நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 10 ஆகஸ்ட், 2013

நல்லாசிரியர் இராச. பெரிய. பூபதி அவர்களின் எழுத்துப்பணி...

நல்லாசிரியர் இரா.பெரிய.பூபதி அவர்கள்

புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மாநிலப் பயிற்சி மையத்தில் இயற்பியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிபவர் இராச. பெரிய. பூபதி அவர்கள். இவரின் தந்தையார் திருவாளர் பெரியசாமி அவர்கள் பாவேந்தருடன் பழகியவர், பாவேந்தரின் அணுக்கத்தொண்டராக விளங்கியவர். புதுச்சேரியின் மேனாள் முதல்வர் குபேர் அவர்களின் நம்பிக்கைக்கும் உரியவர். பெருஞ்செல்வந்தராக விளங்கிய பெரியசாமி ஐயா அவர்களின் குடும்பம் பின்னாளில் நலிவடைந்தது.

இராச. பெரியசாமி ஐயா – பாக்கியம் அம்மாள் அவர்களின் மகனாகப் பிறந்தவர் பூபதி அவர்கள் (19.04.1964). இவர் கண்டமங்கலம் வள்ளலார் பள்ளியில் தொடக்கக்கல்வி, மேல்நிலைக்கல்வியைப் பயின்றவர். விழுப்புரம் அரசு கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் இயற்பியல் முதுகலைப்பட்டமும் பெற்றவர். 1982 இல் சைதாப்பேட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் இளங்கலைக் கல்வியியல் பட்டம் பெற்றவர்.

1987 இல் இடைநிலை ஆசிரியராகப் புதுச்சேரி- கம்பளிக்காரன்குப்பம் என்ற ஊரில் பணியில் இணைந்தார். அதன் பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வுபெற்றுக், காலாப்பபட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியில் இணைந்தார். 1997 இல் விரிவுரையாளராகப் பதவி உயர்வுபெற்று, காரைக்கால் கோட்டுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றியவர்.
2000 ஆம் ஆண்டு முதல் கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராகப் பணிபுரிந்து, இப்பொழுது புதுவை மாநிலப் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிகின்றார்.

அண்மையில் இவர் எழுதிய  “ஆளுமை வளர்ச்சியும் அறிவார்ந்த சிறுகதைகளும்” என்ற நூலினைக் கண்ணுறும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த நூலுக்கு நான் வரைந்த அணிந்துரையைக் கீழே காணலாம்.

 ஆளுமை வளர்க்கும் அரிய நூல்...
ஆளுமை வளர்ச்சி (Personality Development) குறித்த போதிய நூல்கள் தமிழில் இன்னும் வெளிவரவில்லை. ஆளுமை வளர்சிக்கான பயிற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்றனவே தவிர எளிய நிலை மக்களை- மாணவர்களை மனத்துள்கொண்டு போதிய படைப்புகள் வெளிவராமை ஒரு குறை என்றே சுட்டலாம். மேல்நாடுகளில் கதை, பாடல்கள், பயிற்சிகள், பாடத்திட்டங்கள் வழியாக இந்தப் பண்பை நன்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.

ஒருவரின் ஆளுமை என்பது வெறும் தோற்றம் மட்டும் அன்று. தோற்றம், கல்வி, அறிவு, சிறுமை புறங்காத்தல், பொறுமை, காலம் மேலாண்மை, தன்னம்பிக்கை, வினையாண்மை, தன் மதிப்பீடு, நன்றியுணர்ச்சி, எழுத்து, பேச்சு, கூட்டுப்பணி என்று பல பண்புகளின் கூட்டாகும்.

ஆளுமைப் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள நல்ல நூல்கள், நல்லவர்களின் பேச்சுகள், தன்வரலாற்று நூல்கள் பெரிதும் உதவும். குறிப்பாக மாணவர்களுக்கு ஆளுமைப் பண்பு வளர எளிய மொழிநடையில் அமைந்த கதைநூல்கள் பெரும் பயனைத் தரும். அந்த நுட்பத்தை உள்வாங்கிக்கொண்ட என் அருமை நண்பர், நல்லாசிரியர் இராச. பெரிய. பூபதி அவர்கள் “ஆளுமை வளர்ச்சியும் அறிவார்ந்த சிறுகதைகளும்” என்ற சிறந்த நூலைத் தந்துள்ளார்.

இந்த நூலில் இடம்பெறும் சிறுகதைகள் சிறுவர்கள், மாணவர்கள் மட்டும் படிப்பதற்கு உரியது என்று வரம்புகட்டாமல் அனைவரும் படித்து மகிழலாம். குறிப்பாக மேடைப்பேச்சுக்குப் போகும் முன் இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டுச் சென்றால் இந்த நூலிலிருந்து சில கதைகளை மேற்கோள் காட்டிப் பேசலாம். மக்கள் மன்றம் நம் பேச்சைச் சுவைக்க இந்த நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் நமக்குக் கட்டாயம் கைகொடுக்கும்.

வாரிசு என்ற தலைப்பில் அமைந்த கதையில் நேர்மையுடன் நடந்துகொண்டால் சிறப்பு கிடைக்கும் என்று அழகாக விளக்கியுள்ளார். கூடா நட்பு என்ற தலைப்பில் அமைந்த சிறுகதையில் தவறு செய்பவர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள் என்ற குறிப்பை அறியமுடிகின்றது. சரியான பாடம் என்ற தலைப்பில் அமைந்த சிறுகதையில் பெற்றோரின் துன்பத்தைக் குழந்தைகள் புரிந்துகொண்டால் சிறப்பாக வளர்வார்கள் என்ற பேருண்மையை இந்தக் கதை எடுத்துக்காட்டுகின்றது.

ஒவ்வொருவரும் தன் செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்று தன்மதிப்பீடு (சுயபரிசோதனை) செய்துகொள்ள வேண்டும். அது ஆளுமையை வளர்த்துக்கொள்ள சிறந்த வழியாகக் குறிப்பிடப்படுவது உண்டு. இந்த நூலில் இடம்பெறும் சுயசோதனை என்ற தலைப்பில் அமைந்த கதையில் இராமன் என்னும் இளைஞன் வழியாக இந்தப் பண்பை ஆசிரியர் நினைவூட்டியுள்ளார்.

காணாமல் போன கடிகாரம் என்ற தலைப்பில் மன ஒருமைப்பாட்டின் சிறப்பை அழகாக விளக்கியுள்ளார். தாழ்வுமனப்பான்மை என்ற  சிறுகதையில் ஆர்த்தி என்ற குறைந்த உயரம்கொண்ட பெண்ணின் உயர்வு மனப்பான்மையை அழகாக விளக்கியுள்ளார்.


ஆசிரியர் இராச. பெரிய. பூபதி அவர்கள் மாணவர்களின் உள்ளம் புரிந்த நல்லாசான். புதுச்சேரி அரசின் நாட்டுநலப்பணித்திட்டத்தில் சிறப்பாகப் பணிபுரியும் அலுவலர். மாணவ சமூகத்தை நல்வழிபடுத்த வேண்டும் என்ற பெருவிருப்பில் இந்த நூலைச் சிறப்பாகத் தந்துள்ளார். விளைச்சலை வைத்தே வயலை மதிப்பிட்டுவிடமுடியும் நல்லாசிரியர் பூபதி அவர்களின் மாணவர்களுக்கான நூல் விளைச்சல் மிகச்சிறப்பாக உள்ளது. வயலின் தரத்தை நூலைப் படிப்பவர்கள் நன்கு உணர்வார்கள். அடுத்த அடுத்த நூல்களும் நன்றாக அமையட்டும் என்ற விருப்பத்தோடு நூலாசிரியர் அவர்களை வாழ்த்துகின்றேன். எழுத்துத் துறைக்கு நண்பர் பூபதி அவர்களை இரு கை பற்றி வரவேற்கின்றேன்.

கருத்துகள் இல்லை: