நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 28 அக்டோபர், 2014

காரும் மாலையும் முல்லை…


படப்பிடிப்புக் காட்சி


படப்பிடிப்புக்காட்சி

இலக்கியம் பயிலத் தொடங்கியதிலிருந்து கார்காலம், மாலைநேரம், மாலைநேரத்தில் பீர்க்கம்பூ பூக்கும், ஆநிரைகள் வீடு வந்து சேரும், ஆயர்கள் வரும்வரை இல்லில் பெண்டிர் காத்திருப்பர் என்பதைத் தொடர்ந்து கேட்கவும் படிக்கவுமாக இருந்துள்ளேன்.

அப்பொழுது மருத நிலத்தில் (வயலும் வயல்சார்ந்த இடமும்) இருந்தபடி முல்லைநில (காடும் காடு சார்ந்த இடமும்) வாழ்க்கையைப் படிக்க நேர்ந்தது. சிலபொழுது நெய்தல் நிலம் (கடலும் கடல்சார்ந்த இடமும்) சார்ந்த வாழ்க்கையையும் வாழ நேர்ந்தது. ஆனால் முல்லைநிலத்தைப் பார்த்ததோடு சரி. அங்கு வாழ்ந்தது இல்லை. அதனால் முல்லைநிலத்தில் ஒருநாளாவது வாழ்வோமே என்று நினைத்துக்கொண்டிருந்தபொழுதுதான் அது நேர்ந்தது.

பெரும்பாணாற்றுப்படையில் வரும் தொடுதோல் மரீஇ.. எனத் தொடங்கும் பாடலடிகள் முற்றாக ஆயர்மகன் ஒருவனின் வருணனையைக் கொண்டுள்ளதை அந்த அடிகளை ஆழமாகக் கற்கும்பொழுது அறிந்தேன். முல்லைநிலத்தில்தான் தமிழர்களின் இசைக்கருவிகள் தோன்றியுள்ளன என்ற குறிப்பையும் இப்பாடலடிகள் தருகின்றன. இந்த அடிகளை நம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சு. அவர்கள் பாடிக்காட்டிய முறைமையை அறிந்ததிலிருந்து அதனைக் காட்சிப்படுத்திப் பார்ப்போம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

முதலில் ஆயர்குல மகனாக யாரை நடிக்கவைப்பது என்று சிந்தித்தபொழுது திரைப்பட இயக்குநர் அண்ணன் .கௌதமன் அவர்கள் என் எழுத்தாளர் நண்பர் ஒருவரை நடிக்கவைக்கலாம் என்று கருத்துரைத்தார். அவர்தான் சரியான தேர்வாக எனக்கும் தெரிந்தது. ஆனால் அவருக்கு வேறொரு பணி இருந்ததால் அந்தத் தேர்வு பொய்த்தது. அதுபோல் ஒளி ஓவியர் யார் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். பழைய   ஒளி ஓவியர் கிட்டவில்லை. என் பொருள்நிலைநோக்கிப் புதியதாக ஓர் ஒளி ஓவியரைத் தேர்ந்தெடுத்தேன். வேறொரு சூழலில் புதியதாகக் கிடைத்த இலக்கிய நண்பர் ஒருவரை நடிக்க வரும்படி அழைத்தேன். அவர் உடனடியாக வருவதற்கு இசைவு தெரிவித்தார்.

நானூறுக்கும் குறையாத நாட்டு மாடுகள் தமிழகத்தில் ஓரிடத்தில் கிடைக்குமா என்று என் நண்பர்கள் பலரையும் தொடர்புகொண்டு கேட்டுப் பார்த்தேன். பலரும் மாடுதேடும் படலத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஒருமுறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளைக் கடந்ததைப் பார்த்த நினைவு எனக்கு வந்தது. சாலைகளில் மாடுகள் கடக்கும் என்று அறிவிப்புப் பலகையும் அங்கு இருந்தது. மாடுகள் கடக்கும்வரை இடையூறின்றி நாம் காத்திருக்க வேண்டும். இலங்கைச் சாலைகளில் தயிர்ப்பானைகளும் விற்பனைக்கு இருந்தன.

என் கல்லூரி நண்பர் திரு. முத்து அவர்களிடம் படப்பிடிப்பு உரிய வகையில் நடக்க நானூறு நாட்டுமாடுகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் மாடு உள்ள இடத்தை அடையாளம் கண்டு இசைவும் பெற்றுவிட்டார். நாடு கிடைத்தாலும் கிடைக்கும். நாட்டுமாடு கிடைக்காது போலும். பாலுக்கு ஆசைப்பட்டு இனக்கலப்பு தமிழகம் முழுவதும் மாட்டிலும் நிகழ்ந்துவிட்டது.

மாடு கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு மகிழ்வுந்து அமர்த்திக்கொண்டு ஒளி ஓவியருடன் சேலம் நோக்கிப் புறப்பட்டோம். விழுப்புரத்தில் இரவுப்பொழுதில் செந்நிறப் பானைகள் இரண்டை வாங்கிக்கொண்டோம். ஆயர்மகன் தீமூட்டிக் குழல் செய்வதற்குத் தேவைப்பட்டது. இரவு உணவை உளுந்தூர்ப்பேட்டையில் உண்டோம். மூன்று மணிநேர ஓட்டத்திற்குப் பிறகு சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ஆத்தூரில் தங்கினோம். நண்பர் முத்து அவர்கள் எங்களை வரவேற்க விடுதிக்கு வந்திருந்தார். நண்பர்களுடன் உரையாடியவாறு காலையில் படப்பிடிப்புக்கு வேண்டியவற்றைச் சிந்தித்தோம்.

ஆயர்மகன் குடிப்பதற்குக் கூழ் தேவைப்பட்டது. இரவு பதினொரு மணிக்கு நண்பர் முத்து அவர்கள் கூழ் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வைகறை நான்கு மணிக்கு எங்கள் குழுவினர் எழுந்து கடன்முடித்தோம். ஆயர் மகனாக நடிக்கும் அறின் சென்னையிலிருந்து ஆத்தூருக்குத் தொடர்வண்டியில் வந்துசேர்ந்தார். காலை 5 மணிக்கு வந்து எங்களுடன் இணைந்துகொண்டார். மகிழ்வுந்து புறப்பட்டு திரு. முத்து அவர்களின் இல்லம் நோக்கிச் சொன்றது. அங்குக் கூழையும் பானையையும் எடுத்துக்கொண்டோம். கொல்லிமலைக் கேழ்வரகின் சுவையைச் சுவைத்து மகிழ்ந்தோம்.

எங்கள் வண்டி முல்லைநிலம் நோக்கிப் புறப்பட்டது. நண்பர்கள் சிலர் எங்களுக்காக வழியில் காத்திருந்தனர். திரு. செயராமன் அவர்கள் உள்ளூர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். திரு. பாம்பையன் அவர்கள் எங்களுக்காகத் தம் மாநாடுகளை ஒரு கறட்டில் தேக்கி வைத்திருந்தார்.

காலை 7 மணிக்கு நாங்கள் படப்பிடிப்புக் களத்திற்குச் சென்றுசேர்ந்தோம். இடையில் பாக்கும், மஞ்சளும், சோளமும் பசுமையைப் பரிசாக நீட்டி எங்களை வரவேற்றன. வரும்பொழுது நின்றுபேசுவோம் என்று இயற்கைக்குப் பதிலுரைத்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். நான்கு பக்கமும் மலையும் காடுமான ஒரு முல்லைநிலப் பகுதி ஓவியத்தில் தீட்டியது போல் கண்முன் இருந்தது. இரவு மழைபெய்திருந்ததால் நிலம் குளிர்ச்சியாக இருந்தது. மழையின் காரணமாக மாடுகள் மேட்டுநிலத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தன. இந்த மாநாடுகள் மழையில் நனைந்தாலும், வெயிலில் காய்ந்தாலும் தாங்கிக்கொள்ளும் வகையில் உடல்வாகு பெற்றிருந்தன. மாடுகளின் கால்கள் குதியப்பட்டு, குழுவாக இருந்தன. கன்றுகள் சில இளம் வெயில் தாங்காமல் நிழல்தேடித் தாயின் நிழலில் அடைந்து கிடந்தன. சில நிழல்தேடி மெதுவாக நடந்து பார்த்தன. புல்லைக் கொறித்துப் பார்த்தன சில. கன்றுகள் எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பல நாள்களாகத் தேடிய இயற்கை அழகு எங்கள் கண்களைக் குளிர்வித்தன. நண்பர்கள் திரு. முத்து, திரு. செயராமன் உள்ளிட்டோர் எங்களைத் திரு. பாம்பையன் பொறுப்பில் விட்டுவிட்டுப் புறப்பட்டனர்.

புகைப்படக் கருவியை ஒளி ஓவியர் எடுத்து, இருந்தும், கிடந்தும், நின்றும், ஓடியம், தவழ்ந்தும் பல கோணங்களில் படமாக்கினார்.  மாடுகளும், கன்றுகளும் எங்கள் கருவிகளுக்குள் சிறைப்பட்டன. தேவையான கோணங்களில், விருப்பங்களில் காலை பதினொரு மணி வரை படமாக்கினோம். கதிரவனின் வெப்பக்கதிர்கள் தன் சினத்தை வெளிப்படுத்தியபொழுது மாடுகள் மேய்ச்சலுக்குப் புறப்பட்டன. காடுவரை கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பினோம்.

அதற்குள் காலை உணவை எங்கள் ஓட்டுநர் எங்களுக்காக  வாங்கி வந்திருந்தார். மணிமேகலையில் இடம்பெறும் காயசண்டிகையின் யானைத்தீ போன்று பசி எங்களை வாட்டி வதைத்தது. ஆர்வமுடன் கிடைத்த உணவை உண்டுமுடித்தோம். காலை உணவுக்குப் பிறகே அனைவருக்கும் நல்ல “நெகா” வந்தது. அடுத்து, இருந்தஇடத்தில் எடுக்கும் காட்சிகளைத் திட்டமிட்டு எடுத்துமுடித்தோம். ஆயர்மகன் கூழார் இடையனாக அமைந்த காட்சி, செந்தீ தொட்ட காட்சி, படலைக் கண்ணியனாக நடமாடும் காட்சிகள் படமாயின.  அதற்குள் பகலுணவையும் எங்கள் ஓட்டுநர் வாங்கிவந்தார்.

அந்த ஊரில் மாவு அடைதான் பகலுணவாகக் கிடைத்தது. ஆளுக்கு நாலு மாவுஅடை(பரோட்டா) வந்து சேர்ந்தது. உண்மையாக மாடுமேய்க்கும் பாம்பையன் குழுவுக்கும் மாவு அடை வாங்கி வந்தோம். அனைவரும் மகிழ்ச்சியாக ஒரு சிறுகுடில் அருகிருந்த மாமர நிழலில் வயிறார உண்டோம். பிற்பகல் மூன்று மணியானது. இனி மாடுகள் காட்டிலிருந்து தண்ணீர்குடிக்க நீர்நிலைக்குத் திரும்பும் என்றார்கள். புதுச்சேரிக்குப் புறப்படுவதற்கு அணியமாக எங்கள் உடைமைகளைப் மகிழ்வுந்தில் வைத்துவிட்டு மீண்டும் மாடுகளை வரவேற்க, காட்டைநோக்கிப் புறப்பட்டோம். மாடுகள் எங்களைப் பார்த்து விரட்ட வாய்ப்பு இப்பொழுது உள்ளது என்று திரு. பாம்பையன் குறிப்பைச் சொல்லிவிட்டு, மாடுகளைக் கீழிறக்க, காட்டை நோக்கிச் சொன்றிருந்தார். அனைவரும் பாதுகாப்பாக உரிய இடங்களில் இருந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம்.

மாடுகளும் கன்றுகளுமாக ஒவ்வொன்றாக நீர்நிலை நோக்கி வந்தன. பெரிய காளைகள் இப்பொழுது மாடுகளுக்குப் பாதுகாவலர்கள் போல் வந்தன. அதன் திமில்களும், கொம்புகளும் எங்களுக்கு அச்சத்தைத் தந்தன. ஆனாலும் அவை அழகிய ஆவின் மையலில் இருந்ததால் எங்களை அது பொருட்படுத்தவில்லை. கன்றுகள் சில புதியதாகத் தெரிந்தன. அங்கு வந்த திரு. பாம்பையன் சொன்னார்: நேற்று மேய்ச்சலுக்குச் சென்ற ஒரு மாடு திரும்பவில்லை. சினை மாடு. இரவு மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் கன்றுபோட்டு, இரவு முழுவதும் கன்றைப் பாதுகாத்து, காலையில் மேயச் சென்ற மாடுகளுடன் இணைந்து இப்பொழுது வந்துள்ளதைச் சொன்னார். அந்த மாட்டையும் கன்றையும் பார்த்தபொழுது ஈன்றணிமைத்தாய் இருந்தது. நேற்றுப் பிறந்த இளம் கன்று மெதுவாகத் தாயுடன் நடந்து சென்றமையைக் கவனித்தபொழுது சீறாப்புராணத்தில் நபிபெருமானைக் காண்பதற்குப் புறப்பட்ட இளம் மறியாகத் தெரிந்தது.

மாலைநேரம் என்பதால் மழைக்கு உரிய கருமுகில்கூட்டங்கள் வானுக்கு அழகுசேர்த்து நின்றன. மயில்கள் அங்குமிங்கும் அகவிக்கொண்டே இருந்தன. சில மயில்களைப் பார்த்தோம். மழைநேரத்தில் கூட்டமாகத் தோகைவிரித்தாடும் என்றார்கள். சோளங்களை வீசியெறிந்தால் அவற்றை உண்ணக் கூட்டமாக வரும் என்ற குறிப்பையும் அறிந்தோம். வேண்டிய காட்சிகளைப் படமாக்கிக்கொண்டு அனைவரிடமும் நீங்கா விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

இடையில் மஞ்சள்செடிகளும் சோளப்பயிர்களும் எங்கள் ஓளிப்படக் கருவிக்குள் கட்டுண்டன. தொடுதோல் என்று பெருபாணாற்றுப்படையில் வரும் செருப்பைப் படமாக்க மறந்தது அப்பொழுதுதான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது.

காலையில் செருப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். என்றாலும் படம் எடுக்கும் பரபரப்புகளுக்கு இடையில் செருப்புக்காட்சி எடுக்காமல் விடுபட்டிருந்தது. கடைத்தெருவை அடைந்து 98 அகவையுடைய திரு. இராசு நாயுடு அவர்களைக் கண்டு அவரிடம் இருந்த பழைமையான தோல்செருப்பைக் கேட்டபொழுது அருகிலிருந்த வீட்டுக்கு என்னை அழைத்துச்சென்று தேடிப்பார்த்தார். கைப்பற்றி நடந்த அகவை முதிர்ந்த அவரின் அன்புமொழிகளும், ஆர்வமும், எங்களுக்கு உதவத் துடித்த உள்ளமும் புரிந்தது. மாலை மங்கிவிட்டது என்று ஒளி ஓவியர் குறிப்பு கொடுத்தார். எங்கு தேடியும் செருப்பு கிடைக்கவில்லை. அவர் வீட்டில் இருவரும் தேடிப்பார்த்தோம். கடைசிவரை தோல் செருப்பு கிடைக்கவில்லை. அந்தச் செருப்பு குமிழ் ஆணிகள் அடிக்கப்பட்டு அவர் மாடு மேய்க்கப் பயன்படுத்தியது. தா.பழூர், மதனத்தூர், கும்பகோணம் வரை கொள்ளிடக்கரையில் அவர் வந்து மாடுமேய்த்த கதைகளை இடையில் எனக்குச் சொன்னார்.


நேற்று மாலை இந்த இடத்தில்தான் செருப்பை வைத்திருந்தேன் என்று நாயுடு அவர்கள் சத்தியம் செய்தார். அவர் மனைவியார் அண்மையில்தான் மறைந்தார். அந்தச் சடங்கிற்கு வந்தவர்கள் யாரோ எடுத்துச் சென்றிருக்க வேண்டும் அல்லது இரவுபெய்த மழையில் தோல்செருப்புகள் அடித்துச்செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று திரு. நாயுடு அவர்கள் எனக்கு ஆறுதல்சொன்னார். 

 படப்பிடிப்புக் காட்சி


படப்பிடிப்புக்குழு


படப்பிடிப்புக் குழு


 படப்பிடிப்புக் காட்சி


 படப்பிடிப்புக் காட்சி




செவ்வாய், 21 அக்டோபர், 2014

சங்க இலக்கியப் புதையலைத் தேடி....


ஊதுலை


செந்தீத் தொட்ட கருந்துளை


மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு 1981 இல் நடைபெற்றது. மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் பெரும் மக்கள்திரளின் முன்பாகப் பேசியபொழுது தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்கவில்லை என்று அறிஞர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். மொழிஞாயிறு பாவாணரைத் தொடர்ந்து பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் தமிழ்நாட்டின் அந்நாளைய முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னிலையில் தமிழிசையின் மேன்மையை விளக்கிப் பேசினார். 

பன்னாட்டு அறிஞர்களும், தமிழகப் பெருமக்களும் கேட்டு மகிழத் தக்க வகையில் ப. சுந்தரேசனார் அவர்கள் இசையுடன் பாடித் தம் பேச்சை அமைத்தார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அனைவரும் அந்தப் பேச்சை ஆர்வமுடன் கேட்டதாக நண்பர்கள் வழியாகப் பின்னாளில் அறிந்துள்ளேன் (மாநாடு நடைபெற்றபொழுது நான் பத்தாம் வகுப்பு மாணவன்) ப.சு. அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய ஒலிநாடாவை அண்மையில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். பெரும்பாணாற்றுப்படையில் இருந்து,

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி,    
விழுத் தண்டு ஊன்றிய மழுத் தின் வன் கை,   
உறிக் கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச் சுவல், 
மேம்பால் உரைத்த ஓரி, ஓங்கு மிசைக்   
கோட்டவும் கொடியவும் விரைஇ, காட்ட 
பல் பூ மிடைந்த படலைக் கண்ணி, 
ஒன்று அமர் உடுக்கை, கூழ்ஆர் இடையன்
கன்றுஅமர் நிரையொடு கானத்து அல்கி,  
அம்நுண் அவிர்புகை கமழ, கைம்முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழிச்   
செந்தீத் தொட்ட கருந் துளைக் குழலின்

என்ற பாடலடிகளைக் கேட்டபொழுது செந்தீத் தொட்ட கருந்துளைக் குழல் செய்யும் ஆயர்மகனின் திறம் மனக்கண்ணில் நிழலாடியது. புல்லாங்குழல் முறையாகச் செய்வது எவ்வாறு என்று இசையுலக நண்பர்களிடம் வினவியபொழுது ஆளுக்கொரு செய்திகளைச் சொன்னார்கள். தமிழகத்தில் குழல்செய்வது நெல்லையம்பேரூரில் என்று சிலர் குறிப்பிட்டனர். நாகை அருகில் மூங்கிலில் குழல் செய்வதாகவும் செய்திகள் கிடைத்தன.

பண்டைய சேரநாடான கேரளத்தில் புல்லாங்குழல் செய்யப்படுவதை அண்ணன் பேராசிரியர் வையம்பட்டி கோ. வீரக்குமரன் அவர்கள் தெரிவித்தார்கள். குழல்செய்யும் கலைஞருடன் பேசித் தொடர்பையும் ஏற்படுத்தினார்கள். கேரளா செல்லும் திட்டம் உறுதிப்பட்டது. நான் வெளியூர் செல்வதென்றால் ஒளிஓவியர்களுடன் இணைந்து செல்வது வழக்கம். வழக்கமாக என்னுடன் இணைந்து பணிபுரியும் ஒளி ஓவியர்கள் வேறு பணிகளில் இருந்தனர்.

புதியதாகத் தம்பி ஒருவர் நட்பானார். அவர் ஒளி ஓவியம் அறிந்த வல்லுநர். அவருடன் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் மகிழ்வுந்தில் புதுச்சேரியில் பகல் 12 மணிக்குப் புறப்பட்டேன். இடையில் ஆத்தூர், சேலம் ஆகிய ஊர்களைக் கடக்கும்பொழுது நண்பர்கள் இடைப்பட்டு உரையாடி வாழ்த்தி வழியனுப்பினர். இடைப்பட்ட ஊர்களில் மாட்டு மந்தைகள் உள்ளனவா என்று வினவியவண்ணம் சென்றோம். பார்வையில்பட்ட மாடுகள் யாவும் கலப்பாக இருந்தன. நாட்டுமாடுகள் பார்வைக்குப் படவில்லை. தமிழகம் கலப்பாக மாறிவருவது இயற்கைவழியாகவும் உறுதிப்பட்டது. புறவழிச் சாலையில் சென்றதால் எங்கள் வண்டி வேகமாகச் சென்றது. கோவையைக் கடந்ததும் பாலக்காடு வந்தது. பாலைக்காடு என்பது பாலக்காடு என்றானது என அருகிலிருந்த ஓட்டுநரிடம் கூறி, இடைப்பட்ட ஊர்களின் பெயர்கள் தமிழாக இருப்பதை எண்ணி எண்ணி வியந்தபடி சென்றேன். 

கேரளாவின் திருச்சூருக்கு (திருச்சிவப் பேரூர்) அருகில் உள்ள மண்ணுத்தி என்ற ஊருக்கு இரவு 9 மணியளவில் சென்று சேர்ந்தோம். அண்ணன் கோ. வீரக்குமரன் அவர்களும் அண்ணி திருவாட்டி. கண்ணகி வீரக்குமரன் அவர்களும் எங்களுக்கான சிறப்பு உணவுகளை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தனர். சில்லிட்ட தண்ணீரில் ஒரு குளியல் போட்டு இரவு உணவு உரையாடியபடி உண்டோம். உணவு வைத்தவர்களிடத்துத் தண்ணீர் வைக்கவில்லையே என்றேன். தண்ணீரை முதலில் குடித்தால் உணவைக் குறைவாக உண்பீர்கள் என்று தண்ணீர்வைப்பதைத் தவிர்த்தோம் என்று அண்ணன் கூறினார். அத்துடன் அவர்களின் பாட்டி வீட்டுக்கு வேலையாள் அமர்த்தும் கதையையும் இடையில் சொன்னார்கள். வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்துவதற்கு முன்பாகப் புதியதாக வேலைக்குச் சேர்பவனுக்கு வயிரார உணவிடுவார்களாம். அதிகமாக உண்பவன் கள்ளங்கவடின்றி வேலைபார்ப்பானாம். குறைத்து உண்பவன் சரியாக வேலைபார்க்க மாட்டானாம். சரியாக உண்ணாதவன் உறவினனாக இருந்தாலும் பாட்டி வேலைதரமாட்டார்கள் என்ற கதையை அண்ணன் அவர்கள் சொல்லி முடித்தார். இரவு நெடுநாழிகைவரை  உரையாடி மகிழ்ந்தோம்.

நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது (1990) ஏற்பட்ட நட்பு அண்ணன் வீரக்குமரன் அவர்களின் நட்பு. வணிகவியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் இவர். எத்தியோப்பியா நாட்டில் பலவாண்டுகள் பணிசெய்துவிட்டு, அறிஞர்களை மதிக்கும் கேரளாவில் பல்கலைக்கழகப் பணியில் இணைந்தவர். கிழமைக்கு ஒருமுறையேனும் செல்பேசியில் உரையாடி இப்பொழுதும் என்னைக் கேரளப்பகுதிக்கு அண்ணன் அழைப்பது வழக்கம். கேரள நாட்டுப்புறப் பாடல்கள், கலைகள் குறித்த நூல்களை வாங்கி அனுப்பிக்கொண்டு இருப்பார். பலமுறை வரும்படி அன்புக்கட்டளை போட்டு ஏமாற்றம் கண்டார். எனக்கிருந்த பல்வேறு பணிகளால் இருபதாண்டுகளாக நழுவிக்கொண்டிருந்த நான் இப்பொழுது அவர்களின் அன்புவலையில் சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்களின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் பற்றியெல்லாம் நள்ளிரவு வரை பேச்சு நீண்டது.

காலையில் அமையஉள்ள எங்களுடைய செலவுத்திட்டத்தை இரவே திட்டமிட்டோம். காலை ஆறுமணிக்கு எழுந்து குளித்து முடித்து ஏழுமணிக்கு அருகில் உள்ள பூங்கா, நாற்றுப்பண்ணைகள் பார்ப்பது எனவும் மீண்டும் இல்லம் திரும்பி, காலைச் சிற்றுண்டி முடித்து எட்டு மணிக்கு அதிரம்பள்ளி அருவிக்குப் புறப்படுவது என்றும் திட்டம். அவ்வாறே அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தன. காலையில் எழுந்து பார்த்தால் மழைபெய்து, சாலையில் அங்குமிங்கும் தண்ணீர் தேங்கியிருந்தது. அண்ணன் வீட்டையொட்டிய பாதையில் காலார நடந்தோம். பாம்புகள், குருவிகள், காட்டுப்பன்றி, மயில் நாடமாட்டம் குறித்து பல கதைகளை அண்ணன் சொல்லிவந்தார். அழகிய பூங்காக்களும், சோலைகளுமாக வீட்டைச் சுற்றி எழில்கொஞ்சும் பகுதிகள். அனைத்தையும் பார்வையிட்டோம்.  காலை எட்டுமணிக்கு அதிரம்பள்ளி அருவிக்குப் புறப்பட்டோம். போகும் வழியில் சேர நன்னாட்டுப் பகுதிகளைப் பார்த்து இயற்கை அன்னை மடியை விரித்தாள் எனக்காக என்று எண்ணியபடி சாலையின் இருமருங்கிலும் கிடந்த இயற்கையழகைப் பருகியவாறு அதிரம்பள்ளி அருவி அடைந்தோம்.

அதிரம்பள்ளி அருவியின் முகப்பில் முறையான நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டோம். அருவியையும் நீர்ப்பெருக்கையும், ஆற்றின் அழகையும் வேண்டிய அளவு படமாக்கினோம். அங்கிருந்த இயற்கைக்காட்சிகளைப் பிரிந்து எங்களால் வரமுடியவில்லை. விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாக்காரர்கள் அதிகமாக இருந்தனர். எங்கும் பச்சைப் பசேல் என்ற காவும், பொய்கையுமான காட்சிகள். சாலையின் இரு மருங்கிலும் அமைந்த மூங்கில்காடுகள் கண்ணுக்குப் பெருவிருந்தாக இருந்தன. ஞெகிழிப் பைகள் தடைசெய்யப்படிருந்தன. எங்கும் தூய்மை பேணப்பட்டிருந்தது. அருவிகளும் வழிந்தோடும் நீர்ப்பெருக்கும் கண்டார்பிணிக்கும் இயல்பின. குளித்து மகிழ நினைத்தாலும் நேரம் இல்லை என்பதால் குளித்தவர்களை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே திரும்பவேண்டியிருந்தது.

பகல் பன்னிரண்டு மணிக்கு மீண்டும் திருச்சூரை நோக்கிப் புறப்பட்டோம். திருச்சூரைக் கடந்து குன்னங்குளம் என்ற ஊரை நோக்கி எங்கள் மகிழ்வுந்து பறந்தது. நல்ல சாலை அமைப்பு என்பதால் திட்டமிட்டதை விட வேகமாக நாங்கள் திருச்சூரைக் கடந்தோம். வழியில் அண்ணன் வீரக்குமரன் அவர்களின் விரிவுரை மகிழ்வுந்தில் அமைந்தது. முனைவர் வீரக்குமரன் அவர்கள் தமிழ்,  ஆங்கிலம்,  மலையாளம் என மும்மொழிகளிலும் வல்லவர். அண்ணன் அவர்கள் தமிழ்பேசும்பொழுது மறந்தும் ஆங்கிலச்சொல் ஒன்றுகூட இவர் பேச்சில் கலக்காது. அதுபோல் ஆங்கிலம் பேசினால் கேட்பதற்கு மிக இனிதாக இருக்கும். மலையாளத்தை மலையாளிகளைவிட இனிமையாகப் பேசுவார்கள். இவர் பேசும் தமிழைக் கேட்கும்பொழுது இவரை வணிகவியல் பேராசிரியர் என்று யாரும் நம்பமாட்டார்கள். ஏதோ ஒரு தனித்தமிழ்க்கல்லூரியில் பயின்றவர் என்றே நினைப்பார்கள். பீலிபெய் சாகாடு அச்சிறும் அப்பண்டம்”, “ நெடுநீர் மறவி மடி துயில் எனத் தொடங்கும் திருக்குறளை எடுத்துக்காட்டி இங்குள்ள கேரள மாணவர்களுக்கு இவற்றை விளக்கும்பொழுது எந்த இடையூறும் இல்லாமல் புரிந்துகொள்வார்கள் என்று அண்ணன் வீரக்குமரன் அவர்கள் விளக்கினார்கள். கேரளாவில் பழந்தமிழ் உயிர்வாழ்வதை எண்ணிப் பெருமைகொண்டோம். அண்ணன் வீரக்குமரன் அவர்கள் வணிகவியில் குறித்த விரிவுரைகளை எந்த இடத்தில் வழங்கினாலும் திருக்குறளிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசுவது வழக்கம்

கேரளத்தில் உள்ள நாட்டுபுறப்பாடல்கள்,  கலைகள்,  பழமொழிகள்,  வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அனைத்தையும்   எங்களுக்கு நினைவூட்டியவாறே அண்ணன் அவர்கள்  வந்தார்கள். குன்னங்குளத்திற்கு முன்பாக ஊர் எல்லையில்  இருந்த ஒரு விடுதியில் பகலுணவுக்கு இறங்கினோம்.  வளமான உணவகம். ஓரிருவர் மட்டும் இருந்தனர். பொருளேந்து உடையவர்கள் அமர்ந்து உண்ணும் உணவகமாகத் தெரிந்தது. உணவு விலைகள் குறைவாக இருந்தன. சோறும்,  மீன்குழம்பும் உண்டோம். நெத்திலி மீன் வறுத்து, சுடச்சுட வழங்கினார்கள். ஆர்வமுடன் உண்டோம். அரபிக்கடல் மீன்கள் இவை என்றார்கள். நான் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு மணிக்குச் சந்திக்க எங்களுக்குப் புல்லாங்குழல் செய்யும் கலைஞர் நேரம் கொடுத்திருந்தார். சரியாக இரண்டு மணிக்கு எங்கள் வண்டி குன்னங்குளத்தில் இசைபயிற்றுவிக்கும் ஒரு கல்லூரி வாயிலில் நின்றது. கொன்னக்கோல் ஓசையும், சலங்கை ஒலிகளுமாக அந்தக் கலைக்கோயில் இருந்தது.

புல்லாங்குழல் செய்யும் அந்த இசைப்பெருமகனார் எங்களை அன்பொழுக வரவேற்றார். அந்தக் கலைவல்லார் பெயர் திரு. சிவதாசு. ஒருவருக்கொருவர் நலம் வினவிக்கொண்டோம். அவருக்காக வாங்கிச் சென்ற இனிப்புப் பண்டத்தை எடுத்துப்பார்த்தேன். புதுச்சேரியில் வாங்கியிருந்தேன். நெய் அதிகமாக இட்டுச் செய்த கடைக்காரர் சரியாகக் கட்டித் தராததால் நெய்யொழுகி இருந்தது. இருப்பினும் இரண்டு உறைகளில் இட்டு அதனைப் பயன்படுத்தும்படி கையுறைப்பொருளாக வழங்கினோம்.

அண்ணன் கோ. வீரக்குமரன் அவர்கள் மலையாளத்தில் உரையாடி எங்கள் வருகையின் நோக்கம் சொன்னார். மலையாளத்திலும், தமிழிலுமாக எங்கள் உரையாடல் அமைந்தது. இப்பொழுது புல்லாங்குழல் செய்வது எவ்வாறு என்பதை நேரடியாகாக் கேட்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் உடைமாற்றிகொண்டு புல்லாங்குழல் செய்யும் உலைக்களத்தை ஆயத்தம் செய்தார். இயற்கையாக முல்லைநில மக்களாகிய தமிழர்கள் செய்த இந்தப் புல்லாங்குழல் காலத்தேவைக்கு ஏற்ப மின்துணையுடன் செய்யப்படுவதை அறிந்தோம். இரண்டு புகைப்படக்கருவிகளில் புல்லாங்குழல் செய்வதைப் பல கோணங்களில் படமாக்கிக்கொண்டோம். ஒருமணி நேரத்திற்குள் திரு. சிவதாசு ஐயா அவர்கள் புல்லாங்குழல் ஒன்றைச் செய்முறையாகச் செய்துகாட்டி மகிழ்வித்தார். அவர் உலைக்களத்தில் எங்கும் மூங்கில்கள் அடுக்கப்பட்டிருந்தன. மூங்கிலை புன்னைமர எண்ணெயிட்டு வழித்து, காய்ச்சினார். இரும்பு ஆணிகளைப் பழுக்கக் காய்ச்சி, துளையிட்டு அவர் செய்த புல்லாங்குழலும் அவரின் படமும் விரைவில் காணொளி வடிவில் வழங்குவேன். இது நிற்க.

எங்களுக்காக நேரம் ஒதுக்கி, எங்களின் விருப்பம் நிறைவேற்ற ஒத்துழைத்த திரு. சிவதாசு ஐயாவின் திருவடிகளில் கையுறையாக அன்பளிப்பு ஒன்றை அளித்து அவரின் வாழ்த்தினைப் பெற்றோம். புதுச்சேரி வரும்பொழுது வந்து எங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொண்டோம். நினைவுக்குச் சில படங்களை அவருடன் இணைந்து எடுத்துக்கொண்டோம். அண்ணன் வீரக்குமரன் அவர்கள் எங்களுக்கு இடையே மொழிச்சிக்கல் இல்லாமல் உரையாடலை எளிமைப்படுத்தினார்கள். பழைய கேரள இசைவடிவங்கள் குறித்து உரையாடிப் பல செய்திகளையும் திரு. சிவதாசு ஐயா அவர்களிடம் தெரிந்துகொண்டோம்.

 பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை குறித்த ஆய்வுகளுக்குரிய சில செய்திகளும் எங்களுக்குக் கிடைத்தன. திரு. சிவதாசு ஐயா அவர்களிடம் பிரியா விடைபெற்றுக்கொண்டோம்.

அப்பொழுது அண்ணன் கோ. வீரக்குமரன் அவர்கள் நாகப்பாட்டு என்னும் பாடல்வடிவம் கேரளாவில் பாடப்படுவதைச் சொன்னார்கள். குன்னங்குளம், திருச்சூருக்கு இடையே உள்ள ஊரில் நாகப்பாட்டு(அல்லது) சர்ப்பப்பாட்டு பாடப்படுவதை அறிந்தோம். அங்குள்ள சில கலைஞர்களைச் சந்தித்து நாகப்பாட்டுப் பாடலையும் காணொளியில் பதிந்துகொண்டோம். இப்பொழுது மாலை 5 மணியாகியிருந்து.

நாகப்பாட்டு பாடிய குழுவினருடன்

அண்ணன் வீரக்குமரன் அவர்களின் இல்லத்தில் எங்களுக்கு இரவு உணவு தயாராக இருந்தது. 5.30 மணியளவில் அந்த இனிய உணவினை உண்டு முடித்து அண்ணன் அவர்களிடமும் அண்ணியார் அவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டோம். கேரள எல்லையை இரவு 8 மணியளவில் கடந்து, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி வழியாகப் புதுச்சேரிக்கு வைகறைப் பொழுதில் திரும்பினோம்.   செந்தீ தொட்ட கருந்துளை என்னும் சங்க இலக்கியத்தின் மூன்று சொல்லுக்கும் உரிய பொருளை நேரடியாக அறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல் தொலைவு பயணம் செய்தமை இனிய பட்டறிவாக இருந்தது.


மயிலாலும் பூவார் சோலை

முனைவர் கோ. வீரக்குமரன் அவர்களுடன் தம்பி

புதன், 15 அக்டோபர், 2014

இதுவன்றோ தமிழாராய்ச்சி!


அமெரிக்காவுக்கு நான் பெட்னா விழாவுக்குச் சென்றபொழுது(2011) கிடைத்த நட்பு நண்பர் சுந்தரவடிவேலுவின் நட்பு. அங்குள்ள இவரையொத்த என் நண்பர்களில் இவர் உயர்வு இவர் தளர்வு என்று தரம்பிரிக்க முடியாதபடி அனைவரும் தமிழ்ப்பற்றில் மேம்பட்டவர்கள். இவர்களாலும் இவர்களின் பிறங்கடைகளாலும் தமிழ் நிமிர்ந்து நிற்கும் என்பது என் நம்பிக்கை.

  பேராசிரியர் சுந்தரவடிவேல் அவர்களும் எங்களால் போற்றப்படும் பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி அவர்களும், நண்பர் சந்தோஷ் அவர்களும் பணிபுரியும் தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தினைச் சுற்றிப்பார்த்தேன். அங்கு நடக்கும் பயனுடைய ஆய்வுகளை அப்பொழுது பார்த்து என் நாடு என்றைக்கு இதுபோல் உயரும் என்று ஏக்கப்பெருமூச்சுவிட்டுத் திரும்பினேன்.  மூன்றாண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து என் நண்பர் சுந்தரவடிவேலு அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் செய்தியைத் தங்களுடன் பகிர்கின்றேன்.

  திருமந்திரத்தின் மேன்மையை நிலைநாட்டும் ஒரு குறிப்பைப் படித்துப் பாருங்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் செய்தி இது:

////தமிழர்களின் சித்த அறிவியல் முறைகளை தற்கால முறைகளின்படி ஆராய்ந்து உலகிற்குப் பரப்ப வேண்டும். இதன் ஒரு படியாக, அமெரிக்காவில் தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.

திருமூலர் எழுதிய பாடல்களை ஆராய்ந்ததில் (பாடல் எண்கள்: 568 மற்றும் 573) இப்பாடல்களில் மூச்சுப் பயிற்சியைச் செய்வதற்கு ஒரு சூத்திரம் தரப்பட்டிருப்பது தெரிந்தது. இந்தச் சூத்திரத்தின்படி மூச்சுப் பயிற்சியைச் செய்தால், இதைச் செய்பவர்களின் உமிழ் நீரில் பல புரதங்கள் உற்பத்தியாவது தெரிந்தது. இவற்றுள் முக்கியமான ஒரு புரதம் நரம்பு வளர்ச்சிக் காரணி (Nerve Growth Factor) ஆகும்.

இப்புரதம் அல்சைமர் நோயாளிகளின் நரம்பு மண்டலத்தில் குறைவாக இருக்கிறது. திருமூலரின் மூச்சுப் பயிற்சியைச் செய்வதால் அல்சைமர் போன்ற நோய்களைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கலாம் என இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

தமிழர்களின் பழங்கால இலக்கியம் ஒன்றிலிருந்து பாடலை ஆராய்ந்து அதனை அறிவியல் முறைகளின் வாயிலாக சோதித்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. இவற்றைப் போன்ற ஆய்வுகள் பெருகி, தமிழர்களின் தொன்மையான அறிவியலின் பெருமையை உலகில் பரப்பி அனைவரையும் நலமாய் வாழச் செய்யட்டும். இதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன். /////

தொலைக்காட்சி செய்தி: http://www.live5news.com/story/26598888/form-of-yoga-may-ward-off-alzheimers-disease

அறிவியல்கட்டுரை: http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=9317571

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

திருக்குறள் தொண்டர் வே.இராமதாசு மறைவு



திருக்குறள் தொண்டர் 
புதுக்கோட்டை வே. இராமதாசு அவர்கள்

புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களிடம் பழகித் தமிழ் உணர்வுபெற்றவரும், புதுக்கோட்டைத் திருக்குறள் பேரவைத் தலைவரும், மிகச் சிறந்த கொள்கைச் சான்றோருமாகிய ஐயா வே.இராமதாசு அவர்கள் நேற்று (11.10.2014) சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு உடல் நலக் குறைவு காரணமாகப் புதுக்கோட்டையில் தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். இன்று (12.10.2014) பகல் 12 மணியளவில் புதுக்கோட்டையில் அன்னாரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

திரு. வே. இராமதாசு அவர்களை 1993 ஆம் ஆண்டு முதல் நான் நன்கு அறிவேன்.  கவியரசு முடியரசனார் அவர்களை என் ஆய்வின் பொருட்டு, காரைக்குடியில் சந்தித்தபொழுது திரு. பாரி முடியரசன் அவர்கள் புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து திரு. வே. இராமதாசு அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். அன்று முதல் இந்த நொடிவரை இருவரும் பண்பு பாராட்டிப் பழகினோம். 

பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வுக்கு வேண்டிப் பொன்னி இதழ்களைப் பெற மூன்றாண்டுகள் அலைந்தபொழுது அந்த இதழ்கள் எனக்குக் கிடைக்க உதவியவர் திரு. வே. இராமதாசு அவர்கள். திருச்சிராப்பள்ளியில் நான் வாழ்ந்தபொழுது ஒவ்வொரு கிழமையும் புதுக்கோட்டை சென்று திரு. வே.இராமதாசு அவர்களைக் கண்டு பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். பணியின் பொருட்டு நான் பல ஊர்களில் வாழ நேர்ந்தாலும் புதுக்கோட்டைக்கு நாள் ஒதுக்கிச் சென்று ஐயா இராமதாசு அவர்களைக் கண்டு பழகுவேன். அவருடன் பழகிய அனைத்து நிகழ்வுகளும் ஒரு நூல் எழுதும் அளவுக்கு விரிந்து பரந்தன. 

சென்ற ஆண்டு திருச்சிராப்பள்ளியில் ஒரு புத்தொளிப்பயிற்சியில் இருந்தபொழுது மாலை நேரத்தில் புதுக்கோட்டை சென்றேன். நெடுநாழிகை உரையாடிக்கொண்டிருந்த நானும் புலவர் முத்துநிலவனும், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அதிகாரி முனைவர் நா. அருள்முருகனும், புலவர் கருப்பையாவும் புதுக்கோட்டையில் ஐயாவின் இல்லத்துக்குச்  சென்று நலம் வினவி மீண்டமை இப்பொழுதும் பசுமையாக நினைவில் உள்ளது. அவர்களின் குடும்பத்தார் என்னையும் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக எண்ணிப் பழகிய அந்த நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.

 அண்ணல் சுப்பிரமணியனாரின் நாட்குறிப்பேடுகளைப் பெறுவதிலிருந்து, அண்ணலாரின் பதிப்புப்பணிகளை அறிவது, புதுக்கோட்டையில் இருந்த பதிப்பகங்கள், நடைபெற்ற தமிழ் நிகழ்வுகள் யாவற்றையும் நான் அறிவதற்கு நம் வே. இராமதாசு அவர்கள் துணைநின்றவர்.  அறிஞர் பொற்கோ அவர்களுடன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு பழகி அவர்களின் பதிப்புப்பணிகளுக்கு உடன் துணைநின்ற பெருமைக்குரியவர். அண்ணலாருடன் இணைந்து 1954 இல் புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம் கண்டவர். ஒவ்வொரு மாதமும் தமிழறிஞர்களைப் புதுக்கோட்டைக்கு அழைத்து உரையாற்றச் செய்தவர். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலை நிறுவக் காரணமானவர்களுள் ஒருவர். தமிழக அரசின் மூத்த தமிழறிஞர் நிதி உதவியைப் பெற்று வாழ்ந்தவர்.

புதுக்கோட்டை ஒரு தமிழ்த்தொண்டரை இழந்து நிற்கின்றது. அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், திருக்குறள் பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தமும் ஆறுதலும் உரியவாகும்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு”

புலவர் முத்துநிலவன், வே.இராமதாசு, மு.இளங்கோவன், 
முனைவர் நா. அருள்முருகன், முனைவர் மகா.சுந்தர்

திருக்குறள் தொண்டர் வே.இராமதாசு அவர்களுடன் மு.இளங்கோவன்