நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 செப்டம்பர், 2016

கோமேதகவல்லி செல்லத்துரை அவர்களுடன் நேர்காணல்…


கண்ணம்மை அக்கா எனப்படும் கோமேதகவல்லி

தவத்திரு விபுலாநந்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்கு இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைதீவில் வாழ்ந்துவரும் கண்ணம்மை அக்கா அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். இவரின் இயற்பெயர் கோமேதகவல்லி என்பதாகும். 87 அகவையாகும் இவர் விபுலாநந்தரின் தங்கை மகள் ஆவார். சுவாமிகளின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னவுடன் இனிய நினைவுகளை நினைத்து நினைத்துப் பகிர்ந்துகொண்டார். சுவாமிகளின் தாயார் பெயர் கண்ணம்மை என்பதால் கோமேதகவல்லி என்ற தம் இயற்பெயரைச் சொல்லாமல் கண்ணம்மை என்றே சுவாமிகள் அழைப்பாராம். தமக்குச் சுவாமிகள் பல கடிதங்கள் எழுதிப் படிக்கவும், முன்னேறவும் செய்துள்ளதை மகிழ்ச்சிபொங்க எடுத்துரைத்தார். சுவாமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கொழும்புவில் தங்கியிருந்தபொழுது நேரில் பார்த்த சான்றாக இவர் உள்ளார். அதுபோல் சுவாமிகளின் உயிர் பிரிந்து, உடலை மட்டக்களப்புக்குக் கொண்டுவந்து அடக்கம்செய்தபொழுது இறுதிக்கடன்களிலும் இவர் பங்குகொண்டுள்ளார். கண்ணம்மை அக்காவுடன் உரையாடிய விவரங்களை நேரம் அமையும்பொழுது விரிவாக எழுதுவேன்.


நன்றி: சிவம் வேலுப்பிள்ளை, காசுபதி நடராசா

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

மாமன்னன் இராசேந்திர சோழன் படம் மும்பை கப்பல் கட்டும் தளத்தில் திறக்கப்படஉள்ளது!






 அலைகடல் நடுவே பலகலம் செலுத்தியமாமன்னன் இராசேந்திர சோழனின் படம்  மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் திறக்கப்பட உள்ள செய்தி தேனினும் இனிய செய்தியாகும். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தம் கப்பல் படையால் வெற்றி கொண்ட மாமன்னன் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன். கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பதியப்பெற்றுள்ள இப்பேரரசனின் வெற்றியையும் திறமையையும் நினைவுகூரும் முகமாக மும்பையில் உள்ள  கப்பல் கட்டும் தளத்தில் இராசேந்திர சோழன் படம் திறக்கப்பட உள்ளதாகவும் செப்டம்பர் 29, மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள விழாவில் மகாராட்டிர மாநிலத்தின் ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரும் உயரதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிய முடிகின்றது. இந்த முயற்சியில் முன்னின்று உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

சனி, 24 செப்டம்பர், 2016

கணக்கியல் அறிஞர் கோ. கோணேச பிள்ளை



விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை அறிந்துகொள்ளும் நோக்கில் அண்மையில் இலங்கையின் மட்டக்களப்பை அடுத்த மண்டூருக்குச் சென்றிருந்தேன். அந்த ஊரில் வாழும் கணக்கியல் அறிஞர் கோ. கோணேச பிள்ளை(அகவை 87) அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. திரு. கோ. கோணேச பிள்ளை அவர்கள் விபுலாநந்தர் குறித்த நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அவருடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது கணக்குத்துறையிலும் கணினித் துறையிலும் அவருக்கு இருந்த பேரறிவு புலப்பட்டது. இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டம்(1998) பெற்றவர். போட்சுவனா(Botswana) உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த பெருமைக்குரியவர். பல்வேறு நாடுகளின் கல்விநிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து கல்வியியல், கணக்கு உள்ளிட்ட துறைகளின் ஆய்வேடுகளை மதிப்பிட்ட பெருமைக்குரியவர். இவரைப் போன்ற அறிஞர்களைப் போற்றுவது நமது கடமை!






செவ்வாய், 20 செப்டம்பர், 2016

திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் இணையதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் இயற்கை எய்தினார்!



தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் 
இணையதிபர், காசித் திருமடம், திருப்பனந்தாள்,

திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் இணையதிபராக விளங்கிப் பல்வேறு சமயப் பணிகளையும், கல்விப் பணிகளையும் திறம்படச் செய்துவந்த தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் நேற்று (19.09.2016) இரவு எட்டு மணியளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்துகின்றேன். திருமடத்திற்குச் செல்லும்பொழுதும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்பொழுதும் மிக நெருங்கிய நண்பர்களிடம் பழகுவதுபோல் அன்புகாட்டி விருந்தோம்பும் பண்பை அடிகளாரிடம் கண்டுள்ளேன். தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் அவர்கள் தொடர்வண்டித்துறையில் அரசுப்பணியில் இருந்தவர்கள்; விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சமயப்பணியாற்ற வந்தவர்கள். தம் ஓய்வு ஊதியப் பயன்களை மாணவர்களின் கல்வி உதவிக்கும் சமயப் பணிகளுக்கும் வழங்கி மகிழ்ந்தவர். தவத்திரு அடிகளாரைப் பிரிந்து வருந்தும் அனைவருக்கும் என் ஆழ்ந்த துயரினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்களின் துயரில் நானும் பங்கேற்கின்றேன். “நீரில் எழுத்தாகும் யாக்கை” என்ற தமிழ்மாமுனிவர் குமரகுருபர சுவாமிகளின் வரிகள் நமக்கு ஆறுதலையும் தேறுதலையும் தரட்டும்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

தமிழ் வளர்ச்சிக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் பங்களிப்பு – தேசியக் கருத்தரங்கம்


பேராசிரியர் அப்துல்காதர் ஐயா கருத்தரங்க ஆய்வுக்கோவையை வெளியிட முனைவர் கோ. விசயராகவன் பெற்றுக்கொள்ளும் காட்சி.


சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், ஏலகிரி பாரதி தமிழ்ச்சங்கமும் இணைந்துதமிழ் வளர்ச்சிக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் பங்களிப்புஎன்னும் பொருளில் தேசியக் கருத்தரங்கினை வேலூர் மாவட்டம் ஏலகிரியில் இன்று(11.09.2016) நடத்தின.

பேராசிரியர்  ப.சிவராஜி அவர்கள் வரவேற்புரையாற்றவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன், புதுவை முனைவர் மு.இளங்கோவன், எழுத்தாளர் வசந்தநாயகன், முனைவர் கண்ணாத்தாள், மருத்துவர் மதுரம் சேகர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் மகன் திரு. த. பாரி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் கருத்தரங்க மலரினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் முனைவர் மு. தமிழ்க்குடிமகனாரின் படைப்புகள் குறித்து ஆய்வுக்கட்டுரை வழங்கினர். தமிழ் உணர்வாளர்கள் நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.






வியாழன், 8 செப்டம்பர், 2016

சுவாமி விபுலாநந்தர் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்கு உதவுங்கள்!




யாழ்நூல் என்னும் அரிய நூலினைப் படைத்த தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் பணிகள்(1892-1947) போதிய அளவு தமிழுலகுக்குத் தெரியாமல் உள்ளதை அண்மைக்காலமாக அறிகின்றேன். விபுலாநந்தரின் பன்முக ஆற்றலும் வெளிப்படும் வகையில் அவர்தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். எனவே விபுலாநந்தர் தொடர்புடைய அறிஞர்கள், துறவியர்கள், ஆய்வாளர்கள், அன்பர்கள், பற்றாளர்கள், ஊரினர், உறவினர் தங்களிடம் உள்ள குறிப்புகள், படங்கள், கையெழுத்துப்படிகள், மடல்கள், நூல்கள் குறித்த விவரங்களை muelangovan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொண்டு பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

தவத்திரு விபுலாநந்த அடிகளார் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்!







விபுலாநந்த அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது க. வெள்ளைவாரணனார் மாணவராகப் பயின்றவர் ஆவார். இவர் விபுலாநந்தரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக விளங்கியவர். விபுலாநந்தரின் யாழ்நூல் வெளியீட்டுக்கு உற்றுழி உதவியவராக க. வெள்ளைவாரணர் விளங்கியுள்ளார். யாழ்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வரைந்தவர் நம் க. வெள்ளைவாரணர் ஆவார். இவர்களுக்கு இடையே நடைபெற்ற மடல் போக்குவரவை அறியும் வகையில் அண்மையில் சில மடல்கள் கிடைத்தன. யாழ்நூல் வெளியிட நம் விபுலாநந்த அடிகளார் பட்ட பாடுகளை இந்த மடல்கள் நமக்குக் காட்டுகின்றன. சான்றுக்குச் சில மடல்களை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றேன். விபுலாநந்தர் மடல்களைத் தேடியபொழுது வெள்ளைவாரணர் அவர்களுக்கு உ.வே.சாமிநாதையர், நாவலர் சோமசுந்தர பாரதியார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வரைந்த மடல்களும் கிடைத்தன. ஓய்வில் அனைத்தையும் பார்வைக்கு வைப்பேன்.

விபுலாநந்தர் 23.09.1943 இல் எழுதிய மடல்:

முதல் பக்கம்:

ஆண்டவன் திருவருளை முன்னிட்டு அன்புள்ள தம்பி வெள்ளைவாரணத்துக்கு ஆசிர்வதித்து எழுதுவது. 17.08.43 கடிதம் உரிய காலத்திற் கிடைத்தது. 11.08.43 முதலாகப் பல்கலைக்கழகத்திலே பணியாற்றிவருகிறேன். தொடக்கமாதலினாலே நிரைப்பிடிக்க வேண்டியன பலவுள. பொதுவாகப் பல்கலைக்கழக முன்னேற்றத்திற்கும், சிறப்பாகத் தமிழ்ப் பகுதியின் ஆக்கத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் பல. ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலமாகப் பிறநாட்டாருக்குத் தமிழின் பெருமையினை அறிவுறுத்தும்பணி இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்பாக அமையலாம். நிற்க.

நமது அண்ணாமலைப் பல்கலைக்கழக றிஜிஸ்டிறார் அவர்கள் இசை சார்பாக  மூன்று சிறப்பு விரிவுரைகள் செய்யவேண்டுமென்று கேட்டு எழுதியிருந்தார்கள். 2ஆந்தேதியிடப்பட்ட அவர்கள் கடிதம் 6ஆந்தேதி கோயம்புத்தூருக்குப் போய் 7 ஆந்தேதி அங்கிருந்து திரும்பி 9ஆந்தேதி கொழும்பிற்கு வந்தது. 12 ஆந்தேதி விடையெழுதினேன்.

பக்கம் 2

இம்மாதம் 25 க்கும் 28 க்கும் இடையில் விரிவுரைகளை வைத்துக்கொள்ளலாம் என்பது விடை. கடிதம் பிந்துதல்கூடுமாதலின் தந்திச்செய்தி அனுப்பினேன். அக்டோபர் 18 இன் பின் தேதி குறிக்கும்படி றிஜிஸ்டிறார் அவர்கள் எழுதினார்கள். அக்டோபர் 12 இல் இங்கு கலாசாலை தொடங்கிறபடியால் டிசம்பர் 11 இன் பின்வரலாம் என விடையெழுதினேன். இப்பொழுது வந்தால் ‘யாழ்நூல்’ பதிப்பையும் தொடங்கிவிட்டு வரலாமென எண்ணியுள்ளேன். அவ்வெண்ணம் முற்றுப்பெற்றிலது. உருவப்படங்கள் சில தயாராகியிருக்கின்றன. யாழ்க்கருவியை ஓரளவிற்கு உருப்படுத்தி அதிலிருந்து உருவப்படம் செய்யவேண்டுமென முயன்றுகொண்டிருக்கிறேன். அச்சிற்கு வேண்டிய தாள் கொஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது, இன்னும் வாங்க வேண்டுமெனத் திரு. அ. க. அவர்கள் எழுதினார்கள். அச்சுப்பிரதி மாதிரித்தாள் அனுப்புவதாகச் சொன்னார்கள். அதுவுங் கிடைத்திலது.

அண்மையிலே யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் போகிறேன்.

பக்கம் 3

இக்கடிதத்திற்கு விடை கீழே தந்திருக்கும் மேல்விலாசத்திற்கும் எழுதலாம். கொழும்புத் தமிழன்பர்கள் நகரமண்டபத்திலே பெருந்தொகையினராகக் கூடி வாழ்த்துரை பகர்ந்தார்கள். யாழ்ப்பாணம், மட்டக்களப்பிலும் அவ்வாறு செய்ய அங்குள்ளோர் முயன்றுகொண்டிருப்பதாக அறிந்தேன். பல்கலைக்கழக ஏழை மாணவர் நிதிக்குப் பணம் திரட்டும் வாயிலாதல் கருதி நானும் இவ்வாழ்த்துக் கூட்டங்களுக்கு உடன்படலாயிற்று.

அன்புள்ள

விபுலாநந்தர்

தவத்திரு விபுலாநந்தர் அவர்கள் க. வெள்ளைவாரணருக்காக வரைந்த பரிந்துரைக் கடிதம்



நன்றி: பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் குடும்பத்தினர்