நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 2 அக்டோபர், 2014

அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஐயா மறைவு



 அருட்செல்வர் நா. மகாலிங்கம்


  அருட்செல்வராகவும் பொருட்செல்வராகவும் விளங்கி, நம் அருந்தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் அனைத்து வகையிலும் தொண்டாற்றிய முனைவர் நா. மகாலிங்கம் ஐயா அவர்கள் தம் 91 ஆம் அகவையில் இன்று (02.10.2014) சென்னையில் இராமலிங்கர் பணிமன்றத் தொடக்க விழாவில் உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மயங்கியவாறு உயிர் பிரிந்தது என்ற துயரச்செய்தியை அறிந்து, அறிவிப்பதில் ஆழ்ந்த துயருறுகின்றேன். உடல்நலக் குறைவுற்று, கோவையில் மருத்துவமனையில் இருந்தாலும் தம் கண்ணொத்த அமைப்பான இராமலிங்கர் பணிமன்றத்தின் சென்னை விழாவில் அவர்கள் கலந்துகொண்டு உயிர்விட்டுள்ளமை கண்ணீர்மல்கச் செய்கின்றது.

  நான் திருப்பனந்தாள் கல்லூரி  மாணவனாக இருந்ததுமுதல் அருட்செல்வர் அவர்களை நன்கு அறிவேன். எங்கள் திருமடத்தின் அதிபர் அவர்களின் மணிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியதும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் வெளியிட்டு உரையாற்றியதும், திருச்சிராப்பள்ளி இராமலிங்கர் பணிமன்ற விழாவில் உரையாற்றியதும், கோவை செம்மொழி மாநாட்டில் அவர் அருகில் அமர்ந்து யான் உரையாடியதும் என் வாழ்வில் நினைக்கத்தகுந்த பொழுதுகளாகும். 

  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களைக் குறித்த ஆவணப்படம் எடுக்க, அருட்செல்வரைச் சந்திக்க நாள் கேட்டபொழுது, அவர்களின் உதவியாளர் தொடர்புகொண்டு ஐயா சந்திக்க விரும்புவதாகவும், இப்பொழுது மருத்துவமனையில் இருப்பதால் நலம்பெற்ற பிறகு சந்திப்பதாகவும் இரு திங்களுக்கு முன்னர்த் தெரிவித்தார்கள். இந்த நிலையில் வரும் 08.10.2014 சென்னையில் நடைபெறும் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கில் உரையாற்ற அருட்செல்வர் அவர்கள் என்னை அழைத்திருந்ததையும் அவர்களைச் சந்திக்க இயலாதவாறு ஆருயிர் பிரிந்தமையும் நினைக்கும்பொழுது வருத்தம் மேலிடுகின்றது.

  அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஐயா அவர்கள் ஆயிரம் திருப்பணிகள் செய்திருந்தாலும் மறைந்த இசைத்தமிழ் நூலான பஞ்சமரபு நூலினை மீட்டுத்தந்த ஒரு செயலுக்கே இத்தமிழுலகில் அன்னாரின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களை ஆதரித்தமையாலும் ஐயா அவர்கள் தமிழிசை உலகால் நினைவுகூரப்படுவார். அருட்செல்வர் அவர்கள் செய்த அத்தனைத் தமிழ்ப்பணிகளையும் எம்மனோரால் பட்டியலிட்டுவிடமுடியாதபடி  அப்பணிகள் நீளும்.

  இசைமேதை வீ.ப. கா. சுந்தரம் அவர்கள் வழியாக பஞ்சமரபினை மீண்டும் செம்பதிப்பாக அருட்செல்வர் கொண்டுவந்துள்ளமையும் இங்கு நினைவுகூரத்தக்கது. 

  தொல்காப்பியச் செல்வர் கு.சுந்தரமூர்த்தி அவர்களை ஆதரித்தமையும் அருட்செல்வரின் தமிழ்ப்பற்றினுக்குச் சான்றாகும். குறைந்த விலையில் தமிழ் நூல்கள் கிடைப்பதற்கு வாரித் தந்த செல்வம் வகைதொகையின்றிப் பெருகும். பெரும்புலவர் பல்லோரை ஆதரித்தவர். அன்னவருக்கு நிகரான ஒரு கொடை வள்ளல் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உலகில் இல்லை எனலாம்.

  அருட்செல்வர் அவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தியவர். பல்வேறு தொழிலகங்களை நடத்தியவர். அறப்பணிகள் செய்வதில் முன்னின்றவர். சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். பத்மபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர்.

தமிழுக்கு வழங்கிய கொடை வள்ளலை இழந்து, தமிழ்த்தொண்டர்கள் கையற்று நிற்பது கண்ணில் நிழலாடுகின்றது. வாழ்க அருட்செல்வர்! வளர்க அவர்தம் திருப்புகழ்!

 கோவை மாநாட்டில் அருட்செல்வர், ஆல்பர்ட்டு ஐயா, மு.இ
 கோவை மாநாட்டில் அருட்செல்வர், நா.கணேசன், மு.இளங்கோவன்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருட் செல்வர் அவர்களின் மறைவு தமிழுக்கு ஓர் பேரிழப்பு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்