நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

திருக்குறள் தொண்டர் வே.இராமதாசு மறைவு



திருக்குறள் தொண்டர் 
புதுக்கோட்டை வே. இராமதாசு அவர்கள்

புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களிடம் பழகித் தமிழ் உணர்வுபெற்றவரும், புதுக்கோட்டைத் திருக்குறள் பேரவைத் தலைவரும், மிகச் சிறந்த கொள்கைச் சான்றோருமாகிய ஐயா வே.இராமதாசு அவர்கள் நேற்று (11.10.2014) சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு உடல் நலக் குறைவு காரணமாகப் புதுக்கோட்டையில் தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். இன்று (12.10.2014) பகல் 12 மணியளவில் புதுக்கோட்டையில் அன்னாரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

திரு. வே. இராமதாசு அவர்களை 1993 ஆம் ஆண்டு முதல் நான் நன்கு அறிவேன்.  கவியரசு முடியரசனார் அவர்களை என் ஆய்வின் பொருட்டு, காரைக்குடியில் சந்தித்தபொழுது திரு. பாரி முடியரசன் அவர்கள் புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து திரு. வே. இராமதாசு அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். அன்று முதல் இந்த நொடிவரை இருவரும் பண்பு பாராட்டிப் பழகினோம். 

பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வுக்கு வேண்டிப் பொன்னி இதழ்களைப் பெற மூன்றாண்டுகள் அலைந்தபொழுது அந்த இதழ்கள் எனக்குக் கிடைக்க உதவியவர் திரு. வே. இராமதாசு அவர்கள். திருச்சிராப்பள்ளியில் நான் வாழ்ந்தபொழுது ஒவ்வொரு கிழமையும் புதுக்கோட்டை சென்று திரு. வே.இராமதாசு அவர்களைக் கண்டு பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். பணியின் பொருட்டு நான் பல ஊர்களில் வாழ நேர்ந்தாலும் புதுக்கோட்டைக்கு நாள் ஒதுக்கிச் சென்று ஐயா இராமதாசு அவர்களைக் கண்டு பழகுவேன். அவருடன் பழகிய அனைத்து நிகழ்வுகளும் ஒரு நூல் எழுதும் அளவுக்கு விரிந்து பரந்தன. 

சென்ற ஆண்டு திருச்சிராப்பள்ளியில் ஒரு புத்தொளிப்பயிற்சியில் இருந்தபொழுது மாலை நேரத்தில் புதுக்கோட்டை சென்றேன். நெடுநாழிகை உரையாடிக்கொண்டிருந்த நானும் புலவர் முத்துநிலவனும், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அதிகாரி முனைவர் நா. அருள்முருகனும், புலவர் கருப்பையாவும் புதுக்கோட்டையில் ஐயாவின் இல்லத்துக்குச்  சென்று நலம் வினவி மீண்டமை இப்பொழுதும் பசுமையாக நினைவில் உள்ளது. அவர்களின் குடும்பத்தார் என்னையும் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக எண்ணிப் பழகிய அந்த நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.

 அண்ணல் சுப்பிரமணியனாரின் நாட்குறிப்பேடுகளைப் பெறுவதிலிருந்து, அண்ணலாரின் பதிப்புப்பணிகளை அறிவது, புதுக்கோட்டையில் இருந்த பதிப்பகங்கள், நடைபெற்ற தமிழ் நிகழ்வுகள் யாவற்றையும் நான் அறிவதற்கு நம் வே. இராமதாசு அவர்கள் துணைநின்றவர்.  அறிஞர் பொற்கோ அவர்களுடன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு பழகி அவர்களின் பதிப்புப்பணிகளுக்கு உடன் துணைநின்ற பெருமைக்குரியவர். அண்ணலாருடன் இணைந்து 1954 இல் புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம் கண்டவர். ஒவ்வொரு மாதமும் தமிழறிஞர்களைப் புதுக்கோட்டைக்கு அழைத்து உரையாற்றச் செய்தவர். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலை நிறுவக் காரணமானவர்களுள் ஒருவர். தமிழக அரசின் மூத்த தமிழறிஞர் நிதி உதவியைப் பெற்று வாழ்ந்தவர்.

புதுக்கோட்டை ஒரு தமிழ்த்தொண்டரை இழந்து நிற்கின்றது. அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், திருக்குறள் பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தமும் ஆறுதலும் உரியவாகும்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு”

புலவர் முத்துநிலவன், வே.இராமதாசு, மு.இளங்கோவன், 
முனைவர் நா. அருள்முருகன், முனைவர் மகா.சுந்தர்

திருக்குறள் தொண்டர் வே.இராமதாசு அவர்களுடன் மு.இளங்கோவன்

2 கருத்துகள்:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அய்யா, இப்போதுதான் அய்யாவின் பருவுடலைப் பார்த்துக் கலங்கி, அவரது இல்லத்தாருடனும், வந்திருந்த பல்வேறு இலக்கிய அமைப்பினருடனும் ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டு வந்தேன்.திருக்குறள் தொணடரும், மிகச்சிறந்த -தன்னலமற்ற- சமூகஆர்வலருமான அய்யாவின் பிரிவு கலங்கவைக்கிறது.உங்களின் மின்னல் வேகப் பதிவு- நாம் அவர்கள் இல்லம் சென்று நெடுநேரம் பேசிமகிழ்ந்த நினைவுகளில் ஆழ்த்தியது.பெருத்த ஆறுதலைத் தருகிறது.வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெருந்தகையாரின் புகழ் புதுக்கோட்டைக்கலைஇலக்கிய வரலாற்றில் நிலையாக நீடித்திருக்கும்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

திருக்குறள் தொண்டரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்