நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 செப்டம்பர், 2013

நூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமி அவர்கள் மறைவு


நாமக்கல் ப.இராமசாமி அவர்கள்

நாமக்கல்லில் தமிழ் நூல்களைத் தொகுத்துப் பாதுகாத்தவரும், மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளரும், என் அருமை நண்பருமாக விளங்கியவருமான பெருந்தகை ப.இராமசாமி ஐயா அவர்கள்  தம் இல்லத்தில் 23.09.2013 அன்று இரவு 9 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி இன்று அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். இயற்கை எய்திய நம் ஐயாவுக்கு அகவை 75 ஆகும்.

முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வைத்திருந்த இப்பெருமகனாரை 2009 இல் கண்டு உரையாடியுள்ளேன். அதன் பிறகு தொடர்ந்து செல்பேசி வழியாக உரையாடித் தமிழ் இன்பம் பெறுவது உண்டு. தம் நூல்களைத் தமிழீழத்திற்குக் கொடையாக வழங்க அப்பெருமகனார் எண்ணியிருந்தார். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் அவரை நேசித்த தமிழ்ப்பற்றாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாமக்கல் திரு. ப. இராமசாமி ஐயா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் அக்டோபர்த் திங்கள் 10 ஆம் நாள் நாமக்கல்லில் தமிழ் உணர்வாளர்களின் முன்னிலையில் நடைபெற உள்ளது. ப.இராமசாமி ஐயா அவர்களுக்குத் திருவாளர்கள் இரா. அன்பழகன், இரா. காராளன், இரா. திருவள்ளுவன் என்ற ஆண்மக்கள் மக்கட் செல்வங்களாக உள்ளனர்.

ப.இராமசாமி ஐயா பற்றிய என் பழைய பதிவைக் காண இங்கே சொடுக்குக

தொடர்புக்கு:

திரு. ப. இரா. திருவள்ளுவன் 9245263333

1 கருத்து:

manjoorraja சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்