்சி தொடங்குவதன் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாட வேண்டிய நேரத்தில், வில்லிசை வேந்தர் முன்னிலையில் இருப்பதை அறிந்தோம். இப்பொழுது யார்  தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடுவது என்று தயங்கியபடி இருந்தோம். வில்லிசை வேந்தரிடம்,ஐயா, தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தாங்கள் பாட வேண்டும்’ என்று ஓர் அன்பு வேண்டுகோள் வைத்தோம். ஐயா அவர்களும் பெரிய உள்ளத்துடன் முன்வந்து பாடி, அவையைத் தமிழிசை மழையில் நனைத்தார்கள். ஓரிரு நாள் உருண்டோடின.

வில்லிசை வேந்தரின் இசைப்பயணத்தைத் தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் அவர்கள் வழியாக முன்பே அறிவேன் எனினும் முழுமையாக அறிந்து, பதிந்துவைக்க வேண்டும் என்று அவருக்குத் தொலைபேசியில் என் விருப்பம் தெரிவித்தேன். அவர்களும் சந்திக்க ஆர்வம் காட்டினாலும், ’இப்பொழுது பண்ணும் பாடலும் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்குப் புறப்படுகின்றேன். தாங்கள் வந்தால் அரைமணி நேரம் மட்டும் உரையாடலாம்’ என்றார். அடுத்த பத்து நிமையத்தில் அவர் இல்லத்தில் நின்றேன்.

குறுவாள் போன்ற வெண்மீசை தாங்கிய முகம்; பேச்சுக்குப் பேச்சு நகைச்சுவை தோன்ற உரையாடும் இனித்த பாங்கு கொண்ட வில்லிசை வேந்தர் என்னை அன்புடன் வரவேற்று, அமர்த்திவிட்டுத் தம் வாழ்க்கைப் புத்தகத்தைத் திறந்துகாட்டினார்.

வில்லிசை வேந்தர் . பட்டாபிராமன் புதுச்சேரி மாநிலத்தின் பெருமைக்குரிய ஊர்களுள் ஒன்றான பாகூரில் 31. 05. 1932 இல் பிறந்தவர். பெற்றோர் மன்னாரம்மாள், இரிசப்பன். புதுச்சேரியின் குயவர்பாளையத்தில் இப்பொழுது வாழ்ந்துவருகின்றார். இவர் பாகூர் தொடக்கப் பள்ளியிலும், புதுச்சேரி . . சி பள்ளியிலும் பயின்றவர். ஒன்றாம் வகுப்பில் இவருக்கு ஆசிரியராகப் பாவேந்தர் பாரதிதாசன் விளங்கியுள்ளார்(1938). பகுத்தறிவுப் பாவலர் புதுவைச்சிவம் அவர்களுடன் இளமையில் பழகிய பெருமைக்குரியவர்.

பிரெஞ்சியர் ஆட்சியில் கல்வி கற்றதால் தமிழும், பிரெஞ்சும் நன்கு அறிந்தவர். தம் பள்ளிக் கல்வி முடிந்த உடன் 19.12.1952 இல் பள்ளி ஆசிரியராகப் பணியில் இணைந்தவர். வில்லியனூர், கோர்க்காடு, பாகூர், தொண்டமாநத்தம், சுத்துக்கேணி, பாக்கமுடையான்பட்டு, மடுகரை, தேனூர்(காரைக்கால்) உள்ளிட்ட ஊர்களில் இடைநிலை ஆசிரியராகவும் (Instituteur de Langue Indienne (Tamoul)), முதனிலைத் தமிழாசிரியராகவும், தலைமையாசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றி 31.05.1992 இல் ஓய்வுபெற்றவர்.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு  தொடர்ந்து கல்வி பயின்று வித்துவான்(புலவர்), பி.லிட், முதுகலை என்று பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

பாவலர் புதுவைச் சிவம் அவர்களின் தலைமையில் 1953 இல் திருமணம் செய்துகொண்டவர்.

வகுப்பறையில் பாடங்களை இசையுடன் பாடி நடத்தியதால் இவர் வகுப்பில் இருந்த மாணவர்கள் ஆர்வமாகத் தமிழைப் படித்துள்ளனர். புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் இசையரங்கப் பகுதியில் இவரின் இசைநிகழ்வு கட்டாயம் இருக்கும். அரைநூற்றாண்டுக் காலம் புதுவையில் தமிழிசை பரப்பிய பெருமைக்குரியவர் இவர்.

புலவர் . பட்டாபிராமன் அவர்கள் தம் வாழ்க்கை நிகழ்வுகளை ஆர்வமாக என்னிடம் சொல்லி வந்த நேரத்தில் இடைமறித்து, தங்களுக்கு வில்லிசையில் ஈடுபாடு எவ்வாறு வந்தது? என்று நீண்டநாள் நான் தேக்கி வைத்திருந்த என் விருப்பத்தை வினாவாக்கினேன்.

’கலைவாணர் என். எஸ். கே. அவர்களின் பேச்சையும் வில்லிசையையும் கேட்டுள்ளேன். குலதெய்வம் இராஜகோபால் அவர்களின் வில்லிசை நிகழ்ச்சியைப் பார்த்துள்ளேன். என்.எஸ்.கே. கோலப்பனின் வில்லுப்பாட்டையும் சுவைத்துள்ளேன். கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் வில்லிசை நிகழ்ச்சியையும் கேட்டுள்ளேன். இவை அனைத்தும் சிறப்பாக இருக்கும். என்றாலும் இவை என் உள்ளத்தை ஈர்க்கவில்லை.

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கையைக் கடலூர் நகரமன்றத்தில் வில்லுப்பாட்டாக நடத்தினார்கள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் கலந்துகொண்டு, அறிஞர் அண்ணாவின் வாழ்க்கையை வில்லுப்பாட்டில் பாடினார். கவிஞர் சுப்பு ஆறுமுகம் பாடல்களை எழுதி, இயக்க இரண்டு மணிநேரம் அமைந்த அந்த நிகழ்ச்சிதான், நாமும் வில்லுப்பாட்டினைப் பாடலாம் என்ற ஆர்வத்தை எனக்கு உண்டாக்கியது’ என்றார்.

இதுவரை இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் மிகச் சிறந்த குரல்வளம் கொண்ட நடிகர் என்று மட்டும் அறிந்துவைத்திருந்த எனக்கு அவர் ஒரு பாடகர் என்ற செய்தி புதியதாக இருந்தது. வில்லிசை வேந்தர் உருவாக அவரின் குரல் இருந்துள்ளது என்று அறிந்து மேலும் வியப்பட்டைந்தேன்.

    1966 இல் வில்லியனூரில் திருவள்ளுவர் விழாவில் திருவள்ளுவரின் பெருமை என்ற தலைப்பில் இவரின் வில்லிசை அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. வில்லை மூங்கில் பிளாச்சிகளைக் கொண்டு இவரே செய்துள்ளார். இவரிடம் பயின்ற சிவானந்தம் என்ற மாணவரைப் பின்பாட்டு பாடுவதற்கு ஆயத்தம் செய்தார். பக்க இசைக்கருவியாளர்களாக முனைவர் இரா. திருமுருகன் இவருக்குக் குழல் இசைத்தார். இராச. வேங்கடேசன் ஆர்மோனியம் இசைத்தார். ஆரோக்கியசாமி என்பவர் வயலின் இசைத்தார். சிவலிங்கம் என்பவர் தபேலா இசைத்தார். கோ. சின்னையன் என்ற இவரின் மாணவர் உடுக்கை இசைத்தார். வள்ளுவர் வில்லிசைக் குழு உருவான வரலாறு இதுதான். அன்று முதல் புதுவை மாநிலத்தின் பல ஊர்களில் இவரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்று, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக முனைவர் ஆறு. அழகப்பன் தமிழ்ப் பணியாற்றியபொழுது முதுகலை மாணவர்களுக்கு வில்லிசையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் இவருக்கு அந்நாளில் அமைந்தது.

        புதுச்சேரி அரசின் கல்வித்துறை, நலவழித்துறை, செய்தி விளம்பரத்துறை, கூட்டுறவுத்துறை, வேளைண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை, முறைசாராக் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை, தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையம் என்று அனைத்துத் துறைகளின் சார்பிலும் நடைபெற்ற நிகழ்வுகளிலும், பாரதியார் விழா, பாரதிதாசன் விழா, கவிஞரேறு வாணிதாசனார் விழா, கவிஞர் புதுவைச் சிவம் விழா, கவிஞர் தமிழ்ஒளி விழா, இந்தியச் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, குழந்தைகள் தினவிழா, ஆசிரியர் நாள் விழா என இவரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்துள்ளதால் இவரை அறியாதவர்கள் புதுவையில் இல்லை என்று கூறும் அளவு புதுச்சேரியில் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞராக  இ. பட்டாபிராமன் விளங்குகின்றார்.

கவியரங்குகள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களிலும் கலந்துகொண்டு தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் பாங்குடையவர்.
  • காதல்பறவை,
  • பாடித்தான் பாருங்களேன்(வில்லிசை மலர்கள்)
  • வறுமையை ஒழிப்போம்,
  • வாருங்கள் மலேசியாவுக்கு
  • பிள்ளைகளே உங்களுக்காக
  • சாதிகள் இல்லையடா
  • இசை தந்த இசை
  • இயற்கையைக் காப்போம் இனி 

உள்ளிட்ட நூல்களைத் தம் தமிழ்க்கொடையாக வழங்கியவராகவும் வில்லிசை வேந்தர் . பட்டாபிராமன் விளங்குகின்றார். வில்லிசைவேந்தரின் இசையார்வம் அறிந்த மலேசியத் தமிழன்பர்களான இர. . வீரப்பனார், மணி. மு. வெள்ளையனார், மாரியப்பன் ஆறுமுகம், பத்துமலை உள்ளிட்டவர்கள் இவரின் வில்லிசை மலேசியாவில் அறிமுகம் ஆவதற்குப் பெருந்துணைபுரிந்துள்ளனர். பாவேந்தர் நூற்றாண்டு விழா மலேசியாவில் கொண்டாடப்பட்டபொழுது வில்லிசைவேந்தர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு(1991), தம் இசைப்பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். சிங்கப்பூரிலும் இவரின் வில்லிசை முழங்கியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ள இவர் புது தில்லித் தமிழ்ச்சங்கத்திலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

புது தில்லி வானொலி நிலையத்தின் வழியாகவும் வில்லிசை வேந்தரின் வில்லிசை நிகழ்ச்சி ஒலிபரப்பாகியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள வானொலி நிலையம், தொலைக்காட்சி நிலையங்களும் இவரின் திறமையை ஏற்று, பல வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் இரா. வெங்கட்ராமன் அவர்களின் கையால் நல்லாசிரியர் விருது பெற்றவர்(1987). காரைக்கால் நிர்வாக அதிகாரியான மாத்யூ சாமுவேல் அவர்கள் இவருக்கு ..சி. விருது அளித்துச் சிறப்பித்துள்ளார்.

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னைத் தலைவர் சிவ. கண்ணப்பா அவர்கள் கலைமணி என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர் அவர்கள் வில்லிசைச் செல்வர்  என்ற பட்டத்தை வழங்கிப் பெருமைசெய்துள்ளார்.

புதுச்சேரி மகாலட்சுமி அறக்கட்டளை வில்லிசைவேந்தர் என்ற பட்டத்தை முன்னாள் முதல்வர் ஆர்.வி. சானகிராமன் அவர்களின் கையால் வழங்கச் செய்து பெருமை செய்துள்ளது.

பாவேந்தரின் குயில் இதழிலும், பாவேந்தருக்குப் பிறகு அவர் மகனார் மன்னர் மன்னன் நடத்திய குயில் இதழிலும் இவர் எழுதியுள்ளார்.

நிலைக்குமா என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் நடிக்கத்தக்க நாடகம் எழுதி அதற்குரிய பாடல்களையும் எழுதி, இயக்கியுள்ளார்.

இவர் எழுதியுள்ள நாட்டிய நாடகங்களுள்,
  • காரைக்கால் அம்மையார்
  • இராமாயணம்
  • நந்தனார் சரித்திரம்
  • மீனாட்சிக் கல்யாணம்
  • ஆண்டாள் திருக்கல்யாணம்
  • நள தமயந்தி சரிதம் 
உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. இவை யாவும் மேடையேற்றம் கண்ட நாட்டிய நாடகங்கள் ஆகும்.

வில்லிசை வேந்தரின் தமிழிசைப்பணியை ஊக்குவிக்கும் வகையில் புதுவை அரசு கலைமாமணி என்னும் விருதை வழங்கிச் (26.02.2001) சிறப்பித்துள்ளமையை இங்குக் குறிப்பிட்டாதல் வேண்டும். தமிழிசையை நாளும் நினைவுகூரும் வில்லிசைவேந்தர். . பட்டாபிராமன் அவர்கள் நீடு வாழி!


வில்லிசை வேந்தரின் படைப்புகளுள் சில...

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்