அமெரிக்காவுக்கு
நான் பெட்னா விழாவுக்குச் சென்றபொழுது(2011) கிடைத்த நட்பு நண்பர் சுந்தரவடிவேலுவின் நட்பு. அங்குள்ள இவரையொத்த
என் நண்பர்களில் இவர் உயர்வு இவர் தளர்வு என்று தரம்பிரிக்க முடியாதபடி அனைவரும்
தமிழ்ப்பற்றில் மேம்பட்டவர்கள். இவர்களாலும் இவர்களின் பிறங்கடைகளாலும் தமிழ்
நிமிர்ந்து நிற்கும் என்பது என் நம்பிக்கை.
பேராசிரியர்
சுந்தரவடிவேல் அவர்களும் எங்களால் போற்றப்படும் பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி
அவர்களும், நண்பர் சந்தோஷ் அவர்களும் பணிபுரியும்
தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தினைச் சுற்றிப்பார்த்தேன். அங்கு நடக்கும்
பயனுடைய ஆய்வுகளை அப்பொழுது பார்த்து என் நாடு என்றைக்கு இதுபோல் உயரும் என்று
ஏக்கப்பெருமூச்சுவிட்டுத் திரும்பினேன். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து என்
நண்பர் சுந்தரவடிவேலு அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் செய்தியைத் தங்களுடன்
பகிர்கின்றேன்.
திருமந்திரத்தின்
மேன்மையை நிலைநாட்டும் ஒரு குறிப்பைப் படித்துப் பாருங்கள். தமிழுக்கும்
தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் செய்தி இது:
////தமிழர்களின் சித்த அறிவியல் முறைகளை தற்கால முறைகளின்படி ஆராய்ந்து
உலகிற்குப் பரப்ப வேண்டும். இதன் ஒரு படியாக, அமெரிக்காவில் தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக் கழகத்தில் ஒரு
ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
திருமூலர்
எழுதிய பாடல்களை ஆராய்ந்ததில் (பாடல் எண்கள்: 568 மற்றும் 573) இப்பாடல்களில் மூச்சுப் பயிற்சியைச்
செய்வதற்கு ஒரு சூத்திரம் தரப்பட்டிருப்பது தெரிந்தது. இந்தச் சூத்திரத்தின்படி
மூச்சுப் பயிற்சியைச் செய்தால், இதைச் செய்பவர்களின் உமிழ் நீரில் பல
புரதங்கள் உற்பத்தியாவது தெரிந்தது. இவற்றுள் முக்கியமான ஒரு புரதம் நரம்பு
வளர்ச்சிக் காரணி (Nerve Growth Factor) ஆகும்.
இப்புரதம்
அல்சைமர் நோயாளிகளின் நரம்பு மண்டலத்தில் குறைவாக இருக்கிறது. திருமூலரின்
மூச்சுப் பயிற்சியைச் செய்வதால் அல்சைமர் போன்ற நோய்களைக் குணமாக்கிக் கொள்ளும்
வாய்ப்பு இருக்கலாம் என இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
தமிழர்களின்
பழங்கால இலக்கியம் ஒன்றிலிருந்து பாடலை ஆராய்ந்து அதனை அறிவியல் முறைகளின் வாயிலாக
சோதித்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. இவற்றைப் போன்ற ஆய்வுகள் பெருகி, தமிழர்களின் தொன்மையான அறிவியலின் பெருமையை உலகில் பரப்பி அனைவரையும்
நலமாய் வாழச் செய்யட்டும். இதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன். /////
தொலைக்காட்சி
செய்தி: http://www.live5news.com/story/26598888/form-of-yoga-may-ward-off-alzheimers-disease
அறிவியல்கட்டுரை:
http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=9317571
2 கருத்துகள்:
அன்புள்ள இளங்கோவன் அவர்களுக்கு,
வணக்கம். பெட்னா 2014 ஆய்வு மலரில் உங்களின் கட்டுரை அருமையாக வந்துள்ளது. அதுகுறித்து அவர்களுக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். தொடர்ந்து உங்களின் தமிழ்த்தொண்டு கண்டு மகிழ்ந்து நிற்கிறேன். வாழ்த்துக்கள்.
பேராசிரியர் அவர்களின் ஊக்கமொழிகளால் நிமிர்ந்து நிற்கின்றேன்.
கருத்துரையிடுக