பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்கள்
வழியாகப் பலவாண்டுகளுக்கு முன்பே பழங்காசு ப.சீனிவாசன் அவர்களைச் சந்தித்துள்ளேன்.
ஆனால் எங்கள் தொடர்பு இடையில் வளராமல் தேங்கி இருந்தது. இடையில் ஓரிருமுறை
தொலைபேசியில் உரையாடியும் சில செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். நேற்றுத்
திருச்சிராப்பள்ளி சென்றபொழுது மாலைநேரத்தில் பழங்காசு ப.சீனிவாசன் அவர்களைக் காண
அவர்தம் காட்டூர் இல்லம் சென்றேன்.
முதல்மாடியில் இருந்த அவர்தம்
நூலகத்தின் நடுவில் தவங்கலைந்து எழும் முனிவர்போல் திருவாளர் ப.சீனிவாசன் அவர்கள் எனக்குக்
காட்சி தந்தார். அவர் தம் நூலகத்தை மூன்று மணிநேரத்திற்கும் மேலாக எனக்குக் காட்டி
விளக்கம் சொன்னார். நூலகத்தில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அடுக்கப்பட்டுள்ளன.
இடம் பற்றாக்குறையால் நூல்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம்
ஒழுங்குபடுத்திப் பாதுகாக்கவே ஐயாவுக்குப் பல இலட்சம் உருவா தேவைப்படும். ஐயா அவர்கள் எந்த ஒரு நிதி
ஆதரவும் இல்லாமல் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்து தொண்டுணர்வுடன் செய்து
வருகின்றார். அவர்தம் வாழ்க்கைக்குறிப்பை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருவிடை மருதூரில் தனலெட்சுமி - பக்கிரிசாமி இணையரின் இரண்டாவது
மகனாக 1950ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் ப.சீனிவாசன்
அவர்கள் பிறந்தார். தந்தையாரின் பணி இடமாற்றம் காரணமாக சங்கரன்பந்தல்,
மணல்மேல்குடி, அடியக்கமங்கலம் ஆகிய ஊர்களில் இவரின் இளமைப் பருவ வாழ்க்கை தொடர்ந்தது.
திருவிடை மருதூர், சங்கரன் பந்தல், மணல்மேல்குடி, திருவாரூர்,
அடியக்கமங்கலம், கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் கல்வி கற்றார்.
படிக்கும் காலத்திலேயே
பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். தொழிற்சங்க இயக்கப் பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டியதால்
பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர்.
தமிழ் இலக்கியம்,
வரலாறு, அரசியல், மாற்று மருத்துவ முறைகள், நாணயவியல்,
கல்வெட்டியல், தத்துவம், சமயம் முதலிய பல துறைகளிலும் மிகுந்த அக்கறைகொண்டு, அத்துறை நூல்கள் பலவற்றையும்
தேடிப்பிடித்துத் தாமே கற்றவர். பல நூல்களைப் படித்துப் பல்வேறு சிந்தனைகளை
உள்வாங்கியபொழுதும் இவர் நாத்திகராகவே வாழ்ந்துவருகின்றார்.
1994 இல் இவரது கடும் உழைப்பால்
திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் பத்து உறுப்பினர்களுடன் இவரின் இல்லத்தில் வைத்துத் தொடங்கப்பட்ட இவ்வமைப்புக்கு
இவரே நிறுவுநர். மேலும் தொடக்கத்தில் மூன்றாண்டுகள் அதன் பொதுச் செயலாளராக இருந்து
அவ்வமைப்பு வளர்ந்தோங்க அரும்பாடுபட்டவர்.
வரலாற்றுத்துறையில்
கொண்ட ஆர்வம் காரணமாக பேராசிரியர் பே.க. வேலாயுதம் அவர்களுடன் இணைந்து உருவாக்கிய சங்ககால
மன்னர் வரிசை என்ற நூல் சங்கால வரலாற்று நிகழ்வுகளைக் காலவரிசைபடுத்துவதற்கு ஒரு புத்தொளி
பாய்ச்சும் நூலாகும்.
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தகளர்
சங்கம் அமைப்பதற்காக முடிவெடுக்கப்பட்ட (1974 ஆம் ஆண்டு) கூட்டத்தில் கலந்து கொண்ட 35 பேர்களில் இவரும் ஒருவர். தமிழ்ச்
சிற்றிதழ்ச் சங்கத்தின் 15ஆவது மாநாட்டை நண்பர்கள் உதவியுடன்
திருச்சியில் சிறப்புற நடத்தியவர்.
தமிழகத் தொல்லியல் கழகத்தின் 15ஆவது
மாநாட்டைப் பாரத மிகுமின் நிறுவனம் மற்றும்
நண்பர்கள் உதவியுடன் திருச்சியில் சிறப்புற நடத்தியவர். பழங்காசு என்ற
நாணயவியல், வரலாற்றியல் காலாண்டிதழை இவரின் வழிகாட்டுதலோடு
இவரின் துணைவியார் நடத்திவந்தார். பல ஆய்வு நூல்கள் எழுதியும், மொழிபெயர்த்தும், வெளியிட்டும் வருகிறார்.
பழைய நூல்களை மறுபதிப்பு செய்ய அறிவுரை
நல்கியும், வழிகாட்டியும், அப்பழைய நூல்களின படப்படிகளை
(ஒளியச்சு) மறுபதிப்புக்குப் பல பதிப்பகங்களுக்குக் கொடுத்துதவியும் வருகிறார்..
தமிழ் இலக்கியம், வரலாறு பயிலும் மாணவர்களுக்கு ஆய்வுரை வரைய அரிய அறிவுரைகள் வழங்கியும், வழிகாட்டியும், பாரதி ஆய்வு நூலகத்தில் உள்ள நூல்களைப்
பார்வையிடவும், ஆய்வுக்குப்
பயன்படுத்தவும் உதவிவருகிறார். நாணய சேகரிப்பு - ஆய்வு, கல்வெட்டுகள் முதலான தொல் ஆவணங்களைப்
படி எடுப்பதற்கும், படித்தறிவதற்கும் பயிற்சியளித்தல், காசுகள் கண்காட்சிகள், பழம்பொருள் பாதுகாப்பு பயிலரங்குகள்
ஆகியவற்றை, ஒத்துழைக்கும் அருங்காட்சியகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன்
இணைந்து நண்பர்கள் உதவியுடன்
நடத்திவருகிறார்.
பாரதி ஆய்வு நூலகம்
பழங்காசு சீனிவாசன் அவர்கள் தம்
இல்லத்தில் பாரதி ஆய்வு நூலகத்தை நிறுவியுள்ளார். இந்த நூலகத்தில் பல்வேறு துறை சார்ந்த
30,000க்கும் மேற்பட்ட நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
திருக்குறளுக்கு 125க்கும் மேற்பட்ட அறிஞர்களின்
உரைகளும் விரிவுரைகளும், பகவத்கீதைக்கு 60க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளும் விரிவுரைகளும்
இந்த நூலகத்தில் உள்ளன.
அறிஞர் பலரின் கருத்துரை தொகுப்புகளும் இங்கு உள்ளன.
மகாத்மா காந்தி நூல்கள் (ஆங்கிலம்) - 100 தொகுதிகள், தமிழ் - 17தெகுதிகள்,
லெனின் (ஆங்கிலம்) - 45 தொகுதிகள், தேர்வுநூல்கள் (தமிழ்) - 12 தொகுதிகள்,
காரல் மார்க்ஸ் - ஏங்கல்ஸ் நூல்கள் (ஆங்கிலம்) - 37 தொகுதிகள்,
தேர்வுநூல்கள் (தமிழ்) - 12 தொகுதிகள், அம்பேத்கார் (தமிழ்) - 37 தொகுதிகள்,
விவேகானந்தரின் ஞானதீபம்(ஆங்கிலம்) - 8 தொகுதிகள், தமிழ் - 10 தொகுதிகள் மற்றும்
16 தொகுதிகள், இராமலிங்க அடிகள் திருவருட்பா - (உரையுடன்) 10 தொகுதிகள்,
மூலம் மட்டும் 2தொகுதிகள்+ உரைநடை நூல்கள் 1 தொகுதி, பாலகிருஷ்ண பிள்ளை
பதிப்பு - 12 தொகுதிகள், மகாகவி பாரதியார் - 12 தொகுதிகள்,
ஜெயகாந்தன் - 12 தொகுதிகள், புலவர் குழந்தை நூல்கள் - 15 தொகுதிகள்,
காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகளின் தெய்வத்தின் குரல் - 7 தொகுதிகள்,
ஸ்ரீ குரு கோல்வால்கரின் சிந்தனைக் களைஞ்சியம் - 12 தொகுதிகள்,
அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகள் - 2 தொகுதிகள்.
தென்னிந்தியாவின முதல்
கம்யூனிஸ்ட் என்று போற்றப்பட்ட சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் சிந்தனைகள் - 3 தொகுதிகள், பொதுவுடமைப் போராளியும் எழுத்துலக இலக்கிய மேதை என்றழைக்கப்பட்ட
தோழர்
ஜீவானந்தம் அவர்களின் சிந்தனைகள் -4 தொகுதிகள், பெரியார் ஈ.வெ.ரா.
வின் சிந்தனைத் தொகுப்புகளும் குடியரசு கட்டுரைக் களஞ்சியம் - 25 தொகுதிகள், பெரியார் களஞ்சியம் - 32 தொகுதிகள்,
(திராவிடர் கழகம்), குடியரசு கட்டுரைகள் - 27 தொகுதிகள் (பெரியார்
தி.க), பெரியார் சிந்தனைகள் - 3 தொகுதிகள், மற்றும் 20 தொகுதிகள் (வே. ஆனைமுத்து பதிப்பு).- ஆகியன பாரதி ஆய்வு
நூலகத்திலுள்ள சில சிந்தனைத் தொகுப்புகளாகும்.
சமயம் சார்ந்த பல நூல்கள்,
சைவம் வைணவம், சாக்தம், கிறித்தவம், இஸ்லாமியம், சமணம், பெளத்தம் என்று சமயவாரியாகப பிரித்து வைக்கப்பட்டுள்ளன. வேதங்கள்
ரிக், யஜுர், சாமம், அதர்வணம், பைபிள், குர்ஆன் ஆகியவற்றின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும்,
விரிவுரைகளும் இங்குக் காணலாம்.
108 உபநிடத்துகள், சூத்ர பாஷ்யம்,
சாங்கிய தத்வ கெளமுதி முதலான தத்துவ நூல்களின் மொழிபெயர்ப்புகளும் உண்டு.
சைவ சமயத்தின் பன்னிரு
திருமுறைகளும், வைணவ நாலாயிர திவ்ய பிரபந்தமும் பல பதிப்புகள், பல உரைகள்,
சில விரிவுரைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
புராணங்களின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பலவும்,
பல பதிப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பாகவதம் கடலங்குடி நடேச சாஸ்திரிகள், இஞ்சிக்கொல்லை சிவராம
சாஸ்திரிகள் ஆகியோரின் மொழிபெயர்ப்புகளும், பக்திவேதாந்த பிரபுபாதாவின்
பாகவத விரிவுரையும்(21 தொகுதிகள்), செவ்வை சூடுவார் பாகவதம், அருளாள தாசர் பாகவதம்
ஆகிய தமிழ் இலக்கிய பாகவதங்களும் உள்ளன.
கம்பராமாயணத்தின் உரைகள்
பலவும், பதிப்புகள் பலவும் இங்கு உண்டு, வான்மீகி ராமாயணம்,
ஆநந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், துளசி ராமாயணம், பர்மிய ராமாயணம்,
தாய்லாந்து ராமாயணம், ஜைன ராமாயணம் முதலிய பல இராமாயண நூல்களின் மொழிபெயர்ப்புகள்
மற்றும் ஆராய்ச்சி நூல்கள் பலவும் இங்கு இருக்கின்றன. தமிழ்ப்பாடல் வழி இராமாயணங்களில்,
நலுங்கு மெட்டு ராமாயணம், மதுரகவியின் இராமாயண வெண்பா, சுப்ரமணிய அய்யரின்
இராமாயண வெண்பா, தக்கை இராமாயணம், அயோத்தி காதை, இராமாயணக் கும்மி,
இராம நாடகக் கீர்த்தனை முதலியனவும் உண்டு.
வியாச பாரதம் (1931-40 களில் வெளிவந்த 21 தொகுதிகள்),
ஜைன பாரதம், பாண்டவ புராணம் மொழிபெயர்ப்புகளும்,
மற்றும் வில்லிப்புத்தூராரின் பாரதம், பெருந்தேவனாரின் பாரத வெண்பா ஆகிய பாடல்வழி
பாரதங்களும் உள்ளன.
மற்றும் மச்ச புராணம்,
கூர்ம புராணம் முதலான பல்வேறுபட்ட புராணங்களின் மொழிபெயர்ப்புகளும், தமிழ் பாடல்வழி புராணங்களும்
உள்ளன.
இசுலாமியத் திருமறையான
குர்ஆனின் ( சுன்னத் வல் ஜமாத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், காதியானி ஜமாத்,
அஹ்லே குர்ஆன் ஜமாத், முதலிய பல இஸ்லாமிய உட்பிரிவுகளைச் சார்ந்த) இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆங்கில
- தமிழ் மொழி பெயர்ப்புகளும், விரிவுரைகளும் உள்ளன. மேலும் அரபு மொழி அகராதிகள், ஒத்துவாக்ய அகராதிகள்,
களஞ்சியங்கள் முதலியனவும், சீறா புராணம், சின்ன சீறா, நெஞ்சில் நிறைந்த நபிமணி
முதலான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களும், குணங்குடி மஸ்தான் சாயபு பாடல்கள்,
தக்கலை பீரப்பா பாடல்கள், கோட்டாறு ஞானியார் சாகிப் பாடல்கள், உமர் கய்யாமின் ரூபாயத்
பாடல் மொழிபெயர்ப்புகள் முதலிய சூஃபி இலக்கியங்களும் இந்த நூலகத்தில்
உள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய
சமய ஆய்வு - இறையியல் நூல்களும் உள்ளன. இசுலாமிய சட்டங்களின் அடிப்படைகளில் ஒன்றான
ஹதீஸ் தொகுப்புகள், புகாரி, தீர்மிதி, முஸ்லிம், மிஷ்காத், நவவி முதலியவைகளும், தைசீருல் உஸூல்,
ரியாளுஸ்ஸாலிஹீன், புலுகுல் மராம், முன்தகப் அகாதீஸ்,ஸஹீஹ் அத்தர்ஃகீப்
வத்தர்ஹீப் முதலான ஹதீஸ் தொகுப்புகளும், மற்றும் இசுலாமிய சட்ட நூல்களான பிக்ஹீன்
கலைக்களஞ்சியம், மஙானீ முதலான நூல்களும் பாரதி ஆய்வு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கிறித்தவ மறையான பைபிளின் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆங்கில
- தமிழ் மொழிபெயர்ப்புகளும், விரிவுரைகளும், மற்றும் பைபிள் அகராதிகள், ஒத்துவாக்ய அகராதிகள்,
களஞ்சியங்கள் முதலியனவும், தேம்பாவணி, இரட்சண்ய யாத்ரீகம், இரட்சண்ய சரிதம்,
கித்தேரியம்மன் அம்மானை, பெத்லகேம் குறவஞ்சி, இயேசு காவியம் முதலான கிறித்தவத் தமிழ் இலக்கியங்களும், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறித்தவ
சமய ஆய்வு - இறையியல் நூல்களும் உள்ளன.
சித்தர் பாடல்களான
பெரிய ஞானக்கோவை தொடங்கி, ஞானயோக சாத்திர திரட்டு, தாயுமானவர் பாடல்கள்
முதலான பல்வேறு சித்தர் இலக்கியங்களும் இங்கே உள்ளன.
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களும், ஐம்பெரும் காப்பியங்களும்,
ஐந்து சிறு காப்பியங்களும் பல்வேறு பதிப்புகளும் பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரைகளுடன்
இங்குக் காணலாம். தொல்காப்பியம் முதற்கொண்டு மாறனலங்காரம், தண்டியலங்காரம்,
வீரசோழியம், நன்னூல், அறுவகை இலக்கணம், இலக்கண விளக்கம், யாப்பதிகாரம்,
தொடையதிகாரம் வரை பல இலக்கண நூல்களும் பல்வேறு உரைகளுடன் இங்குக் காட்சியளிக்கின்றன.
மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய வரலாறுகள், இலக்கண வரலாறுகள்,
மொழி வரலாறுகள் இங்கு உள்ளன.
வின்சென்ட் ஏ.ஸ்மித்,
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, ஆர்.சி.மஜும்தார், மகாஜன், கே.வி.இராமன்,
தி.வை.சதாசிவ பண்டாரத்தார், பி.டி.சீனிவாச அய்யங்கார், மு.இராகவ அய்யங்கார்,
வி.இராமச்சந்திர தீட்சிதர், ஓளவை துரைசாமி பிள்ளை, மா.இராசமாணிக்கனார்,
மற்றும் தமிழக வரலாற்றுக் குழு ஆகியோரின் வரலாற்று நூல்கள் பலவும் இங்கு உள்ளன.
உலக நாடுகளின் வரலாற்று
நூல்கள் பலவும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாரதி ஆய்வு நூலகத்தில் உள்ளன. கிரேக்கம்,
ரோமாபுரி, இங்கிலாந்து, அமெரிக்கா, இரஷ்யா, சீனா, ஜப்பான், இலங்கை, அரேபியா, மத்திய தரைக்கடல் நாடுகள்,
தென்கிழக்காசிய நாடுகள் முதலிய பல நாடுகளின் வரலாறுகளையும் இந்த நூலகத்தில் நாம்
காணலாம்.
தொல்லியல் அளவீட்டுத்
துறை வெளியீடுகளான கல்வெட்டு ஆண்டறிக்கை தொகுதிகளும், தென்னிந்தியக் கல்வெட்டுத்
தொகுதிகளும், எபிக்ராபிகா இண்டிகா தொகுதிகளும் மற்றும் பல கல்வெட்டுகள்,
செப்பேடுகள், ஓலை ஆவணங்கள், தொகுதிகளும் பாரதி ஆய்வு நூலகத்திற்கு அணிசெய்கின்றன.
கி.பி.1601 முதல் கி.பி. 2000 வரை உலகம் முழுவதும்
வெளியிடப்பட்ட காசுகள் மற்றும் பணத்தாள்களின் புகைப்படங்களுடன் கூடிய அமெரிக்காவில்
பதிப்பிக்கப்பட்ட அட்டவணைத் தொகுப்புகள், மிகப்பெரிய ஏழு தொகுதிகளாக இங்கு உள்ளன. மேலும்
நூற்றுக்கும் மேற்பட்ட நாணயவியல் நூல்களும் உள்ளன.
மருத்துவ நூல்கள் பலவும்
இங்குண்டு. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், அலோபதி மருத்துவம்,
பற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களும், உடற்கூறு இயல்,
உடல் இயங்கு இயல், நோய் அறிதல், மருந்து காண் கையேடு முதலிய பல நூல்களும்
இந்த நூலகத்தில் உள்ளன.
ரஷ்யன், ஜெர்மனி, ஆங்கிலம், ஃபிரஞ்ச், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, வங்காளி முதலிய பிறமொழிச்
சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள், ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகளும், பிரதாப முதலியார் சரித்திரம்,
கமலாம்பாள் சரித்திரம் தொடங்கித் தற்காலம் வரையில் உள்ள இலக்கியப் படைப்புகள் பலவும்
பழங்காசு
சீனிவாசன் அவர்களின் நூலகத்தில் உள்ளன.
மகாத்மா காந்தியின்
சத்திய சோதனை தொடங்கி அறிஞர்கள், போராளிகள், எழுத்தாளர்கள் முதலானவர்கள் பலரின் தன்வரலாறுகள் (சுய சரிதம்) நூறுக்கும் மேல் உள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளை
நாட்குறிப்பு, முத்துவிஜயரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, இரண்டாம் வீரா நாயக்கர்
நாட்குறிப்பு, மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள், பெரியார் ஈ.வெ.ரா.வின்
மேல்நாட்டுப் பயண நாட்குறிப்பு ஆகிய நாட்குறிப்பு நூல்களும் உள்ளன.
கருணாம்ருத சாகரம்,
யாழ் நூல் முதலான இசையாராய்ச்சி நூல்களும், முத்துத் தாண்டவர்,
அருணாசலக் கவிராயர், தியாகையர் முதலானவர்களின் இசைப்பாடல் தொகுப்பு நூல்களும் பல
உள்ளன. மற்றும் இசை வரலாற்று நூல்களும், இசை இலக்கண நூல்களும், தமிழிசைக் கலைக் களஞ்சியங்களும்
இருக்கின்றன.
டாலமி, பிளினி, பெரிபுளூஸ்,
ஹிராடட்டஸ் முதலான வரலாற்று நூல்களும், மெகஸ்தனிஸ்,
யுவான் சுவாங், பாஹியான், மார்கோபோலோ முதலான பயண நூல்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கு
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பாரதி, பாரதிதாசன் முதற்கொண்டு
ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழ்
மரபுக்கவிதை நூல்களும், புதுக் கவிதை நூல்களும்,
பாமாலைத் தொகுப்புகளும் இவர்தம் நூலகத்தில் உள்ளன.
அமெரிக்க கலைக்களஞ்சியம்
(30 தொகுதிகள்), தமிழ்க் கலைக்களஞ்சியம் (10 தொகுதிகள்), வாழ்வியல் களஞ்சியம் (13 தொகுதிகள்),
அறிவியல் களஞ்சியம் (13 தொகுதிகள்), விவிலியக் களஞ்சியம் (5 தொகுதிகள்),
குழந்தைகள் கலைக் களஞ்சியம் (10 தொகுதிகள்), இஸ்லாமிய கலைக் களஞ்சியம் (4 தொகுதிகள்),
மற்றும் பெரிதும் சிறிதுமான 80க்கும் மேற்பட்ட களஞ்சியங்களும்,
தமிழ், இந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம்,
மராத்தி, ஐரிஷ், ஜெர்மன், அரபி முதலிய மொழிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட அகராதிகள் இங்கு உள்ளன.
ஆய்வு மாணவர்கள்,
ஆராய்ச்சியாளர்கள், நூலாசிரியர்கள், ஆய்வறிஞர்கள் இவர்தம் நூலகத்தைப் பயன்படுத்த
எவ்விதக் கட்டணமும் இல்லை.
திரு. ப. சீனிவாசன் அவர்களின் உதவியால் புதிய பதிப்பாக வெளிவந்த நூல்களின் பட்டியல்.
1. மக்கள் உரிமை - இங்கர்சால் - (மொ.பெ - வெ. சாமிநாத சர்மா) -
டிசம்பர் 2000 - மருதம் பதிப்பகம், ஒரத்தநாடு
2. சச்சிதானந்த சிவம் - சுப்பிரமணிய சிவா - டிசம்பர்,
2000 - மருதம் பதிப்பகம், ஒரத்தநாடு.
3. திருக்குறள் பாவேந்தர் பாரதிதாசன் உரை - டிசம்பர்,
2004 - சாரதா பதிப்பகம், சென்னை.
4. திருக்குறள் புலவர் குழந்தை உரை - ஏப்ரல், 2005.-சாரதா பதிப்பகம்,
சென்னை.
5. பூங்கொடி(காவியம்)-கவிஞர் முடியரசன்-ஜூலை,2008-சீதை பதிப்பகம்,
சென்னை.
6. வால்காவிலிருந்து கங்கைவரை - ராகுல சாங்கிருத்தியாயன்-(மொ.பெ-கண.முத்தையா)-டிசம்பர்
2000(செம்பதிப்பான 27 வது பதிப்பு)-தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
7. மதத்தைப் பற்றி - லெனின் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை
8. மதவிசாரணை-சுவாமி சிவானந்த சரஸ்வதி-ஆகஸ்ட்,2011, நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ், சென்னை.
9. ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி - சுவாமி தர்மதீரா - ஆகஸ்ட்,2011,
நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ், சென்னை.
10. மாவீரர் பாலதண்டாயுதம் - வசந்தாபதிப்பகம் -2009,
11. கவிதையனுபவம் - ந. சுப்பு ரெட்டியார் - 2009, வசந்தா பதிப்பகம்,
சென்னை.
12. ஆரியராவது திராவிடராவது - நாமக்கல் கவிஞர் - ஜனவரி 2012,
விஜய பாரதம் பதிப்பகம்
13. ஈ. வெ.கி. சம்பத் தொகுப்பு நூல்கள் - (6 நூல்களின் தொகுப்பு)
- ஜனவரி 2013 இனியன் சம்பத் பதிப்பகம், சென்னை.
பாரதி ஆய்வு நூலகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான
நூல்கள் சில.
1 . புதிய ஏற்பாடு - இரேனியஸ் ஐயர் மொழி பெயர்ப்பு - 1857
2. சைவ மகத்துவ திக்கார
நிக்கிரக எதிரேற்று - இராமசுவாமி சூசைப் பிள்ளை - 1883
3. ஞானவுரைகல் -1885
4. சமய பரீட்சை -1858
5. நன்னூற் காண்டிகையுரை -1889
6. நன்னூற் காண்டிகையுரை -1862
7. நன்னூல் மூலமும் காண்டிகையுரையும்
விருத்தியுரையும் - 1889
8. திருக்குறள் - பரிமேலழகர்
உரை - 1909
9. விவசாய போதினி - அ. சேதுராமையர் -1908
10. நள - வீம பாக சாஸ்திரம் -1884
11. மொழி நூல் - மாகறல் கார்த்திகேய முதலியார் -1913
12. கணக்கதிகாரம் - காரி நாயனார் -1893
13. பத்ராசல ராமதாச சரித்திர கீர்த்தனைகள்-சின்னசாமி சாஸ்திரி - 1914
14. இங்கிலீஷ் இலக்கண நூற்சுருக்கம் - 1860
15. கலியுகப் பெண்டுகள் ஒப்பாரிக் கண்ணி - 1910
16. கதிரேசன் பேரில் ஆனந்தக்களிப்பு - 1905
17. விறலி விடு தூது -
1878
18. ஸ்ரீ பாகவத கீர்த்தனை -
1877
19. ஹைதர்அலி & திப்புசுல்தான் (ஆங்கிலம்) - 1893
20. ஸ்ரீமத் பாகவத தமிழ் வசனம் (3 தொகுதிகள்) - 1909
21. ஸ்ரீமத் கம்பராமாயண யுத்தகாண்டம் - 1914
22. மநு தரும சாத்திரம் - இராமாநுஜாச்சாரியார் - 1885
தமிழ்த்தொண்டாற்றும் பழங்காசு ப.சீனிவாசன் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்த்தொண்டாற்றும் பழங்காசு ப.சீனிவாசன் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
தொடர்புக்கு:
திரு.ப.சீனிவாசன்
அவர்கள்
1/385, சீதக்காதி தெரு, காட்டூர் (தெற்கு),
திருச்சிராப்பள்ளி - 620019.
தொலைபேசி: வீடு 0431 - 2532043,
செல்பேசி: 91718 35365
6 கருத்துகள்:
சிறப்பு! தொடர்க பழங்காசு பா.சீனிவாசன் பணியும், இப்படிப்பட்டோரைப் பதிவு செய்யும் தங்கள் பணியும்
தோழர் ப.சீனிவாசன் அவர்களின் பணி அளப்பறியது. அதற்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.
பழங்காசு பா.சீனிவாசன் ஐயா அவர்கள் எந்த ஒரு நிதி ஆதரவுமில்லாமல் இந்த சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது வியக்க வைக்கும் செய்தி!
அய்யா பழங்காசு சீனிவாசன் அவர்களுடன் ஒருசில முறை உரையாடியதை நான் என்றும் மறக்க முடியாது. பேசும்போதே தகவல்களைக் கொட்டும் நினைவாற்றல் வியப்பூட்டும். அவர்களைச் சரியாகப் பயன்படுத்தாத நம் நாடு எப்படி முன்னேறும்? தாங்களாவது அவரது பணிகளை உலகறியப் பதிவுசெய்தீர்களே நன்றி தங்களுக்கு, வணக்கம் அய்யாவுக்கு - நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.
அவரின் உழைப்பும் ஈடுபாடும் அய்யா பழங்காசு சீனிவாசன் சேகரித்துள்ள புத்தகங்களே பறைசாற்றுகிறது .அருமை.
அவரின் உழைப்பும் ஈடுபாடும் அய்யா பழங்காசு சீனிவாசன் சேகரித்துள்ள புத்தகங்களே பறைசாற்றுகிறது .அருமை.
கருத்துரையிடுக